என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல் நிலையம்"

    • புகார், மனுக்கள் மீது விரைந்து விசாரணையில் தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பிடித்துள்ளது
    • டி.ஜி.பி. சைலேந்திர பாபு வாழ்த்து

    முசிறி

    திருச்சி மாவட்டம் முசிறியில் சீர்மிகு சட்டம் ஒழுங்கு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்ட குழுவினர் நேரில் வந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது காவல் நிலையத்தின் சுகாதாரம், பராமரிப்பு மற்றும் வரப்பெற்ற புகார்களின் மீது விரைந்து நடவடிக்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை விரைவாக முடித்தல் மற்றும் புகார் கொடுக்க வருபவர்களிடம் மேற்கொள்ளப்படும் அணுகுமுறை, காவல் நிலையத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் உள்ள நன்மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுக்குழு முசிறி காவல் நிலையத்திற்கு தகுதி சான்றிதழுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த முதல் காவல் நிலையமாக மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்து சான்றிதழை சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒன்றிய அரசு அனுப்பி வைத்திருந்தது. விருதுக்கான சான்றிதழை சென்னை சென்று நேரில் பெற்றுக் கொண்ட முசிறி காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் நாகராஜ், தலைமை காவலர் மகாமணி, காவலர் ஆனந்தராஜ், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபுவிடம் நேரில் காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காவல்துறை கூடுதல் இயக்குனர் சட்டம் மற்றும் ஒழுங்கு சங்கர் உடனிருந்தார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், டி.ஐ.ஜி. சரவணசுந்தர், எஸ்.பி. சுர்ஜித்குமார், முசிறி போலீஸ் டி.எஸ்.பி. யாஸ்மின் ஆகியோர் முசிறி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் முசிறி காவல் நிலையம் முதலிடம் பெற்றுள்ள நிகழ்வு முசிறி நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    • நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் பெற்றுத்தந்த எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக்கபட்டது
    • குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

    குளித்தலை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி போட்டியிட்ட முதல் தொகுதியான குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலை நங்கவரம் பகுதியில், ஒன்றிய அளவில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

    கரூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி பரிந்துரைப்படி, குளித்தலை சட்டமன்ற தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான நங்கவரம் பகுதிக்கு புதிய காவல் நிலையம் வேண்டி குளித்தலை நகர தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான குளித்தலை இரா.மாணிக்கம் சட்டமன்றத்தில் எடுத்துரைத்து நங்கவரம் பகுதியில் ஒன்றிய அளவிலான புதிய காவல் நிலையம் பெற்று தந்தமைக்கும், நங்கவரம் பேரூர் கழக செயலாளர் நங்கவரம் பேரூராட்சி மக்களின் சார்பாக முத்து (எ) சுப்பிரமணி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் எம்.எல்.ஏ. இரா.மாணிக்கத்திற்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தோகைமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் புழுதேரி அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதி நச்சலூர் சங்கர், ஒன்றிய பிரதிநிதி செல்வம், விவசாய அணி துணை அமைப்பாளர் பிரகாஷ், தோகைமலை தி.மு.க. இளைஞரணி செயலாளர் சசிகுமார், நெய்தலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரிகார்டுகளை உடைத்து, காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினர்.
    • போராட்டக்காரர்கள் அத்துமீறி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை தீ வைத்து எரித்தனர்.

    மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டத்தை அடுத்த கலிகஞ்ச் காவல் நிலையத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.

    மாணவியின் உயிரிழப்பு விவகாரத்தில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி அப்பகுதியை சேர்ந்த ஆதிவாசி மற்றும் ராஜ்பங்சி சமூகத்தினர் சார்பில் காவல் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரிகார்டுகளை உடைத்து, காவல் நிலையத்தின் மீது கல்வீசி தாக்கினர்.

    போராட்டக்குழுவினரை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். எனினும், போராட்டக்காரர்கள் அத்துமீறி காவல் நிலையத்திற்குள் புகுந்து காவல் நிலையத்தை தீ வைத்து எரித்தனர். அந்த பகுதியில் நிலமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன், 10 ஆம் வகுப்பு மாணவியை கும்பல் ஒன்று கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது. பின் மாணவியின் உடல் குளக்கரையில் வீசப்பட்டு இருந்தது. மேலும் உயிரிழந்த மாணவியின் உடலை காவல்துறை அதிகாரிகள் தரதரவென இழுத்துச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் மாணவியை ஜாவித் அக்தர் என்ற நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துவிட்டதாக மாணவியின் பெற்றோர் குற்றம் சாட்டினர். மேலும் தேசிய குழந்தைகள் நல ஆணையம் இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

    • தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
    • இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமேதி:

    உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பாஜக தலைவரின் கணவரை, எதிர்கட்சியான சமாஜ்வாடி கட்சியின் எம்எல்ஏ சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அமேதி மாவட்டம் கவுரிகஞ்ச் கோத்வாலி காவல் நிலையத்தில் போலீசாரின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் மற்றும் அவரது ஆதவாளர்கள், பாஜகவைச் சேர்ந்த நகராட்சி தேர்தல் வேட்பாளர் ராஷ்மி சிங்கின் கணவர் தீபக் சிங்கை கடுமையாக தாக்கும்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த தாக்குதலை தடுக்க முடியாமல் போலீசார் திணறினர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி எம்எல்ஏ ராகேஷ் பிரதாப் சிங் கூறுகையில், 'நானும் எனது ஆதரவாளர்களும் காவல் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபக் சிங் வந்து தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது ஆதரவாளர்கள் சிலரை தாக்கினார். போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் பிரச்சனை ஏற்பட்டது' என்றார்.

    • ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது.
    • கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    திருநின்றவூர்:

    ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. சட்ட ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை என பல்வேறு பிரிவுகளில் 4623 போலீசார் பணியாற்றி வருகிறார்கள்.

    போலீசார் அனைவருக்கும் தினமும் ரூ.300 வீதம் 26 நாட்களுக்கு ரூ.7,800 உணவுப்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது கடந்த 5 மாதமாக இந்த உணவுப்படி போலீசாருக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    சென்னை காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் போலீசாருக்கு உணவுபடி தொடர்ந்து வழங்கப்படும் நிலையில் அருகில் உள்ள ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட காவல் நிலையங்களில் பணியாற்றும் போலீசாருக்கு நிறுத்தப்பட்டு இருப்பது போலீசார் மத்தியில் வேதனை அடைய செய்து உள்ளது.

    எனவே கடந்த 5 மாதமாக நிறுத்தப்பட்ட உள்ள உணவுப்படி நிலுவைத்ததொகைய முழுவதுமாக உடனடியாக வழங்க வேண்டும் என்று போலீசார் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
    • பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது.

    பல்லடம்:

    பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் உட்கோட்ட காவல்துறையில் பல்லடம், மங்கலம், காமநாயக்கன்பாளையம், அவினாசி பாளையம், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் என 5 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இதில் பல்லடம் காவல் நிலையத்திற்கு 97 கிராமங்கள் மற்றும், பல்லடம் நகரம் ஆகியவை உள்ளடங்கியுள்ளது. இந்த நிலையில் பல்லடம் நகரம், மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள் வேகமான வளர்ச்சி அடைந்து மக்கள் தொகை அதிகரித்துள்ளது. இதில் ஆறுமுத்தாம் பாளையம், கரைப்புதூர், கணபதிபாளையம், ஆகிய 3 ஊராட்சிகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

    மேலும் இங்கு பனியன் நிறுவனங்கள், சாய ஆலைகள் அமைந்துள்ளதால் வட மாநிலத் தொழிலாளர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் ஏதாவது சம்பவங்கள் நடைபெற்றால் பல்லடம் காவல் நிலையத்தில் இருந்து அங்கு செல்வதற்கு தாமதமாகிறது.

    இதனால் குற்றவாளிகள் எளிதாக தப்பி விடுகின்றனர். மேலும் பல்லடம் காவல் நிலையத்தில் தினமும் சுமார் 10க்கும் குறையாமல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதால் போலீசாருக்கு வேலை பளு அதிகரித்துள்ளது. பணிச்சுமையால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது. இதனால் பல்லடம் காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து அருள்புரத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம்.
    • சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு.

    சேலம் மாவட்டம் சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில், ஆய்வு செய்வதற்காக சுத்தம் செய்தபோது பட்டாசு வெடித்து சிதறியது.

    திடீரென பட்டாசு வெடித்ததில் மியாமத்துல்லா என்பவர் உயிரிழந்துள்ளார். புகார் அளிக்க வந்த பவானியை சேர்ந்த பரத் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

    பட்டாசு வெடித்ததில் காவல் நிலைய மேற்கூரை சரிந்து விழுந்து மியாமத்துல்லா உயிரிழந்துள்ளார்.

    இந்த விவகாரத்தை தொடர்ந்து, சங்ககிரி காவல் நிலைய வளாகத்தில் மாவட்ட எஸ்.பி நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.
    • கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர்.

    கோபி:

    தேர்தல் நடைபெறும் போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை போலீஸ் நிலையங்களில் ஒப்படைப்பதற்கு உத்தரவிடப்படுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அந்தந்த போலீஸ் நிலையங்களை ஒப்படைத்து வருகின்றனர்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் உள்ள 7 போலீஸ் நிலையங்களில் மொத்தம் 291 பேர் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் துணை உட்கோட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கோபி, கவுந்தப்பாடி, திங்களூர், நம்பியூர், கடத்தூர், வரப்பாளையம், சிறுவலூர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் இதுவரை 111 பேர் தங்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்துள்ளனர்.

    • இதனால் அதிகாலை முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது
    • காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமாபாத் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் பீதியில் உறைந்தனர்.

    காவல் நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதாக நினைந்து உள்ளூர் மக்கள் அங்கு திரண்டனர். இதனால் அதிகாலை முதல் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது

    இந்நிலையில் காவல் நிலையத்தில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து போலீசார் விளக்கமளித்துள்ளனர்.

    வெடி விபத்து எதுவும் நிகழவில்லை என்றும், காவல் நிலையத்திற்கு வெளியே உள்ள தற்காலிக சோதனை சாவடியின் இரும்பு ஷீட்டினால் மேற்கூரை மீது கனமான பொருள் விழுந்ததால் அந்த சத்தம் எழுந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அவர்கள் விளக்கம் அளித்தனர். 

    • நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.
    • நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    புஷ்பா 2 சிறப்பு காட்சியைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் சென்றபோது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 35 வயதுடைய பெண் உயிரிழந்தார். அவரது மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே விடப்பட்டார்.

    அவரது கைது நடவடிக்கை தெலுங்கானா மாநில சட்டசபை வரை எதிரொலித்தது. அல்லு அர்ஜூன் மீதான நடவடிக்கை சரியானது என முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி விளக்கம் அளித்ததுடன், அல்லு அர்ஜூன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

    முதல் மந்திரியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன், என்னைப் பற்றி பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. நான் எந்தத் துறையையும், அரசியல்வாதியையும் குறைசொல்ல விரும்பவில்லை என தெரிவித்தார்.

    இதையடுத்து, காங்கிரஸ் கட்சியினரும், அல்லு அர்ஜூன் தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.

    இதற்கிடையே, ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கற்களை வீசி உஸ்மானியா பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில், திரையரங்க சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அதன்படி, நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சிக்கட்பள்ளி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

    • காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிப்காட் காவல் நிலையத்திற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடி சென்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

    காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது.
    • குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை.

    ராணிப்பேட்டை காவல்நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவம் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கான சாட்சி என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் நிலையத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் கொடூரமான குற்றங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டது. எந்தக் குற்றம் நடந்தாலும் அது தொடர்பாக யாரையாவது கைது செய்து கணக்குக் காட்டுவதையும், அதையே அரசின் சாதனையாக காட்டிக் கொள்வதையும் தான் திராவிட மாடல் அரசு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது.

    குற்றங்கள் தொடர்பாக புலன் விசாரணை செய்வதும், குற்றங்களைத் தடுப்பதும் வேறு வேறானவை. குற்றங்களைத் தடுப்பது தான் காவல்துறையின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும். காவல் நிலையத்தின் மீதே பெட்ரோல் குண்டு வீசலாம் என்ற துணிச்சல் குற்றவாளிகளுக்கு வருகிறது என்றால் தமிழக காவல்துறை மீதான அச்சம் போய்விட்டது என்று தான் பொருள். தமிழக காவல்துறை கடந்த நான்காண்டுகளாக ஆளுங்கட்சியினரின் கைப்பாவையாக மாறியிருப்பதும், மக்களைக் காக்கத் தவறி விட்டதும் தான் இதற்கு காரணம் ஆகும்.

    ஸ்காட்லாந்துயார்டு காவல்துறைக்கு இணையானதாக கூறப்பட்ட தமிழக காவல்துறையின் வீழ்ச்சிக்கு திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது இழந்த பெருமையை மீட்டெடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ×