என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தீவிர சிகிச்சை"

    • தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
    • தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    திருவெண்ணைநல்லூர்:

    தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கோரி திருவெண்ணை நல்லூர் கடை வீதியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.

    அந்த சமயத்தில் திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பாக்கியராஜ் திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை மற்ற நிர்வாகிகள் காப்பாற்றினர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வழிப்பறி திருட்டு வழக்கில் கைதானவர்
    • சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார்

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் தேவா (வயது 24).

    இவர் வழிப்பறி திருட்டு வழக்கில் ஆத்தூர் போலீ–சாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் தேவா நேற்று இரவு 11 மணி அளவில் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தின்றார். இதையடுத்து அவருக்கு வயிறு வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார்.உடனே சிறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விரைந்து சென்று ேதவாவை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • புதிய பஸ் நிலையத்தில் ஒரு வருடமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார்.
    • திடீரென உடல் நிலை பாதிப்படைந்தது.

    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு வருடமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிப்படைந்தது. இதனால் அவர் சைக்கிள் நிறுத்தம் அருகே மயங்கி நிலையில் கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பள்ளப்பட்டி போலீசார், அங்கு சென்று முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் முதியவர் கடந்த 4-ந்தேதி இரவு 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். முதியவருக்கு வலது முழங்கால், இடத முழங்காலில் காயத்தழும்பு இருந்தது. முதிவயர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள்? பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை.

    இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.
    • வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன.

    இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து இந்த யானைகள் வெளியேறி கிராமங்களில் புகுந்து பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று அதிகாலை தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து 15-க்கும் மேற்பட்ட யானைகள் கண்டகானப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்று பட்டாசு வெடித்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

    அப்போது கூட்டத்தில் குட்டியுடன் சென்ற பெண் யானை ஒன்று திரும்பி வந்து வனத்துறையினரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    அப்போது கீழே விழுந்து வனகாப்பாளர்கள் மகாவிஷ்ணு, பார்த்திபன், வேட்டை தடுப்பு காவலர் சூர்யா ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து மற்ற வனத்துறை ஊழியர்கள் அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டு படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளின் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

    கண்டகானப்பள்ளி கிராம பகுதியில் யானைகள் முகாமிட்டு சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
    • மது போதையில் வாலிபர் அரிவாளால் நண்பரை வெட்டிய சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிலன்தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சத் அலி(வயது 32). அதே பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (33). இவர்கள் இருவரும் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் அம்சத் அலியும், ஷாஜகானும் மணிவிலன் தெரு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதில் போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜகான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அம்சத் தலையை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை, தொடை , கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் அம்சத் அலிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் ஷாஜகான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அம்சத் அலியின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே ஷாஜகான் உடைத்து நொறுக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் சமரசமாகி நட்பை தொடர்ந்தனர். இந்த நிலையில் போதையில் ஷாஜகான் தனது மோட்டார் சைக்கிளை உடைத்தது தொடர்பாக அவரிடம் கேட்டு தகராறு செய்திருக்கலாம்.இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.





    • 3 மணியளவில் பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர்.
    • புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கடலூர்: 

     கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் உள்ளன. இவர் பனங்கிழங்கு விளைவித்து விற்பனை செய்து வருகிறார். இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. அரசால் தடைசெய்யப்பட்ட கள் பானத்தை தனக்கு சொந்தமான மரத்தில் இறக்கி குடிப்பதை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார். ஊமத்தங்காய் கள் அருந்துபவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும், அவர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று சந்தானம் திட்டமிட்டு இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை 3 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டினர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பான புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்த போலீஸ் டி.எஸ்.பி. சபியுல்லா, இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள அனைத்து பனைமரங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், விஷ கள் குடித்து 2 பேர் வாந்தி, மயக்கத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருவது குறித்தும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
    • 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    பண்ருட்டி வட்டம் சிறுகிராமத்தைச் சேர்ந்த வர்கள் புருஷோத்தமன் (வயது 26). இவருடன் அதே ஊரைச் சேர்ந்த பெருமாள், விஜயராஜ் ஆகியோர் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு மோட்டார் சைக்கிளில் (டிரிப்ல்ஸ்) திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அரசூருக்கு சென்றனர். விசேஷம் முடித்து நேற்று இரவு வீடு திரும்பினர். அப்போது அரசூர் பண்ருட்டி சாலையில் டி.குமாரமங்கலம் அருகே வரும் போது நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.

