என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாரடைப்பு"

    • அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை.

    திருப்பூர் :

    அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெயபால் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.

    ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்காமல் சீட்டில் தூங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து நடத்துனர் தேவராஜ் அவரிடம் பஸ் நிலையம் வந்து விட்டது, கீழே இறங்கவும் என்று கூறினார். ஆனால் அந்தப் பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர் அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பிணமாக இருந்தவரை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 52) என்பதும் வேலைக்காக இன்று காலை பஸ்சில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
    • ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது53).இவர் காஞ்சிபுரத்தில் உள்ள டாக்டர் பி.எஸ். ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் தொழிற்கல்வி வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    நேற்று காலை அவர் வழக்கம் போல் பள்ளிக்கு வந்தார். பின்னர் அவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

    அப்போது ஆசிரியர் சக்திவேலுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆசிரியர்கள் விரைந்து வந்து சக்திவேலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆசிரியர் சக்திவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆசிரியர் சக்திவேல் இறந்தது பற்றி அறிந்ததும் அவர் வகுப்பு எடுத்த அறையில் இருந்த மாணவர்கள் சிலர் கண்ணீர் விட்டனர்.

    வகுப்பறையில் பாடம் எடுத்துக்கொண்டு இருந்த போது ஆசிரியர் சக்திவேல் இறந்த சம்பவம் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்த ஆசிரியர் சக்திவேல் இதே பள்ளியில் தொழிற்கல்வி படிப்பு முடித்து 1994-ம் ஆண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக அதே பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2002-ம் ஆண்டு முதல் அவர் நிரந்தர ஆசிரியராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் 2 மகள்களும் உள்ளனர்.

    • கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
    • இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    புதுடெல்லி:

    கொரோனா தொற்று பரவலுக்குப் பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-

    கொரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. முக்கியமாக 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    அதேவேளையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்புக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவ மனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதயம் சார்ந்த நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காக தேசிய தொற்றாநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த நிதியைக் கொண்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

    இதயம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான இலவச மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் பலனடைந்துள்ளனர்.

    இதயம் சார்ந்த நோய்களுக்கான பொதுப் பெயர் மருந்துகள் மக்கள் மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கல்லூரி மாணவர் தினேஷ் குமார் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.
    • மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரையில் இன்று குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கிய போட்டிைய அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இதில் மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த என்ஜினீயரிங் மற்றும் கலைக்கல்லூரிகளை சேர்ந்த 4500 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். திருப்பரங்குன்றத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த 160 மாணவ-மாணவிகளும் இதில் அடங்குவர்.

    அந்த கல்லூரியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னச்சேலம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவரின் மகன் தினேஷ்குமார் என்பவர் 4 ஆண்டு படித்து வந்தார். இவரும் இன்று காலை நடந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்.

    போட்டியில் பங்கேற்று விட்டு கல்லூரி விடுதிக்கு வந்த தினேஷ்குமாருக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சுய நினைவு இழந்து காணப்பட்ட தினேஷ்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    மாரத்தான் போட்டியில் பங்கேற்ற மாணவர் மாரடைப்பால் இறந்த சம்பவம் மாணவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
    • டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் இருந்து கொட்டாரம், சந்தையடி, சாமிதோப்பு, குலசேகரபுரம் வழியாக சுற்றுப்பாதையில் நாகர்கோவிலுக்கு தடம் எண் 1-டி என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    நேற்று மதியம் 12 மணி அளவில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த பஸ்சை ஏழுசாட்டுபத்து கிராமத்தை சேர்ந்த டிரைவர் அழகேசன் (வயது 42) ஓட்டிச்சென்றார்.

    கன்னியாகுமரி அருகே உள்ள அரசு பழத்தோட்டம் பக்கம் உள்ள பரமார்த்த லிங்கபுரம் தீயணைப்பு நிலையம் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது அழகேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இருப்பினும் அவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தினார். பின்னர் இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.

    இதனை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கண்டக்டர் பொன்செல்வன் அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் தெரிவித்தார். அதன்பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று அழகேசனை மீட்ட னர். பின்னர் தீயணைப்பு வண்டியில் ஏற்றி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அழகேசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    • விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்த நிலையில் விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஒரு வாரத்தில் 2 விமானிகள் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    நாக்பூர் விமான நிலையத்தில் இருந்து புனேவுக்கு நேற்று மதியம் 1 மணிக்கு பயணிகள் விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தை விமானி மனோஜ் சுப்பிரமணியம் (வயது40) என்பவர் இயக்க இருந்தார்.

