search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223670"

    • சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூறாக இருந்தது.
    • நேற்று இரவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை கே.எம்.எஸ். நகர் பூங்கா சாலை பகுதியில் நீண்ட நாட்களாக மின் விளக்குகள் எரியாமல் இருந்தன.

    இதனால் இரவு நேரங்களில் அந்த வழியை கடந்து வீட்டிற்கு செல்ல பொதுமக்கள் கடும் அச்சமடைந்தனர்.

    இருளை பயன்படுத்தி சமூக விரோத செயல்களும் அரங்கேறி வந்தது.

    மேலும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு, போக்குவரத்து இடையூராக இருந்தது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்த நிலையில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பொதுமக்க ளின் புகாரை தீர்க்க உடனடி நடவடிக்கையில் இறங்கினார்.

    அதன்படி நேற்று இரவில் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்பகுதி பொதுமக்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், 46- வது வார்டு உறுப்பினரும் மண்டலகுழு தலைவருமான கலையரசன் ஆகியோரிடம் கோரிக்கை களை கேட்டறிந்தார்.

    இதையடுத்து உடனடியாக அப்பகுதிக்கு மாநகராட்சி பொறியாளர் ஜெகதீசன், மின்வாரிய ஊழியர்கள் உள்ளிட்டவர்களை வரவழைத்து மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுத்தார்.

    ஆணையரின் உடனடி நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் மின்விளக்குகள் ஒளிர்ந்தன.

    இதனை தொடர்ந்து கே.எம்.எஸ் நகர் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் சரவணகுமார் உறுதி அளித்தார்.

    நீண்ட நாள் பிரச்சனையை ஒரே நாள் இரவில் தீர்த்து வைத்த ஆணையர் சரவணகுமாரை, பொதுமக்கள் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

    • பாபநாசம் நகரத்திற்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும்.
    • பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் நகரத்திற்கு நிரந்தரமாக போக்குவரத்து காவலரை நியமிக்க வேண்டும், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாபநாசம் ஒன்றியக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பாபநாசம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்ட த்திற்கு ஒன்றிய செயலாளர் முரளிதரன் தலைமை தாங்கினார்.

    விவசாய தொழிலாளர் சங்க தலைவர் இளங்கோவன், நகர செயலாளர் சங்கர், மாதர் சங்க செயலாளர் கஸ்தூரிபாய், ஒன்றியக்குழு உறுப்பினர் ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மாநில குழு உறுப்பினர் டெல்லி பாபு, மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவகுரு, மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • சூறாவளி காற்றில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • வெங்கனூரில் ஆலங்கட்டி மழை பெய்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. வெங்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றினால் பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் அருகே சாலையோரத்தில் இருந்த புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல் கிருஷ்ணாபுரம்- அரும்பாவூர் சாலையில் தொண்டமாந்துறை பிரிவு அருகே சாலையில் புளியமரம் ஒடிந்து விழுந்தது. அதனையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் பலத்த சூறாவளி காற்றினால் வெங்கலம், தழுதாழை, அன்னமங்கலம், விசுவகுடி, தொண்டமாந்துறை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் காற்று, மழை நின்றபின் சீர் செய்தனர்.

    • புகழூர் பகுதியில் கரும்பு லோடுடன் சென்ற டிராக்டர் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் புகழூர் செம்படாபாளையம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலைக்கு கரும்புகளை வெட்டி செல்வதற்காக கரூர் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். விவசாயிகள் பதிவு செய்து வெட்டும் தருவாயில் உள்ள கரும்புகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் கூலி ஆட்கள் மூலம் கரும்புகளை வெட்டி எடுத்து டிராக்டர் மற்றும் லாரிகள் மூலம் சர்க்கரை ஆலைக்கு இரவு பகலாக கொண்டு வருகின்றனர்.

    நாள் ஒன்றுக்கு சுமார் 100 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே சர்க்கரை ஆலைக்கு டிராக்டர் டிப்பர் மூலம் கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு செல்லும்போது வாகனத்தை தளவாபாளையம் பிரிவு சாலையில்திருப்பும் பொழுது திடீரென எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி டிராக்டர் வாகனம் கரும்பு டிப்பருடன் தார் சாலையில் கவிழந்தது.

