என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை வெள்ளம்"

    • தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் ‘மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்’ என்று யாழினியிடம் கேட்டார்.
    • இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    போரூர்:

    சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி சாந்தி என்கிற யாழினி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவர் அசோக் நகர் 135- வார்டு மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.

    இவர் கடந்த 2-ந்தேதி அசோக் நகர் 3-வது அவின்யூவில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. வட்ட செயலாளர் செல்வகுமார் 'மழை பெய்தபோது இங்கு வராமல் இப்போது மட்டும் எதற்கு வந்தீர்கள்' என்று யாழினியிடம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி யாழினி கே.கே.நகர் போலீசில் புகார் அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த மாநகராட்சி தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத ஆத்திரத்தில் இருந்து வந்த தி.மு.க வட்ட செயலாளர் செல்வகுமார் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய சென்ற என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுத்து ரகளையில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    அவருக்கு உடந்தையாக முன்னாள் தி.மு.க கவுன்சிலர் கோ.சு.மணியும் என்னிடம் தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டார். ஆகவே இருவர் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதேபோல் தி.மு.க வட்டச் செயலாளர் செல்வகுமாரும் கே.கே.நகர் போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் மோட்டார் பம்பு மூலம் நீரை வெளியேற்றும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் ஈடுபட்டு வந்தேன். மழையின் போது இந்த பக்கமே வராத கவுன்சிலர் யாழினி சம்பவத்தன்று வந்து ஆட்களை வைத்து ஆய்வு செய்வது போல செல்போனில் படம் பிடித்தார்.

    இதுபற்றி கேட்ட போது, 'நீ யார்' என்று கேட்டு என்னையும் உடன் இருந்த நிர்வாகிகளையும் தகாத வார்த்தைகளால் பேசிய கவுன்சிலர் யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவரும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ஆகவே யாழினி, அவரது கணவர் பாஸ்கர் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இரு தரப்பினர் கொடுத்த புகார் மீதும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கோவிலை சுற்றி வர பக்தர்கள் மிகவும் சிரமம்
    • சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் ஊரிண் நடுவே லட்சுமி நாராயணன் பெருமாள் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேகம் முடிந்து பல வருடங்களாகிறது.மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை கோயில் என்பதால் யாரும் முயற்சி செய்யவில்லை. இங்கு கோபுரங்கள் மீது செடி கொடிகள் வளர்ந்து வருகிறது.

    இதனுள்ளே ஆஞ்சநேயர், ஐயப்பன், விநாயகர், ஆண்டாள், நவக்கிரகங்கள், துர்க்கை அம்மன் சன்னதி தனித்தனியே உள்ளது. வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் பெண்கள் ராகுகால பூஜை வழிபாடு செய்வர். ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குருசாமிகளை அழைத்து வந்து மாலை அணிந்து செல்வர்.

    ஐயப்ப பக்தர்களின் பொது பூஜை செய்து இருமுடி கட்டி செல்வது வழக்கம். இவ்வளவு வசதிகள் இருந்தும் இக்கோயிலில் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் தெருவை விட கோயில் உயரம் சற்று குறைவாக உள்ளது.

    இந்த நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் பெய்த மழையால் வெள்ளம் கோவிலுக்குள் புகுந்தது.

    இதனால் மழைநீர் வெளியேற வழியில்லை என்பதால் அங்கு குட்டை போல தேங்கி நிற்கிறது. இங்கு வழிபாடு செய்ய வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வர மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

    இதனை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
    • திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

    சென்னையில் இந்த ஆண்டு பருவமழையின் போது வெள்ளம் தேங்காமல் தடுக்க சென்னை மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் இடங்கள் கண்காணிக்கப்படுகிறது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வெள்ளம் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் தேங்கும் தாழ்வான இடங்கள் டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன. மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள இடங்கள், மழைநீர் செல்லாத கால்வாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். ஆற்றின் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்தால் உடனடியாக அகற்றப்படும்.

    அடையார், கோவளம், கொசஸ்தலை ஆறு மற்றும் கூவம் ஆற்று பகுதிகளிலும் வெள்ளம் தேங்காமல் தடுக்க டிரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். டிரோன்கள் மூலம் வெள்ளம் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை மாநகராட்சியில் நீர் நிலை எச்சரிக்கை பற்றிய சென்சார்கள் உள்ளன. ஆனால் டிரோன் கண்காணிப்பு விரைவான மீட்பு பணிக்கான தகவல்களை வழங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'டிரோன் மூலம் செய்யப்படும் ஆய்வுகள் தாழ்வான பகுதிகளை உடனே தெரிந்து கொள்ள உதவும்.