    மதியம் 12 மணியளவில் விமான நிலையத்தில் புறப்பாடு வாசல் பகுதியில் மனோஜ் சுப்பிரமணியம் நின்ற போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் விமான ஊழியர்கள் அனுமதித்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விமானம் புறப்பட ஒரு மணி நேரம் இருந்த நிலையில் அதனை இயக்க இருந்த விமானி மாரடைப்பால் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இறந்து போன விமானி மனோஜ் சுப்பிரமணியத்தின் சொந்த ஊர் சென்னை ஆகும். அவரது உடல் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    மனோஜ் சுப்பிரமணியம் இயக்க வேண்டிய விமானத்தில் 214 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். இதைத் தொடர்ந்து சுமார் 15 நிமிடம் தாமதமாக மாற்று விமானி மூலம் அந்த விமா னம் புறப்பட்டு சென்றது.

    இது தொடர்பாக இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், நாக்பூரில் எங்களது விமானி உயிரிழந்ததை எண்ணி வருந்துகிறோம். விமான நிலையத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது துரதிருஷ்ட வசமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஒரு வாரத்தில் 2 விமானிகள் இறந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமை டெல்லியில் இருந்து தோகா சென்ற பயணிகள் விமானத்தில் மூத்த விமானி உடல்நலக் குறைவால் உயிரிழந்து உள்ளார்.

    • அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரை மாநாட்டுக்கு சென்றார்.
    • எடப்பாடி பழனிசாமி மாரிமுத்து குடும்பத்துக்கு ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மதுரை மாநாட்டுக்கு சென்று திரும்பியபோது, மாரடைப்பால் இறந்த கட்சி தொண்டருக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனி பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, (48). அ.தி.மு.க., விசுவாசியான இவர், கோவையில் உள்ள உறவினருடன் இணைந்து, மதுரை மாநாட்டுக்கு சென்றார். மாநாடு நிறைவடைந்த பிறகு, அங்கிருந்து, திருப்பூர் குழுவினருடன் திருப்பூர் புறப்பட்டார்.

    வேனில் வந்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தவரை சோதித்த போது, மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது. அதன்பின், உடலை திருப்பூர் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன்,எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., குணசேகரன் ஆகியோரது பரிந்துரைப்படி, பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இறந்த மாரிமுத்து, குடும்பத்துக்கு, ஆறு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்துள்ளார். 

    • மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
    • 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள பள்ளி ஒன்றில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அங்கு, 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் ஓடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தபோது அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், தரங்கம்பாடியில் விளையாட்டு போட்டியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவர் ரிஷி பாலனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

    மாணவரின் இறப்பு செய்தியைக் கேட்டு துயரமும், வேதனையும் அடைந்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    துயரமான நேரத்தில் மாணவரின் குடும்பத்திற்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிப்பதாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.
    • கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம்.

    நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, நரம்புகளில் அடைப்பு, முழங்கால் வலி, மூட்டுவலி, இடுப்பு வலி, கண்பார்வை குறைபாடு, கெட்ட கொலஸ்ட்ரால் இதனால் வரக்கூடிய உடல்பரும் போன்ற தொந்தரவுகள் இருந்தால் இந்த மருந்தை தொடர்ந்து 11 நாட்கள் எடுத்துக்கொண்டால் உடலில் இருக்கக்கூடிய வியாதிகள் அனைத்தும் குணமாகும்.

    இப்போது இருக்கக்கூடிய டிஜிட்டல் உலகத்தில் நோய்களுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் தான். உணவு பழக்கவழக்கங்கள் இப்போது முற்றிலும் மாறிவிட்டது. நாம் இப்போது சாப்பிடக்கூடிய உணவுகள் நமக்கு 100 சதவீதம் ஊட்டச்சத்தை கொடுக்கிறதா என்றால் நிச்சயமாக கிடையாது.

