என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருள்"

    • கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை பரங்கிமலையில் இன்று மேற்கொண்ட சோதனையில் ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பரங்கிமலையில் நடைபெற்ற சோதனையில் கோகைன் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், 5 பேர் அறித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டு ஒரு கிலோ கோகைன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கைப்பற்றப்பட்ட 2 கிலோ கோகைனின் சந்தை மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்கரையில் கழிவு பிளாஸ்டிக்கை சேகரிக்கும் போது கோகைன் கிடைத்ததாக வாக்குமூலத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதில், பழனீஸ்வரன் என்பவரும் கடற்கரையோரத்தில் இருந்து 1 கிலோ கோகைன் கிடைத்ததாக கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    சாயல்குடி வனக்காப்பாளராக பணிபுரியும் மகேந்திரன் என்பவர் ஏ1 குற்றவாளி என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் புதிய போதைப்பொருள்.
    • மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து மீள முடியாது.

    தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் இருக்கும் பகுதிகளில் சாக்லேட் வடிவில் புதுவகை போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.


    "ஸ்ட்ராபெர்ரி குயிக்" எனப்படும் ஒரு புதிய போதைப்பொருள். பள்ளி கூடங்களின் அருகில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டு அது வேகமாக பரவி வருகிறது.

    வாயில் போட்டால் வெடித்து சிதறுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இந்த போதைப் பொருளில் மெத்த பெட்டமின் போதைப் பொருள் கலந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஸ்ட்ராபெரி வாசனையுடன் கூடிய இந்த வகை சாக்லேட் போதைப் பொருள் மாணவப் பருவத்தில் இருந்தே மாணவர்களை போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் போலீசார் பள்ளிக்கூடங்களில் அருகில் உஷார் படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த போதைப் பொருளை மிட்டாய் என்று நினைத்து மாணவர்கள் சாப்பிட்டு விட்டால் அதில் இருந்து அவர்கள் மீள முடியாது என்கிற எச்சரிக்கை தகவலும் வெளியாகி உள்ளது.

    இது சாக்லேட், வேர்க்கடலை வெண்ணெய், கோலா, திராட்சை மற்றும் ஆரஞ்சு சுவைகளிலும் இந்த போதைப் பொருட்கள் கிடைப்பதாக கூறப்படுகிறது. எனவே பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் பள்ளிக்கூடங்களில் அருகில் அறிமுகமில்லாத நபர்கள் எந்தவித சாக்லேட்டுகளை கொடுத்தாலும் வாங்கி சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தி அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறது.

    எனவே உஷாராக செயல்பட்டு போதைப் பழக்கத்தில் இருந்து மாணவர்களை காக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    • போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை பறிமுதல் செய்தனர்.
    • தப்பியோடிய வாகன ஓட்டுனரை போலீசார் தேடி வருகின்றனர்.

    அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டம் பதர்காண்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட அஷிம்கஞ்ச் பகுதியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டபோது, அந்த வாகனத்தின் ஓட்டுநர் அங்கிருந்து தப்பினார்.

    பின்னர் வாகனத்தில் இருந்து 676 கிராம் ஹெராயின் என்கிற போதைப் பொருள் அடங்கிய சோப்பு கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சோப்பு கவர்களில் ஹெராயினை அடைத்து அவற்றை, ஸ்பீக்கர் பாக்சுக்குள் மறைத்து வைத்திருந்தனர்.

    கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு ரூ.5 கோடி எனவும், மிசோரமில் இருந்து பதர்கண்டி நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடிய வாகன ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

    • போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
    • இந்த சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

    கொழும்பு:

    போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் நேற்று முதல் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

    5 கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது விற்பனையில் ஈடுபட்டாலோ மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    நேற்று முதல் இந்த புதிய சட்டத்தின் கீழ் குற்றம்புரிந்தவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

    கடந்த அக்டோபர் 19-ம் தேதி நச்சுப்பொருள், அபின், அபாயகர மசோதா சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குறித்த மசோதாவில் கையொப்பமிட்டு, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.

    • வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் நடந்தது
    • துண்டு பிரசுரங்கள் விநியோகம்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வாணியம்பாடி ரெயில் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தனலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    மேலும் ரெயில்வே போலீசார் நடத்திய போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதனை அடுத்து கல்லூரி மாணவர்கள் மூலம் ரெயில் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் போதைப்பொருள் தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • மனிதனை மிருகமாக மாற்றும் போதைப் பொருட்களில் மதுவுக்கு அடுத்து கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் பெண்களே ஈடுபடுகிறார்கள்.

    சென்னை:

    மதுவில் தொடங்கி விதவிதமான வழிகளில் கிடைக்கும் போதை பொருட்களை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கியவர்களே இன்று அதற்கு அடிமையாகி குற்றவாளிகளாகவும் மாறிப்போய் இருக்கிறார்கள்.

    உடலுக்குள் போதைப் பொருள் சென்றுவிட்டால் நாம் சொல்வதை உடல் கேட்காது என்றும் போதை என்ன சொல்கிறதோ... அந்த வழியில் மட்டுமே உடல் இயங்கும் என்றும் போலீசார் அடிக்கடி கூறுவதுண்டு.

    அதனை உறுதிப்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு போதைப்பொருளை பயன்படுத்திய பின்னரே அதில் ஈடுபடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.

    இப்படி மனிதனை மிருகமாக மாற்றும் போதைப் பொருட்களில் மதுவுக்கு அடுத்து கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

    ஒரு காலத்தில் தேனி மலைப்பகுதிகளில் இருந்தே தமிழகம் முழுவதும் கஞ்சா சப்ளை ஆனது. கஞ்சா செடிகளை அங்கேயே பயிரிட்டு அறுவடை செய்து காயவைத்து தூளாக்கி பொட்டலம் பொட்டலமாக கட்டி வெளிமாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சமீப காலமாக தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பிடி இறுகியதை தொடர்ந்து கஞ்சா நடமாட்டம் தேனி மலை பகுதிகளில் குறைந்திருக்கிறது என்றே கூறுகிறார்கள்.

    இதனை ஈடுகட்டும் வகையில் ஆந்திர மாநிலத்தையும், தமிழகத்தையும் இணைக்கும் சென்னையையொட்டிய எல்லையோர பகுதிகள் கஞ்சா கடத்தல் களமாக மாறி இருக்கின்றன.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து டிராவல் பேக்குகளில் பயணிகள் போல பஸ்சிலேயே கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகிறார்கள். கார், மோட்டார் சைக்கிள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஆட்டோக்களிலும் கடத்தப்படும் கஞ்சா திருவள்ளூர் மாவட்ட எல்லையை தாண்டியே சென்னை மாநகருக்குள் கால் பதிக்கிறது.

    இந்த கஞ்சா கடத்தலை சென்னையில் காலம் காலமாக பலர் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் பெண்களே ஈடுபடுகிறார்கள். இவர்களை காவல்துறை வட்டாரத்தில் 'கஞ்சா ராணி' என்றே அழைக்கிறார்கள்.

    அந்த சாலை மார்க்கமாக மட்டுமின்றி ஆந்திர மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது. ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை நெருங்கும் வேளையில் கஞ்சா கும்பல் பக்கத்து ரெயில் நிலையமான பேசின் பிரிட்ஜ் அருகே கைமாற்றி விடுவதும் நடக்கிறது.


    ரெயிலில் இருந்து கஞ்சா மூட்டைகளை வெளியில் தூக்கி வீசிவிட்டு பின்னர் சென்று அவைகளை கைப்பற்றிக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னை மாநகரை பொறுத்த வரையில் கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறது.

    போலீஸ் தரப்பில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கடத்தல் விற்பனை கட்டுக்குள் வராமலேயே உள்ளது. இது இன்று... நேற்றல்ல. எப்போதுமே கஞ்சா கடத்தலும் விற்பனையும் காவல்துறைக்கு கடுமையான சவாலாகவே இருந்து வருகின்றன.

    கஞ்சா கடத்தலில் பிடிபடுபவர்களில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதும், இதில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே மாறிப்போய் உள்ளது.

    கடந்த 14 மாதங்களாக திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஆய்வில் பள்ளி மாணவர் கள் பலர் பிடிபட்டு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

    திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளையொட்டி உள்ள இடங்களில் 24 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலைய எல்லைகளை தாண்டி... புழல், செங்குன்றம் வழியாகவே, கஞ்சா கடத்தல் ஆசாமிகள் பெரிய அளவில் கஞ்சா கடத்தலை அரங்கேற்றி வருகிறார்கள்.

    கடந்த 14 மாதத்தில் 164 கோடி மதிப்பிலான 1,426 கிலோ கஞ்சாவை திருவள்ளூர் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 366 வழக்குகள் போடப்பட்டு 367 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை போலீசார் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்கள். ஆனால் கஞ்சா விற்பனை செய்பவர்கள் அதனை கண்டுகொள்வதே இல்லை. திரும்ப திரும்ப அதே குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையிலும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதையடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், பலர் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். கஞ்சாவை சாக்லேட் வடிவிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அண்ணாசாலை பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பீடா கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார். அதனை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை போன்று கேட்டமின், ஹெராயின், யனஹண்டிரன், சீட்டிராய் டினைர் உள்ளிட்ட போதை பொருட்களும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு சென்னயில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    கஞ்சா பொட்டலங்களை பொறுத்த வரையில் 50 கிராம், 100 கிராம் என தனித்தனி பண்டல்களாக போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். சென்னையில் கல்லூரி-பள்ளி மாணவர் களுக்கிடையே சமீபகாலமாக மதுப்பழக்கத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

    ஆரம்பத்தில் பணத்துக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதலில் அதனை ருசிபார்க்கத் தொடங்கி பின்னர் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதுபோன்று கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்தான் இளம் வயதிலேயே செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றங் களில் தொடங்கி பின்னர் பெரிய 'தாதா' நிலைக்கு சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது.

    இதுபோன்ற இளம் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கு பலன் கிடைத்தாலும் பலர் கட்டுக்கடங்காமல் எல்லை மீறி போகும் சூழலும் நிலவுகிறது.

    இப்படி இளம் தலை முறையினரிடையே புற்று நோய்போல பரவி கிடக்கும் போதை பழக்கம் அவர் களிடம் இருந்து எப்படி விலகப்போகிறது? என்பது விடை தெரியாத கேள்வி யாகவே மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

    • சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல்.
    • இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இரண்டு உள்ளூர் இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பஞ்சாபைச் சேர்ந்த மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோ ஹெராயின் மீட்கப்பட்டது. அவர்கள் தர்ன் தரனைச் சேர்ந்த ஜக்தீப் சிங் (21), சதீந்தர்பால் சிங் மற்றும் அமிர்தசரஸைச் சேர்ந்த சன்னி குமார் (22) என அடையாளம் காணப்பட்டனர்.

    நேற்று முன்தினம் இரவு இரு தரப்பினருக்கும் இடையே நடந்த சண்டையின்போது இரண்டு இளைஞர்கள் மீது மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டதாக சம்பா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பெனம் தோஷ் தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் அவர், ரங்கனூர் பேருந்து நிலையம் அருகே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ராம்கர் செக்டரைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கடத்தல்காரர்களில் ஒருவரும் காயமடைந்தனர்.

    இவர்களுக்கு உள்ளூர் மருத்துவ வசதியில் ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மேலும், கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களிடம் இருந்து, சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 2.8 கிலோகிராம் ஹெராயின், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் சில ரவுண்டுகள், ₹ 93,200 மதிப்புள்ள பணம் மற்றும் நான்கு விலையுயர்ந்த மொபைல் போன்கள் பறிமுதுல் செய்யப்பட்டன.

    இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.
    • கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது.

     ஈரோடு:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்க ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சோதனையில் ஒரு சில மளிகை கடைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டு சம்பந்த ப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி கடத்தூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் கந்தசாமி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது அளுக்குளி கொள்ளுமேடு காலனி பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் ஹான்ஸ் விற்கப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடத்தூர் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சென்று சோதனை நடத்தி னர்.

