என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடியோ"

    • நான் மெதுவாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார்
    • அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்டுள்ளார்.

    இன்று மாலை நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி நின்றது.

    சம்பவத்தின் பின் இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நடைபாதையில் சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் நின்றிருப்பதும், கட்டுமான தொழிலாளர்கள் அதை நோக்கி ஓடுவதையும் காட்டியது.

    காரை ஒட்டியவர்களிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "நீங்கள் இங்கு ஸ்டண்ட் கற்றுக்கொண்டீர்களா?, இங்கே எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார்.

    அதற்கு காரை ஓட்டியவர் அலட்சியமாக, இங்கே யாராவது இறந்தார்களா? என்று கேட்கிறார். அந்த வீடியோவைப் பதிவுசெய்து கொண்டிருந்த நபர், "காவல் துறையினரை அழைக்கவும்" என்று கூறுகிறார் அதற்கு கார்ஓட்டி "நான் மெதுவாக ஆக்சிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார், அதற்கு வீடியோ எடுப்பவர், " அதை மெதுவாக அழுத்தினீர்களா?" என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கார் மோதியதில் படுகாயமபட்ட 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆபத்தில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

    • இந்த மோதலின் காரணமாக, விமானமும் வீடும் தீப்பிடித்து எரிந்தன.
    • விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சொகாட்டா TBM7 ரக விமானம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவில் ஒரு சிறிய ரக பயணிகள் விமானம் வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    நேற்று (சனிக்கிழமை) அயோவாவிலிருந்து மினசோட்டாவுக்குப் பறந்து கொண்டிருந்த விமானம், மின்னியாபோலிஸில் ப்ரூக்லின் பார்க் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது மோதியது. இந்த மோதலின் காரணமாக, விமானமும் வீடும் தீப்பிடித்து எரிந்தன.

    விபத்து தொடர்பாக புரூக்ளின் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் ரிசிகாட் அடெசோகன் கூறுகையில், வீட்டில் இருந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை, ஆனால் வீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது. விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

    விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை எஞ்சின் கொண்ட சொகாட்டா TBM7 ரக விமானம் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இந்த சம்பவத்தில் குறைந்தது ஒரு நபராவது உயிரிழந்திருப்பார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    விமானத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் இருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதற்கிடையே விமானம் விபத்துக்குள்ளான பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது. 

    • அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
    • அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.

    உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.

    இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

    மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

    மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.

    • நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது
    • 91 வருட பழமையான பாலம், கோவில், அடுக்குமாடி கட்டடங்கள் வரை பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுந்தன.

    இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இன்று நண்பகல் 7.7 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    கட்டிடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழ மக்கள் உயிரை காட்பற்றிக்கொள்ள வெளியே ஓடினர். மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திலும், இந்தியாவின் கொல்கத்தா, இம்பால் பகுதிகளிலும், வங்கதேச பகுதிகளிலும் இதன் தொடர்ச்சியாக நில அதிர்வு உணரப்பட்டது.

    நிலநடுக்கத்தால் மியான்மரில் மட்டும் இதுவரை 144 இறப்புகள் பதிவாகியுள்ளன. 732 பேர் காயமடைந்துள்ளனர். அதேசமயம் பாங்காக்கில் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு நாடுகளிலும் முழுவதும் பல்வேறு சேவைகள்  முடக்கப்பட்டுள்ளன. 

    பல்வேறு பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. பாங்காக்கில் 30 மாடி கட்டடம் இடிந்து விழுந்து உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

    91 வருட பழமையான பாலம், கோவில், அடுக்குமாடி கட்டடங்கள் வரை பல்வேறு கட்டுமானங்கள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது. அவை நிலநடுக்கத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

    • மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.
    • அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது,

    மகாராஷ்டிரா மாநிலம் ஆலியாநகர் மாவட்டம் ரஹுரி பகுதியில் அமைந்துள்ள ஹஸ்ரத் அகமது சிஷ்டி தர்காவுக்குள் புகுந்து கும்பல் ஒன்று, பச்சைக் கொடியை அகற்றி, காவி கொடியை ஏற்றியுள்ளது.

    சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில், கும்பல் வலுக்கட்டாயமாக தர்காவிற்குள் நுழைந்து, பச்சைக் கொடியை அகற்றி, அதற்குப் பதிலாக காவி கொடியை ஏற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. சிலர் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷமிடுவதை கேட்க முடிகிறது. மற்றவர்கள் தர்காவில் காவி கொடி உயர்த்தப்பட்டபோது கைதட்டினர்.

    "அவர்கள் தர்காவைத் தாக்கி அதன் மீது காவி கொடியை ஏற்றும்போது, போலீசார் அங்கேயே அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தடுக்க அவர்கள் எதுவும் செய்யவில்லை" என சம்பவத்தின்போது அங்கிருந்த ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் நேற்று முன் தினம் (மார்ச் 26) அன்று நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சிவாஜி சிலையில் கருப்பு மை பூசப்பட்டிருப்பதைக் காட்டும் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதைத்த அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.

    • இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர்.
    • இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது.

    பிரான்ஸ் விமானப்படையின் 2 ஜெட் ரக விமானங்கள் நேற்றைய தினம் பயிற்சியின்போது நடுவானில் மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி உள்ளது.

    கிழக்கு பிரான்சின் ஹாட்-மார்னேவில் உள்ள செயிண்ட்-டிசியர் அருகே நேற்று பயிற்சியின்போது  பிரான்ஸ் விமானப்படை ஆல்பா ஜெட் விமானங்கள் இரன்டு நடுவானில் மோதிக்கொண்டன.

    மோதலுக்கு முன்னர் இரண்டு விமானிகளும் பாராசூட்டுடன் கீழே குதித்து உயிர்தப்பினர். அவர்கள் நலமுடன் இருப்பதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

    விபத்துக்கு பின் விமானங்கள் இரண்டும் விழுந்து வெடித்ததில் அருகில் இருந்த தொழிற்சாலையிலும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும் பெரிய சேதங்கள் ஏதுமில்லை என்று கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

     

    • அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது.
    • மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்.

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இவரின் கருத்துக்களால் ஷிண்டே தொண்டர்கள் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்று குணால் காமிராவின் ஸ்டூடியோவை அடித்து உடைத்தனர். மேலும், ஸ்டூடியோ விதிமீறி கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர்.

    கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கும் சூழலில் குணால் கம்ரா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராக குணால் கம்ரா 1 வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.

    காவல்துறையுடன் ஒத்துழைக்க தயார் என்றும் ஆனால் தனது கருத்துக்கு வருத்தப்படவில்லை, அதற்காக மன்னிப்பும் கேட்கப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவரது கோரிக்கையை மும்பை போலீஸ் நிராகரித்துள்ளது. உடனே அவர் ஆஜராக வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கிடையே சேனா ஆதரவாளர்கள் தனது ஸ்டூடியோவை அடித்து உடைக்கும் வீடியோவை பகிர்ந்து அவர்களை கிண்டல் செய்து மேலும் ஒரு நகைச்சுவை பாடலை வெளியிட்டார்.

    இந்நிலையில் மத்திய மாநில பாஜக அரசின் சர்வாதிகார செயல்பாடுகள் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராம்மானை கிண்டலடித்து மேலும் ஒரு நகைச்சுவை பாடல் வீடியோவை குணால் கம்ரா வெளியிட்டுள்ளார்.

    அனில் கபூரின் மிஸ்டர் இந்தியா படத்தில் வரும் ஹவாய் ஹவாய் பாடல் வரிகளை மாற்றியமைத்து பரோடி பாணியில் இந்த பாடல் அமைந்துள்ளது. "உங்கள் வரிப்பணம் வீணாக போகிறது" என்பது இந்த பாடலின் தலைப்பு. "அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், உடைந்துவிழும் பாலங்கள், இது சர்வாதிகாரம்" என்ற வரிகள் பாடலில் இடம்பெற்றுள்ளன.

    மேலும் நிர்மலா சீதாராமன் குறித்த வரிகளில், "அவர் மக்களின் சம்பாத்தியத்தைக் கொள்ளையடிக்க வந்திருக்கிறார், சம்பளத்தைத் திருட வந்திருக்கிறார், நடுத்தர வர்க்கத்தை அடக்கி ஒடுக்க வந்திருக்கிறார், மக்களுக்கு சாப்பிட பாப்கார்ன் தர வந்திருக்கிறார், அவரை நிர்மலா தாய் என்று அழைக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.

