என் மலர்
நீங்கள் தேடியது "slug 226542"
- 25-ந்தேதி சூரிய கிரகண பாலாபிஷேகம் நடைபெறுகிறது.
- மூலை அனுமாரை தரிசனம் செய்தால் சூரிய, சந்திர கிரகணத்தால் பிடிக்கும் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.
தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.
மாலை ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு 6 மணிக்கு மூலை அனுமாருக்கு ஜாங்கிரிகளால் ஆன சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.
பாம்பு (ராகு/கேது) சூரிய மற்றும் சந்திரனை நோக்கி கவ்வி பிடிக்கும் சிற்பங்கள் மூலை அனுமார் கோவிலில் உள்ளது.இதன் கீழ் நின்று மூலை அனுமாரை தரிசனம் செய்தால் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தால் பிடிக்கும் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.
வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணத்தை முன்னிட்டு இரவு 7.30மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பரிகாரம் அர்ச்சனை நடைபெறுகிறது. அப்போது சித்திரை, விசாகம், திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலை அனுமாரை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.
மூலை அனுமாருக்கு பக்தர்கள் வெற்றிலை மாலை சாற்றி வழிபடும் பக்தர்கள் தங்களது வெற்றிலை மாலையை திரும்ப பெற்று அதில் உள்ள வெற்றிலையை ஒவ்வொன்றாக கழற்றி தனித்தனியாக எடுத்து வெற்றிலையுடன் வாழைப்பழத்துடன் சேர்த்து பசுமாடுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிலில் ஒவ்வொரு சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் முடிந்த உடன் மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
இந்த சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.
- கட்டிக்குளம் மாயாண்டி சுவாமி சித்தர் கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம் நடந்தது.
- முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்தில் சூட்டுகோல் மாயாண்டி சுவாமி தவசாலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு உலகநன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது.
இதில் மருத்துவ குணமிக்க மூலிகைகள், பழங்கள், பட்டுவஸ்திரம் போன்ற பொருட்களை யாகத்தில் இட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. யாகத்தை புதுக்கோட்டை பனைய பட்டி ஞானிபுல்லான் சாதுவழிபாட்டு குழு செழியன் சுவாமி வேதமந்திரங்களை கூறி நடத்தினார்.
சிவகங்கை, மது ரை, புதுகோட்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு அன்னதானம் நடந்தது. இன்று காலை அமாவாசை சிறப்பு பூஜை மற்றும் சூட்டுகோல் மாயாண்டிசுவாமிக்கு அபிஷேக ஆராதனை- சிறப்பு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கட்டிக்குளம்சூட்டுகோல் மாயாண்டி சுவாமி வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
இதேபோல் குறிச்சிகாசி விசுவநாதர் கோவிலில் முன்னோர்கள் தர்ப்பணம் திதி பூஜை இன்று காலை6மணிமுதல் பகல் 12 மணி வரை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பூஜை செய்து கங்கை தீர்த்தத்தால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர்.
- மகாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள்.
- எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.
மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.
பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது.
மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர். இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
இந்த பதினான்கு நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.
ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.
- அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம்.
- நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம்.
மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-
பொருட்கள் - பலன்கள்
அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்
துணி- ஆயுள் அதிகமாகும்
தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்
தீபம்- கண்பார்வை தெளிவாகும்
அரிசி- பாவங்களை போக்கும்
நெய்- நோய்களை போக்கும்
பால்- துக்கம் நீங்கும்
தயிர்- இந்திரிய சுகம் பெருகும்
பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்
தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்
வெள்ளி- மனக்கவலை நீங்கும்
பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்
தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்
நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்
பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்
சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம்.
பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.
பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.
பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.
கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.
அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.
- தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது.
- சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம்.
பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்றதும், பெரும்பாலானவர்கள் அது என்னவோ, ஏதோ என்று நினைக்கிறார்கள். உயர்சாதிகாரர்களுக்குத்தான் அது சரிபட்டு வரும். நமக்கு இதெல்லாம் செய்வது வழக்கம் இல்லை என்கிறார்கள். சிலர் பித்ரு வழிபாட்டை எப்படி செய்வது என்ற குழப்பத்துடனே இன்னும் இருக்கிறார்கள்.
திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தும், அதை முறைப்படி செய்வதற்கு ஐதீகம் தெரிந்து இருக்க வேண்டுமே என்று நினைக்கிறார்கள். ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை.
தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது ரொம்ப, ரொம்ப எளிதானது. தர்ப்பணம் கொடுப்பதற்கு வேறு எதுவும் வேண்டாம். உங்கள் அப்பா, அம்மா பெயர், தாத்தா-பாட்டி பெயர் (தந்தை வழி) பூட்டன்-பூட்டி பெயர் (தந்தை வழி) அப்புறம் அம்மாவின் அப்பா அம்மாவின் தாத்தா, அம்மாவின் தாத்தாவுக்கு அப்பா, அம்மாவின் அம்மா, அம்மாவின் பாட்டி, அம்மாவின் பாட்டிக்கு அம்மா ஆகிய 12 பேர் மட்டும் தெரிந்தால் போதும்.
சிலருக்கு தாத்தாவின் பெற்றோர் பெயர் தெரியாமல் இருக்கலாம். அதற்கும் கவலைப்பட வேண்டாம். என் மூதாதையர்களுக்கு இந்த தர்ப்பணம் போய் சேரட்டும் என்று மனதார நினைத்து கையில் உள்ள எள் மீது தண்ணீர் ஊற்றி, அந்த நீரை தர்ப்பைகளின் மீது ஊற்றினால் போதும். அவ்வளவுதான். தர்ப்பண வழிபாடு முடிந்தது.
மகாளய அமாவாசை தினத்தன்று கோவில் குளங்களிலும், பித்ரு வழிபாட்டுக்குரிய புனிதநீர் நிலைகளிலும், காவிரி கரையிலும் இந்த எளிய வழிபாட்டை செய்யலாம். மூதாதையர்களின் பெயரைச் சொல்லி எள் கலந்த நீரை தர்ப்பை புல்களின் மீது ஊற்றுவதில் என்ன கஷ்டம்? இதை கூட பெரும்பாலானவர்கள் மனப்பூர்வமாக செய்வதில்லை.
குறைந்தபட்சம் அது நம் கடமை என்று நினைத்தாவது செய்யக்கூடாதா? இந்த வருடம் நீங்கள் தர்ப்பணம் கொடுத்துப்பாருங்கள். முடிந்தால் மகாளயபட்ச நாட்களில் என்றாவது ஒருநாள் ஏழைகளுக்கு அன்னதானம் கொடுங்கள்.
அடுத்த ஆண்டுக்குள் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிச்சயம் பித்ருக்கள் தெய்வீக சக்தி கொடுத்து உயர்த்தி இருப்பார்கள். இது பலரும் அனுபவித்து வரும் உண்மை. ஈடு, இணையற்ற அந்த பலன்களை பெற நீங்களும் மகாளயபட்ச வழிபாட்டை மறக்காமல் செய்யுங்கள்.
- தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம்.
- சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.
* மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம் கூறியுள்ளது.
* தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப்பணம் செய்யும் போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.
* துவாதசி பன்னிரண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான் என நம்பப்படுகிறது.
* மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் தாத்தாவுக்கு தாத்தாவுக்கும் போய் உரிய பலன்களை கொடுக்கும்.
* பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களை தரும்.
* மகாளாய பட்சத்தின் 15 நாட்களும் அன்னதானம், புதிய உடை தானம் செய்வது மிக, மிக நல்லது.
மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இன்று மகாளய அமாவாசையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர். அங்கு காவிரி ஆற்றின் கரையோரம் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.
இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் மக்கள் வழிப்பட்டனர்.
இதனால் இந்த இரு இடங்களில் இன்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பொதுமக்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது.
- கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
வழக்கமாக அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுக்காதவர்களும், இந்த மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால், அவர்களின் ஆசி கிடைக்கும் என்பதால் கடற்கரைகள், ஆறுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தர்ப்பணம் கொடுப்பார்கள்.
அதன்படி புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசைக்கு 14 நாட்களுக்கு முன்பே, மகாளய பட்ச காலமாக இந்துக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகாலை முதல் ஏராளமானோர் திரண்டு வந்தனர். பின்னர் கடலில் நீராடி, காய்கறிகள், அரிசி, வெற்றிலை, பாக்கு, பழம், அகத்தி கீரை, எள் போன்ற பொருட்களை வைத்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து விட்டு வழிபட்டனர்.
இதேபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக கடலூர் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆல்பேட்டை தென்பெண்ணையாற்றில் குவிந்தனர். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடற்கரை மற்றும் ஆறுகளில் தடை செய்யப்பட்ட காரணத்தினால் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், இன்று வழக்கம்போல் அனுமதித்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரை மற்றும் ஆறுகள் பகுதியில் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் பொதுமக்கள் முன்னோர்கள் தர்ப்பணம் செய்து சென்றனர்.
- முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர்.
- பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.
புண்ணிய நதியாக கருதப்படும் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் குவிய தொடங்கினர். ஆற்றில் புனித நீராடிவிட்டு காவிரி புஷ்யமண்டப துறையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். பின்னர் ஐயாறப்பர் கோவிலில் சென்று சம்ஹார மூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
இதேபோல் நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேது கடலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு பிடித்தமான உணவு, பதார்த்தங்களை படையலிட்டு வழிப்பட்டனர். பசுக்களுக்கு அகத்தி கீரை கொடுத்தனர்.
இதேப்போல் காவிரி சங்கமிக்கும் பூம்புகார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனர்.
இதேப்போல் டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளிலும் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
- ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
- சமயபுரம் மாரியம்மனுக்கு 16 வகையான பொருட்களால் அபிஷேகம்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் புனித நீராடிய பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் மகாளய அமாவாசை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்கள் நினைவாக வழிபட்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
தாய், தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் என்று முன்னோர்களை நினைத்து அவர்களின் பெயர்களை கூறியும், நினைத்தும் புரோகிதர்கள் மூலம் எள், தர்ப்பண நீர், பிண்டம், அரிசி, வாழைக்காய், சாப்பாடு ஆகியவற்றையும் வைத்து வழிபட்டனர். முன்னதாக பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி புனித நீராடினர். பின்னர் அங்குள்ள காவிரி அம்மன் கோவில் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் அமைந்துள்ள கருட மண்டபத்திலும் ஏராளமானோர் திரண்டு சிவாச்சாரியார்கள் மூலம் மறைந்த தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். ஏராளமானோர் குவிந்ததால் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களை ஒரே இடத்தில் அமர வைத்து இந்த தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முசிறி, தொட்டியம், துறையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காவிரி பாயும் இடங்கள் மற்றும் நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நீர் நிலைகள் மற்றும் கோவில் வளாக பகுதிகளில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இதனால் பலர் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர் வழிபாடு நடத்த முடியாமல் போனது. அவர்கள் தங்களது வீடுகளிலேயே வழிபாடு நடத்தினர். தற்போது எந்தவித தடையும் இல்லாததால் திரளானோர் நீர் நிலைகளில் குவிந்தனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நோய் பரவல் காரணமாக எங்கள் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் போனது. அவர்களின் திதி நாட்களை மறந்தபோதிலும், இதுபோன்ற மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவோம்.
தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் செல்வதால் புனித நீராடி, மன நிறைவுடன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு உள்ளோம். இதன் மூலம் எங்களின் மனக்குறைகள் நீங்கிவிட்டது. எங்கள் குலம் செழிக்கும் என்று நம்புகிறோம் என்றனர்.
இன்று மகாளய அமாவாசை தினத்தையொட்டி சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மாலை 4 மணிக்கு சமயபுரம் மாரியம்மனுக்கு மகா அபிஷேகம், சந்தனாதி தைலம், திரவியப்பொடி, பச்சரிசி மாவு பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், விபூதி, சந்தனம், பழ வகைகள் போன்ற 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்பிறகு மகா தீபாராதனை நடைபெறுகிறது.
இரவு 7 மணிக்கு மாரியம் மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. முன்னதாக சமயபுரம் கோவிலை சுற்றியுள்ள கங்கா தீர்த்தம், சர்வேஸ்வரன் தீர்த்தம், அம்மன் தீர்த்தம், கோவில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் இன்று காலை பக்தர்கள் புனித நீராடி அம்மனை வழிபட்டனர்.
+2
- இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர்.
- முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வருகிற மகாளய அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுத்தனர். இதனால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மாவட்டத்தை பொறுத்தவரை பாபநாசம் படித்துறையில் இருந்து தொடங்கி தாமிரபரணி ஆற்றங்கரையோரம் உள்ள பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு குடும்பத்துடன் சென்று தர்ப்பணம் செய்து எள்ளும், நீரும் இறைத்தனர்.