    ஊட்டச்சத்து இல்லாத உணவுகளையும், கலப்படம் நிறைந்த உணவுகளையும் தான் நாம் சாப்பிட்டு வருகிறோம். அதனால் அதனுடைய விளைவு நிச்சயமாக நோய்கள் தான். இதனால் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று அலைவதை நிறுத்திவிட்டு முதலில் வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய பொருட்களை பயன்படுத்தி செய்யக்கூடிய மருந்தை 11 நாட்களுக்கு சாப்பிடும் போது பல நோய்கள் குணமாகும். அதாவது உங்களுக்கு மாரடைப்பு, ரத்தக்குழாய் அடைப்பு மற்றும் இதயம் சம்பந்தமான எந்த நோய்களுக்கும் இந்த குடிநீரை பயன்படுத்தி நிவாரணம் பெறமுடியும். அதேபோல் உங்கள் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டு அதனால் வரும் சிக்கல்களை இந்த மருந்து தீர்க்கும். இந்த எளிதான குடிநீரை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    தண்ணீர்-250 கிராம்

    வெந்தயம் -ஒரு டீஸ்ஸ்பூன்

    கறிவேப்பிலை- ஒரு கைப்பிடி

    பட்டை- ஒருதுண்டு

    இஞ்சி- ஒரு டீஸ்பூன் (துருவியது)

    செய்முறை:

    கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து 250 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும். இந்த 250 கிராம் தண்ணீர் 150 கிராம் அளவுக்கு குறுகி வரும் அளவிற்கு காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த பொருட்களில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் தண்ணீரில் இறங்கி வரும் அளவுக்கு காய்ச்சி எடுக்க வேண்டும். அதற்கு அடுப்பை மிதமான தீயில் வைத்தே இந்த மருந்தை காய்ச்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு இதனை வடிகட்டியில் வடிகட்டி இந்த தண்ணீரை 11 நாட்கள் தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.

    இதில் சுவைக்காக எதுவும் சேர்க்க வேண்டாம். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமானால் சிறிதளவு தேன் சேர்த்துக்கொள்ளலாம். இதனை 11 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் நீங்களே பிரம்மித்து போகிற அளவுக்கு உங்களுக்கு நிறைய பலன்கள் கிடைக்கும்.

    அதாவது நரம்புகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் முதற்கொண்டு எல்லாவிதமான பிரச்சினைகளும் நீங்கி நரம்புகள் சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கும். அதேபோல் மூட்டுவலி, முழங்கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கும் சிறப்பான தீர்வாக இருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கபநோய்களுக்கும் சிறந்த தீர்வினை அளிக்கும்.

    வாதம், பித்தம், கபம் இந்த மூன்றையும் ஒழுங்குபடுத்தக்கூடிய ஆற்றல் இந்த குடிநீருக்கு உள்ளது. உங்களை நீங்கள் கட்டுடலாக வைத்துக்கொள்ளவும் இந்த குடிநீர் உதவியாக இருக்கும். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.

    • ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உண்டாகும்.
    • ரத்தக் குழாய்கள் சுருங்குவது, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் ஆகியவற்றால் மாரடைப்பு ஏற்படும்.

    இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் சுருங்குவது, ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிதல் போன்ற பல்வேறு காரணங்களால் இதய வால்வுகளில் அடைப்புகள் உண்டாகின்றன. இந்த அடைப்புகள் ஏற்படும்போது மூச்சுத் திணறல், படபடப்பு, சோர்வு, தலைசுற்றல், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு ஆகியவை உண்டாகும். இந்த இதயப் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதற்கு யோகா உதவி செய்யும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

    இதயத் தமனிகளின் உட்புறச் சுவர்களில் கொழுப்புகள் அல்லது கொலஸ்ட்ரால் உருவாகத் தொடங்கும்போது இதய அடைப்பு ஏற்படுகிறது. இதய அடைப்புக்கான ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

    அதிக கொழுப்புச்ச்த்து, உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற நீரிழிவு, அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பது, உடல் உழைப்பின்மை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற காரணங்களால் இதய அடைப்பு பிரச்சினை உண்டாகிறது.

    சர்வாங்காசனம்

    சர்வாங்காசனம் செய்வதன் மூலம் உடலின் ரத்த ஓட்டம் அதிகரிப்பதோடு ஜீரண மண்டலம் முதல் ஒட்டுமொத்த உடலின் இயக்கமும் சீராகும். குறிப்பாக சிறுநீரகச் செயல்பாடுகள் மேம்படும்.

    செய்யும் முறை

    * தரை விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்துப் படுக்கவும். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும்.

    * கால்களை 90 டிகிரிக்கு மேலே உயர்த்த வேண்டும். இப்போது உள்ளங்கைகளை இடுப்பின் மீது வைத்தபடி இடுப்பை மேலே

    உயர்த்த வேண்டும்.

    * உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடலின எடையை தோள்பட்டைகளில் தாங்கும்படி வைத்திருக்கச் செய்ய

    வேண்டும். கை முட்டிகள் தரை மீது இருக்கும்படி வைத்துக் கொள்ளுங்கள்.

    * இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளிவிட்டபடி, 100 எண்ணிக்கை எண்ணும் வரை இதே நிலையில் வைத்திருங்கள்.

    * பின் மெதுவாக கால்களைக் கீழிறக்கி மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

    சேது பந்தா சர்வாங்காசம்

    சேது பந்தா சர்வாங்காசனத்தை ஆங்கிலத்தில் பிரிட்ஜ் போஸ் என்று சொல்வார்கள். இதை தினமும் செய்வதன் மூலம் முதுகு வலி குறைந்து முதுகெலும்புகள் பலமாக இருக்கும். ரத்த அழுத்தம். ஆஸ்துமா, மனஅழுத்தம் ஆகியவற்றைச் சீராக வைத்திருப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

    செய்யும் முறை

    * தரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும். தலைக்கு தேவைப்பட்டால் தலையணை வைத்துக் கொள்ளலாம். முழங்கால்களை மட்டும் மடக்கி, கால்களை முடிந்தவரை இடுப்புக்கு அருகில் கொண்டு வர வேண்டும். கால்களை நன்கு விரித்தபடி வைத்துக் கொள்ளுங்கள்.

    * உள்ளங்கைகள், தோள்கள் மற்றும் கால்களை தரையில் அழுத்தி, மெதுவாக இடுப்பை மேலே உயர்த்துங்கள். ஆனால் முதுகில் அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம்.

    * தொடைகளை முழங்கால்களுக்கு அருகில் நெருக்கமாக வையுங்கள். கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டியபடி வைத்துக்

    கொள்ளுங்கள். இப்போது மூச்சை நன்றாக உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடுங்கள்.

    உத்தனாசனம்

    உத்தனாசனம் செய்வதன் மூலம் இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் ஆகியவற்றை வலிமைப்படுத்தும். குறிப்பாக பெருங்குடல், சிறுகுடல், கணையம், கல்லீரல், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளையும் பலப்படுத்தும்.

    செய்முறை

    * இரண்டு கால்களையும் லேசாக விரித்து வைத்தபடி தரை விரிப்பின் மீது நில்லுங்கள்.

    * இரண்டு கைகளையும் காதை ஒட்டினால் போல வைத்து மேல் நோக்கி தூக்குங்கள். இப்போது மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்ட படியே குனிந்து கால்களை வளைக்காமல் கால் பாதங்களைத் தொடவும்.

    * 20 விநாடிகள் இதே நிலையில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புங்கள்.

    • உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும்
    • நோயாளியின் கையில் ஒரு சிறு துளை மூலம் அவசர ஆஞ்சியோகிராம் செய்து

    நாகர்கோவில் :மேல ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்த பூ தங்கம் (வயது 68). இவர் மாரடைப்பு காரணமாக நாகர்கோவில் பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை இருதயவியல் நிபுணர் மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் நோயாளியை பரிசோதித்து விட்டு உடனடியாக ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள்.

    இதையடுத்து நோயாளிக்கு மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் நோயாளியின் கையில் ஒரு சிறு துளை மூலம் அவசர ஆஞ்சியோகிராம் செய்து இருதயத்தில் உள்ள 3 ரத்தக்குழாயில் 5 அடைப்புகள் உள்ளது என கண்டறிந்தனர். பொதுவாக இவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும். ஆனால் நோயாளியின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் திடீரென மாரடைப்பு ஏற்படலாம். எனவே ரத்தக்குழாய் அடைப்புகளை நீக்க உடனடியாக ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யப்பட்டது. 3 ரத்த குழாயில் உள்ள 5 அடைப்புகள் 3 கம்பிச்சுருள் கொண்டு பொருத்தப்பட்டது. மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் மற்றும் இருதயவியல் மருத்துவ குழு இணைந்து நோயாளியின் உயிரை காப்பாற்றினர். தற்போது நோயாளி நல்ல முறையில் வீடு திரும்பினார். மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனையிலும், சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், திருவனந்தபுரம் கிம்ஸ் மருத்துவமனை ஆகிய மருத்துவமனையில் பணிபுரிந்து விட்டு தற்போது பொன் ஜெஸ்லி மருத்துவ மனையில் முழு நேர இருதயவியல் நிபுணராக பணிபுரிந்து வருகிறார்.நோயாளியின் உயிரை காப்பாற்றிய மருத்துவர் ஜான்சன் ஜார்ஜ் மற்றும் இருதயவியல் மருத்துவ குழுவினருக்கு நோயாளியின் உறவினர்கள், சக மருத்து வர்கள், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரி வித்தனர்.

    ×