search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசியல் கட்சிகள்"

    • அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
    • அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சென்னை:

    வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார்.

    புதிய உறுப்பினர் சேர்க்கை, உள்கட்டமைப்பு கட்சி வளர்ச்சி திட்டங்கள் என ஒவ்வொன்றையும் கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை புதிதாக சேர்ந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியுள்ளது. அடுத்த கட்டமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து மாநாடு நடத்துவற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் விஜய் ஆலோசனையின் பேரில் புஸ்ஸி ஆனந்த் மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், புதுக்கோட்டை போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

    முதல் மாநாடு என்பதால் வரலாற்று சிறப்பு மிக்க மாநாடாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.

    இதற்காக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை செய்து வருகிறார்.


    வருகிற 22-ந் தேதி விஜய் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் ஏழை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது.

    இதற்காக பயனாளிகளின் பெயர் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி வருகிற 28-ந் தேதி மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் சென்னையில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது.

    மாநாடு, பிறந்தநாள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    விஜய் உத்தரவின் பேரில் கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கடந்த சில தினங்களாக பல்வேறு ஊர்களுக்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கூட்டத்தில் பூத் கமிட்டி அமைப்பது, மாநாடு, விஜய் பிறந்தநாள் விழா பற்றி ஆலோசனை செய்யப்பட்டது.

    ஆலோசனை கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    நாமக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் குமார பாளையம் தொகுதி நிர்வாகிகள் ஏற்பாட்டில் ரூ.8 லட்சம் செலவில் கல்வி உதவித்தொகை தலா ரூ.3000 வீதம் 9 பேர்களுக்கும், ரூ.2000 வீதம் 6 நபர்களுக்கும் சில்வர்குடம் 70 நபர்களுக்கும், ஆட்டோ ஓட்டுநர்கள் 80 பேருக்கு சீருடை, 300 பேருக்கு அரிசி, 350 பெண்களுக்கு புடவை மற்றும் முதியோர் உதவித் தொகை, தையல் எந்திரம், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மருத்துவ உதவித்தொகை உள்பட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டது.

    இன்று காலை ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாலை கரூரிலும், தொடர்ந்து சேலத்திலும், நாளை கோயம்புத்தூரிலும் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகிறது.

    நாமக்கல்லில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதுவரை 5 நாட்களில் 27 இடங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடி வடைந்து

    உள்ளது. அனைத்து ஊர்களிலும் நடந்த கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

    அடுத்தடுத்து அதிரடியாக விஜய் எடுத்து வரும் பணிகள் அரசியல் கட்சிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் தேதி, இடம் விரைவில் விஜய் வெளியிட இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பயணம் புயல் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    • அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.
    • போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவம் புதுவை பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. நேற்றைய தினம் கல்லூரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் சாலைமறியல், சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என 10-க்கும் மேற்பட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இதனால் புதுச்சேரியில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து பந்த் போராட்டம் அறிவித்துள்ளன.

    இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று மாலை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், சம்பத், இந்தியகம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் சிறுமி படுகொலை, புதுச்சேரியில் போதை பொருளை கட்டுப்படுத்தாதது, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

    மேலும் இன்று மாலை 4 மணிக்கு இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் கூறும்போது, மாணவர்களுக்கு தேர்வு நடப்பதால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் தடைபடாத வகையில் இந்த போராட்டம் இருக்கும் என தெரிவித்தார்.

    அ.தி.மு.க. சார்பிலும் நாளை பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அ.தி.மு.க. மாநில செயலளார் அன்பழகன் கூறும்போது, புதுச்சேரிக்கே தலை குனிவை ஏற்படுத்தியுள்ள சிறுமி கொலை சம்பவத்தை கண்டித்து நாளை அ.தி.மு.க. சார்பில் பந்த் போராட்டம் நடத்தப்படும்.

    போதையில் சீரழியும் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த போராட்டம் நடத்துகிறோம் என தெரிவித்தார்.

    இந்தியா கூட்டணி, அ.தி.மு.க. பந்த் போராட்டத்தால் நாளை புதுச்சேரியில் பஸ்கள் ஓடாது.

