search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பணை"

    • ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது.
    • காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.

    காட்பாடி:

    வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா சேவூர் கிராமத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏரிகளில் இலவசமாக களிமண் மற்றும் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதன் மூலம் ஏரி மற்றும் குளங்களில் தண்ணீர் தேக்கப்படும். மேலும் ஏரி மற்றும் குளங்களில் மண் எடுக்கும் போது ஆங்காங்கே எடுக்க விடாமல் அதை முறைப்படி எடுக்க அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் மண் எடுப்பவரும், விவசாயிகளும் பயனடைவார்கள்.

    கிரானைட் முறைகேடு தொடர்பாக அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது தான் அந்த அறிக்கை எனக்கு வந்துள்ளது. படித்துப் பார்த்த பிறகுதான் முறைகேடு குறித்து தெரியவரும்.

    ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பதவி ஏற்றபின்னர் முதன்முறையாக குப்பம் தொகுதியில் பேசும்போது பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தின் அருகே புதிய மேம்பாலம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    இதனால் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் பகுதியில் மழைநீரை தேங்க விடாமல் தடுக்க, ஆங்காங்கே தேங்கி இருக்கும் குப்பைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இது தொடர்பாக எல்லோருமே தான் கேட்டு வருகிறார்கள். அதேபோல தான் மாயாவதியும் கேட்டுள்ளார். கொலைச் சம்பவம் எல்லா நாட்களிலும் எல்லா இடங்களிலும் நடைபெற்று தான் வருகிறது. தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக கொலைகள் நடைபெறுகிறது. இதற்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை இணைக்க வேண்டும் என்று பா.ஜனதாவை சேர்ந்த பியூஸ்கோயல் கூறியிருந்தது பற்றி கேட்டதற்கு, 'அதெல்லாம் வெளிநாட்டு செய்தி' என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தார்.

    அப்போது டி.எம்.கதிர்ஆனந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
    • தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.

    முன்னாள் அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருப்பதாவது,

    பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீராதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.

    முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் விடியா திமுக அரசின் முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.

    பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.

    எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல், பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விடியா திமுக முதல்வர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். என்று கூறியுள்ளார்.

    • சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை என கேரள அரசு வாதம்.
    • கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே, கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.

    இந்த ஆற்று நீர் அமராவதி அணைக்கு வரும் துணை ஆறான தேனாற்றின் ஒரு பகுதி ஆகும்.

    இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    கேரளாவின் இந்த செயல், காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பை மீறும் செயல் என சமூக ஆவர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக கொண்டு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

    இதில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைப்பட்டு வருகிறது என கேரள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், எந்த கட்டுமானது மேற்கொள்வதாக இருந்தாலும், உரிய அனுமதி பெற்றபின் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இந்நிலையில், உரிய அனுமதிகள் ஏற்கனவே பெறப்பட்டிருந்தால் அதனை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லை என்றால், சிலந்தி ஆற்றில் மேற்கொள்ளப்படும் தடுப்பணை கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என கேரளா அரசுக்கு, தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

    மேலும், கேரளா அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

    • அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது.
    • ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    பல்லடம்:

    சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற 26-ந்தேதி உடுமலை சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக திருப்பூர் மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து திருப்பூரை சேர்ந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி., நீர் கொள்ளளவு கொண்டது. 1958-ம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த அணை மூலமாக, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 65 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. மேலும், அமராவதி ஆற்றுப்படுகை மூலமாக 110 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல லட்சம் மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.

    அமராவதி அணையின் முக்கிய நீராதாரமாக கேரளா மாநிலம் மூணார் பகுதியிலுள்ள பாம்பாறு உள்ளது. இந்த ஆறு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகி அமராவதி அணையை வந்தடையும். இந்த நிலையில், இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகா, வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்குட்பட்ட, பெருகுடா எனும் இடத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தற்போது கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது.இது வன்மையாக கண்டி க்கத்தக்கது. இந்த அணை கட்டப்பட்டால் அமராவதி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து, அணையை நம்பி இருக்கும் பொது மக்களும், விவசாயிகளும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தடுப்பணையின் அருகிலேயே மிகப்பெரிய அளவிலான கார்ப்பரேட் நிறுவனத்தின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு ஆலை உள்ளது. அந்த ஆலையின் தேவைக்காக அமராவதிக்கு வரும் ஆற்றில் அணை கட்டப்பட்டு வருகிறது.

