என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலையம்"

    • விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

    திருவனந்தபுரம்:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்துவரும் நிலையில் இரு நாட்டினரும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு வரக்கூடிய பயணிகள் மூன்று அடுக்கு பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கான உடல் மற்றும் அடையாள சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் விமான நிலையங்களுக்கு பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருமாறு ஏர் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

    • இண்டிகோ மட்டும் சுமார் 165 விமானங்களை ரத்து செய்தது
    • மே 10 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.

    இதில் 26 பேர் உயிரிழந்தனர் என்றும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் பதற்றத்தை தொடர்ந்து வட இந்தியாவில் 200 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஸ்ரீநகர், லே, அமிர்தசரஸ் மற்றும் சண்டிகர் உட்பட குறைந்தது 18 விமான நிலையங்கள் இன்று (புதன்கிழமை) தற்காலிகமாக மூடப்பட்டன.

    ஜம்மு, பதான்கோட், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட முக்கிய வடக்கு மற்றும் மேற்கு பகுதி விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் அங்கு பாதுகாப்பு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

    ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஆகாசா ஏர் மற்றும் பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் இந்த பகுதிகளுக்கான சேவைகளை நிறுத்தின.

    இண்டிகோ மட்டும் சுமார் 165 விமானங்களை ரத்து செய்தது, அதே நேரத்தில் டெல்லிக்கு செல்லும் மற்றும் புறப்படும் 35 விமானங்கள் நள்ளிரவு முதல் காலை வரை ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விமானப் போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவுகளைத் தொடர்ந்து, ஸ்ரீநகர், ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை மே 10 ஆம் தேதி காலை 5.29 மணி வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    • ல் மாஸ்கோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது.
    • மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

    உக்ரைன் ட்ரோன் தாக்குதல் காரணமாக ரஷிய தலைநகர் மாஸ்கோவின் 4 விமான நிலையங்களில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

    ரஷியாவில் மாஸ்கோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது உக்ரைன் 100க்கும் மேற்பட்ட டிரோன்களை ஏவியது. இதில் பலவும் இடைமறித்து அழிக்கப்பட்டதாக மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலால் மாஸ்கோவைச் சுற்றியுள்ள நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக விமானங்களை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

    ரஷியாவின் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கூற்றுப்படி, உக்ரைனின் எல்லையிலும் ரஷ்யாவின் உள்பகுதியிலும் டிரோன்கள் தாக்குதல் நடந்துள்ளதால் மற்ற ஒன்பது பிராந்திய ரஷிய விமான நிலையங்களும் தற்காலிகமாக செயல்படுவதை நிறுத்திவிட்டன.

    டிரோன் தாக்குதலில் குர்ஸ்க் பகுதியில் இரண்டு பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்தார். மேலும் வோரோனேஜ் பகுதியில் சில சேதங்கள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் உலகப் போரில் வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில் மே 8 முதல் 10 வரை மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதற்காக 3 நாள் போர் நிறுத்தத்திற்கு புதின் அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில் இந்த டிரோன் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. 

    • டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது.

    இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையமான பென் குரியன் விமான நிலையம் மீது ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

    ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம் அருகே விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து விமான நிலையத்தில் சேவைகள் நிறுத்தப்பட்டன.

    ஏவுகணைத் தாக்குதலில் ஆறு பேர் காயமடைந்ததாக இஸ்ரேலின் தேசிய அவசர சேவையை மேற்கோள் காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.

    இஸ்ரேலிய ஊடக நிறுவனமான ஹயோம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணை தரையிறங்கிய இடத்தில் ஒரு பெரிய பள்ளம் உள்ளது. மேலும் பயணிகள் முனையத்திலிருந்து புகை எழுவதை காட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    தாக்குதலை தொடர்ந்து டெல் அவிவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் இயக்கப்பட்டன. கடந்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஹவுத்திகள் நடத்தும் நான்காவது ஏவுகணைத் தாக்குதல் இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • தன்னைப் பொறுத்த வரை அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி.
    • அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை.

