என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cyber ​​Crime Police"

    • ​​15 பேர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும், பின்தொடர்வதற்காக மற்றொரு குழுவும் உள்ளது.
    • கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 80,148 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் 46 சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் உள்ளது. 1930 ஹெல்லைன் நம்பர் மூலம் பெறப்படும் அழைப்புகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    சைபர் கிரைமில் தற்போது கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பலப்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குனர் சஞ்சய்குமார் கூறியிருப்பதாவது:-

    சைபர் கிரைமில் நெட்வொர்க் கட்டமைப்பை மேம்படுத்தவும், சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் மற்றும் மாநிலத்துக்கு தேவையான அதிநவீன மென்பொருள் கருவிகளை வாங்க ரூ.28.97 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

    இதில் அதிவேக தடயவியல் இமேஜிங் சாதனம், ஆல் இன் ஒன் போர்ட்டபிள் ரைட் பிளாக்கர், போர்ட்டபிள் டேட்டா பிரித்தெடுக்கும் அமைப்பு, தடயவியல் மென்பொருள், டிஜிட்டல் தடயவியல் மென்பொருள் மற்றும் சாதன தரவு பிரித்தெடுத்தல் மென்பொருள் ஆகியவை அடங்கும்.

    இந்தக் கருவிகள் ஐ.பி. முகவரி அல்லது அரசு அல்லது தனிநபருக்கு எதிரான எந்தவொரு தவறான சமூக ஊடகங்களிலும் அல்லது சந்தேகத்திற்குரிய நபரின் ஆப் செய்யப்பட்ட செல்போனிலும் பயன்படுத்தப்படலாம்.

    இது சம்பந்தமாக 16 கருவிகள் வாங்கப்படுகிறது. மேலும் சைபர் குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடிக்க அனைத்து சைபர் கிரைம் போலீஸ் நிலையங்களுக்கும் குறைந்தது 3 கருவிகள் வாங்கப்படுகிறது.

    சைபர் கிரைம் போலீசார் பல முறை உதவிக்காக தனியார் தரப்பினரையோ அல்லது பிற மாநிலங்களையோ அணுக வேண்டியிருந்தது. சந்தேகத்திற்குரிய நபரை சமூக ஊடகங்களில் பதிவு செய்ய தனியார் ஏஜென்சிகள் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் வரை கேட்கின்றனர் என்றார்.

    மேலும் சைபர் கிரைம் பிரிவின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.எஸ்.குமார் கூறியதாவது:-

    சைபர் குற்றங்களை கண்டறிய இந்த நவீன கருவிகள் பயன்படுத்தப்படும். உதாரணமாக, குற்றம் நடந்த இடத்திலிருந்து ஒரு சாதனத்தை மீட்டெடுத்தால், செல்போன் தடயவியல் கருவி சேமிப்பகத்திலும் வாட்ஸ்அப் அரட்டையிலும் உள்ளதைக் கண்டறிய மொபைல் சாதனத்திற்குள் செல்ல உதவும்.

    நாங்கள் முழு தகவலையும் பெறலாம் மற்றவர்களுக்கு அனுப்பியிருந்த தகவல்களையும் ஏற்கனவே அனுப்பியிருந்த தகவல்களை அழித்திருந்தாலும் நாங்கள் அதனை இந்த கருவிகள் மூலம் மீட்டெடுக்க முடியும்.

    குற்றவாளியை முடிவு செய்வதற்கு முன்பு நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக கண்டறிந்து அவர்கள் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியும்.

    இப்போது 15 பேர் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றனர். நடவடிக்கை எடுக்க ஒரு குழுவும், பின்தொடர்வதற்காக மற்றொரு குழுவும் உள்ளது.

    ஒரு நாளைக்கு எத்தனை அழைப்புகள் பெறப்பட்டன மற்றும் கையாளப்பட்டன என்பது குறித்த அறிக்கையை உருவாக்க ஒரு குழு இருக்கும்.

    கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 80,148 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் ரூ.30.91 கோடி மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ரூ.158.03 கோடி வரை முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • எலியாஸ் மேலும் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
    • தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மில்லர்புரம் சின்னமணிநகரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது52). சேலத்தை சேர்ந்த இவர் தூத்துக்குடியில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது செல்போன் செயலியில் பகுதி நேர வேலை தேவையா என்ற விளம்பரம் வந்துள்ளது.

    இதைப்பார்த்து தங்கதுரை தனக்கு மெசேஜ் அனுப்பிய அந்த நபரிடம் பேசினார். அப்போது அவர்கள் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அது உலகம் முழுவதும் பல இடங்களில் செயல்பட்டு வருதாகவும், கொரோனா காலத்தில் தங்களுடைய நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதை மேம்படுத்துவதற்காக ஸ்டார் ரேட்டிங் கொடுப்பதன் மூலம் நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்றும், அவ்வாறு செய்தால் கமிஷன் தருவதாகவும் தங்க துரையிடம் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து முதலில் ரூ.1,100, ரூ.1,500 லாபம் கொடுப்பது போல் கொடுத்து தங்கதுரையை நம்ப வைத்துள்ளனர். பின்னர் அதிக கமிஷன் வேண்டுமென்றால் பணத்தை முதலீடு செய்து அவர்கள் கூறும் பணிகளை செய்யும்படி தங்கதுரையிடம் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து தங்கதுரை அவர்கள் கூறிய வலைதளத்தில் பணத்தை முதலீடு செய்து பல்வேறு பணிகளுக்கு பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.45 லட்சத்து 91 ஆயிரத் 54-ஐ தங்கதுரை இழந்துள்ளார். பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்த தங்கதுரை இதுகுறித்து தேசிய சைபர் கிரைம் பிரிவு தளத்தில் புகார் பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகரன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து மோசடி செய்தவர்களை கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். அதில் தங்கதுரையிடம் பணம் மோசடி செய்தது நெல்லை மாவட்டம் மானூர் குப்பனாபுரம் பகுதியைச் சேர்ந்த எலியாஸ் பிரேம் குமார் (வயது31) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படையினர் கைது செய்தனர்.

    விசாரணையில் எலியாஸ் பிரேம்குமார் பல்வேறு நிறுவனங்களின் பெயர்களில் சுமார் 21 வங்கி கணக்குகளை மோசடி செய்ய பயன்படுத்தி உள்ளதும், அந்த வங்கி கணக்குகளில் சுமார் ரூ.25 கோடி பணபரிவர்த்தனை நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் எலியாஸ் மேலும் பலரிடம் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இது குறித்து தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவரிடமிருந்து லேப்டாப், செல்போன், 9 சிம் கார்டுகள், 61 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் பல்வேறு நிறுவன பெயர்களில் 12 போலி ரப்பர் ஸ்டாம்பு களையும் பறிமுதல் செய்தனர்.

    இவ்வழக்கில் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை செய்து குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை பாராட்டிய எஸ்.பி. பாலாஜி சரவணன் கூறும்போது, இதுபோன்று பல்வேறு சைபர் குற்றங்கள் செல்போன் செயலி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு பல புகார்கள் பதிவாகியுள்ளது. எனவே இது போன்றவற்றை நம்பி பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார்
    • மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறினார்.

    இந்தியா முழுமைக்கும் செல்போன் போலி அழைப்புகள் மூலம் அரங்கேறும் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் கவனமாக இருக்க எவ்வாறு அறிவுறுத்தினாலும் ஏமாறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.

    இதுபோன்ற சைபர் மோசடிகளை செய்வதையே வேலைவாய்ப்பாகச் சிலர் கருதி முழு நேரமும் அதில் ஈடுபட்டு வருகின்றனர். நான் போலீஸ் அதிகாரி பேசுகிறேன், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, பணம் கொடுத்தால் உங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பற்றுகிறேன் என்று கூறியும் மோசடிகள் நடந்து வருகிறது.

    அந்த வகையில் வழக்கம்போல போலீஸ் உடை அணிந்து வீடியோ கால் மூலம் மோசடி செய்யலாம் என்று நினைத்த நபர் தவறுதலாக மோசடிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட கேரள சைபர் செல் அலுவலகத்துக்கே வீடியோ கால் போட்டுள்ளார். திருச்சூர் கேரள சைபர் செல் அதிகாரி ஒருவருக்கு வீடியோ கால் வந்துள்ளது.

    அதை அவர் தனது கேமராவை ஆன் செய்யாமல் அட்டண்ட் செய்துள்ளார். எதிர் பக்கம் இருந்த போலீஸ் உடையணிந்த மோசடி காரர் வழக்கம்போல பேசியுள்ளார். தனது கேமரா வேலை செய்யவில்லை என்று போலீஸ் அதிகாரி கூறியுள்ளார், ஆனால் மோசடிக்காரர் கேமராவை ஆன் செய்யும்படி மீண்டும் மீண்டும் கூறியதால் சைபர் போலீஸ் தனது கேமராவை ஆன் செய்தார்.

    அதன் பின்னரே தான் வசமாக சிக்கியதை மோசடிக்காரர் உணர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசிய சைபர் போலீஸ், இந்த வேலையை செய்யாதீர்கள், என்னிடம் உங்களின் முகவரி, நீங்கள் உள்ள இடம் என அனைத்தும் தெரியும், இது சைபர் செல், இந்த [மோசடி] வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்வதே உங்களுக்கு நல்லது என்று எச்சரித்துள்ளார். அவர் பேசியது அனைத்தும் வீடியோ ரெக்கார்டிங் செய்யப்பட்ட நிலையில் அதை திருச்சூர் சைபர் போலீஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ 1,77,000 வியூஸ்களை கடந்து வைரலாகி வருகிறது.

     

    • சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.
    • சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம்.

    ஊட்டி:

    சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சைபர் கிளப் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு அதில் ஆன்லைன் மோசடி குறித்து தகவல்கள் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    பொதுமக்களிடம் சைபர் கிரைம் குறித்து தேவையான அளவு விழிப்புணர்வு இல்லாததால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே நீலகிரி மாவட்டத்தில் புதிதாக சைபர் பள்ளிக்கூடம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை முகநூல் நேரலை நிகழ்ச்சி மூலமாக சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு துறை வல்லுனர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

    இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் துறை சார்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் தங்களுக்கு எந்த சந்தேகம் என்றாலும் தொடர்பு கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம். ஓ.டி.பி. உள்ளிட்ட தகவல்களை யாரும் கூற வேண்டாம்.

    அறிமுகம் இல்லாத நபர்களிடம் வீடியோ கால் பேச வேண்டாம். சமீபகாலமாக டிஜிட்டல் கைது என்று கூறி வங்கி கணக்கில் உள்ள பணத்தை மோசடி ஆசாமிகள் தங்களுடைய வங்கி கணக்கிற்கு மாற்றி ஏமாற்றுகின்றனர்.

    டிஜிட்டல் கைது என்று கூறி போலீசார் யாரும் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மேலும் சைபர் குற்றங்கள் மூலமாக பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930-ஐ உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி ஓடிபி எண்ணை கொடுத்தததால் அவருடைய கணக்கில் இருந்த ரூ.14,300 திருடப்பட்டது.
    • இந்த பணத்தை சைபா் கிரைம் போலீசார் மீட்டனர். இதேபோல் ரூ. 20 லட்சம் மதிப்புடைய 103 செல்போன்களும் மீட்கப்பட்டன.

    நாமக்கல்:

    நாமக்கல்லை சோ்ந்த சரவணன் என்பவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை நம்பி ஓடிபி எண்ணை கொடுத்தததால் அவருடைய கணக்கில் இருந்த ரூ.14,300 திருடப்பட்டது.

    ஆன்லைனில் முதலீடு

    இதேபோல், பரமத்தியை சோ்ந்த பாா்த்தசாரதி என்பவா் ஆன்லைனில் ரூ.35 ஆயிரம், தினேஷ் என்பவா் ரூ.11,010, மோகன்குமாா் என்பவா் ரூ.25,192, ராசிபுரத்தைச் சோ்ந்த நவீன்குமாா் ரூ.20 ஆயிரம் என ரூ.1.05 லட்சம் முதலீடு செய்து இழந்தனர்.

    இந்த பணத்தை சைபா் கிரைம் போலீசார் மீட்டனர். இதேபோல் ரூ. 20 லட்சம் மதிப்புடைய 103 செல்போன்களும் மீட்கப்பட்டன.

    இதனை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, புகார் தெரிவித்த நபர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைத்தாா்.

    ரூ.5,89,548 மீட்பு

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில் 2022-ம் ஆண்டில் இதுவரை மாவட்டத்தில் காணாமல்போன ரூ.1.50 கோடி மதிப்புள்ள 749 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இணையதளம் வழியில் இழந்த ரூ.5,89,548 மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணையவழி தொடா்பான குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என்றார்.

    • மாவட்ட மருத்துவ அலுவலர் புகார்
    • சைபர் கிரைம் போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனை பற்றிய தவறான பொய்ப் பிரச்சாரங்களை பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதன்மை மருத்துவ அலுவலர் குமரவேல் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 87ஆயிரம், பறநோயாளிகள் 8700, உள்நோயாளிகளுக்கு மிக சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது 7871, கர்ப்பிணி பெண்களுக்கு தமிழகத்திலேயே அதிக அளவில் பிரசவம் பார்க்கப்பட்டு உள்ளது.

    மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையை சிலர் வேண்டுமென்றே அரசு மருத்துவமனை பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் இங்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் ரத்தம் பெற்ற விவரம் முழுவதும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு சரிபார்க்கப்பட்டு உள்ளது.

    இங்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் ரத்தம் சேமிக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கும், அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவசர தேவைக்கு வெளி மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு பணம் செலுத்தி ரசீது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் வேண்டுமென்றே பொய் பிரச்சாரம் செய்த அரசு மருத்துவமனைக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெகடர் பிரேமா நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • ஈரோடு மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு ஈரோடு செங்குந்தர் பள்ளியில் பயிற்சி நடந்தது.
    • பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி. அலுவலகத்தில் சைபர் க்ரைம் போலீஸ் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவின் ஏ.டி.எஸ்.பி.யாக ஜானகி ராமன் உள்ளார். மாவட்டத்தில் சைபர் கிரைம் தொடர்பான வழக்குகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக சமூக வலை தளம் மோசடி குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சைபர் கிரைம் தொடர் தொடர்பாக ஒரு குற்றம் நடந்தால் 24 நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் போலீசார் துரிதமாக செயல்பட்டு சம்பந்தப்பட்ட இணையதளத்தை முடக்கி பணத்தை திரும்பப் பெற்றுக் கொடுக்க முடியும் என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    சைபர் கிரைம் பிரிவு ஈரோடு எஸ.பி. அலுவலகத்தில் மட்டுமே உள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் புகாரை விசாரிப்பதற்கு ஏதுவாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் 3 சைபர் பிரிவு போலீசார் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் ஒரு எஸ்.எஸ்.ஐ, அவருக்கு 2 போலீசார் இருப்பார்கள். அவர்கள் சைபர் கிரைம் தொடர்பான புகார்களை பெற்று அதனை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

    இவ்வாறாக மாவட்டம் முழுவதும் 110 சைபர் கிரைம் போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி இன்று ஈரோடு செங்குந்தர் பள்ளியில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமை தாங்கினார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ஜானகிராமன் முன்னிலை வகித்தார். இதில் கலந்துகொண்ட சைபர்கிரைம் போலீசாருக்கு பொது மக்களின் புகார்களை எவ்வாறு பெறுவது அவற்றை எவ்வாறு தீர்க்க நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    ×