    அப்போது கடையில் ஹான்ஸ் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்க ப்பட்டிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சரஸ்வதி (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் கடையில் இருந்து 10 ஆன்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார்.
    • 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில் ஷீலா மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் அழகுநிலையம் நடத்தி வருபவர் ஷீலா. இவர் போதைப்பொருள் வழக்கில் சுங்க இலாகாவினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஷீலா 72 நாட்கள் சிறையில் இருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்டது போலியான வழக்கு என தெரியவந்துள்ளது. சுங்கத்துறை இன்ஸ்பெக்டர் சதீசன், போலி போதைப் பொருள் வழக்கில் ஷீலாவை சிக்க வைத்திருப்பது, சுங்க இலாகா கமிஷனரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சதீசன், சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட ஷீலா, தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டியும், பொய் புகார் கூறியவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கைது நடவடிக்கையால், தான் கடன் வாங்கி தொடங்கிய அழகு நிலையத்தை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவல் தொடர்பாக நடிகை வரலட்சுமி விளக்கம்.
    • கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

    போதைப்பொருள், ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், நடிகை வரலட்சுமிக்கு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.

    ஆனால், என்ஐஏ சம்மன் அனுப்பியதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    கேரளாவின் விழிஞ்சத்தில் போதைப்பொருள், ஆயுதம் கடத்தல் வழக்கில் கைதான ஆதிலிங்கம், 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு உதவியாளராக இருந்தார். அதற்கு பிறகு எங்களுக்கு இடையே எந்த தொடர்பும் இல்லை. என்.ஐ.ஏ சம்மன் அனுப்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    • 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல்.

    இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ரூ.280 கோடி மதிப்புடைய போதைப் பொருள் சென்னையில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதைதொடர்ந்து, இலங்கையை சேர்ந்த இருவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை பெரம்பூரில் அக்பர் அலி என்பவரிடம் இருந்து 54 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • 2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் 71.89 கிலோ கோகைன் கைப்பற்றப்பட்டது.
    • இதில் 39.1 கிலோ கோகைன் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் போதைப் பொருள் பயன்பாடுகள் குறித்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தீரஜ் பிரசாத் சாஹு மற்றும் அமீ யாக்னிக் ஆகியோர் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக சர்வேயில் கிடைத்த விவரங்களை அவர்கள் உள்துறை அமைச்சகத்துக்கு தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:

    சமீப காலமாக குஜராத் மாநிலத்தில் போதைப் பொருள் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் அதிகாரிகள் 93,691 கிலோ போதைப் பொருள், 2,229 லிட்டர் திரவ மருந்துகள் மற்றும் 93,763 மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

    இந்தியாவில் 17,35,000 ஆண்களும், 1,85,000 பெண்களும் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள்.

    குஜராத்தில் 2018 முதல் 2022-ம் ஆண்டு வரை 27,842.639 கிலோ அபின் அடிப்படையிலான மருந்துகள், 59,365.983 கிலோ கஞ்சா அடிப்படையிலான மருந்துகள், 75.115 கிலோ கோகோயின், 3,789.143 கிலோ சைக்கோட்ரோபிக் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    2022-ம் ஆண்டில் இந்தியா முழுவதும் கைப்பற்றப்பட்ட 71.89 கிலோ கோகைனில் 39.1 கிலோ குஜராத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    குஜராத்தில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,36,000 ஆண்கள் கஞ்சா அடிப்படையிலான போதைப் பொருட்களுக்கும், 7,91,000 பேர் அபின் சார்ந்த மருந்துகளுக்கும், 6,59,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர்.

    இதேபோல், பெண்களில் 1,49,000 பேர் கஞ்சா அடிப்படையிலான போதைப்பொருட்களுக்கும், 1,000 பேர் ஓபியாய்டுகளுக்கும், 33,000 பேர் மயக்க மருந்துகளுக்கும் அடிமையாகியுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    ×