    இந்த தடுப்பணையை தாண்டி ஒரு சொட்டுநீர் கூட அமராவதி அணைக்கு வராது. கேரளாவின் இந்த சட்டவிரோத, தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கின்ற தடுப்பணை திட்டம் செயல்படுத்துவதை கண்டித்து வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் வழியில் உள்ள சின்னாறு சோதனை சாவடியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் எல்லை முற்றுகை போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த முற்றுகை போராட்டத்தில் அமராவதி ஆற்று பாசன விவசாயிகள், அனைத்து விவசாயிகள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உழவர் போராளிகள், பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
    • காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் வழங்கப்படவில்லை.

    காவிரிப் படுகையில் சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இவ்வாறு அணை கட்டுவதால் அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாகக் குறையும் என்று தமிழ்நாட்டு விவசாயிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    இந்த கடிதத்தில் தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் ஏதும் தமிழ்நாடு அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மேலும், தமிழ்நாடு நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே கேட்டுள்ளவாறு, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம், கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பார்) துணைப் படுகைகளுக்கான பெருந்திட்டம் அடங்கிய முழு விவரங்களை அளிக்க வேண்டுமென்று முதலமைச்சர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

    இந்தப் பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்வதற்கு இவ்விவரங்கள் மிகவும் தேவை என்பதால், இந்த விவரங்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாக அளிக்கவும், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையேயான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வரை இந்தப் பணியைத் நிறுத்தி வைக்குமாறு கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    • கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி
    • தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த ‘நாடக மாடல் தி.மு.க. அரசு’ கைவிட வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அம்மாவின் அரசு பல சட்டப் போராட்டங்களை நடத்தி உச்சநீதிமன்றத்தில் 16.2.2018-ல் இறுதி ஆணையைப் பெற்று, அதன் அடிப்படையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2023-ல் காவிரியில் நமக்குரிய பங்கு நீரை பெறமுடியாத தி.மு.க. அரசின் நீர்வளத் துறை அமைச்சர் தனது அறிக்கையில் வாய்ஜாலம் காட்டி உள்ளார்.

    வார்த்தை ஜாலங்களில் கில்லாடிகளான தி.மு.க. அரசின் மந்திரிகளில், தலையாய மந்திரியான துரைமுருகன் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சனை முதல், காவிரிப் பிரச்சனை வரை ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று போராடுவோம் என்று கூறி மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம், அண்டை மாநிலங்களான ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும்; கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதும்; கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதும், தி.மு.க. அரசின் எதிர்ப்பே இல்லாமல் சுதந்திரமாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் உள்ளனர்.

    தற்போது கேரளாவில் நடப்பது தி.மு.க.-வின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்கள் ஆட்சி. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை அனைத்து பத்திரிகைகளும், ஊடகங்களும் வெளிச்சம் போட்டுக்காட்டி வருகின்றன. இச்செய்திகளின் அடிப்படையில் கேரள அரசின் நடவடிக்கைக்கு பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரு மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    தங்கள் குடும்பத்தினர் நடத்தி வரும் தொழில்களுக்காகவும், சுயநலத்திற்காகவும், தமிழக மக்களின் நலனை அண்டை மாநிலங்களிடம் அடகு வைப்பதை இந்த 'நாடக மாடல் தி.மு.க. அரசு' கைவிட வேண்டும். காவிரி நீர் பிரச்சனை குறித்து ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சட்ட ரீதியான போராட்டம் நடத்தியும், தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியளர்களிடமும் வற்புறுத்தியும், தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

    அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாகக் காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை தி.மு.க. ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் சட்டத்தின் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சிலந்தி ஆற்றில் அணை கட்டினால், அமராவதி அணைக்கு நீர்வரத்து தடுக்கப்படும்.
    • திமுக அரசு ஆட்சிக்கு வந்தபின், எந்த தடுப்பணையும் கட்டவில்லை.

