என் மலர்
நீங்கள் தேடியது "மதுக்கடை"
- குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.
செங்கல்பட்டு:
கல்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக அரசு மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புக்கு அருகில் இந்த மதுக்கடை திறக்க ஏற்கனவே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் மதுக்கடை திறக்கப்பட்டது.
இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
'குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தும் மனு அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏற்கனவே வல்லம் பகுதியில் மதுக்கடை இருந்தது. பின்னர் அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.
தற்போது மீண்டும் இங்கு மதுக்கடை திறந்து உள்ளனர். இதனை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும்' என்றார்.
- திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
- விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
திருவள்ளூர்:
பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மதுக்கடைகள் அடுத்தடுத்து இயங்கி வருகின்றன. இந்தநிலையில் தற்போது அந்த பகுதியில் 3-வதாக மேலும் ஒரு மதுக்கடை திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதற்கு வரதராஜபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும், புதிய மதுக்கடை திறக்க கூடாது என்று தெரிவித்து அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அசோகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர் அடுத்த மெய்யூர் ஊராட்சி வெம்பேடு கிராமத்தில் தனியார் தொழிற்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாய தொழில் பாதிக்கும் என்று கூறி அருகில் உள்ள ராஜபாளையம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுஅளித்தனர்.
- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபான க்கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூ டங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூ டங்கள் ஆகியவை 4-ந் தேதி அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் தொடர்பு டையவர்கள் மீது உரிய சட்டப்பிரி வுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து ள்ளார்.
- சித்திரகுப்தர் கோவிலில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
- மதுக்கடையை அகற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள சித்திரகுப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.
இந்த கோவில் அருகே சுமார் 50 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அதனை அகற்றக்கோரி ஏற்கனவே அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தனர்.
ஆனால் மதுக்கடை அகற்றப்படவில்லை. இந்த நிலையில் அடுத்த மாதம் 4-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து சித்திரகுப்தர் கோவில் அருகே உள்ள மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதொடர்பாக பா.ஜனதா கட்சியின் ஆலய மற்றும் ஆன்மிக மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் அதிசயம் குமார் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சிவானந்தம் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யாவிடம் மனு அளித்தனர்.
- மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர் :
தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வருகிற 1-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விடுமுறை நாளில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுக்கடைகளை படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
- மே தினம் கொண்டாடப்பட்டது.
விருதுநகர்
விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மே தின விழா கொண்டா டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடி யேற்றி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் மே தினம் கொண்டா டப்பட்டது. சென்னையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி முதன் முதலாக நடந்தது. இந்த நாளில் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
12 மணி நேர வேலை சட்ட மசோதாவிற்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அந்த மசோதாவை தமிழக அரசு நிறுத்தி வைத்தது. இந்த நிலையில் அந்த மசோதாவினை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வந்தோம் அதனை ஏற்று 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெற பரவுவதாக இன்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்ப்பரேட் முதலாளி அதானிக்கு காவடி தூக்கும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. தற்போதைய சூழலில் பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ள தாகவும் தகவல்கள் வருகின்றன. பாராளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடந்தாலும் அல்லது எப்போது நடந்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
திருமண மண்டபங்களில் மது விருந்துக்கு அனுமதி, தானியங்கி எந்திரங்கள் மூலம் மது விற்பனை என தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கை களை எடுத்து வருகிறது. இவற்றை கைவிட்டு தமிழகத்தில் படிப்படியாக அனைத்து மதுக்கடை களையும் மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.
- மனுகொடுக்க வந்த மகேந்திரன் என்பவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருப்பதால், பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார்.
கடலூர்,:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர்.கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் வந்து தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்தனர். கடலூர் மாவட்டம் கிள்ளையை சேர்ந்த மகேந்திரனும் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டு அலுவலக வளாகத்திற்கு வந்தார். அப்போது அவர் டாஸ்மாக் மதுக்கடைகள் நீண்ட நேரமாக திறந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள். குடிமகன்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்படுகிறது என கோஷமிட்டார். அவரை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அழைத்து உங்களது கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடமோ அல்லது மாவட்ட நிர்வாகத்திடமோ மனு அளிக்க வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இப்படி பேசக்கூடாது என எச்சரித்தனர். அதன் பின்னர் மகேந்திரன் அங்கு இருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
- சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர்.
