என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் பலி"

    • 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    அரியானா மாநிலம் நூஹ் மாவட்டம் இப்ராகிம் பஸ் கிராமத்தில், டெல்லி - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதி 7 தூய்மைப் பணியாளர்கள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்று காலை 10 மணியளவில் நெடுஞ்சாலையில் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வழக்கமான தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி பணியாளர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    சம்பவத்தின் பின் தப்பியோடிய லாரி ஓட்டுனரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில் உள்ள அரிசி ஆலையில், உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்ததில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

    இன்று காலை ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் சிலர், உலர்த்தும் இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதை ஆய்வு செய்ய சென்றனர்.

    புகை மிகவும் அதிகமாக இருந்ததால், சம்பவ இடத்தில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர். தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர்.

    அவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஐந்து தொழிலாளர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மூன்று தொழிலாளர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

    • தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.
    • புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி வருகின்றனர்.

    தெலுங்கானாவில் கட்டுமானத்திலிருந்த ஆறு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

    பத்ராத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் உள்ள பத்ராசலம் நகரில் கட்டப்பட்டு வந்த 6 மாடி கட்டடம், தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தபோதே இன்று பிற்பகலில் திடீரென இடிந்து விழுந்தது.

    இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சில தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

    புல்டோசர்கள் மற்றும் பிற கனரக இயந்திரங்களின் உதவியுடன் இடிபாடுகள் அகற்றி உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வலதுபக்கம் திரும்பும்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விபத்து குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர்கள் முருகன் (வயது 70), நாகமல் (65). தொழிலாளிகள்.

    நேற்று மாலை 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் மன்னார் புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தனர். மோட்டார் சைக்கிளை முருகன் ஓட்டி வந்துள்ளார்.

    பெட்ரோல் பங்க் அருகில் சாலையில் வலதுபக்கம் திரும்பும்போது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாகமல் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். விபத்து குறித்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கரூரில் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கி கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
    • சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் சுக்காலியூர் காந்திநகர் பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த வீட்டின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.

    இந்நிலையில், அதில் போடப்பட்ட சவுக்கு குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலகைகளைப் பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மேன்ஹோல் எனப்படும் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த மோகன்ராஜ், ராஜேஷ் ஆகிய 2 தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர்.

    இவர்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு சென்ற சிவா என்ற மற்றொரு தொழிலாளியும் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் மற்ற தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்த போது, 3 பேரும் மயங்கி கிடப்பதைப் பார்த்து உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு கருர் எஸ்.பி. நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும், புதிதாக கட்டுமான பணி நடைபெற்று வரும் கழிவுநீர் தொட்டியில் எவ்வாறு விஷவாயு தாக்கியது என்பது குறித்தும், அது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக இன்று காலை டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.
    • எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காளத்திமடத்தை அடுத்த அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல்.

    இவரிடம் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்ட 5 பேர் கிணறு வெட்டும் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.

    இவர்கள் ஆலங்குளம் அருகே ராம்நகர்-புதுப்பட்டி சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் புதுப்பட்டியை சேர்ந்த பால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் கடந்த சில நாட்களாக கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று காலை பாறையை வெடிவைத்து தகர்ப்பதற்காக டெட்டனேட்டர் வைத்து சோதனை செய்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராதவிதமாக டெட்டனேட்டர் வெடித்ததில் பணியில் ஈடுபட்டிருந்த அரவிந்த் (வயது 21) சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார். மற்ற 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே கிணற்றின் மேல் பகுதியில் நின்று கொண்டிருந்த சக தொழிலாளிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்க போராடினர். தகவல் அறிந்து ஆலங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு படுகாயம் அடைந்த ஆசீர் சாம்சன் உள்பட 2 பேர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.

    இந்த விபத்தில் சிக்கிய மேலும் 2 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன.
    • இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கார்டூம்:

    ஆப்பிரிக்க நாடான சூடானில் பல்வேறு தங்க சுரங்கங்கள் உள்ளன. வடக்கு சூடான் பகுதியில் உள்ள ஒரு தங்க சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது திடீரென அந்த சுரங்கத்தின் மேற்பகுதி இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.

    இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் அங்கு இடிபாடுகளில் சிக்கி கொண்டிருந்த சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    • காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது.
    • பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன.

    கோவை:

    கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.

    இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.

    காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.

    இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.

    இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.

    இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கருமத்தம்பட்டி:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. அதில் பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்த பணியை சேலத்தை சேர்ந்த பாலாஜி, பழனிசாமி ஆகியோர் எடுத்து செய்து வந்தனர்.

    அதில் பாலாஜியின் மேலாளர் அருண்குமார் மேற்பார்வையில் 7 தொழிலாளர்கள் இரும்பு தூண்களில் ஏறி விளம்பர பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரும்புத்தூண் 60 அடி உயரமாக இருந்தபோதிலும் அதில் பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென்று காற்று வீசியதால், இரும்பு கம்பிகள் உடைந்து விழுந்தன. இதனால் அந்த கம்பிகள் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் அந்த இரும்பு தூண்களுடன் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மீது இரும்பு தூண்கள் விழுந்து அமுக்கியது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38), குமார் (52), குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி இன்றி பேனர் அமைத்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலாஜி, பழனிசாமி, அருண்குமார் மற்றும் நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரின் மேலாளர் அருண்குமாரை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாலாஜி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அந்த இடத்தில் விளம்பர பேனர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரும்பு தூண்கள், விளம்பர பலகை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    • தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது.

    இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

    மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் - நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது.
    • தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம் பாளையத்தில், தனியார் செயின் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தொழிற்சாலையில் உள்ளூர் மக்கள் மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வேலை செய்து வருகிறார்கள்.

    தொழிற்சாலையில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு என எதிர்புறத்தில் வீடுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கிருந்து பணிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலையில் உள்ள அனுராக் சிங் (வயது28), தன்ஜெய் சிங் (33), தரம்வீர் (40), வீரேந்திரஜா (37), மகாதேவ் சிங் (23) ஆகிய 5 பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் தொழிற்சாலையின் எதிர்புறம் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 11-ந் தேதி இரவு அறையில் 5 தொழிலாளர்களும் சமையல் செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது. சற்று நேரத்தில் தீயும் பற்றி எரிய தொடங்கியது. இதில் இவர்கள் 5 பேரும் தீயில் சிக்கி கொண்டு அலறினர்.

    இவர்களது சத்தம் கேட்டு அருகே வசிக்கும் தொழிலாளர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது அறைக்குள் 5 பேரும் தீயில் உடல் கருகி சத்தம் போட்டபடி நின்றனர்.

    இதுகுறித்து அன்னூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து 5 தொழிலாளர்களையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களில் 4 பேர் கோவில்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த அனுராக் சிங் மற்றும் துப்ராவை சேர்ந்த தன்ஜெய்சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

    மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
    • விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருமங்கலம்:

    கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்ந்தவர் சந்திரன் மகன் சுஜித் (வயது 20). இவரது நண்பர் செந்தில்குமார் மகன் பிரபு (26). இவர்கள் இருவரும் கோவையில் ஒரு ஓட்டலில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்து விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்துகொண்டிருந்தனர்.

    இன்று காலை திருமங்கலம் அருகே ராயபாளையம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிரபு மற்றும் சுஜித் இருவரும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான வாலிபர்கள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடந்தும் முன்னாள் சென்ற லாரி நிற்காமல் சென்றதால் அது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் திருமங்கலம் பகுதியில் நள்ளிரவில் நடந்த 2 வெவ்வேறு சாலை விபத்துகளில் மேலும் 2 பேர் பலியானார்கள்.

    ×