    கோவை:

    கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர் மலரவன். இவர் கடந்த 17-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

    கோவை கணபதி மாநகரில் உள்ள பாரதி நகரில் உள்ள மலரவன் வீட்டிற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை வந்தார். 

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

    மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. மலரவன் உருவப்படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி அஞ்சலி செலுத்திய காட்சி.

    அவர் அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மலரவன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

    அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கேரள அரசு இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருகிறது. இதனால் அமராவதி அணைக்கு வரும் நீர் நின்றுவிடும். இதன் காரணமாக அந்த பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிப்படைவார்கள்.

    எனவே சிலந்தி ஆற்றின் நடுவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தி.மு.க. அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தடுப்பணை கட்டுவதை தடுக்க தி.மு.க அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதேபோன்று ஆந்திரா, கர்நாடகா, கேரள அரசுகள் மேற்கொள்ளும் தடுப்பணை கட்டும் பணியையும் தடுக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் மழைநீரை சேமிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பணை கட்டினோம். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்து இதுவரை எந்தவித தடுப்பணையும் கட்டப்படவில்லை. மேலும் அ.தி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட தடுப்பணைகள் திட்டமும் கைவிடப்பட்டு உள்ளது.

    தமிழகத்திலும் அ.தி.மு.க வாக்காளர்கள் பெரும்பாலும் நீக்கப்பட்டுள்ளனர். கோவையில் வாக்காளர்கள் இருமுறை பதிவு என்ற அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு முறையும் வாக்காளர் நீக்கம், வாக்குப்பதிவு சதவிகிதத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டில் சந்தேகம் நிலவுகிறது. அவ்வப்போது வாக்கு எண்ணும் மையத்தில் சி.சி.டி.வி கேமராக்கள் செயல்படாமல் உள்ளது. இதுவும் தேர்தல் ஆணையத்தின் மீதான செயல்பாட்டில் சந்தேகமாக உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் கேலிக்கூத்தாக பார்க்கப்படுகிறது.

    அப்போது அவருடன் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், ஏ.கே.செல்வராஜ், வி.பி.கந்தசாமி, சிங்கை ராமச்சந்திரன் மற்றும் பலர் இருந்தனர்.

    • ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி, வாழப்பாடி, ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கன மழை கொட்டியது.

    மேட்டூர் பகுதியில் நேற்று பிற்பகல் கன மழை கொட்டியது. மழையால் அந்த பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் போது பண்ணவாடி- பரிசல் துறை இடையே மீன் பிடித்து கொண்டிருந்த செட்டிப்பட்டியை சேர்ந்த குப்புசாமி மனைவி சுந்தரி (37) என்பவர் உயிரிழந்தார்.

    ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராமநாயக்கன்பாளையம், கல்பகனூர், தென்னங்குடி பாளையம் உள்பட பல பகுதிகளில்நேற்று பெய்த கன மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. வாழப்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.

    இதனால் கோதுமலை வனப்பகுதிகளில் உள்ள சிறு நீரோடைகளில் மழை நீர் வழிந்தோடி கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது .

    ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி கோடை விழா தொடங்க உள்ள நிலையில் நேற்று காலை முதலே ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதனால் அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகுகுழாம் உள்பட பல பகுதகிளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    ஏற்காட்டில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்ப ட்டது. மதியம் 1 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இரவு 7 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதை ஓரத்தில் மழை பெய்யும் போது திடீர் அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது . இதில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குளித்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக கரியகோவிலில் 69 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 0.1, ஏற்காடு 28.6, வாழப்பாடி 31.6, ஆனைமடுவு 10, ஆத்தூர் 6, கெங்கவல்லி 20, தம்மம்பட்டி 8, ஏத்தாப்பூர் 22.6, வீரகனூர் 6, நத்தக்கரை 10, சங்ககிரி 14.4, எடப்பாடி 33, மேட்டூர் 16.2, ஓமலூர் 15.6, டேனீஸ்பேட்டை 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 293.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. 