திருவள்ளூர்:
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பெண்கள் உள்பட மொத்தம் 22 பேர் இறந்தனர். இந்த சோகம் நீங்குவதற்குள் தஞ்சாவூர் அருகே மதுகுடித்த 2 பேர் பலியானார்கள். அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பல இடங்களில் அனுமதி இன்றி மதுக்கடை அருகே பார் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய 7 தாலுகாக்களில் மொத்தம் 137 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
இந்த கடைகளுக்கு, காக்களூர் தொழிற்பேட்டையில் உள்ள, திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் குடோனில் இருந்து, பீர் வகைகள், மது பானங்கள், தினமும் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
மொத்தம் உள்ள 137 டாஸ்மாக் கடைகளில், 56 கடைகளுக்கு அருகில் மட் டும், 'பார்' நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. மீதி உள்ள கடைகளுக்கு அருகில் பார்கள் செயல்பட அனுமதியில்லை. ஆனால் சிலர் அனுமதி இன்றி 'பார்'கள் நடத்தி வருவது விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணைப் போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன் மேற்பார்வையில் போலீசார் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடை அருகில் இயங்கி வந்த பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவள்ளூர் டோல்கேட் அருகில் திருப்பாச்சூர் ஊராட்சியில் செயல்பட்ட மதுபாரில் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையிலான தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பார் அனுமதியின்றி இயங்கி வந்தது தெரிந்தது. இதையடுத்து திருப்பாச்சூர் வி.ஏ.ஓ., லோகநாதன் முன்னிலையில், போலீசார் மற்றும் கலால் துறையினர் அந்த மதுபாருக்கு சீல் வைத்தனர். இதேபோல் தலக்காஞ்சேரி, பெரியகுப்பம் மற்றும் திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி இயங்கிய மதுபாருக்கு சீல் வைக்கப்பட்டது.
பொன்னேரி வெண்பாக்கம் லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் செயல்பட்ட 7 பார்களுக்கு கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி. கிரியா சக்தி தலைமையில் கலால் தாசில்தார் குமார் துணை வட்டாட்சியர் தேன்மொழி வருவாய் ஆய்வாளர் ஜெயபிரபா முன்னிலையில் பொன்னேரி போலீசார் அனுமதி இல்லாமல் செயல்பட்ட பார்களுக்கு பூட்டு போட்டனர். இதேபோல் கும்மிடிப்பூண்டி, எளாவூர் பகுதியில் உள்ள இரண்டு பார்கள் மற்றும் சுண்ணாம்பு குளத்தில் உள்ள ஒரு பார் உட்பட சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 3 பார்களை ஆரம்பாக்கம் போலீசார் பூட்டி சீல் வைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி செயல்பட்ட மொத்தம் 71 மதுபார்களுக்கு அதிரடியாக சீல் வைக்கப்பட்டு உள்ளது.
இவ்வளவு நாட்கள் அனுமதி இன்றி இந்த மதுபார்கள் செயல்பட்டது எப்படி? அதிகாரிகள் உடந்தையாக உள்ளனரா? மதுபார்கள் யாரின் கட்டுப் பாட்டில் செயல்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் அனுமதியின்றி செயல்படும் மதுபார்கள் பற்றிய விபரங்களை சேகரித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 71 மதுபார்கள் ஒரே நாளில் சீல்வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.
- டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
மங்கலம் :
மங்கலம் அருகேயுள்ள இடுவாய் பகுதியில் இருந்து சீரங்ககவுண்டம்பாளையம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இது குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் அமைந்துள்ளதாகவும்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது எனக்கூறியும் இடுவாய் பகுதி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இந்த டாஸ்மாக் கடையை நிரந்தரமாக இந்த பகுதியில் இருந்து அகற்றக்கோரி பல்வேறு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இடுவாய் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக்கடையை இடுவாய் பகுதியில் இருந்து மாற்றி சின்னக்காளிபாளையம் ரோட்டில் பொம்மங்காடு என்ற பகுதியில் அமையவிரு ப்பதாக தெரிகிறது. மது கடை கட்டிடத்திற்கான கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன், திருமலை கார்டன், ஜி.என். கார்டன், செந்தில்நகர், பாப்பாங்காடு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணியளவில் இடுவாய் ஊராட்சி-அண்ணாமலைகார்டன் பஸ்நிறுத்தம் அருகே பந்தல் அமைத்து ஒருநாள் மாபெரும் அடையாள உண்ணாவிரத ப்போராட்டத்தை காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளனர். இதில் பொதுமக்கள் , குழந்தைகள், பெண்கள், கருப்புபேட்ஜ் அணிந்து குடியிருப்பு பகுதிக்குள் குடி எதற்கு, விளைநிலங்கள் வீணாப்போக விடமாட்டோம் என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி உண்ணா விரதப்போ ராட்டத்தில் கலந்து கொண்டனர். இது குறித்து உண்ணாவிரதப்போ ராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது; சின்னக்காளிபாளையம் அதிகளவில் விவசாய நிலங்கள் நிறைந்த பகுதி ஆகும். இங்கு வெங்காயம், புகையிலை போன்றவற்றை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் பிளாஸ்டிக் கவர்கள், மதுபாட்டில்கள், போன்றவற்றால் விவசாய நிலங்கள் பாழ்படும்.மேலும் அண்ணாமலை கார்டன், திருமலைகார்டன், ஜி.என்.கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இடுவாய் பகுதியில் இருந்து சின்னக்காளிபாளையம் செல்லும் ரோட்டில் பொம்மங்காடு பகுதியில் மதுக்கடை அமைக்க மேற்கொண்டு வரும் கட்டுமானப்பணிகளை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.
- மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
தமிழகத்தில் தற்போது அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தேவ கோட்டை கோட்டாட்சியர் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் ஆய்வு செய்தார்.
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? மதுபாட்டில் அரசு விலைப்பட்டியல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மது கடைகளில் அரசு விலை பட்டியல் நுகர்வோருக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகிறா? டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பார்கள் இல்லாத மது கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
- சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளைப்பாறைமேடு என்ற பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று மதியம் 12 மணியளவில் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி திடீரென குருமந்தூர்-கொளப்பலூர் சாலையில் அமர்ந்து போராட்டம் செய்தனர்.
கொளுத்தும் வெயிலில் பெண்கள் சாலைமறியல் செய்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தெரிய வந்ததும் சிறுவலூர் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் இந்த மதுக்கடையில் குடித்துவிட்டு இங்கேயே தங்கி விடுகின்றனர். எந்த வேலைக்கும் செல்லாமல் மதுக்கடையிலேயே இருப்பதால் குடும்பம் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பெண்கள் சாலைமறியல் காரணமாக இன்று டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த டாஸ்மாக் கடையில் மது குடிக்க காலை 11 மணியில் இருந்தே ஏராளமான ஆண்கள் மதுகுடிக்க காத்து இருந்தனர். ஆனால் பெண்கள் போராட்டம் காரணமாக 12 மணி ஆகியும் மதுக்கடை திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்த ஆண்கள் 100-க்கும் மேற்பட்டோர் மற்றொரு புறம் நின்று கொண்டு மதுக்கடையை திறக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து 12.30 மணி அளவில் மதுக்கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது.
இந்த போட்டி போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
- வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.
புதுச்சேரி:
புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளது.
புதுவை தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் ஏற்றி இறக்க வரும் கனரக வாகனங்கள் நிறுத்த சரியான இடம் இல்லாததால் கடந்த காலங்களில் பிரதான சாலைகளின் ஒரம் நிறுத்தினர். வெளிமாநிலங்களில் இருந்து வரும் டிரைவர்கள் சாலையிலேயே தங்கி சமைத்து உண்டு இருந்தனர்.
இதனால் சில ஆண்டுகளுக்கு முன்பு லாரி முனையம் தொடங்கப்பட்டது. இந்த பகுதி தமிழகத்தோடு ஒட்டிய பகுதியாகும். இதனால் எல்லை பகுதிகளில் அதிக அளவில் மதுக்கடைகள் உள்ளது. லாரி முனையம் தொடங்கப்பட்டபோது நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் அங்கு வந்து நிறுத்தப்பட்டது. லாரி ஓட்டுனர்களும், கிளினர்களும் அங்கேயே சமைத்து ஓய்வெடுத்தனர்.
