search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை"

    • 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.
    • கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார்.

    நாட்டிங்காம்:

    இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஒல்லி போப் 121 ரன்னும், பென் டக்கெட் 71 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 69 ரன்னும் எடுத்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 3 விக்கெட், ஜெய்டன் சீலஸ், சின்க்ளெர், ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்க்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கவெம் ஹாட்ஜ் 120 ரன்களும் அலிக் அத்தானாஸ் மற்றும் ஜோஷ்வா டா சில்வா 82 ரன்களும் அடித்தனர்.

    குறிப்பாக 10-வது விக்கெட்டுக்கு ஷமார் ஜோசப், ஜோஷ்வா டா சில்வா ஜோடி 71 ரன்கள் சேர்த்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. 11வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஷமார் ஜோசப் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.

    107வது ஓவரில் கஸ் அட்கின்ஷன் வீசிய 4வது பந்தை முரட்டுத்தனமாக அடித்து பெரிய சிக்சரை ஷமார் ஜோசப் பறக்க விட்டார். அது ரசிகர்கள் அமரும் மைதானத்தின் மேற்கூரையில் இருந்த சில ஓடுகளை அடித்து நொறுக்கியது. அந்த துண்டுகள் கீழே அமர்ந்திருந்த ரசிகர்கள் மீதும் விழுந்தது. நல்லவேளையாக ரசிகர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.
    • இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.

    இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

    இருப்பினும் ரெயிலில் நீர் ஒழுகும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் ரெயில்வேத்துறையின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர்.

    • இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
    • டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது

    டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று (ஜூன் 27) காலை முதலே மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் முதலாவது டெர்மினலில் மேற்கூரை இன்று [ஜூன் 28] அதிகாலை 5.30 அளவில் இடிந்து விழுந்துள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விமான நிலையத்திற்கு விரைந்தனர். பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார்கள் மீது மேற்கூரை விழுந்ததால் அவை பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இடிபாடுகளுக்கிடையிலும் கார்களுக்குள்ளும் சிக்கியவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

    இந்நிலையில் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர் என்றும் தகவல் வெளியகியுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில் டெர்மினல் ஒன்றில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    • பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார்.
    • மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான வடிகால் கட்டுமானம் செய்யப்படவில்லை

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் மத்திய பாஜக அரசால் பிரமாண்டமான முறையில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்கிய கோவிலின் கட்டுமானப் பணிகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த வருடம் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோவிலில் ராமர் சிலை நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

     

    இந்த விழாவில் இந்தியா முழுவதிலும் இருந்த அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டனர். கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு தற்போது அந்த இடத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது தொடக்கத்திலிருந்தே இந்திய அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் லாபத்துக்காகவே பாஜக ராமர் கோவிலை காட்டியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றமாசாட்டி வருகின்றன.

    மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அளவுக்கு அதிகமான ஊடக வெளிச்சத்துடன் நடத்தப்பட்ட ராமர் கோவில் திறப்பு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அயோத்தி தொகுதியில் பாஜகவை படுதோல்வி அடையச் செய்து இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அப்பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் முன்னேறாத நிலையில் ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்ட ராமர் கோவிலும், விமான முனையமும் அந்த பகுதிக்கு புதிய பளபளப்பை கொடுத்தாலும் அங்குள்ள மக்களின் மனநிலை தேர்தலில் வெளிப்பட்டுள்ளதாகவே இந்த முடிவுகளை பார்க்கமுடிகிறது.

    இதற்கிடையில் அயோத்தி ராமர் கோவிலில் சமீப காலமாக நடந்து வரும் சமபவங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. சமீபத்தில் ராமர் கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தனது துப்பாக்கியை கையாளும்போது தவறுதலாக அது வெடித்ததால் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.

