என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுமனை பட்டா"

    • இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.
    • புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக வீடில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் பொதுமக்கள் இச்சிப்பட்டி கிராமசபை கூட்டம் ,மக்கள் குறை தீர்க்கும் முகாம் உள்ளிட்ட அரசு மக்கள் தொடர்பு முகாம்களில் மனு அளித்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ரீஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார் நந்தகோபால், இச்சிப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி கார்த்திக், இச்சிப்பட்டி வருவாய்த்துறை அதிகாரி சந்திரகலா உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பல்லடம் ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொத்துமுட்டிபாளையம் பகுதியில் உள்ள 5 ஏக்கர் 66 சென்ட் வண்டிப்பாதை புறம்போக்கு இடத்தை நத்தமாக வகைமாற்றம் செய்து பயனாளிகளுக்கு வழங்க உகந்த இடமா என ஆய்வு செய்ய வந்தனர்.

    அப்போது 5 ஏக்கர் 66 சென்ட் இடத்தில் கொத்துமுட்டிபாளையம் பொதுமக்கள் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை சப் கலெக்டர் பார்வையிட்டார். அவரிடம் கொத்துமுட்டிபாளையம் பகுதி பொதுமக்கள் , கடந்த 7 ஆண்டுகளாக நாங்கள் இந்த இடத்தில் தாவரவியல் பூங்கா என்ற பெயரில் சுமார் 6000 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம் .மேலும் தாவரவியல் பூங்காவில் உள்ள மரங்களை அழித்துவிட்டு வீட்டுமனை பட்டா வழங்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என ஒரு தரப்பினர் தெரிவித்தனர்.

    சப் கலெக்டர் வரும் தகவலை அறிந்த வீட்டுமனை கேட்டு மனு அளித்த கோம்பக்காடு,தேவராயன்பாளையம் புதூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொத்துமுட்டிபாளையம் கிராமத்தில் காத்திருந்து சப்கலெக்டரை சந்தித்தனர். அப்போது இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சப்கலெக்டரிடம் கொத்துமுட்டிப்பாளையம் பகுதியில் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும்,கொத்துமுட்டி பாளையம் பகுதியில் நடவு செய்யப்பட்டுள்ள மரக்கன்றுகளை வீட்டிற்கு 4 மரங்கள் என பராமரிக்கிறோம். எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என மற்றொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.2 தரப்பினரிடமும் "பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சப்-கலெக்டர் கூறி சென்றார்.  

    • அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர். .
    • வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் நம்பியாம்பாளையம் ஊராட்சி எ.டி.காலனியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் 40 பெண்கள் உள்ளிட்ட 60 க்கு மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள 99/3 என்புறம்போக்கு இடத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் என்ற பதாகை வைத்து வீட்டுமனை பட்டா வேண்டும் என்று அவர்கள் தனித்தனியாக குச்சிகளை நட்டு சாலை அமைப்பதற்கு முயன்றனர்.

    இது பற்றி அவர்கள் கூறுகையில், நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம்.எங்களுக்கு குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லை. ஏற்கனவே வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இங்கு பட்டா கேட்டு வந்துள்ளோம் என்றனர். தகவல் அறிந்து அவினாசி தாசில்தார் ராஜேஸ், கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி, உதவியாளர் நடராஜ், அவினாசி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து அவர்களிடம் இது குட்டை புறம்போக்கு இடம். இங்கு வீட்டுமனை பட்டா தருவதற்கு சாத்தியமில்லை .வேறு இடம் பார்த்து தருவதாக கூறினர். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்து பலகாலமாக எங்கள் மூதாதையர் இங்கு குடிசை போட்டு வாழ்ந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என்று நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய்துறையினரும் போலீசாரும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவசியம் வேறு நல்ல இடத்தில் வீட்டுமனை பட்டா தருவதாக வலியுறுத்தி கூறிய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கோபாலபுரம், ராமகிருஷ்ணாபுரம், வைத்திலிங்காபுரம், மம்சாபுரம், ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடற்ற ஏழைகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வட்டாட்சியர் ரெங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
    • கிராம மக்களுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வி.மங்கலத்தில் 1997-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் வீடுகள் இல்லாத மக்கள் தேர்வு செய்யப்பட்டு 27 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதில் 7 நபர்களுக்கு தகுதி அடிப்படையில் பட்டா ரத்தானதாக கூறப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேல் கடந்த நிலையில் அவர்களுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் அளவீடு செய்து கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி விட்டனர்.