    மதுரை:

    தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக மிளிர்ந்து வரும் விஜய், தனது நீண்ட கால அரசியல் வேட்கையின் அடுத்த கட்டமாக, கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை நோக்கிய இளம் தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக திகழ்ந்து வரும் விஜய்யின் அரசியல் பிரவேசம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினருக்கும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும், அதுவே எங்கள் முழுநேர சிந்தனையாக இருக்கும் என்ற உறுதியை அளித்துள்ள விஜய் தற்போதைய மத்திய, மாநில அரசுகளையும் எதிர்க்க தவறவில்லை. சிறந்த நிர்வாகத்திறமை தங்களிடம் இருக்கும் என்றும், அதே நேரத்தில் லஞ்ச, லாவண்யம், ஊழலற்ற அரசை அமைத்து காட்டுவோம், அதுவே தங்களது 2026 சட்டமன்ற தேர்தல் களமாக அமையும் என்று பேசி விஜய் உற்சாகப்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தில் தற்போது நடைபெறுவது மக்கள் விரோத ஆட்சி என்றும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம் என்றும், பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க.வையும், பிரிவினைவாத அரசியல் கலாசாரம் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் ஒரே நேரத்தில் விமர்சித்த விஜய், எண்ணித்துணிக கருமம் என்ற வள்ளுவரின் வாக்குப்படி, அனைத்திற்கும் தயாராகி அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக அதிரடித்தார்.

     குறிப்பாக, தன்னைப் பொறுத்த வரை அரசியல் என்பது மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்து தெரிந்து கொள்ள, என்னுடைய முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். எனவே அரசியல் எனக்கு பொழுது போக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன் என்ற விஜய்யின் பேச்சு தமிழக மக்களை அவர்பக்கம் ஈர்த்துள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தை தயார்படுத்தி கூர்சீவி வரும் விஜய் அதற்கான பூர்வாங்க பணிகளை முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் கோவையில் 7 மாவட்ட நிர்வாகிகளை உள்ளடக்கிய வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை 2 நாட்கள் நடத்தி நிர்வாகிகளை ஊக்கப்படுத்தியோடு, தொண்டர்களை தயார்படுத்துமாறும் எழுச்சியுரையாற்றினார். விரைவில் மற்ற மண்டலங்களிலும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்த திட்டமிட்டுள்ள விஜய், தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

    இதற்கிடையே கலைத்துறையில் இருந்து தனது பயணத்தை நிறைவு செய்யும் வகையில் கடைசி படமான ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 2 நாட்கள் ஷூட்டிங் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இன்று அவர் வருகை தருகிறார்.

     

    தமிழக வெற்றிக் கழக தலைவரான பிறகு இன்று மாலை விஜய் சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை வருகிறார். அதிலும் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மண்ணில் கால் வைக்கும் அவரை வரவேற்க தொண்டர்கள் தயாராகி வருகிறார்கள். மதுரை வருகை குறித்த தகவல் நேற்று மாலை வெளியானது முதல், தங்களது அனைத்து பணிகள், பயணங்களை ஒத்தி வைத்த த.வெ.க. தொண்டர்கள் விஜய்யின் வருகையை பண்டிகை போல் கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர்.

    முன்னதாக இன்று காலை 7 மணிக்கு விஜய், மதுரை வருவதாக தகவல் பரவியது. இதையடுத்து மதுரை மட்டுமின்றி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த தொண்டர்கள் மதுரையை நோக்கி கார், வேன், இருசக்கர வாகனங்களில் நேற்று இரவு முதலே புறப்பட்டுவிட்டனர். இன்று அதிகாலை சூரிய உதயத்தின்போது மதுரை விமான நிலைய பகுதி த.வெ.க. தொண்டர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

    திரும்பிய திசையெல்லாம் த.வெ.க. கட்சி கொடியுடன், இளைய தளபதி விஜய் வாழ்க என்ற விண்ணைப் பிழக்கும் கோஷங்களும் மட்டுமே கேட்டது. அதிலும் குறிப்பாக தங்களுக்கான ஒரே தலைவர் விஜய்தான் என்ற மனதில் நிலை கொண்டுள்ள இளம்பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கழுத்தில் கட்சி துண்டை அணிந்து கொண்டும், நெஞ்சில் விஜய் வாழ்க என்ற பேட்ஜை குத்திக் கொண்டும், கண்களில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    இதுஒருபுறம் என்றால் அண்ணனை பார்க்க போகிறேன் என்று கூறிவிட்டு இருசக்கர வாகனங்களில் வந்து குவிந்த இளைஞர்கள் பட்டாளம் மதுரை விமான நிலைய பகுதியை வட்டமிடும் கழுகு போல் சுற்றி சுற்றி வருகிறார்கள். வானில் பறந்து மதுரையில் தரையிறங்கும் அனைத்து விமானங்களையும் பார்த்து உற்சாகமாக கையசைத்து அதோ வந்து விட்டார், இதோ வந்து விட்டார் என்ற உற்சாக குரலில் விஜய் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர்.

    இந்தநிலையில் விஜய் இன்று மாலை 4 மணிக்கு மதுரை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே வரும் அவர் பல மணி நேரமாக அவரை பார்க்க காத்திருக்கும் தொண்டர்களின் உற்சாக, எழுச்சிமிகு வரவேற்பை ஏற்றுக்கொள்கிறார். தொடர்ந்து பெருங்குடி வரை திறந்தவேனில் ரோடுஷோவாக சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகளை த.வெ.க. நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அதேவேளையில் எந்த விதத்திலும் உற்சாக மிகுதியால் தொண்டர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயஒழுக்கம் ஆகியவற்றில் இருந்து தவறாமல் இருக்க வேண்டும் என்ற விஜய்யின் அறிவிப்பை கட்டிக்காக்கும் வகையிலும் தொண்டர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மேலும் விஜய்க்கு தற்போது ஒய் பிரிவு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அவர்களுடன் சேர்ந்து மதுரை போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். எந்த ஒரு தலைவருக்கும் கிடைக்காத எதிர்பார்ப்பும், வரவேற்பும் இன்று மதுரை வருகை தரும் விஜய்யை மெய்சிலிர்க்க வைக்கும் என்று அவரது கட்சி தொண்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    கோவையில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டின் தொடர்ச்சியாக அடுத்தகட்டமாக மதுரையில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விஜய்யின் மதுரை வருகை சுட்டெரிக்கும் கோடையை மிஞ்சும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தை மேலும் சூடாக்கியுள்ளது.

    • டெல்டா விமானத்தின் எஞ்சினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்காவின் ஃபளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்த விமானத்தில் திடீரென தீ பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக விமானத்தில் இருந்த 300 பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.22 பில்லியன் கடனில் இருந்து கட்டப்பட்டது.
    • சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும்.

    நேபாள் நாட்டில் சீன நிறுவனத்தால் கட்டப்பட்ட போக்ரா சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்தில் சுமார் நேபாள ரூ.1400 கோடி மதிப்புள்ள பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளதாக நேபாள பாராளுமன்றக் குழு கண்டுபிடித்துள்ளது.

    போக்ரா சர்வதேச விமான நிலையம் சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து வாங்கிய சுமார் ரூ.2,2 கோடி கடன் வாங்கி கட்டப்பட்டது.  டிசம்பர் 29, 2022 அன்று சீன நிறுவனத்தால் இந்த விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.

    ஒப்பந்தத்தின்படி, விமான நிலைய கட்டுமானம் முடிந்த பிறகு ஏழு ஆண்டுகளுக்கு 2 சதவீத வட்டி விகிதத்தில் கடனை நேபாளம் திருப்பிச் செலுத்த வேண்டும். பின்னர் அடுத்த 13 ஆண்டுகளில் அசல் தொகையை செலுத்தி முடிக்க வேண்டும்.

    நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAN) விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான செலவை 14.5 கோடி அமெரிக்க டாலர்களாக மதிப்பிட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டு, சீன நிறுவனத்துடன் 21.5 கோடி அமெரிக்க டாலர் செலவில் விமான நிலையம் கட்டும் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று பாராளுமன்ற குழு அறிக்கை கூறுகிறது.

     மேலும் அந்த அறிக்கையில், திட்டத்தின் கட்டுமானத்தின் போது நடந்த முறைகேடுகளில் ரூ.2.22 பில்லியன் வரி விலக்கு அளித்தல் மற்றும் சின் தண்டா மலையின் 40 மீட்டர் பகுதியை அகற்றுவதற்கு ரூ.320 மில்லியன் செலவு ஆகியவை அடங்கும். ஆனால் அவை ஒருபோதும் செய்யப்படவில்லை. இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் அவ்வறிக்கையில் சுட்டுக்காட்டப்பட்டுள்ளது.

    போக்ரா சர்வதேச விமான நிலையத் திட்டத்தின் தலைவர் பினேஷ் முனகர்மி, நிர்வாகத் தலைவர் ராஜேந்திர பிரசாத் பவுடெல், CAAN இயக்குநர் மற்றும் பொறியாளர் பாபுராம் பவுடெல் உள்ளிட்டோரை விசாரித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுவின் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.  

    • அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மும்பை:

    மும்பை விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானத்தில் பயணி ஒருவர் அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அதிகாரிகள் கடந்த 9-ந்தேதி வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.

    அப்போது, உகாண்டா நாட்டை சேர்ந்த பயணி ஒருவர் பதற்றத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரது உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் எந்த பொருளும் சிக்காததால் அதிகாரிகள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    இதில், அவர் போதைப்பொருளை விழுங்கி கடத்தி வந்ததாக தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் அவரை விமான நிலைய போலீசாரிடம் ஓப்படைத்தனர்.

    போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருளை கேப்சூல் வடிவில் விழுங்கி கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் கடந்த 13-ந்தேதி இனிமா கொடுத்து அவரது வயிற்றில் இருந்த 785 கிராம் கோகைன் என்ற போதைப்பொருளை வெளியே எடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

    இதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடியே 85 லட்சம் ஆகும். இது குறித்து உகாண்டா நாட்டை சேர்ந்த பயணியை கைது செய்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
    • ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    மாட்ரிட்:

    பிரிட்டனில் செயல்பட்டு வருவது ஸ்கைட்ரேக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் ஆகஸ்ட் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஆய்வு ஒன்றை நடத்தியது. நூற்றுக்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த விமான நிலைய வாடிக்கையாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

    உலகெங்கிலும் உள்ள 565 விமான நிலையங்களில் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் பயணிகளிடம் சேவை குறித்து ஆய்வு நடத்தி உள்ளது.

    அதன்படி, உலகின் தலைசிறந்த விமான நிலைய உணவு, உலகின் தலைசிறந்த விமான நிலைய கழிவறை, ஆசியாவின் தலைசிறந்த விமான நிலையம் என பல்வேறு விருதுகளை சாங்கி விமான நிலையம் குவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டோஹா விமான நிலையமும், ஜப்பானின் டோக்கியோ விமான நிலையம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இந்நிலையில், இந்தியாவின் 4 விமான நிலையங்கள் முதல் நூறு இடங்களில் இடம் பிடித்துள்ளன. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையம் 32வது இடத்திலும், பெங்களூரு விமான நிலையம் 48வது இடத்திலும், ஐதராபாத் 56வது இடத்திலும், மும்பை விமான நிலையம் 76வது இடத்திலும் நீடிக்கின்றன.

    • ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை
    • கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.

    அமெரிக்காவில் 57 வயது பெண் ஒருவர் தனது நாயை விமானத்தில் ஏற்றிச் செல்ல அனுமதிக்காததால், அதை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    தி இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆர்லாண்டோ சர்வதேச விமான நிலையத்தில் நடந்தது. அங்கு துப்புரவு ஊழியர்கள் பணியின்போது கழிப்பறையில்  ஒரு இறந்த நாயினைக் கண்டனர்.

    விசாரணையில், அலிசன் அகதா லாரன்ஸ் என்ற அந்த 57 வயது பெண் தனது வளர்ப்பு நாயுடன் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளார்.

    ஆனால் அவரது நாய்க்குத் தேவையான ஆவணங்கள் அவரிடம் இல்லை. மாற்று ஏற்பாடுகளைச் செய்வதற்குப் பதிலாக, அவர் தனது நாயை விமான நிலைய கழிப்பறையில் மூழ்கடித்து கொன்று, அதன் உடலை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துள்ளார்.

    சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அதிகாரிகள் கைது வாரண்டைப் பிறப்பித்தனர். சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18 அன்று, விலங்குகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் லாரன்ஸ் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் நீதிமன்றத்தில் 5,000 டாலர் செலுத்தி ஜாமீனில் வெளியே வந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் கண்டனங்களை குவித்து வருகிறது.

    • விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேர் கைது.

    மும்பை:

    மும்பை விமான நிலையத்தில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை அதிகாரிகள் வெவ்வேறு சம்பவங்களில் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட ரூ.8½ கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

    இதில் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிய விமான நிலைய ஊழியர் ஒருவரை பிடித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவர் பேன்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்த ரூ.2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான 2.8 கிலோ தங்க பசையை பறிமுதல் செய்தனர்.

    மற்றொரு சம்பவத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் உள்ளாடையில் மறைத்து வெளியில் எடுத்து செல்ல முயன்ற ரூ.1 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 1.6 கிலோ தங்க பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தங்கத்தை வாங்க வந்த மேலும் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர்.

    இதேபோல இன்னொரு சம்பவத்தில் வெளிநாட்டில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமான கழிவறை குப்பை தொட்டியில் இருந்து அதிகாரிகள் 2 கருப்பு நிற பையில் ரூ.2 கோடியே 53 லட்சம் மதிப்பிலான 3.1 கிலோ தங்கத்தை மீட்டனர்.

    தங்கம் பறிமுதல் தொடர்பாக 2 விமான நிலைய ஊழியர்கள் உள்பட 4 பேரை கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும்.
    • தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பசும்பொன் முத்துராமலிங்கம் தேவரின் 115 -வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சிலைக்கு முக்குலத்து புலிகள் கட்சியின் சார்பாக மாநில நிறுவனத்தலைவர் ஆறு சரவணத்தேவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் கூறும்போது, மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும். அக்டோபர் 30 ஆம் தேதி தேவர் ஜெயந்தி அன்று மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முன்பு இருந்தது போல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும் என்றார்.

    இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×