    பாஜக அரசு பெருநிறுவனங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக வரிச்சுமையையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன.

    மேலும் கடந்த வருடம் பாப்கார்னுக்கு மூன்று விதமான வரியை விதித்து அதற்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம் கேலிக்கு உள்ளானது. இவற்றை முன்வைத்து குணால் கம்ரா தனது பாடலில் அவரை விமர்சித்துள்ளார்.

    • முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் பயணமாக சென்றார்.
    • பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது.

    முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 6 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை இங்கிலாந்து பயணமானார்.

    தற்போது லண்டனில் உள்ள மம்தா பானர்ஜி காலையில் தனது பாதுகாலவர்களுடன் ஜாகிங் மற்றும் பேக் வாக் செய்து உடற்பயிற்சி மேற்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    லண்டனில் பக்கிங்ஹாம் அரண்மனை பகுதி முதல் ஹைட் பூங்கா வரை அவரின் நடைப்பயிற்சி நீண்டுள்ளது. இந்த வீடியோக்களை பகிர்ந்த திரிணாமுல் காங்கிரசின் அதிகாரபூர்வ எக்ஸ் தளம், 'நடைப்பயிற்சி அல்ல, வெறும் வார்ம்-அப் என்று கேப்ஷன் இட்டுள்ளது.

    மேலும் அவர் பின்னோக்கி நடக்கும் பேக் வாக் எனப்படும் பயிற்சி மேற்கொண்ட வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதற்கிடையே லண்டன் இந்தியா ஹவுசில் நடந்த தேநீர் விருந்திலும் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.  

    • சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.
    • கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது.

    உத்தரப் பிரதேசத்தின் ஃபிரோசாபாத்தில் சதார் பஜாரில் சமீபத்தில் 100 வருட பழமையான கட்டடம் ஒன்று இடிந்து விழும் பரபரப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

    இந்த வீடு சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சரியான பராமரிப்பு இல்லாததால், வீட்டின் நிலை மோசமடைந்தது.

    இந்நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில், பஜார் வழியாக மக்கள் நடந்து செல்வதும், அந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்து, அந்த இடத்தில் புகை மேகம் சூழ்வது பதிவாகி உள்ளது.

    கட்டடம் இடியும்போது அருகே இருந்த தெருநாய் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இடிபாடுகளில் சிக்கி அந்த நாய் உயிரிழந்தது. இந்த விபத்தில் வேறு யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.     

    • எங்களை குச்சிகள், கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்கினர்.
    • நாங்கள் மயங்கி விழுந்தோம். மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எங்களை அப்போதும் தாக்கிக்கொண்டுதான் இருந்தனர்.

    பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் ஒரு ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 14 அதிகாலை ராணுவ அதிகாரி ஒருவரும் அவரது மகனும் தங்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது சாதாரண உடையில் வந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் தங்கள் காரை அங்கே நிறுத்த, ராணுவ அதிகாரியை அவரது காரை எடுக்க சொல்லியுள்ளனர். அவர்கள் மிரட்டலாக சொன்னதால், ராணுவ அதிகாரி தனது காரை எடுக்க மறுத்துள்ளார். இதனால் ராணுவ அதிகாரியை போலீஸ்காரர்களில் ஒருவர் குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது மகனையும் தாக்கியுள்ளனர்.

    ராணுவ அதிகாரியின் மகன் கூற்றுப்படி, அவர்கள் எங்களை குச்சிகள், கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்கினர். நாங்கள் மயங்கி விழுந்தோம்.

    மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எங்களை அப்போதும் தாக்கிக்கொண்டுதான் இருந்தனர். குறைந்தது 45 நிமிடங்கள் அவர்கள் எங்களை தாக்கினர் என்று தெரிவித்தார். மேலும் அந்த போலீஸ்காரர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.

    இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரியின் கை முறிந்தது. அவரது மகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    'இந்த தாக்குதல் தொடர்பாக நாங்கள் இரண்டு நாட்களாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயற்சித்தோம், ஆனால் போலீசார் எங்களுக்கு உதவவில்லை. எனக்கு மிரட்டல் அழைப்புகளும் வந்தன' என்று மகன் தெரிவித்தார்.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் காவல்துறை இறுதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 அதிகாரிகளை பாட்டியாலா காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.  

     

    • அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
    • இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.

