search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள்"

    • மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
    • இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் இம்முறை காவிரியில் இருந்து போதிய நீர் இல்லாததால் குறுவை சாகுபடி மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதேபோல் தண்ணீர் இல்லாத காரணத்தால் சம்பா, தாளடியும் பாதிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டம் கீழத்திருப்பூந்துருத்தி, மேலத் திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை பாதை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் வரத்து இல்லாததால், அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.

    ஆனால், கடந்த 4 மாதங்களாக காவிரி நீர் வரத்து இல்லாததாலும், ஒரு மாதத்துக்கு மேலாக மழை பெய்யாததாலும் மோட்டார் பம்ப்செட்டுக்கும் நிலத்தடி நீர் ஆதாரம் குறைந்துவிட்டது. இதனால், ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    காய்ந்து வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூர் அணையிலிருந்து 2 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும், வெண்ணாற்றில் மட்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு விடப்பட்டதே தவிர, தஞ்சாவூர் மாவட்டத்துக்குக் விடவில்லை. இதனால், திருப்பூந்துருத்தி உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றுப் பாசனத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலையுடன் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இப்பகுதிகளில் கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள் தண்ணீர் இல்லாமல், நிலங்களிலும் வெடிப்பு ஏற்பட்டு காய்ந்துவிட்டன. இப்பயிர்களை இனிமேல் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், விவசாயிகள் ஆடுகளை விட்டு மேய்த்தனர்.

    இது குறித்து மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:

    மேலத் திருப்பூந்துருத்தி கூடுதல் வருவாய் கிராமத்தில் ஆற்றுப்பாசனத்தைச் சார்ந்த பல ஏக்கரில் அருகிலுள்ள மோட்டார் பம்ப்செட் மூலம் சம்பா சாகுபடி செய்து வந்தோம். பம்ப்செட்டில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், எங்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால், பல ஏக்கரில் நிலங்களில் தண்ணீரின்றி காய்ந்து, வெடிப்பு ஏற்பட்டு பயிர்களும் கருகி வருகின்றன. இதனால், வேறு வழியின்றி ஆடுகளை விட்டு பயிர்களை அழித்து வருகிறோம். இதுவரை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் செலவு செய்து வீணாகிவிட்டதால், மிகுந்த வேதனை அளிக்கிறது.

    அருகிலுள்ள கருப்பூர், பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பகுதி விவசாயிகளுக்கு தொடர்ந்து 3 ஆண்டுகளாக பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. தற்போது பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

    • ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
    • பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் பொய்யான்குளம், நத்தகுளம், நல்லூர் கீழ்க்குளம் ஆகியவற்றின் வழியாக ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் விவசாய நிலங்கள் உள்ளன.

    நடப்பு பருவமழை காலத்தில் இந்த குளங்களுக்கு தண்ணீர் நிரம்பியதை தொடர்ந்து டிசம்பர் மாத தொடக்கத்தில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டன. உழவு செய்து உரமிட்டு விதைக்கப்பட்ட பிறகு அடுத்ததாக நாற்று நடும் பணியை தொடங்க இருந்த சமயத்தில் யாருமே சற்றும் எதிர்பாராத விதத்தில் 2 நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெய்தது.

    இதனால் பெருக்கெடுத்த வெள்ளத்தின் வேக ஓட்டம் காரணமாக வளர் இளம் பருவத்தில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் அடியோடு அடித்து செல்லப்பட்டுவிட்டன.

    இதனால் ஏற்கனவே உழவிட்டு உரமிட செலவு செய்தது, விதைநெல் வீணானது ஆகியவற்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதையும் தாண்டி மீண்டும் வயலை சீர்படுத்தி மறு விவசாயத்தை தொடங்கலாம் என்றால், விதை நெல்லுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