    அந்த வழியாக செல்பவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு 3 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9 மணியளவில் புருஷோத்தமன் இறந்து விட்டார். பெருமாள், விஜயராஜ் ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் செல்வ க்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
    • பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கருங்கல்பட்டி, இந்திரா நகர் 6-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50).

    இவர் தாதகாப்பட்டி திருஞானம் நகரில் உள்ள சாயப்பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

    இவர் நேற்று வேலையில் இருந்த போது, பாய்லரில் கொதித்துக் கொண்டிருந்த சாயநீர் எதிர்பாராத விதமாக அவரது உடல் மீது கொட்டியது.

    இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அன்ன–தானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார்.
    • விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவினாசி :

    ஈரோடு மாவட்டம் புங்கம்பள்ளி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மனைவி பாப்பாத்தி (வயது51).இவர் திருப்பூர் மாவட்டம் சேவூரை அடுத்த கானூரில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சொந்த ஊர் செல்ல தண்டுக் காரன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்றார். மேலும் அதே பஸ் நிறுத்தத்தில் தண்டுக் காரன்பாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்த காளியம்மாள்(60), அதேஊரைச் சேர்ந்த மஞ்சுளா(38) மற்றும் சின்னக்கானூர் பகுதியை சேர்ந்த ரங்கன் (52) ஆகியோர் புளியம்பட்டி செல்ல பஸ்சுக்காக காத்து நின்றனர்.

    அப்போது திருப்பூர் சாலையில் திருப்பூரை நோக்கி கார் ஒன்று வந்தது. அந்தக் காரில் திருப்பூர் குமாரனந்தபுரத்தை சேர்ந்த கணேஷ் பிரதீப் (34),அவருடைய மனைவி சுமதி (32),மற்றும் இரு குழந்தைகள் இருந்தனர் .காரை கணேஷ் பிரதீப் ஓட்டினார் .இவர் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தி விட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.

    இவருடைய கார் தண்டுக்காரன்பாளையம் பஸ் நிறுத்தம் பகுதியில் வரும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அதன் பின்னரும் அந்தக் கார் நிற்காமல் பஸ்சுக்காக காத்து நின்ற பாப்பாத்தி, காளியம்மாள், மஞ்சுளா மற்றும் ரங்கன் ஆகியோர் மீது பயங்கரமாக மோதியதோடு அங்கிருந்த மின்கம்பம் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    காளியம்மாள் ,மஞ்சுளா ,ரங்கன் ஆகியோரும் காரில் இருந்த கணேஷ் பிரதீப்பின் இரண்டு குழந்தைகளும் காயம் அடைந்தனர் .உடனே அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இரண்டு குழந்தைகளும் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சேவூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
    • ஆம்புலன்சுகள் மூலம் 4 பேரும் கோவை கொண்டு வரப்பட்டனர்.

    கோவை,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 249 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளி மாணவர்களுக்கு நேற்று தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் மாத்திரைகளை போட்டி போட்டு சாப்பிட்டுள்ளனர்.

    3 மாணவிகள் 30 மாத்திரைகளையும், ஒரு மாணவி 60 மாத்திரைகளையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால் 4 மாணவிகளும் மயக்கம் அடைந்தனர். தகவல் அறிந்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக 4 பேரையும் மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் ஆம்புலன்சுகள் மூலம் 4 பேரும் கோவை கொண்டு வரப்பட்டனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மாணவர்களுக்கு எப்படி அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரைகள் கிடைத்தது என்பது பற்றி சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மேலும் சம்பவம் குறித்து ஊட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா தலைமையிலான போலீசாரும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். 

    • அடுக்கம்பாறை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே படவேடு காளிகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி கவிதா (வயது 38) . இவர் ஒண்ணுபுரம் கிராமத்தில் நாக நதி ஆற்றங்கரை அருகே உள்ள ரைஸ்மில்லில் நேற்று காலை வேலைக்கு சென்றார்.

    அப்போது பாய்லர் ஒன்று வெடித்ததில் அருகில் இருந்த கவிதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக் கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
    • மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாக மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் மாணவி சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவியை பெற்றோர் பலமுறை கண்டித்தனர். ஆனாலும் அந்த மாணவி அதனை கண்டு கொள்ளாததால் நேற்று இரவு பெற்றோர் மீண்டும் திட்டியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவி வீட்டின் 3-வது மாடியில் இருந்து நேற்று இரவு கீழே குதித்தார். இதில் அவரது இடுப்பு எலும்பு உடைந்ததால் கதறினார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்.

    பின்னர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், காதல் பிரச்சனை மற்றும் மாணவி சரியாக படிக்காததால் பெற்றோர் திட்டியதாகவும், இதனால் அவர் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×