    மகாராஷ்டிராவில் வாகனம் ஓட்டும் போது ஒருவருக்கு மாரடைப்பு, கார் பல வாகனங்களில் மோதுவது போன்ற காட்சிகள் வீடியோவில் காட்டப்பட்டுள்ளன.

    மகாராஷ்டிராவில் கார் ஓட்டும்போது நபர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. மேலும் மாரடைப்பு மற்றும் விபத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக கார் ஓட்டியும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இறந்தவர் தீரஜ் பாட்டீல் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நேற்று (சனிக்கிழமை) அதிகாலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

    மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் சம்பவத்தின்போது மேம்பாலம் அருகே தீரஜ் வந்துகொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து, ஒரு ஆட்டோ, ஒரு கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் மீது மோதியது.

    இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன, இது சிசிடிவியிலும் பதிவாகியுள்ளது. தீரஜ்ஜின் பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    • அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன.
    • கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஆந்திர மாநிலம் ரிஷி கொண்டா மலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி ரூ.500 கோடி அரசு செலவில் பிரம்மாண்டமான அரண்மனை ஒன்றை கட்டினார். இது முதல் மந்திரியின் முகாம் அலுவலகம் என கூறப்பட்டது.

    இந்த கட்டிடத்தில் விலை உயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது இது ஆந்திர மாநிலத்தின் ஷீஷ் மஹால் அரண்மனை என அழைக்கப்படுகிறது. இந்த பிரம்மாண்ட கட்டிடத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

    பிரமாண்டமான வளாகத்தின் உள்ளே தங்க முலாம் பூசப்பட்ட அலங்காரங்கள், இத்தாலிய பளிங்கு தரை மற்றும் பட்டுப் போன்ற அலங்காரங்கள் உட்பட ஆடம்பரமான உட்புறங்களை கொண்டுள்ளது.

    இந்த அரண்மனை ஒரு முக்கிய கடலோர சுற்றுலா மையமான அழகிய ருஷிகொண்டா பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நன்கு பரந்த தொகுதிகளைக் கொண்டுள்ளது.

    விரிவான உள்கட்டமைப்பு நடைபாதை சாலைகள், வடிகால் அமைப்புகள், 100 கே.வி. மின் துணை மின்நிலையம் ஆகியவை என வியக்கும் வைக்கும் வகையில் அபரிதமான செலவில் அமைக்கப்பட்டுள்ளன.

    ஜெகன்மோகன் ரெட்டி கட்டிய ஷீஷ்மஹால் அரண்மனையின் பிரம்மாண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஆடம்பரமான கட்டுமானம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

    கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிமுறைகளை கடுமையாக மீறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    அழகிய ருஷிகொண்டா மலையின் கிட்டத்தட்ட பாதி பகுதி இந்த அரண்மனையை கட்டுவதற்காக அழிக்கப்பட்டுள்ளன. இது கடுமையான சுற்றுச்சூழல் கவலைகளை எழுப்புவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில்:-

    முன்னாள் முதல் மந்திரி நீதிமன்றங்களை ஏமாற்றி சுற்றுச்சூழல்களை மீறி பிரம்மாண்ட மாக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காக பொதுப் பணத்தை தவறாக பயன்படுத்தி உள்ளார்.

    அரசியலில் இது போன்ற தலைவர்கள் இருப்பது உண்மையிலேயே நமக்கு தேவையா. இது போன்ற விவாகரத்தில் நீண்ட விவாதம் தேவை.

    தற்போது இந்த கட்டிடங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அவற்றிலிருந்து அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவது என்பதற்கு நாங்கள் எந்த விதமான ஆலோசனையும் செய்யவில்லை.

    இந்த கட்டமைப்புகள் சுற்றுலாத் துறைக்கு சாத்தியமானது அல்ல. இந்த விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    டெல்லியில் முன்னாள் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அவருடைய பங்களாவை ஆடம்பரமாக ரூ.36 கோடி செலவில் புதுப்பித்தார்.

    அதேபோல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ ஜெகன்மோகன் ரெட்டியும் ஷீஷ் மஹால் அரண்மனையை கட்டி உள்ளார் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஷீஷ் மஹால் அரண்மனை விவகாரம் ஆந்திர அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி உள்ளது. * * * ஷீஷ் மஹால் அரண்மனையின் பிரமாண்ட தோற்றம்.

    ×