    மேலும் மழைநீர் வடிகால்களில் பாதிப்புகளையும் சரிசெய்ய முடியும். இந்த திட்டத்திற்கு சுமார் ரூ. 7 கோடி செலவாகும். இதற்காக ஒரு ஆலோசகர் நியமிக்கப்படுவார்.

    கடந்த ஆண்டில், அம்பத்தூரில் 16 இடங்கள், அண்ணாநகரில் 10 இடங்கள் உள்பட மாநகராட்சி முழுவதும் மொத்தம் 37 வெள்ளப் பகுதிகளை சென்னை மாநகராட்சி கண்டறிந்தது. இதில் 28 இடங்களில் 2 அடிக்கும் குறைவாக தண்ணீர் தேங்கியது. இந்த முறை அந்த பகுதிகளில் வெள்ளம் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

    • மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.
    • வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை அருகே கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சி கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடந்தது.

    இந்த ஆகாயத்தாமரையினால் வடகிழக்கு பருவமழையையொட்டி மழை நீரினால் வடிகால்களில் அடைப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மேலும் வெள்ளக்காலங்களில் மழைநீர் கிராமங்களுக்குள்புகும் அபாயம் உள்ளது.

    எனவே ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதை தொடர்ந்து கடுவையாற்றில் ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணியில் பொதுத்துறையினர் ஈடுப்பட்டனர்.

    இந்த பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது ஆகாயத்தாமரை செடிகளை விரைவில் அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது நாகை மாலி. எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
    • நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    மிச்சாங் புயல் காரணமாக ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டை தடா இடையே காலங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சூலூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே சாலை சேதம் அடைந்தது.

    அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.

    நேற்று காலங்கி ஆற்றில் மழை வெள்ளம் குறைந்தது. இதையடுத்து நாயுடு பேட்டை டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் போலீசார் நிற்கவைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலை சேதம் அடைந்த இடத்தில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனால் சென்னை-நெல்லூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
    • 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார்.

    சென்னை:

    மிச்சாங் புயல் தமிழக வட மாவட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் புயல் காரணமாக அதிகனமழை கொட்டி தீர்த்தது.

    புயல் கரையை கடந்து மழை ஓய்ந்தபிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    பள்ளிக்கரணையில் 15 அடி வெள்ள நீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய மகன் அருண் நீரில் மூழ்கினார். 3 நாட்களுக்கு பிறகு அவரது உடல் வெள்ள நீரில் மிதந்து வந்தது.

    காணாமல் போன மகனை கண்டுபிடிக்க அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று மகனை இழந்த வயதான பெற்றோர், தங்கை, உறவினர்கள் கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தனர்.

    • தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது.
    • வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர் இன்னும் வடியாமல் உள்ளது. பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    காக்களூர் ஊராட்சி ம.பொ.சி.நகர், வி.எம்.நகர், விவேகானந்தா ஆகிய பகுதி களில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் காக்களூர் ஏரி நிரம்பி தண்ணீர் புகுந்தது. இன்னும் தண்ணீர் வடியாமல் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே வெள்ளம் பாதித்த காக்களூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ.கிருஷ்ண சாமி, கூடுதல் ஆட்சியர் சுகபுத்திரா ஆகியோர் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டனர். அப்போது பொது மக்கள் தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். உடனடியாக அந்த பகுதியில் தண்ணீரை வெளியேற்ற அமைச்சர் மூர்த்தி அதிகாரிக ளுக்கு உத்தரவிட்டார்.

    இதேபோல் திருமழிசை பேரூராட்சியில் 100க்கும் மேற்பட்ட தெருக்களில் 1000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீருடன் கழிவு நீர் கலந்து குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதி மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவுக்கு கடும் அவதி அடைந்து உள்ளனர். மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. திருமழிசையில் ஆவின் பால் வழக்கத்தை விட ரூ.5 கூடுதலாகவும், குடிநீர் கேன்கள் ரூ.10 கூடுதலாகவும் விற்பனை செய்யப்பட்டது. வேப்பம்பட்டு ராமகிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற அதிகாரிகள் உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது.

    சென்னை:

    மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு பணிகளும், நிவாரண பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய சென்னை பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்ட நிலையில் தென் சென்னையிலும், வட சென்னையிலும் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளத்தை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மாதவரம், மணலி, எண்ணூர், கொரட்டூர், தாம்பரம், வேளச்சேரி, பீர்க்கங்கரணை, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் இன்னமும் பல்லாயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து அபாயகரமான அளவில் நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் இருப்பவர்களை படகுகளின் மூலம் மீட்கும் பணி இன்று 3-வது நாளாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மழை வெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தினரை போலீஸ் ஒருவர் பத்தித்திரமாக மீட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இதில் காவலர் ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு கொஞ்சியபடி புன்னகையுடன் நடந்துவரும் காட்சி பதிவாகி இருக்கிறது. இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இதுபற்றி தலைமை காவலர் தயாளன் கூறும்போது,

    வெள்ளத்தில் சிக்கிய குழந்தையை மீட்டபோது, தூங்காமல் வேலைபார்த்த களைப்பு பறந்து போனது என்று கூறினார்.

    • வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.
    • மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புயல் பாதிப்பால் கொட்டி தீர்த்த கனமழையால் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியாமலேயே உள்ளது.

    குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தேங்கிய மழைநீர் இன்றும் முழுமையாக வடியாமல் இருக்கிறது. இதே போன்று சென்னை மாநகராட்சி பகுதியை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளன.

    புழல் விளாங்காடுப் பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அம்பாள்நகர், தர்காஸ், மல்லிமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கி இருக்கும் வெள்ளம் இன்னும் முழுமையாக வடியாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    விளாங்காடுப்பாக்கம் மல்லிகா கார்டன் அருகே உள்ள நியூஸ்டார் சிட்டி குடியிருப்புகளில் மார்பளவுக்கு தேங்கி நின்ற தண்ணீர் கடந்த 5 நாட்களாக வடிந்தும் தற்போதுதான் முட்டளவுக்கு குறைந்துள்ளது.


    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் இது போன்று ஏற்படும் வெள்ளப் பாதிப்பை சரி செய்ய அதிகாரிகள் இனி வரும் காலங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக மாதவரம் தொகுதி எம்.எல்.ஏ. சுதர்சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகியோர் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருக்கிறார்கள்.

    இதேபோன்று செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரம் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ளம் இன்னும் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    குடியிருப்பு பகுதிகளில் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை கூளங்களும் தேங்க தொடங்கி உள்ளன. எனவே அவைகளை அப்புறப்படுத்தி மோட்டார்கள் மூலமாக தண்ணீரை முழுமையாக வெளியேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    • வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கூடுவாஞ்சேரி:

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள், மற்றும் குடியிருப்புகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்னும் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளதால் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    நந்திவரம்-கூடுவாஞ்சேரி பகுதியில் பெய்த கனமழையால் அனைத்து இடங்களும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் சூழ்ந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வெள்ளம் வடிந்து மக்களின் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்பி வருகிறது.

    இந்த நிலையில் மழை வெள்ளத்தில் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டு அருள்நகர், ஜெகதீஷ் நகர், 8-வது வார்டில் உள்ள காமாட்சி நகர் ஆகிய 3 இடங்களில் உள்ள தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் போக்கு வரத்து துண்டிக்கப்பட்டு உள்ளன. ஆதனூர், மாடம்பாக்கம், படப்பை, சோமங்கலம் செல்வதற்கான இந்த தரைப்பாலங்கள் உடைந்ததால் அந்தப் பகுதியில் இருந்து கூடுவாஞ்சேரி வருவதற்கும் அதே போல் கூடுவாஞ்சேரியில் இருந்து செல்லும் வாகனங்களும் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • மழை நீர் புகுந்ததால் ஆவின்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
    • சீரமைப்பு பணிகள் நடைபெற்று பால் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

    சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக பட்டரவாக்கம் பால்பண்ணையில் மழை நீர் புகுந்ததால் ஆவின்பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்று பால் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது.

    எனினும் அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பால் சப்ளை 6-வது நாளாக இன்றும் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    • மின் மோட்டார்கள் ஓடாததால் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை.
    • 4 நாட்களாக வெள்ளம் தேங்கி இருந்த வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிந்துவிட்டது. நேற்று மாலையில் மின் வினியோகமும் சீரானது. வெள்ளம் புகுந்த வீடுகளில் மின் மோட்டார்கள் பழுதானது. நேற்று மின் மோட்டார்களை இயக்கியபோது ஓடவில்லை. இதனால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    மின் மோட்டார்கள் ஓடாததால் தொட்டிகளில் தண்ணீர் ஏற்ற முடியவில்லை. 4 நாட்களாக வெள்ளம் தேங்கி இருந்த வீடுகளை சுத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சமையல், குளியல் போன்ற அடிப்படை தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டனர். சென்னையில் பல இடங்களில் மின் மோட்டார்கள் பழுதடைந்து மெக்கானிக் கடைகளுக்கு படையெடுத்தனர்.

    ×