    விவசாயிகள் கடந்த ஆண்டு அறுவடைக்குப் பிறகு தாங்கள் சேமித்து வைத்திருந்த விதை நெல் முழுவதுமாக வெள்ளத்தோடு போய்விட்ட நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். மாற்று ஏற்பாடுகளை செய்ய அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், விவசாய அலுவலகங்களை தொடர்பு கொண்டால் அங்கும் விதைநெல் கைவசம் இல்லை என்கிற பதிலே கிடைக்கிறது. வேறு இடங்களில் இருந்து உடனடியாக இங்கு விதை நெல் வரவழைத்து தர வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    இது பற்றி நத்தகுளம் விவசாய சங்க துணை தலைவரான ஆறுமுகநேரி மாணிக்கம் கூறியதாவது:-

    தற்போதைய பெருமழை வெள்ளத்தால் திருச்செந்தூர், ஆறுமுகநேரி வட்டார பகுதியில் பிசான சாகுபடி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. கையிருப்பு விதை நெல் கிட்டத்தட்ட 80 சதவீத விவசாயிகளிடம் இருந்து மழை வெள்ளத்தால் அழிந்து விட்டது. மீதி 20 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே நெல் வித்துகள் கைவசம் உள்ளன. நிலைமையை புரிந்து கொண்டு போர்க்கால அடிப்படையில் வேளாண் துறையினர் வேறு மாவட்டங்களில் இருந்து நெல் வித்துகளை இங்கு வரவழைத்து தரவேண்டும்.

    அப்படி தந்தால் கூட காலதாமதமான விவசாயம் என்ற வகையில் முளைக்கும் பயிர் கடுமையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகும். பருவம் தப்பி போவதால் பால் அடைத்து நெல் மணிகள் திரட்சி ஆகாமல் நோஞ்சான் நெல்லாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

    இதனால் மறு விவசாயத்திலும் விவசாயிகளுக்கு பலத்த பாதிப்பு ஏற்படும் நிலையே தெரிகிறது. அதனால் பாரம்பரிய நெல் விதைகளை தவிர்த்து விட்டு இந்த முறை நோய்களை தாக்குப்பிடிக்கக் கூடிய ஒட்டு ரக விதைகளுக்கு அரசின் வேளாண் துறை ஏற்பாடு செய்து தர வேண்டும்.

    மேலும் தற்போது ஏற்பட்டுள்ள விவசாயத்தின் பாதிப்பை குறித்து உடனடியாக கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரண உதவியும் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சாகுபடி வயல்களில் மழைநீர் தேங்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
    • இதே நிலை நீடித்தால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் பாதிக்கப்படக்கூடும்.

    திருவாரூர்:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை என்பது பெய்து வருகிறது.

    இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை நின்றது.

    இதனால் விவசாயிகள் தங்கள் நெல் பயிர்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

    குறிப்பாக திருவாரூர், மாங்குடி, கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் மிதமானது முதல் கன மழை என்பது பெய்து வருகிறது.

    இந்த மழையின் காரணமாக சம்பா நெல் பயிர் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    ஏற்கனவே பெய்த மழையின் கார ணமாக நெல் பயிர்களில் மழை நீர் தேங்கி இருந்ததால் நெல் பயிர்கள் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகி இருந்தது.

    இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக மழை விட்டிருந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை என்பது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    இந்த மழை தொடர்ந்து பெய்தால் ஒட்டுமொத்த நெல் பயிர்களும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம்.
    • ஏக்கருக்கு 5 சதவீதம் 600 மில்லி வேப்ப எண்ணெய் தெளிக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

    நெற்பயிரில் தற்பொழுது நிலவி வரும் காலநிலை மாற்றத்தினால் ஆங்காங்கே இலை சுருட்டு புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இவற்றை ஒருங்கிணைந்த முறைகளை கையாண்டு கட்டுப்படுத்தலாம்.

