search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர் பலி"

    • பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து சக தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சிவகாசி அருகே உள்ள சிறு குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே உள்ள சேது ராமலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பட்டாசுக்கு பவுடர் செலுத்தும் பணி செய்து கொண்டிருந்த மேலாண் மறைநாடு அருகே உள்ள துரை சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (50) பணி முடிந்ததும் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக குளிப்பதற்கு முன்பாக புகை பிடித்தபோது உடலில் இருந்த பவுடர் கலவை காரணமாக தீப்பிடித்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து விஜயரங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வேலம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (44). இவர் அவல்பூந்துறை உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் ஓயர்மேனாக பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் அவல் பூந்துறை-ஈரோடு சாலையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் நிற்காததால் வந்த புகாரை தொடர்ந்து குணசேகரன் அங்கு பழுதினை சரி செய்ய அவருடன் பணியாற்றும் கம்பியாளரான பழனிசாமி என்பவருடன் சென்றார். குணசேகரன் சோளிபாளையம் பெட்ரோல் பங்க் அருகே 30 அடி உயரமுள்ள இரும்பு மின் கம்பத்தில் ஏறிய பழுதினை சரி செய்து கொண்டார்.

    அப்போது குணசேகரனின் இடது பக்க இடுப்பு பகுதிக்கு மேல் மின் கம்பி எதிர்பாராதவிதமாக உரசியதில் மின்சாரம் தாக்கி குணசேகரன் 30 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதைப்பார்த்த பழனிசாமி உதவி செயற்பொறியாளர் சென்னிகிருஷ்ணனுக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து குணசேகரனை தனியார் ஆம்புலன்சு மூலம் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு குணசேகரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    கொடைரோடு:

    சேலம் மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ஜெகன்நாதன் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்களுடன் காரில் மதுரை, திருச்செந்தூருக்கு ஆன்மீக சுற்றுலா வந்தார். திருச்செந்தூர் முருகன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் சேலத்துக்கு காரில் புறப்பட்டனர்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பள்ளப்பட்டி மாவூர் அணை பிரிவில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதி உருக்குலைந்தது. இந்த விபத்தில் ஜெகன்நாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    காருக்குள் சிக்கிக் கொண்ட அவரது உடலை மீட்டு நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காரில் பயணம் செய்த சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்திக் (40), சங்கர் (29), மற்றொரு கார்த்திக் (31), முருகேசன் (30), கார் டிரைவர் மகேந்திரன் (39) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியுள்ளது. இரவு நேரத்தில் 4 வழிச்சாலை ஓரத்தில் உள்ள கடைகளுக்கு செல்வதற்காக லாரி டிரைவர்கள் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி செல்வதால் விபத்து ஏற்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    • ஜானகிராமன் உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது.
    • தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த மடவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல் மகன் ஜானகிராமன் (வயது 29). இவர் சுகாதாரத் துறையில் ஊழியராக சிதம்பரத்தில் பணியாற்றி வந்தார். இவரது உறவினர் இல்ல காதணி விழா திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது முண்டியம்பாக்கம் ஆலைப் பகுதியில் உள்ள கூட்ரோட்டை கடக்க முயன்றார். இவரது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் பலத்த காயமடைந்தார். அவ்வழியே சென்றவர்கள் இவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்து போனார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
    • எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார்

    கன்னியாகுமரி :

    திருவட்டார் அருகே அருவிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (வயது 35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மதுரை மேலூரில் மின்சார ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேலூர் பகுதியில் ஒரு மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் இருந்து கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த மின் ஊழியர் ஷாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடன் வேலை பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தார். இந்த தகவல் ஷாஜியின் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இவரது உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இவரின் சொந்த ஊரான திருவட்டாரில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்று மாலை அடக்கம் செய்ய ப்பட்டது.

    • கவுரிசங்கர்(வயது 34). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
    • தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள மல்லிகுட்டை கிராமம் நெய்க்காரன்வளவு பகுதியைச் சேர்ந்தவர் கவுரிசங்கர்(வயது 34). இவர் சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் கொரியர் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீடு கவுரிசங்கர் திரும்பினார்.

    கருக்குபட்டி என்ற இடத்தில் வந்தபோது தொளசம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த கவுரிசங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர். இந்த சம்பவம் குறித்து ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
    • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கருங்கல் அருகே உள்ள தொலையாவட்டம் கண்ணன் விளை பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ். இவரது மகன் அனீஸ் (வயது 27).

    இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று அனீஸ் கண்ணன்விளையில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பராமரிப்பு பணி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அனீசை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அனீஸ் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலன் இன்றி அனீஸ் இரவில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அனீஸ் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அவரது உறவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனீஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.

    • திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்; தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பி.தொட்டியப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் முத்துக்குமார்(வயது24). பிளஸ்-2 முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் பாப்புரெட்டிபட்டியில் நடக்கும் திருவிழாவுக்காக விடுமுறையில் ஊருக்கு வந்தார். நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார் ைசக்கிளில் சென்றார். ஆவாரம் பட்டி விலக்கு அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த வேன் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அங்கிருந்த வர்கள் மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் பேரையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பேரையூர் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
    • கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரவணம்பட்டி,

    கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது35).

    இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

    நேற்று காலை வேலை முடிந்து மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரும் வந்தார். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.

    மோட்டார் சைக்கிள் கோவை சத்தி ரோட்டில் குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் எடை மேடை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மகேஷ், முத்துராஜ் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இதில் மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    முத்துராஜ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இறந்த மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார்.
    • மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ஈரோடு:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள வெள்ளகோவில் அடுத்த அய்யம்மபாளையம் மேட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (49).

    இவர் காங்கயம் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    மேலும் அவருக்கு குழந்தைகள் இல்லாததால் அவரது தம்பியுடன் இருந்து வந்தார். மேலும் அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் வேலுசாமி ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த அஞ்சூரில் உள்ள தனது அக்கா வீட்டுக்கு சென்று வருவதாக கூறி விட்டு சென்றார்.

    இந்த நிலையில் சிவகிரி அடுத்த நல்லசெல்லிபாளையம் பகுதியில் உள்ள ஒரு டிரான்ஸ் பார்மரில் வேலுசாமி ஏறி மின் கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இது குறித்து சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரி யாத வாகனம் இவர் வாகனத்தின் மேல் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
    • இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார்

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மளிகை கடை ஊழியர் பலியானார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூரை சேர்ந்தவர் முருகன் (45) மளிகை கடை ஊழியர். இவர் நேற்று இரவு 9.45 மணிக்கு தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக மனைவியிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். விருத்தாசலம் பொன்னேரி புறவழிச்சா லையில் சென்று கொண்டி ருந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத வாகனம் முருகன் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.    இதில் முருகன் சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான முருகன் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து நடைபெற்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • யானை நடமாட்டம் காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை ஆனைகட்டி மலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.

    இந்த யானைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவார பகுதிகளான மாங்கரை, தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களுக்கு வருவது வழக்கம்.

    கடந்த சில மாதங்களாக ஒற்றை யானை மற்றும் கூட்டமாக வரும் காட்டு யானைகள் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதும், மனிதர்களை தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது. யானை நடமாட்டம் காரணமாக மக்களும், விவசாயிகளும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு மாங்கரை பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிந்தது. அப்போது அந்த பகுதியில் வசித்து வரும் மகேஷ்குமார் (வயது38) என்பவர் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்தார்.

    அப்போது அந்த பகுதியில் யானை சுற்றி திரிவதை பார்த்ததும் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் யானை அவரை தாக்கியது.

    மகேஷ்குமாரின் சத்தம் கேட்டு அவரது மனைவி திவ்யா மற்றும் தந்தை பெருமாள் சாமி ஆகியோர் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீட்டருகே காட்டு யானை தாக்கி மகேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்தார். மேலும் யானை அங்கிருந்து நகராமல் அப்படியே நின்று கொண்டிருந்தது.

    சிறிது நேரத்திற்கு பிறகு யானை அந்த பகுதியை விட்டு நகர்ந்து சென்றது. இதன் பின்னர், அவரது மனைவியும், தந்தையும் அருகே சென்று பார்த்தனர். அப்போது மகேஷ்குமார் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

    அவரது உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மகேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். யானை தாக்கி இறந்த மகேஷ்குமார் கோவையில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரநிதியாக வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

    ×