    புதுச்சேரியை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பஸ் உரிமையாளர்கள் பஸ்களை இயக்கமாட்டார்கள். இதோடு டெம்போ, ஆட்டோக்களும் ஓடாது. கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும்.

    சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரி வித்துள்ளனர்.

    இதனால் பந்த் போராட்டம் முழுமையாக நடைபெறும் என தெரியவருகிறது.

    • கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.
    • இதுவரை 400 இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் வாக்களிப்பீர் தாமரைக்கு என தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது

    மேட்டுப்பாளையம்:

    பாராளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. தேர்தல் தேதியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான பணியை தற்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவும் அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகிறது.

    தேர்தல் பிரசாரத்தின்போது சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் என வினியோகித்து தேர்தல் பரப்புரை செய்வார்கள். இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தற்போது பல இடங்களில் அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரங்கள் வரையும் பணியை தொடங்கி விட்டன.

    அதன்படி கோவை மாவட்டத்திலும் சுவர் விளம்பரங்கள் வரையும் பணி நடந்து வருகிறது. தி.மு.கவின் உதய சூரியன் சின்னம், அ.தி.மு.க.வின் இரட்டை இலை, பா.ஜ.கவின் தாமரை, காங்கிரசின் கை உள்பட அனைத்து கட்சிகளின் சின்னங்களும் வரையப்பட்டு வருகின்றன.

    சின்னத்துடன் அந்தந்த கட்சிகளின் தலைவர்களின் படங்களும் வரையப்படுகிறது. அத்துடன் தங்கள் அரசு செய்த சாதனைகளையும் வாசகங்களாக எழுதி பிரசாரம் செய்யும் பணியில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

    அன்னூர் பேரூராட்சி, வடக்கு ஒன்றியம் மற்றும் தெற்கு ஒன்றியத்தில் கடந்த 19-ந் தேதி தாமரைக்கு வாக்கு சேகரிக்கும் வகையில், வாக்களிப்பீர் தாமரைக்கு என்னும் வாசகத்துடன் தாமரை சின்னம் வரையும் பணி தொடங்கியது.

    அன்னூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, மூக்கனூர், கரியாம்பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன்புதூர் பகுதிகளில் இதுவரை 400 இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் வாக்களிப்பீர் தாமரைக்கு என தாமரை சின்னம் வரையப்பட்டுள்ளது. அன்னூர் ஒன்றியத்தில் 1000 இடங்களில் தாமரை சின்னத்தை வரைய திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.கவினர் தெரிவித்துள்ளனர்.

    • பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.
    • 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.

    திருப்பூர்:

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.மாநிலத்தில் தி.மு.க., -அதி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட தொடங்கி உள்ளன. பா.ஜ.க, வை பொறுத்தவரை 9 தொகுதிகளை தேர்வு செய்து, கடந்த 2 ஆண்டாகவே களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களையே அடையாளம் காட்டி விட்டது. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி வருகிறது.

    இதற்காக வாக்காளர் பட்டியலில், துல்லியத் தன்மை கொண்டு வரும் நோக்கில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, பெயரில் உள்ள பிழைகளை சரி செய்ய, முகவரி மாற்றம் செய்வதற்கென சிறப்பு முகாம் அடுத்த மாதம் 4, 5 மற்றும் 18, 19-ந் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடத்தப்பட இருக்கிறது.

    இதற்கு திருப்பூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகள் தயாராகியுள்ளன. முகாம்களில் கட்சியின் பூத் கமிட்டி நிர்வாகிகளில் முழு அளவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என தி.மு.க., தலைமை நிர்வாகிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதே போன்று பிற கட்சிகளும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • 2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைத்தனர். அவர்கள் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

    குறிப்பாக பெண்கள் கல்வி கற்க தடை விதித்தனர். மேலும் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    நேற்று தலிபான்கள், அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய 2-வது ஆண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தலிபான் அரசாங்கத்தின் நீதி அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறியதாவது:-

    "ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை. அவர்களை தேசம் பாராட்டுவதில்லை" என்றார்.

    அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமையின் ஒப்புதலுடன் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    2021-ம் ஆண்டு வரை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சகத்தில் 70 பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான அஞ்சலி செலுத்தும் உத்தேச நேர ஒதுக்கீடு அட்டவணையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.
    • பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம்-4 மணி. மனித உரிமை காக்கும் கட்சி-4.10 மணி. பாரதிய பார்வர்ட் பிளாக்-4.20 மணி.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் குருபூஜை விழா நாளை (30-ந் தேதி) நடக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகளுக்கான அஞ்சலி செலுத்தும் உத்தேச நேர ஒதுக்கீடு அட்டவணையை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்.

    அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக்கழகம்-காலை 10 மணி. மூவேந்தர் முன்னேற்ற கழகம்-10.15 மணி. அ.தி.மு.க. (இ.பி.எஸ்.)-10.30 மணி. காங்கிரஸ்-10.45 மணி. ம.தி.மு.க.-11 மணி.

    அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம்-11.15 மணி. தமிழ்நாடு தேவர் பேரவை இளைஞர் அணி-11.30 மணி. அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) 11.45 மணி.

    பா.ஜ.க.-12 மணி. பா.ம.க.-12.15 மணி. முக்குலத்தோர் புலிப்படை-12.30 மணி. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை-12.45 மணி.

    தென்நாடு மக்கள் கட்சி-1 மணி. அ.ம.மு.க-1.15 மணி. அகில இந்திய தேவரின மக்கள் பாதுகாப்பு படை, முக்குலத்தோர் பாதுகாப்பு படை-1.30 மணி. அகில இந்திய பார்வர்டு பிளாக்-1.45 மணி. தே.மு.தி.க-2 மணி.

    அ.தி.மு.க மாவட்ட வழக்கறிஞர் பிரிவு-2.15 மணி. அகில இந்திய முக்குலத்தோர் பாசறை-2.30 மணி. நாம் தமிழர் கட்சி-2.45 மணி. அண்ணா எம்.ஜி.ஆர் திராவிட மக்கள் கழகம்-3 மணி.

    பசும்பொன் தேசிய கழகம்-3.10 மணி. மறத்தமிழர் சேனை-3.20 மணி. அனைத்திந்திய பார்வர்டு பிளாக்-3.30 மணி. ஜனநாயக பார்வர்டு பிளாக்-3.40 மணி. அகில இந்திய மருதுபாண்டியர் பேரவை-3.50 மணி.

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லுாரி முன்னாள் மாணவர் சங்கம்-4 மணி. மனித உரிமை காக்கும் கட்சி-4.10 மணி. பாரதிய பார்வர்ட் பிளாக்-4.20 மணி.

    ராஷ்டிரிய லோக் ஜன சக்தி கட்சி-4.30 மணி. தமிழ் மாநில சிவசேனா கட்சி-4.40 மணி. தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு-4.50 மணி. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்வி அறக்கட்டளை-மாலை 5 மணி.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது.
    • புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.

    புதுடெல்லி:

    13 தனியார் அறக்கட்டளைகள் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இதில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் தி புருடென்ட் மற்றும் ஏ.பி.ஜெனரல் எலக்ட்ரோல் டிரஸ்ட் மட்டும் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 8 அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.464.81 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பதாக கூறி உள்ளது.

    இதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் ரூ.336.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ரூ.18.4 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த அறக்கட்டளை உள்பட மொத்தம் 5 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.481.05 கோடியை வழங்கி உள்ளன.

    இதில் 72 சதவீத நிதியை பாரதிய ஜனதா பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 3.8 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது.

    2020-21-ம் ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து ரூ.258.4 கோடி நன்கொடைகளை வழங்கி உள்ளது. இதில் பாரதிய ஜனதா ரூ.215.5 கோடி(82 சதவீதம்), மற்றும் காங்கிரஸ் ரூ.5.4 கோடி(2.1 சதவீதம்) பெற்றுள்ளன.

    2021-2022-ம் ஆண்டில் காங்கிரசை விட மாநில கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது. இதில் புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.

    புரூடென்ட் அறக்கட்டளையிடம் இருந்து டி.ஆர்.எஸ். கட்சி பெற்ற நிதி ரூ.40 கோடி ஆகும். இதே அறக்கட்டளை சமாஜ்வாடி கட்சி ரூ.27 கோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 கோடி, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரசுக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளது.

    • தேர்தல் ஆணையம் மத்திய சட்ட அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது.
    • அதில் அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை குறைக்க வேண்டும் என்றது.

    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகள் தற்போது 20 ஆயிரம் ரூபாய் வரை ரொக்கமாக நன்கொடை பெறலாம். அதற்கு மேல் காசோலை அல்லது மின்னணு பரிமாற்றம் மூலமாக மட்டுமே நன்கொடை பெற முடியும். மேலும், ரூ.20 ஆயிரத்துக்கு மேல் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை மூலம் தெரிவிக்க வேண்டும்.

    சில அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நன்கொடை பெறவில்லை என அறிக்கை அளிக்கின்றன. ஆனால் ரூ.20 ஆயிரத்துக்கு குறைவாக ஒவ்வொருவரிடமும் ரொக்கமாக நன்கொடை பெற்று பெரும் பணம் திரட்டி விடுகின்றன.

    இந்நிலையில், இந்த முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜுவுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரமாக குறைக்க வேண்டும்.

    அப்படிச் செய்தால், ரூ.2 ஆயிரத்துக்கு மேல் பெற்ற அனைத்து நன்கொடை விவரங்களையும் அரசியல் கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம், நன்கொடை பெறுவதில் வெளிப்படைத்தன்மை உருவாகும் என்று கருதப்படுகிறது.

    ஒரு அரசியல் கட்சி பெறும் மொத்த நன்கொடையில் 20 சதவீதமோ அல்லது ரூ.20 கோடியோ இதில் எது குறைவோ அந்த தொகைக்குள்தான் ரொக்கமாக பெறப்பட வேண்டும்.

    அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடையில் வெளிநாட்டு நன்கொடைகள் புகுந்து விடாமல் தடுக்க விவாதம் நடத்தப்பட்டு சீர்திருத்தம் கொண்டுவர வேண்டும்.

    தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரத்துக்கு மேல் அளிக்கும் தொகையை காசோலையாகவோ அல்லது மின்னணு பரிமாற்ற முறையிலோ மட்டுமே அளிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த யோசனைகளை தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சேர்த்தால், ஒவ்வொரு வேட்பாளரும் தேர்தலுக்கென தனி வங்கிக்கணக்கு தொடங்கி, அதன் வழியாகவே வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    சமீபத்தில் செயல்படாத நிலையில் உள்ள 284 அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் ஆணையத்தில் 2,796 கட்சிகள் பதிவு செய்துள்ளன.
    • அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள 2,796 கட்சிகளில் 623 கட்சிகள் மட்டுமே கடந்த 2019 மக்களவை தேர்தலில் களமிறங்கின.

    இந்நிலையில், கட்சிகள் மீது எழுந்த பல்வேறு புகார்களை அடுத்து உரிய விசாரணை நடத்தி அதனடிப்படையில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கட்சிகளை பதிவுசெய்தும், அங்கீகாரம் பெறாத 86 கட்சிகளை பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் இன்று அதிரடியாக நீக்கியுள்ளது.

    மேலும், தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளின் பதிவு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.

    • அங்கீகரிக்கப்படாத 111 கட்சிகளின் பதிவை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
    • தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 2,100-க்கும் மேற்பட்ட கட்சிகள் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக நிதி பங்களிப்புகள், முகவரி, பொறுப்பாளர் விவரங்கள் போன்றவற்றை மேம்படுத்த தவறியது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தன. எனவே அந்தந்த மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் இந்த கட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்றால் சில நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

    இந்நிலையில், இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவை தலைமை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

    இந்த 111 அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்த முகவரியில் செயல்படாதது தெரிய வந்தது. தேர்தல் செலவுகள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யாததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, இம்மாத தொடக்கத்தில் 87 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

    ×