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    • தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது.
    • 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர அரசு ஏற்கனவே சிறிதும், பெரிதுமாக இதுவரை 22 தடுப்பணைகளை பாலாற்றுப்படுகையில் கட்டியுள்ளது. மேலும் தற்போது 23 வது தடுப்பணை கட்டுவதற்கு ரூ 215 கோடி ஒதுக்கி அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து, ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி இதற்கான அடிக்கல் நாட்டியுள்ள செய்தி பேரதிர்ச்சியை தருகிறது. பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது விவசாயப்பெருமக்கள் அனைவரும் ஆந்திர அரசின் இந்த எதேச்சதிகார முடிவை மிக கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். தமிழக அரசு உடனடியாக ஆந்திர அரசின் இந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்கு உச்சநீதிமன்றம் சென்று உரிய தடையாணை பெறுவது மட்டுமே இதற்கு ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.


    அனைத்து நதிகளுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கையில் உள்ளதால் பிரதமர் மோடி உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. தமிழக அரசும் உடனடியாக இப்பிரச்சினையில் சிறப்பு கவனம் செலுத்தி, ஆந்திர முதல்வரிடம் உடனடியாக பேசி தமிழக வட மாவட்ட விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது.
    • தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2006-ஆம் ஆண்டு துவக்கத்தில், ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி எடுத்தபோது, ஆந்திர முதல்-மந்திரிக்கு கடிதம் எழுதியதோடு, உடனடியாக பொதுப் பணித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து விரிவாக விவாதித்து, இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 131-ன்கீழ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் அம்மா. ஆனால், இன்று தி.மு.க. ஆட்சியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட 215 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவினையும் ஆந்திர முதல்-மந்திரி நடத்தியிருப்பது, நதிநீர்ப் பிரச்சனையில் தி.மு.க.விற்குள்ள அக்கறையின்மையை எடுத்துக் காட்டுகிறது. பாலாற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சியை முறியடிக்க வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர அரசு, பாலாற்றில் தடுப்பணைக் கட்ட ரூ. 215 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததும், அடிக்கல் நாட்டியதும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக பாலாற்றில் ஏற்கனவே 21 தடுப்பணைகள் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாயும் பாலாற்றில் நீர்வரத்து குறைந்து வறண்ட நிலை தான் காணப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் ஒரு தடுப்பணையைக் கட்ட முயற்சி எடுத்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பாலாற்றில் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் அம்சம் என்னாச்சு, இதற்கு முன்பு ஆந்திர அரசிடம் தடுப்பணைக் கட்டாமல் இருக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகள் என்ன, இப்போது தடுப்பணைக் கட்ட அடிக்கல் நாட்டியப் பிறகும், நிதி ஒதுக்கிய பிறகும் தமிழக அரசின் நிலை என்ன என பல கேள்விகளுக்கு பதில் என்னவென்றால் தமிழக அரசின் மெத்தனப்போக்கும், கவனமின்மையும், தமிழக விவசாயத்தில் அக்கறை இல்லாததும் தான்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த மாதம் 31-ந் தேதி நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளித்தனர்.

    அதன் அடிப்படையில் திருநாவலூர் ஒன்றியத்தின் மேற்குப் பகுதியான பாதூர் கிராம எல்லையில் சேஷ நதியின் குறுக்கே 2 தடுப்பணை கட்டுவது தொடர்பாகவும், உளுந்தூர்பேட்டை நகரப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கரும்பு விவசாயிகள் செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு சுமையை ஏற்றிச் செல்ல ஏதுவாகவும், குறிப்பாக செங்குறிச்சி, மதியனூர், நைனாகுப்பம், வண்டிப்பாளையம், பாதூர், டி.ஒரத்தூர், சின்னக்குப்பம் ஆகிய கிராமங்களின் விவசாயப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கு ஏதுவாக சேஷ நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம், சாலைகள் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிகளுடன் பச்சை நிறத்துண்டு அணிந்து 3 கி.மீ. தொலைவிற்கு வயல்வெளியில் நடந்தே சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை உற்பத்திக்குழு தலைவரின் விவசாய நிலத்தில் சந்தனமரம், செம்மரம், ஈட்டி, வேங்கை உள்ளிட்ட மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் நட்டு தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்வில் வேளாண்மை உற்பத்திக்குழு மாவட்ட தலைவர் ஜோதிராமன், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×