    நெல் வயல்களில் வளரும் அல்லது தூர்பிடிக்கும் பருவத்தில் உள்ள இளம் பயிர்களை தாக்கும் இப்புழுக்கள் இலைகளை உள்பக்கமாக சுருட்டி உள்ளிருந்து பச்சையத்தை சுரண்டி உண்கிறது. இதனால் இலைகள் வெள்ளை நிற சுரண்டல்களுடன் காணப்படும். இலைகள் நீளவாக்கில் சுருண்டு புழுக்கள் அதன் உள்ளே இருந்து விடும். தீவிர தாக்குதலின் போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல காட்சியளிக்கும். இப் பூச்சியின் தாக்குதல் இருக்கும்போது தழைச்சத்து உரம் இடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

    சேதம் விளைவிக்கும் பூச்சிகளை விவசாயிகள் அடையாளம் காண்பது மிகவும் அவசியம். பூச்சிகளின் முட்டைகள் தட்டையான முட்டை வடிவத்தில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தில் புழுக்கள் பச்சையான நிறத்திலும் ஒளி கசியும் தன்மை கொண்டும், முன் மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும் பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும். தொடர்ந்து 7 முதல் 10 நாட்கள் வரை கூட்டுக் புழுக்களாக இருக்கும். அந்து பூச்சியான முதிர் பூச்சிகள் மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளை கொண்டது. அதில் கருப்பு நிறத்தில் அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்திலும் காணப்படும்.

    நெற்பயிரில் சேதத்தை ஏற்படுத்தும் இலை சுருட்டு புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளை சீராக்கி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். புல், களைகளை நீக்கியும் இப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஏக்கருக்கு அசியேட் 400 கிராம் அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 400 கிராம் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு அல்லது 600 மில்லி வேப்பெண்ணெய் தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மழைகாலத்தில் நெற்பயிர்களை பாதுகாக்கலாம்.
    • மகசூல் இழப்பை தவிர்க்க கேட்டு கொள்ளப்படுகிறது.

    சீர்காழி:

    வடகிழக்கு பருவ மழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்ச ரிக்கை நடவடி க்கை குறித்து சீர்காழி வேளாண்மை உதவி இயக்குநர் ராஜராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-

    தற்போது பருவ மழையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார ங்களிலும் மிதமானது முதல் அதிக கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ள விவசாயிகள் சில பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு விவசாயிகள் பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்கவேண்டும்.

    மழைநீர் சூழ்ந்துள்ள நெல் வயல்களில் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடித்து வேர்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்தல் வேண்டும். நீரில் மூழ்கிய நெற்பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நிவர்த்தி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா 18 கிலோ ஜிப்சம் இவற்றுடன் 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து ஒரு இரவு முழுவதும் வைத்து வயல்களில் தண்ணீர் வடிந்தவுடன் இடவேண்டும். மேலும் போதிய சூரிய வெளிச்சம் தென்பட்டவுடன் ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன், 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரங்களை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலை வழி உரமாக தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல்நாள் ஊற வைத்து மறுநாள் வடிகட்டி, கரைசலுடன் 2 கிலோ யூரியா மற்றும் 1கிலோ பொட்டாஷ் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து மகசூல் இழப்பை தவிர்த்திட கேட்டு கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.
    • நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பல இடங்களில் சில நாட்களில் அறுவடை செய்ய வேண்டிய பருவத்தில் நெற்பயிர்கள் இருந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து மழைநீரில் மூழ்கும் அபாய நிலை உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கி ன்றனர். வயலில் உள்ள நெற்கதிர்கள் சாய்ந்த நிலையில் உள்ளது.

    மேலும் வயலில் தொடர்ச்சியாக மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற மழைநீரை வடிய வைத்து நெற்கதிர்களை எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மழைகாலங்களில் தண்ணீர் வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.
    • மேலும், தண்ணீர் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் முதல் கொத்தமங்கலம் ஊராட்சி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முடிக்கொண்டான் ஆறு செல்கிறது.

    இந்த ஆற்றில் கட்டுமாவடி ஊராட்சி ஆற்றங்கரை தெரு முதல் துண்டம் நீர் தேக்கம் வரை ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீரை தெரியாத அளவுக்கு ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.

    மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து கடலுக்கு சென்று கலக்கும் தண்ணீர் வேகமாக செல்லாமல் தேங்கி வயல்களுக்கு சென்று விடுவதால் நெற்பயிர்கள் பாதிக்கப்படுகின்றன.

    ஆறுகளில் ஆகாய தாமரை செடிகள் ஆக்கிரமித்து ள்ளதால் பொதுமக்கள் குளிக்கவும், துணி துவைக்க வும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    மேலும் மழை வெள்ள காலங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தும் அபாய நிலையில் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்கொண்டான் ஆற்றை ஆக்கிரமி த்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.
    • தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    காவிரி ஒழுங்காற்று ஆணையம் மற்றும் சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை திறந்து விட வலியுறுத்தி இந்திய ஜனநாயக கட்சி சார்பில் இன்று தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து தலைமை வகித்தார்.

    கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், பூதலூர் ஒன்றிய செயலாளர் திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில போராட்ட குழு செயலாளரும், தஞ்சை மேற்கு மாவட்ட தலைவருமான சிமியோன் சேவியர்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட துரித நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

    காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    சம்பா, தாளடி சாகுபடிக்கான உரிய வழிகாட்டுதல்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

    தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்புகளை கைகளில் ஏந்தியப்படி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாநில தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில துணைத்தலைவர்கள் நெல்லை ஜீவா, அனந்தமுருகன், காவிரி உரிமை மீட்பு குழு நிர்வாகிகள் பழ.இராசேந்திரன், சாமி.கரிகாலன், இராசு.முனியாண்டி, வைகறை, இந்திய ஜனநாயக கட்சி தஞ்சை மாவட்ட செயலாளர் வினோபா, மாவட்ட பொருளாளர் முத்துகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன், மாவட்ட துணைச் செயலாளர் ஸ்டீபன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் முத்துராஜன், தெற்கு மாவட்ட தலைவர் பச்சமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர் .

    முடிவில் மாவட்ட பொருளாளர் முத்துகிரு ஷ்ணன் நன்றி கூறினார்

    • கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர்களை காப்பாற்ற கர்நாடகத்திடம் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் பெற்று தர தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும் இன்று தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு மத்திய, கிழக்கு, மேற்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை மத்திய மாவட்ட மாநகர செயலாளர் சரவணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர்கள் மா.சேகர் (மத்திய), ரெத்தினசாமி (மேற்கு), சி.வி.சேகர் (தெற்கு), பாரதிமோகன் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைப்பு செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமை தாங்கி விவசாயிகளை வஞ்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், உரிய காவிரி நீரை பெற்று கொடுக்க வலியுறுத்தியும் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோ ஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் அமைப்பு செயலாளர்கள் காந்தி, துரை.செந்தில், கொள்கை பரப்பு துணை செயலாளர் துரை.திருஞானம், விவசாய அணி இணைச் செயலாளர் ராஜமாணிக்கம், துணை செயலாளர் சிங்.ஜெகதீசன், மருத்துவர் அணி துணைச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.தனபால், கோட்டை பகுதி புண்ணியமூர்த்தி,

    கரந்தை பகுதி பஞ்சு, தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் நாகராஜன், மருத்துவக்கல்லூரி பகுதி மனோகர், கீழவாசல் பகுதி சதீஷ்குமார், தெற்கு ஒன்றியம் ஸ்டாலின் செல்வராஜ், 5-வது வட்ட செயலாளர் சம்பத், மருத்துவக்கல்லூரி பகுதி இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் பசுபதி, தகவல் தொழில்நுட்ப பிரிவு நடராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கோபால், தட்சிணாமூர்த்தி, காந்திமதி, கேசவன், முன்னாள் கவுன்சிலர் பூபதி, அம்மா பேரவை துணை தலைவர் பாலை.ரவி, விளார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தம்பி என்ற சோமரத்தின சுந்தரம், நீலகிரி ஊராட்சி பிரதிநிதி சண்முகசுந்தரம், அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் திருநீலகண்டன், மாணவர் அணி முருகேசன், ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி கலியமூர்த்தி, சாமிவேல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சங்கர், மாணவர் அணி செயலாளர் ஜவகர், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர் கவிதா கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிழக்கு மாவட்ட மாநகர செயலாளர் ராம.ராமநாதன் நன்றி கூறினார்.

    • செம்பனேரி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பயிர்கள் கருக தொடங்கின.

    நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகினர்.

    குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.

    மேலும் ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது.

    எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்.

    உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக சானலில் தண்ணீர் விடவில்லை
    • முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர். கன்னிப் பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது.

    அணை பாசனத்தை நம்பியும் குளத்து பாசனத்தை நம்பியும் விவசாயிகள் சாகுபடி செய்தனர். 6000 ஹெக்டேரில் மாவட்ட முழுவதும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பல்வேறு பகுதிகளில் அறுவடைப்பணி தொடங்கி நடந்து வருகிறது.ஆனால் ஒரு சில பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருக தொடங்கியுள்ளன.

    ஆரல்வாய்மொழி பூதப்பாண்டி பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தோவாளை சானலில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக ஒரு வார காலமாக தோவாளை சானலில் தண்ணீர் விடவில்லை. தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் முறையாக தண்ணீர் செல்லாததால் நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளது.

    நெற்பயிர்கள் கருகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை போர்க்கால அடிப்படையில் கடைமடை பகுதியில் வரை திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டி வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டமும் கிடுகிடு என சரிந்து வருகிறது. பேச்சிபாறை நீர்மட்டம் இன்று காலை 17.65 அடியாக உள்ளது.அணைக்கு 381 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 581 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 27.75 அடியாக உள்ளது.அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் நீர்மட்டம் ஒருபுறம் சரிந்து கொண்டிருக்க பாசன குளங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகளில் கவலை ஏற்படுத்தி உள்ளனர்.

    • குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
    • அதிகாரியுடன் குமரி விவசாயிகள் கடும் வாக்குவாதம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் வாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜோதிபாசு உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:-

    பட்டணம் கால்வாய் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினையும் அந்த பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உப்பாக மாறக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

    எனவே பட்டணங்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நெல்லை மாவட்டம் ராதாபுரத்திற்கு தண்ணீர் வழங்கிவிட்டு குமரி மாவட்டத்தை புறக்கணிப்பது நியாயமானது கிடையாது. விவசாயிகள் வீதியில் வந்து போராடவும் தயங்க மாட்டார்கள். அந்த அளவிற்கு விவசாயிகள் கொதித்து போய் உள்ளார்கள். பேச்சிப்பாறை அணையில் 7 அடி தண்ணீர் இருக்கும்போதே தண்ணீர் வழங்கப்பட்டது. சாகுபடி செய்யப்பட்டது.

    ஆனால் தற்பொழுது அணையில் 40 அடி தண்ணீர் உள்ள போதும் கூட பட்டணம் கால்வாய்க்கு தண்ணீர் வழங்கப்படவில்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணமாகும். தோவாளை கால்வாயில், அதிகாரிகள் அதிகளவு தண்ணீர் திறந்து விட்டதால் தான் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. மோட்டார்கள் மூலம் தண்ணீரை பாய்த்து நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளது. எனவே நெற் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும்.

    போதிய மழை பெய்யாததால் விவசாயிகள் கடுமையான நஷ்டம் அடைந்துள்ளனர். விவசாயிகள் பாதிப்பை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று குமரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்று தருவதற்கு கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேச்சிப்பாறை அணையை தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஜோதிபாசு கூறுகையில், பட்டணம் கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. பணிகள் தற்பொழுது 70 சதவீதம் முடிவு அடைந்துள்ளது. இன்னும் 20 நாட்களுக்குள் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஏற்கனவே பட்டணங் கால்வாயில் தண்ணீர் திறந்து விடுவதற்கு சிற்றாறு அணைகளில் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து விட நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்பொழுது உள்ள தண்ணீரை வைத்து 20 நாட்களுக்கு விநியோகம் செய்ய முடியும்.

    விவசாயிகள் ஏற்கனவே செய்த பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.

    சில இடங்களில் ஆகஸ்ட் மாதம் 1-ந் தேதிக்கு பிறகு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதியில் மட்டுமே தற்பொழுது பயிர்கள் கருகும் சூழலில் உள்ளது. இரணியல் ெரயில்வே பாலத்தை உயர்த்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விட்டனர். அந்த பகுதியில் தண்ணீரை அடைத்துவிட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலை அல்லது நாளைக்குள் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொதுப்பணித்துறை அதிகாரியுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×