    இதனால் டிராக்டர் டிப்பரில் இருந்த கரும்புகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலையில் எனகொட்டியது.இதனால் அப்பகுதியில் தார் சாலை வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் உடனடியாக ெபாக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலை அருகே தார் சாலையில் கொட்டி மலைபோல் குவிந்து கிடந்த கரும்பு குவியல்களை சிறிது சிறிதாக தார் சாலையின் ஓரத்திற்கு தள்ளப்பட்டது. நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைத்து கரும்புகளையும் தார் சாலையில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு அந்த வழியாக அனைத்து வாகனங்களும் சென்றன. இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மேம்பால பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலம் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் கடந்த 3 மாதங்களாக எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை. சாலையின் இருபுறங்களிலும் பள்ளங்கள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதேபோல் சிறுவாச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன

    . இத்தகைய காரணத்தினால் வார விடுமுறை நாட்களில் சிறுவாச்சூரில் இருந்து விஜயகோபாலபுரம் வரை வாகனங்கள் நிற்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதே சமயம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை கோரிப்பாளையத்தில் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வந்தது. .
    • அரசு ஆஸ்பத்திரிக்கு எளிதாக செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது



    புதிதாக திறக்கப்பட்டுள்ள ஓபுளாபடித்துறை பாலத்தில் வந்த வாகனங்கள் மோதி இன்று விபத்து ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகரின் முக்கிய பகுதியான கோரிப்பாளையம் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. தென் மாவட்டத்தின் மிக முக்கிய மருத்துவமனையாக இது உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுகிறது.

    இதுபோல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், ஊழியர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் 200-க்கும் குறைவில்லாத ஆம்புலன்சுகள் தினமும் பயணிக்கும் முக்கியமான சாலையாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட ஓபுளாபாலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மதுரை அரசு ஆஸ்பத்திரி அமைந்துள்ள பனகல் சாலையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க ஒருவழிப்பாதையாக மாற்ற போலீசார் திட்டமிட்டு போக்குவரத்து மாற்றத்தை இன்று நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.

    அதன்படி கோரிப்பா ளையம் சந்திப்பில் இருந்து ஆவின் சந்திப்பு நோக்கி செல்லக்கூடிய வாகன போக்குவரத்தில் மாற்றம் இல்லை. திருவள்ளுவர் சிலை, அண்ணா பஸ் நிலை யத்தில் இருந்து கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய அரசு பஸ் மற்றும் வர்த்தக வாகனங்கள் பனகல் சாலை-சேவாலயம் சாலை சந்திப்பில் தடை செய்யப்பட்டு, இடதுபுறமாக திரும்பி வைகை வடகரை சாலையின் வலதுபுறமாக சென்று செல்லூர், தத்தனேரி மற்றும் திண்டுக்கல் சாலைக்கு செல்ல வேண்டும்.

    தமுக்கம், தல்லாகுளம் செல்லும் வாகனங்கள் வைகை வடகரை சாலையை பயன்படுத்தி குமரன் சாலையில் வலதுபுறமாக திரும்பி பாலம் ஸ்டேஷன் சாலை, கோரிப்பாளையம் வழியாக செல்ல வேண்டும்.

    சிம்மக்கல் வழியாக பெரியார் பஸ் நிலையம் செல்லும் பஸ்கள் வைகை வடகரை சாலை வழியாக புதிதாக கட்டப்பட்ட ஓபுளா பாலம், முனிச்சாலை சந்திப்பு, யானைக்கல் வழியாக செல்ல வேண்டும். இதன் மூலம் ஏ.வி. பாலத்தின் போக்குவரத்து நெருக்கடி குறையும்.

    ஆனால், மருத்துவ மனைக்கு செல்லும் டாக்டர்கள், ஊழியர்கள் சிவசண்முகம்பிள்ளை சாலை கிழக்கு வாசல் வழியாக ஆஸ்பத்திரிக்கு செல்லலாம். சிவசண்மு கம்பிள்ளை சாலையில் இருந்து கோரிப்பாளை யத்திற்கு வாகனங்கள் செல்ல முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இருந்து வரும் ஆம்புலன்சுகள் வைகை வடகரை, சிவ சண்முகம்பிள்ளை சாலை, மருத்துவமனை கிழக்கு வாசல் மற்றும் கோரிப்பா ளையம் சந்திப்பு வழியாக மருத்துவமனைக்கு செல்லலாம்.

    இந்த போக்குவரத்து மாற்றம் காரணமாக சில வாகன ஓட்டிகள் அவதிபட்டனர். சிறுசிறு விபத்துக்கள் ஏற்பட்டன. இந்த விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • புளியமரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    • பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நேற்று காலை முதல் மதியம் 3 மணி வரை அனல் காற்றுடன் கடுமையான வெப்பநிலை இருந்தது. அதைத்தொடர்ந்து இதமான தட்பவெப்ப நிலை நிலவியது. சிறிது நேரத்தில் பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் சாரல் மழை பெய்தது. பெரம்பலூர், எசனை, வேப்பந்தட்டை, சிறுவாச்சூர், பாடாலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பரவலான மழை பெய்தது. பல இடங்களில் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. பெரம்பலூரிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் மின்சாரம் அடிக்கடி தடைபட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    பலத்த காற்று வீசியதால் பெரம்பலூர் புறநகர் துறைமங்கலத்தில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் சாலையோரத்தில் இருந்த புளியமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் அணிவகுத்து நின்ற வாகனங்களை சரிசெய்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தில் இருந்து தொழிலாளர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் சாலையில் சாய்ந்து கிடந்த புளிய மரத்தின் கிளைகளை மோட்டார் எந்திரங்கள் உதவியுடன் அறுத்து அகற்றி, கிளைகளை அப்புறப்படுத்தினர்.

    • மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.
    • போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம்.

    சென்னை:

    அயனாவரம் பணிமனையில் 126 பஸ்கள் உள்ளன. இங்கிருந்து பெசன்ட் நகர், ரெட்ஹில்ஸ், ஆவடி, திருவான்மியூர், கோயம்பேடு உள்ளிட்ட சென்னையில் பல இடங்களுக்கு பஸ்கள் செல்கின்றன. 741 தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.

    இந்த தொழிலாளர்கள் பணிக்காக அதிகாலை 3 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டு வருகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் தொழிலாளர்கள் தினமும் காலை 10 பேர், மாலை 10 போ் பேருந்துகள் இல்லை, டிரைவர் இல்லை என திருப்பி அனுப்படுகின்றனர். இதில் பெரும்பாலும் கண்டக்டர்கள்தான் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். மாதத்தில் 15 நாட்கள் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்படுகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிமனை முன்பு பணி வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து போக்குவரத்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

    போராட்டத்தில் ஈடுபட்டோர் பணி வழங்காததால் சம்பள இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுகிறோம். பஸ்கள் இல்லாமலும் டிரைவர் இல்லாமலும் பணிகள் வழங்காவிட்டால் முந்தைய ஆட்சி காலத்தில் பஸ் நிலையத்தில் பயணிகள் பிக் அப், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ, மற்ற வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி, யோகா விடுப்புகள் அனுப்பினால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படாது.

    மேலும் பணி வழங்காமல் திருப்பி அனுப்பினால் பணிக்கு வந்ததற்கான வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    • பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி அருகே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்டத்தின் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில், காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கதவணையின் ஆண்டு பராமரிப்பு பணிகள் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 4-ந் தேதி அணையில் இருந்த நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது.

    இதனால் அணையின் நீர்த்தேக்க பகுதியில் சேலம்-ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நடைபெற்று வந்த விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இதற்கு மாற்று ஏற்பாடாக சிறிய ரக படகுகளில் பயணிகள் சென்று வந்தனர்.

    கதவணை பகுதியில் உள்ள சட்டர்கள் மற்றும் நீர் மின் உற்பத்தி நிலைய தடுப்புகள் மற்றும் சல்லடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டன.

    இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் அணையில் மீண்டும் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தற்காலிக மாக நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு போக்குவரத்து நேற்று மீண்டும்தொடங்கியது.

    • மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது.
    • வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே மணலிவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின்ராஜ். இவர் பத்மநாபபுரம் கோர்ட்டில் வக்கீலாக உள்ளார்.

    இவருக்கு சொந்தமான இடம் மங்கலம் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் செல்லுவதற்கு ரோடு எடுப்பதற்கு மங்கலம் பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வழி எடுக்க இடம் கொடுக்காததால் தான் கொடுத்த ரூபாயை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    குலசேகரம் போலீசில் இது தொடர்பாக ஜஸ்டின் ராஜ் புகார் கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என தெரிகிறது. இதனால் ஜஸ்டின் ராஜிற்கு ஆதரவாக பத்மநாபபுரம் வக்கீல் சங்க தலைவர் வின்சென்ட் தலைமையில் போலீசாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பலன் இல்லாததால் வழக்கறிஞர்கள் குலசேகரம் போலீஸ் நிலையம் முன் ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாலை 5.30 மணிக்கு தொடங்கிய போராட்டம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் கல்லுரி மாணவ-மாணவிகள் சென்ற வாகனங்கள், அரசு பஸ்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை. போராட் டம் இரவு 7.30 மணி வரை நீடித்தது. இன்ஸ்பெக்டர் வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று வழக்கறிஞர்கள் கூறினார்கள்.