    இந்நிலையில் தற்போது ரூ.1800கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் மழை காரணமாக கருவரை உள்ள பிரதான மேற்கூரை ஒழுகுவதாகவும் மழைநீர் உள்ளே வருகிறது என்றும் கோவிலின் தலைமை பூசாரி ஆச்சார்யா சத்யேந்திரா தெரிவித்துள்ளார். ராமர் சிலைக்கு முன் பூசாரிகள் அமர்ந்து பூஜை செய்யும் இடத்தில் நீர் ஒழுகுவதால் பூசாரிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

     

     

     

    மேலும் மழைநீர் வடியும் வண்ணம் கோவிலுக்கு முறையான பாதாள சாக்கடை கட்டுமானம் செய்யப்படவில்லை என்றும் அவர் குற்றமசாட்டியுள்ள்ளது மக்களிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கோவில் கட்டி முடிக்கப்படும் முன்னதாகவே அவசர அவசரமாக திறக்கப்பட்டதால் இன்னும் அங்கு கட்டுமனாப் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் ராமர் கோவில் கட்டுமானம் என்று பெயரில் பாஜக செய்துள்ள மிகப்பெரிய ஊழலையே காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத்தொடங்கியுள்ளன. 

     

    • சம்பவத்தால் தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
    • காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அல்லி குப்பம் தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. தபால் நிலையம் அமைந்துள்ள கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

    இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த தபால் நிலைய ஊழியர்களான ரகுபதி மற்றும் சிவா ஆகிய இருவரையும் அங்கு இருந்த மற்ற ஊழியர்கள் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    இந்த சம்பவத்தால் தபால் நிலையத்தில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    காயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது.
    • பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் உள்ள மிச்சகன் பகுதியில் வணிக வளாகம் ஒன்று இயங்கி வருகிறது. இதன் மேற்கூரையில் சுமார் 1 வருடமாக 34 வயது பெண் வசித்து வந்ததை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். அந்த மேற்கூரையில் 5 அடி அகலமும், 8 அடி உயரமும் உள்ள ஒரு கதவு உள்ளது. மேலும் ஒரு சிறிய மேஜை, கம்ப்யூட்டர், காபி மேக்கர், அவரது உடை மற்றும் வீட்டில் வைத்திருக்கக்கூடிய சில பொருட்களையும் அங்கே வைத்து அவர் வசித்து வந்துள்ளார்.

    மேற்கூரைக்கு செல்ல சரியான வழி இல்லாத நிலையில், பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மூலமாக அவர் தினமும் அங்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வணிக வளாகத்தில் மேற்கூரைக்கு செல்லும் பாதையில் கம்பி இருப்பதை கண்டறிந்த ஒப்பந்ததாரர் அதுதொடர்பாக ஆய்வு செய்த போது தான் மேற்கூரை பகுதியில் இளம்பெண் 1 வருடமாக வசித்து வந்தது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது தங்குவதற்கு உரிய வீடு இல்லாததால் மேற்கூரையில் வசித்து வந்ததாக அவர் கூறி உள்ளார். பின்னர் போலீசார் அவரை எச்சரித்ததை தொடர்ந்து அவர் அங்கிருந்து செல்வதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செந்தமிழ் செல்வன் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தமிழ் செல்வன் (வயது 33). இவர் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்த பார்த்த பொழுது கடையின் மேற்கூரை உடைத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் இருந்த 4 செல்போன்கள், பேட்டரிகள், ஹெட் போன், சார்ஜர் ஒயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மியோடிட் மனோ, தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    • சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
    • நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.

    இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதம டைந்தன.

    சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்,

    இந்நிலையில் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்ப ள்ளிக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அது வரை தகர ஷெட் அமைத்து சமையலறை பயன்படுத்தப்படும் என ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

    ஆய்வின் போது நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் , நகர்மன்ற உறுப்பினர் முழு மதி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
    • தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்கள், புதுச்சேரி ரெயில் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்த ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கூறியதாவது:-

    தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும். லிப்ட் மட்டும் எக்ஸ்லேட்டர் வசதி 5 நடைமுறைக்கு செல்ல கூடிய அளவில் புணரமைக்கப்படும். நடைமேடைகள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் சாலை புதிதாக அமைக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது கோட்டாட்சியர் இலக்கியா, ரெயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

    • சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது.
    • மழை ஓய்ந்ததை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறபோதிலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள், நகராட்சி பூங்காவில் இருந்த மரம், கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மரம் என நகரின் பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ரெயில் நிலைய 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் தற்போது பழைய மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் அப்பணியை ஊழியர்கள் பாதியிலேயே கைவிட்டனர்.

    இதனால் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. இதை பார்த்ததும் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர்.

    மழை ஓய்ந்ததை தொடர்ந்து நேற்று காலை, ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது.

    • மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ×