search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதி தப்பி ஓட்டம்"

    • மானூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று மாலை கைது செய்தனர்.
    • காவலர்கள் 2 பேரும், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரத்தை அடுத்த மணக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன். இவரது மகன் சுரேஷ் (வயது 21).

    இவர் சம்பவத்தன்று அந்த பகுதியில் அடிதடியில் ஈடுபட்டதாகவும், ஒரு பெண்ணிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாகவும் பாளை தாலுகா போலீசில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மானூர் பகுதியில் பதுங்கி இருந்த அவரை நேற்று மாலை கைது செய்தனர்.

    பின்னர் இரவில் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி உத்தரவின்பேரில் முதல்நிலை காவலர் வீரமணி, பெண் காவலர் ஆஷிகா ஆகியோர் சுரேசை ஒரு ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.

    ஆட்டோ நெல்லை-மதுரை நான்குவழிச்சாலையில் கக்கன் நகர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென சுரேஷ் ஆட்டோவில் இருந்து வெளியே குதித்து தப்பி ஓடினார். உடனே காவலர்கள் அவரை பின்தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில், அப்பகுதியில் உள்ள இருள் சூழ்ந்த பகுதி வழியாக சுரேஷ் தப்பிச்சென்றார்.

    இதையடுத்து காவலர்கள் 2 பேரும், தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில் தாலுகா போலீசாரும், தனிப்படையினரும் தப்பியோடிய சுரேசை தேடி வருகின்றனர்.

    • அமீர் அப்துல் காதர் திடீரென்று போலீசாரை தள்ளிவிட்டு கை விலங்குடன் பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார்.
    • கண் இமைக்கும் நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து கைதி தப்பி ஓடிவிட்டார்.

    கடலூர்:

    புதுச்சேரி உருளையன்பேட்டையை சேர்ந்தவர் அமீர் அப்துல் காதர் (வயது 22). இவர் மீது திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை கைதியாக கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த மே மாதம் 6-ம் தேதி முதல் இருந்து வருகிறார்.

    நேற்று வழக்கு தொடர்பாக விசாரணைக்காக திண்டிவனம் போலீசார் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து கைதி அமீர் அப்துல் காதரை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து சென்றனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மாலை போலீஸ்காரர்கள் முருகன், அப்துல் ரஷீத் ஆகியோர் மீண்டும் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைப்பதற்காக கைதி அமீர் அப்துல் காதரை கடலூர் பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பஸ் நிலையத்தில் இருந்து மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்வதற்காக பஸ்சில் ஏற முயன்றனர்.

    அப்போது அமீர் அப்துல் காதர் திடீரென்று போலீசாரை தள்ளிவிட்டு கை விலங்குடன் பஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் கைதி அமீர் அப்துல் காதரை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவில் வரை விரட்டி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் கண் இமைக்கும் நேரத்தில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பி ஓடிவிட்டார்.

    இந்த சம்பவம் குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருவதோடு, திண்டிவனம் போலீசாரும் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையம் பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.
    • கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மருதன் கிணறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் தற்பொழுது சங்கரன்கோவில் நல்லரசன் கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வல்லரசுவை ஈத்தாமொழி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்க வல்லரசுவை அழைத்து வந்தனர். ஜெயில் வாசலில் இருந்து வல்லரசு போலீஸ் பிடியில் இருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு தப்பி ஓடிவிட்டார். வல்லரசு தப்பி ஓடியது குறித்து நாகர்கோவில் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். இந்த நிலையில் வடசேரி பஸ் இளைய பகுதியில் வெளியூர் தப்பி செல்வதற்காக நின்று கொண்டிருந்த வல்லரசுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்றது தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்திலும் வல்லரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய 3 மணி நேரத்தில் கைதியை பிடித்த போலீசாருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் வல்லரசு தப்பி சென்றபோது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று நள்ளிரவு இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களை சமாதானப்படுத்தி, 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    மணப்பாறை:

    திருச்சி மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நேற்று நள்ளிரவு இரண்டு வாலிபர்கள் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்காணித்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் இருவரும் காயம் அடைந்தனர்.

    இது குறித்து வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பொது மக்களை சமாதானப்படுத்தி, 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் புதுக்கோட்டை ஆவுடையார் கோவில் மணமேல்குடியை சேர்ந்த மாதவன்(வயது 22), திருப்பூர் தாராபுரத்தை சேரந்த ஆகாஷ்(22) என்பது தெரிய வந்தது.காயமடைந்த அவர்கள் இருவரையும் போலீசார், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரில் ஒருவரான ஆகாஷ் திடீரென மாயமாகி உள்ளார். போலீஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர் தப்பி ஓடியதை தொடர்ந்து மணப்பாறை முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினர். தொடர்ந்து அவர் எங்கு சென்றிருக்க கூடும் என்பது குறித்து விசாரணை நடத்தி போலீசார் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் காவலில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்
    • சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது

    வேலூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). கூலித் தொழிலாளி.

    கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் போலீசார் போக்சோ சட்டத்தில் ராஜாவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை ராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ராஜா சிகிச்சை பெரும் அறையின் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சிகிச்சை பெற்று வந்த ராஜா இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் தப்பி ஓடிவிட்டார்.

    பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ராஜாவை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இது குறித்து வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அருண் குமாருக்கு நேற்று காலை ஜெயில் வளாகத்தில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டது.
    • மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது.

    மதுரை:

    தேனி மாவட்டம் தாமரைக்குளத்தைச் சேர்ந்தவர் ஆதி என்ற அருண்குமார் (வயது 40). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஈரோட்டில் வேலைபார்த்து வந்தார்.

    அப்போது அங்கு மூதாட்டி ஒருவரை கொலை செய்ததாக, சித்தோடு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் அருண் குமாருக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதனைத் தொடர்ந்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் மதுரை மத்திய ஜெயிலுக்கு மாற்றம் வேண்டும் என்று அருண்குமார், சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை ஜெயில் நிர்வாகம் மதுரைக்கு மாற்றியது. இங்கு அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தார்.

    அருண் குமாருக்கு 2 மனைவிகள் என்று கூறப்படுகிறது. அதில் 2-வது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயிலுக்கு வந்து கணவரை சந்தித்து சென்று உள்ளார்.

    அப்போது அவரிடம் அருண்குமார், மதுரை ஜெயிலில் வேலைபார்த்த வகையில் கிடைத்த 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுத்து அனுப்பி உள்ளார். அப்போது அவர்கள் 2 பேரும் என்ன பேசிக் கொண்டார்கள்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

    இந்த நிலையில் அருண் குமாருக்கு நேற்று காலை ஜெயில் வளாகத்தில் உள்ள தோட்டத்தை சுத்தம் செய்யும் பணி ஒதுக்கப்பட்டது. அங்கு இவருடன் மேலும் 9 பேர் வேலை பார்த்து கொண்டு இருந்தனர். அப்போது அருண்குமார் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.

    மதுரை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் தரப்பட்டு உள்ளது. இதற்கிடையே ஆயுள் தண்டனை கைதி அருண்குமார் தப்பிச் சென்ற விவகாரம் தொடர்பாக மதுரை மத்திய ஜெயில் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது அங்கு பாதுகாவலர் பணியில் இருந்த போலீஸ் ஏட்டு பழனிக்குமார் கவனக்குறைவாக இருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மதுரை மத்திய ஜெயில் நிர்வாகம் போலீஸ் ஏட்டு பழனிகுமாரை பணியில் இருந்து தற்காலிக நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டு உள்ளது.

    ×