கொரோனா காலத்திற்கு பிறகு 24 மணி நேரமும் இயங்கும் திறந்தவெளி மதுபாராக லாரிமுனையம் மாறியுள்ளது. பெரும்பாலும் காலை நேரத்தில் மோட்டார் சைக்கிள், கார் ஓட்ட பயில்பவர்கள் அங்கு வருவர். விடுமுறை நாட்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவர்.
இங்கு போக்குவரத்து கிளை அலுவலகமும் உள்ளது. சமீப காலமாக அங்கு பெண்கள் வாகன லைசென்ஸ் வாங்க பயிற்சிக்கு வருவதையே கைவிட்டுவிட்டனர். காரணம் காலை நேரங்களிலேயே மதுபிரியர்கள் லாரி முனையத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர்.
மாலை பொழுதாகும் போது ஒட்டு மொத்தமாக அந்த லாரி முனையமே முற்றிலும் திறந்தவெளி மதுபாராக மாறிவிடுகிறது.
நள்ளிரவு வரை அங்கு குடிமகன்கள் மது அருந்துகின்றனர். குடிபோதைக்காரர்கள் கொண்டு வரும் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் அங்கு சாலையிலேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. காலையில் பார்க்கும் போது அந்த இடம் முழுவதும் காலி மதுபாட்டில்கள், தண்ணீர் பாட்டில், பாக்கெட் என பிளாஸ்டிக் கழிவுகள் நிறைந்து காணப்படுகிறது.
சமீப காலமாக இங்கு நிறுத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நூற்றுக்கணக்கான லாரிகள் நின்றிருந்த இடத்தில் 50-க்கும் குறைவான லாரிகள் தான் நிற்கிறது. இவையும் உள்ளூர் லாரிகள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் லாரி ஓட்டுனர்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை. குடிமகன்கள் லாரி ஓட்டுனர்களுடன் தகராறில் ஈடுபட்டு, சிலர் பணம் பறிக்கும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இதன் மறுபுறம் ஆரோவில் போலீசார் கட்டுப்பாட்டில் உள்ளது
பெயரளவில் 2 மாநில போலீசாரும் குடிமகன்களை மிரட்டி அனுப்பி வைக்கின்றனர். இரவில் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் கூட்டம் குடித்துக் கொண்டிருக்கிறது. இங்கு வரும் குடிமகன்களுக்கு திறந்த வெளி காற்றும், விளக்கு வசதியும் இலவசமாக கிடைக்கிறது. இதனால் எத்தனை முறை விரட்டினாலும் குடிமகன்கள் மீண்டும் படையெடுக்கின்றனர்.
லாரி முனையம் தொடர்ந்து செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் இந்த பகுதியில் சுற்றுசுவருடன் கூடிய பெரிய விளையாட்டு திடல் அமைக்கலாம் என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
கோரிமேடு இன்ஸ்பெக்டர் பால முருகன், சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் லாரி முனைய பகுதியில் மாலையில் ரோந்து சென்ற போது குடிமகன்கள் அங்கிருந்து தப்பி ஒடினர். அவர்களில் சிக்கியவர்களை பிடித்த போலீசார், குடிமக்களால் அங்கு போடப்பட்டுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்ற உத்தரவிட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு மேலாக போதை தெளியும் வரையில் குடிமகன்களை போலீசார் குப்பைகளை அள்ள வைத்தனர். 3 சாக்கு பைகள் நிறைய குப்பைகளை அள்ளிய குடிமகன்கள், இனி மேல் இங்கு குடிக்க வரமாட்டோம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினர். அடுத்த முறை சிக்கினால் வழக்கு பதிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆனால் இரவில் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் முனையத்தில் வழக்கம் போல் அமர்ந்து குடித்தனர். வார இறுதி நாட்களில் இங்கு வரும் குடிமகன்களில் எண்ணிக்கை கட்டுக்கடங்காது செல்கிறது.