    இதனால் குலசேகரம் பகுதியில் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாலை நேரமானதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் ஆவேச மடைந்து போராட்டம் நடத்தியவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    உடனடியாக குலசேகரம் இன்ஸ்பெக்டர் பால முருகன் வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப்பதிவு செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் வழக்கறிஞர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இரவு தக்கலை டி.எஸ்.பி. குலசேகரம் போலீஸ் நிலையம் வந்து இன்ஸ்பெக்டருடன் ஆலோசனை நடத்தினார்.

    • சாலையில் வழிந்தோடிய ஆயிலால் வாகனங்கள் பாதிக்காமல் இருக்க அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
    • விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ஆயிலை வேறொரு லாரியில் மாற்றி மீண்டும் எடுத்து சென்றனர்.

    பொன்னேரி:

    மணலி புதுநகர் அடுத்த ஆண்டார் மடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் தடாவிற்கு கண்டெய்னர் லாரியில் 18 டன் எடை கொண்ட போம் மற்றும் வாகனங்களுக்கு தயாரிக்க கூடிய என்ஜின் ஆயில் கொண்டு செல்லப்பட்டது. இந்த ஆயில் கண்டெய்னர் லாரியின் உள்ளே ராட்சத பாதுகாப்பு பலூனில் நிரப்பப்பட்டு இருந்தது.லாரியை அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் தர்மராஜ் ஓட்டினார்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீஞ்சூரை அடுத்த நாளூர் அருகே கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னர் சென்ற மற்றொரு லாரி மீது மோதியது. இதில் கண்டெய்னர் லாரியில் இருந்த பாதுகாப்பு பலூனின் மேல்பகுதி கிழிந்து அதில் இருந்து ஆயில் வெளியேறியது.

    இதனால் சாலை முழுவதும் ஆயில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் சரக போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோபிதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொன்னேரி தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

    சாலையில் வழிந்தோடிய ஆயிலால் வாகனங்கள் பாதிக்காமல் இருக்க அவ்வழியே வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    வாகனங்கள் அனைத்தும் பொன்னேரி-மீஞ்சூர் சாலையில் திருப்பி விடப்பட்டது. விபத்துக்குள்ளான லாரிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையில் வழிந்தோடிய ஆயில் மீது மணல் போடப்பட்டது.

    கண்டெய்னர் லாரியில் இருந்து சுமர் ஒரு டன் ஆயில் வெளியேறி இருந்ததாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பலூனில் மேல் பகுதி மட்டுமே கிழிந்ததால் குறைந்த அளவு ஆயில் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 9 மணிக்கு பின்னரே அப்பகுதியில வாகன போக்குவரத்து சீரானது. விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த ஆயிலை வேறொரு லாரியில் மாற்றி மீண்டும் எடுத்து சென்றனர்.

    • நாளுக்கு நாள் நெரிசல் அதிகரிப்பு
    • திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவிப்பு

    திருச்சி,

    திருச்சி மாநகரில் பிரதான வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளையும், மற்றங்களையும் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில், மாற்று பக்க வாகன நிறுத்தும் திட்டத்தை மாநகர போக்குவரத்து போலீசார் அமல்படுத்தினர்.அதன்படி சாலை ரோடு மற்றும் மெயின் கார்டு கேட் (வலது) ஆகிய இடங்களில் சாலையோரம் வாகனங்கள் ஒருபுறம் 15 நாட்களுக்கும், மறுபுறம் அடுத்த 15 நாட்களுக்கும் நிறுத்த அனுமதிக்கப்பட்டது. மதுரை ரோட்டில் ஒரு நாள் இடது பக்கமும், மறுநாள் வலது புறமும் பார்க்கிங் செய்து கொள்ளலாம். ஆனால் இந்த விதிமுறைகளை வாகன ஓட்டிகள் தொடர்ந்து மீறுகின்றனர்.கடந்த சில வாரங்களாக சாலையோரத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை கடைகளில் இருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படுவதால் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறுகின்றன. குறிப்பாக சாலை ரோடு மற்றும் மெயின் காடு கேட் பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் இரு பக்கத்திலும் வாகனம் நிறுத்தும் போது வேகமாக செல்லும் வாகனங்களால் பயணிகளும் அப்பகுதியை கடப்பதற்கு சிரமம் ஏற்படுகிறது.மரக்கடை பகுதியில் ஒரு நாள் மற்றும் மறுநாள் பார்க்கிங் விதிகளை ஏற்க வாகன ஓட்டிகள் மறுக்கிறார்கள். மணிக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே போக்குவரத்து காவல்துறையின் புதிய முயற்சி பலனளிக்காமல் உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறையினரிடம் கேட்டபோது,நாங்கள் அவ்வப்போது கண்காணித்து போக்குவரத்து பாதையை சரி செய்து வருகிறோம். ஆனால் சில வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

    ×