    பட்டா இருந்தும் இடம் கிடைக்காமல் விரக்தியடைந்த பயனாளிகள் தங்களுக்கு பட்டாவிற்கான இடத்தை அளவீடு செய்து கொடுக்குமாறு பட்டாவுடன் எஸ்.வி.மங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அலுவல் சம்பந்தமாக அந்தவழியாக சென்ற தாசில்தார் சாந்தி பொதுமக்களை கண்டதும் அவர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் ஒரு வாரத்திற்குள் அளவீடு செய்து தருவதாக உறுதியளித்தார்.அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் பயனாளிகளை தாசில்தார் சாந்தி பேச்சுவார்த்தைக்கு அழைத்து 2 வாரங்களில் நில அளவீடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

    • 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது.
    • கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    காங்கயம் :

    ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 38 பேருக்கு ரூ.15.20 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டா, 160 பேருக்கு இ-பட்டா வழங்கும் நிகழ்ச்சி காங்கயத்தில் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய பின்னா் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னா் தோ்தல் வாக்குறுதியின்படி கொரோனா நிவாரண உதவி தொகை ரூ.4 ஆயிரம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.முதல்வா் மேற்கொண்ட நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

    தமிழக மக்களின் நலனுக்காக கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், மக்களைத் தேடி மருத்துவத் திட்டம், இன்னுயிா் காப்போம், நம்மைக் காப்போம் - 48 உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திருப்பூா் மாவட்டத்தில் 78 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனா் என்றாா். இதைத் தொடா்ந்து, காங்கயம் பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தையும் அமைச்சா் திறந்துவைத்தாா்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் ரவிசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். 

    • பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனையிடங்கள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டன.
    • சிலர் பட்டா பெறப்பட்ட இடத்தில் வீடுகட்டி குடியேறாமல் வேறு இடங்களில் குடியிருக்கின்றனர்.

    தாராபுரம் :

    முந்தைய ஆண்டுகளில் வீடில்லாத ஏழை, எளிய மக்களுக்கு ஆதி திராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் இலவச வீட்டுமனையிடங்கள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனைப்பட்டாக்களும் வழங்கப்பட்டன.

    சிலர் தங்களுக்கு கிடைத்த பட்டாவை வேறு சிலருக்கு விற்பனை செய்தும் விட்டனர். சிலர் பட்டா பெறப்பட்ட இடத்தில் வீடுகட்டி குடியேறாமல் வேறு இடங்களில் குடியிருக்கின்றனர். சில இடங்களில் பட்டா வழங்கப்பட்ட இடங்கள் அருகேயுள்ள நில உரிமையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளன.இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு 'செக்' வைக்கும் விதமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வீட்டுமனைப்பட்டாக்களை ரத்து செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    தாலுகா வாரியாக இலவச வீட்டுமனைப்பட்டா பெற்றும், அந்த இடத்தில் குடியிருக்காதவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தாலுகா அலுவலகம், ஊராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் பொது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.பட்டியலில் உள்ளவர்களை அடையாளம் காண இயலாத பட்சத்தில் அந்த பட்டா ரத்து செய்யப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும் என திருப்பூர்

    வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

    • உதவி கலெக்டர் வழங்கினார்
    • குறை தீர்வு முகாமில் மனு கொடுத்த உடனே தீர்வு

    ஆரணி:

    ஆரணி டவுன் கோட்டை வீதியில் ஆரணி சப்-கலெக்டர் அலுவலகம் இயங்கி வருகின்றன. தற்போது சப்-கலெக்டராக தனலட்சுமி என்பவர் இருந்து வருகின்றார்.

    இந்த அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

    இந்த முகாமில் ஆரணி போளூர் ஜமுனாமுத்தூர் கலசபாக்கம் உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

    மேலும் கடந்த வாரம் திங்கட்கிழமை ஆர்.டி.ஓ அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் எஸ்.வி.நகரம் கிராமத்தில் நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் தங்கியிருந்ததை வருவாய் துறையினர் அகற்றிவிட்டனர்.

    தங்க வழியின்றி உள்ளதாக எஸ்.வி.நகரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் கார்த்தி சாமந்தி ஆகிய 3 பயனாளிகள் ஆரணி சப்-கலெக்டரிடம் குறைதீர்வு முகாமில் மனு அளித்தனர். இந்த மனுவை உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்து இரும்பேடு ஊராட்சியில் உள்ள இடத்தில் 3 பேருக்கும் இலவச வீட்டு மனை பட்டா சப்-கலெக்டர் தனலட்சுமி வழங்கினார்.

    பட்டாவை பெற்ற பயனாளிகள் வருவாய் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர். இதில் சப்-லெக்டர் நேர்முக உதவியாளர் பெருமாள் தாசில்தார் ஜெகதீசன், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன.
    • 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை.

    வெள்ளகோவில் :

    இலவச வீட்டு மனைப் பட்டாக்களுக்கான நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் அனுப்பியுள்ள மனு விவரம் வருமாறு:-

    வெள்ளக்கோவில் வருவாய் கிராமம், கிழக்கு உப்புப்பாளையத்தில் 32 நபா்களுக்கு அரசு சாா்பில் இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் கடந்த 2006ம் ஆண்டு வழங்கப்பட்டன. இவற்றில் வெளியூா் நபா்கள் என 20 பேரின் பட்டாக்கள் 2007ல் தனி வட்டாட்சியரால் ரத்து செய்யப்பட்டன. இதனை எதிா்த்து தகுந்த ஆதாரங்களுடன் 8 நபா்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கிடைத்த தீா்ப்பில், தனி வட்டாட்சியா் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இருந்தாலும் 16 ஆண்டுகளாக வருவாய்த் துறையினா் நிலத்தை ஒப்படைக்கவில்லை. மீண்டும் உயா்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு, இலவசப் பட்டாக்கள் படி, நிலத்தை அளந்து நான்கு புறமும் அத்துக்கட்டித் தர வேண்டுமென தீா்ப்பு வழங்கப்பட்டது. எனவே உயா்நீதிமன்ற ஆணைப்படி 8 நபா்களுக்கு நிலத்தை அளவீடு செய்து தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

    • ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
    • பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் ஒரே நாளில் 1,055 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

    இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று, தஞ்சாவூா் வட்டத்தைச் சோ்ந்த 150 பேருக்கும், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 59 பேருக்கும், ஒரத்தநாடு வட்டத்தைச் சோ்ந்த 70 பேருக்கும், பூதலூா் வட்டத்தைச் சோ்ந்த 93 பேருக்கும், பட்டுக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த 200 பேருக்கும், பேராவூரணி வட்டத்தைச் சோ்ந்த 247 பேருக்கும், பாபநாசம் வட்டத்தைச் சோ்ந்த 95 பேருக்கும், கும்பகோணம் வட்டத்தைச் சோ்ந்த 63 பேருக்கும், திருவிடைமருதூா் வட்டத்தைச் சோ்ந்த 78 பேருக்கும் என மொத்தம் 1,055 பேருக்கு ரூ. 4.12 கோடி மதிப்பிலான விலையில்லா வீட்டு மனை பட்டாவுக்கான ஆணைகளை வழங்கினாா்.

    இவ்விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திசேகரன், (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். ராமநாதன், மாநகராட்சி ஆணையா் சரவணகுமாா், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்,
    • கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சூலூர்,

    சூலூர் வட்டாரம் அரசூர் ஊராட்சிக்குட்பட்ட நாகதேவன் குட்டை பகுதியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அரசு ஊராட்சியின் சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மனோன்மணி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர் செல்வநாயகி அன்பரசு, துணைத்தலைவர் சுதா, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி ஒன்றிய பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை உமாசங்கரி, கிராம நிர்வாக அலுவலர்கள் அசோகன் மற்றும் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் சேமிப்பு சிக்கனம், ஊராட்சி வளர்ச்சி பணிகள் விவரம், சுகாதாரம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம், திட திரவக்கழிவு மேலாண்மை, நாகதேவன் குட்டை, கொள்ளுப்பாளையம் பள்ளிக்கூடம் பின்புறம் உள்ள பகுதி மற்றும் சங்கோதிபாளையம் கள்ளிக்குழி பகுதிகளில் வீட்டு மனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
    • நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் வறுமையில் வாடும் நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் ராமேசுவரம் கிளை தலைவர் குமார், செயலாளர் லட்சுமணன், ராபின்சன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

    • மாற்றுத்திறனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா கலெக்டர் வழங்கினார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் கூரைக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற மாற்றுத்திறனாளி இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு கடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து நேற்று நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வ ீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×