இதேபோல் கடற்கரை பகுதிகளிலும் இன்று பெரும்பாலானோர் திரண்டு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க பொதுமக்கள் கடலில் எள்ளை கரைத்து புனித நீராடினர். சிவந்திபுரம் கஸ்பா கல்யாணிதுறை பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சிலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை முருகன் கோவில், இசக்கி அம்மன் கோவில் படித்துறைகள், வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை ஆகிய பகுதிகள் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் திரண்டு வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரை படித்துறை மற்றும் மாவட்டங்களில் கடற்கரை பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலர் தங்களது வீடுகளிலேயே முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தினர். முன்னோர்கள் விரும்பி சாப்பிட்ட பொருட்களை படையலாக படைத்து வழிபட்டனர்.
நெல்லை அருகே உள்ள அருகன்குளம் கோசாலை ஜடாயுத்துறை படித்துறையில் உள்ள தாமிரபரணி ஆற்றில் அதிகாலையில் பொதுமக்கள் குளித்துவிட்டு தாங்களாகவே ஆற்றில் எள் தூவி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் அவர்கள் அங்குள்ள விநாயகர் கோவிலிலும், ஜடாயு தீர்த்தம் லட்சுமிநாராயணர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றிலும் பொதுமக்கள் குளித்துவிட்டு தர்ப்பணம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆடி, தை அமாவாசைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் கொடுத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் கடற்கரையில் அமர்ந்து புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் கடலில் எள்ளை கரைத்தனர். பெரும்பாலானோர் தர்ப்பணத்தை முடித்துவிட்டு சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இன்று விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் அருவிகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் வந்திருந்தனர். மிதமாக கொட்டிய தண்ணீரில் புனித நீராடிய அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.
- ஈரோடு பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது.
- அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையை மகாளய அமாவாசையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் நிலைகளில் பொது மக்கள் புனித நீராடி முன்னேர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை சிறந்த பரிகார தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கூடுதுறைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வர ரை வழிபட்டு வருகிறார்கள்.
மேலும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் அதிகளவில் வந்து நீராடி வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை இன்று ஏராளமானோர் பொதுமக்கள் பவானி கூடுதுறைக்கு வந்திருந்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி, எள்ளும் தண்ணியும் விடுதல், பிண்டம் விடுதல், பித்ரு பூஜை, தர்ப்பணம் போன்ற பரிகாரங்களை செய்தனர். தொடர்ந்து பொது மக்கள் சங்கமேஸ்வரரை தரிசனம் செய்தனர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, சென்னை, கரூர் உள்பட பல்வேறு மாவட்ட பக்தர்கள் மற்றும் வெளி மாநில பக்தர்கள் என லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுதுறையில் குவிந்து புனித நீராடினர்.
இதை யொட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் குளிப்பதற்கு தனி, தனியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பொது மக்கள் வரிசையாக சென்று வழிபட்டனர். இதனால் பவானி நகரம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காணப்பட்டது.
அசம்பா வித சம்பவங்கள் நடை பெறாமல் இருக்கும் பொருட்டு கோவில் நிர்வாகத்தின் மூலம் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கக்கபட்டு வருகிறது.
கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பொதுமக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் புனித நீராடும் பகுதியில் போலீசார் ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து வழியுறுத்தினர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் படகுகள் மூலம் ஆற்றில் சென்று கண்காணித்து ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் அறிவுறுத்தி வருகிறார்கள்.
இதனால் பவானி நகரம் முழுவதும் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொதுமக்கள் வந்ததால் கோவில் வளாகத்தில் வாகனங்கள் அணிவகுத்தன.
மேலும் வெளியூர்களில் வந்த வாகனங்கள் பவானி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, செல்லாண்டி யம்மன் கோவில் வளாகம் மற்றும் தேர் வீதி உள்பட பல் இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனால் கனரக வாகனங்கள் பவானி நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையொட்டி கனரக வாகங்கள் பவானி புதிய பஸ் நிலையம், காவிரி ஆற்று பாலம் மற்றும் குமாரபாளையம் வழியாக சென்றன.
பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி மற்றும் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகிறார்கள்.
இதே போல் கொடுமுடி காவிரி ஆற்றில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். தொடர்ந்து அவர்கள் மகுடேஸ்வரரை வழிபட்டனர். இதே போல் கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் பக்தர்கள் பலர் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.