என் மலர்
நீங்கள் தேடியது "சிறைபிடிப்பு"
- நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
- கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்கு சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.
நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது.
அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர்.
அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல், இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின்னர் அதில் இருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர்.
நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே இந்திய மாலுமிகளும் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- மினிபஸ் வருவதற்கு அப்பகுதியில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- பொது மக்கள் மறியல் செய்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே நெய்யூர் பால்தெரு, கிறிஸ்துமஸ் தெரு வழியாக திங்கள் நகர் தக்கலைக்கு தனியார் மினிபஸ் சென்று வருகிறது.
அப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக இருப்பதால் மினிபஸ் வருவதற்கு அப்பகுதியில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலருக்கு புகார் அளித்தும் பலனின்றி உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை அவ்வழியே வந்த மினி பஸ்சை தக்கலை ஒன்றிய கவுன்சிலர் மெல்பா ஜேக்கப் தலைமையில் பொது மக்கள் மறியல் செய்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மேலும் இது குறித்து இரணியல் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்ததின் பேரில் இரணியல் போலீஸ் விசாரணை நடத்தி மினிபஸ் இந்த தடத்தில் வராது என்று உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
- ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது.
- விபத்துகள் ஏற்படுவதாக அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.
பல்லடம் :
பொங்கலூர் அருகே பெருந்தொழுவு பகுதியில் ரெடிமிக்ஸ் சிமெண்டு கான்கிரீட் கலவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளது. இங்கிருந்து புதிய கட்டிடங்களுக்கு லாரிகள் மூலம் ரெடி மிக்ஸ் கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படும் போது அந்த லாரிகள் அதிவேகமாக செல்வதாகவும், சாலைகள் அடிக்கடி பழுதாவதாகவும், விபத்துகள் அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று ராமலிங்கபுரம் பகுதியில் வந்த 2 லாரிகளை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரெடிமிக்ஸ் தயாரிப்பு நிறுவன உரிமையாளர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது லாரிகளை மெதுவாக இயக்குவதாகவும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனிட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் லாரிகளை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் அறிவிப்பு
- 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டுமான பணிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. துறைமுக வடிவமைப்பு தவறாக வடிவமைக்கப்பட்ட காரணத்தால் துறை முகத்தின் நுழைவு பகுதி யில் மணல்மேடு ஏற்பட்டு அதனால் அந்த பகுதியில் மீன்பிடிக்க செல்லும் விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டு மரங்கள் விபத்துக்குள்ளாகி இதுவரை 20-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மரணமடைந்துள்ளனர்.
மேலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப் புள்ள மீன்பிடி கலன்க ளும் முழுமையாக சேத மடைந்துள்ளன. மேலும் துறைமுகத்தின் தவறான வடிவமைப்பின் காரணமாக அருகாமையிலுள்ள இறை யுமன்துறை மீனவ கிராமம் முழுமையாக பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே துறைமுக பணியோடு இணைத்து இறையுமன் துறை மீனவ கிராமத்திலும் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்னும் நிறை வேற்றப்படவில்லை.
இந்த சூழலில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியதின் விளைவாக கடந்த மாதம் தமிழக அரசால் ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கிய நிலையில் தற்போது துறைமுக கட்டு மான பணிகள் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் துறைமுக கட்டுமான பணிகளுக்கு தேவையான பாறாங்கற்கள் குமரி மாவட்டத்தில் கிடைக்கவில்லை எனவும் குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் அரசால் மூடப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் கடந்த மாதம் தமிழக அரசால் குமரி மாவட்டத்தில் இரண்டு கல்குவாரிகளுக்கு தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால் அந்த இரண்டு கல்குவாரிகளிலிருந்து இதுவரை ஒரு லாரி கல்வரை தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணிகளுக்கு வரவில்லை.
ஆனால் குமரி மாவட்டத்தில் உள்ள சில குவாரிகளில் இருந்தும் வெளிமாவட்ட குவாரிகளிலிருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான வாக னங்கள் மூலம் கேரள மாநிலம் விழிஞ்ஞம் தனியார் துறைமுகத்திற்கு பாறாங்கற்கள், எம் சாண்ட், பாறை பொடி போன்ற கட்டுமான பொருட்கள் எவ்வித தடையும் இன்றி சென்று கொண்டி ருக்கின்றது. குமரி மாவட் டத்தின் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுக பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருட்கள் கிடைக்கப்பெறாத சூழலில் அண்டை மாநிலத்திற்கு அதுவும் தனியார் துறை முகத்திற்கு குமரி மாவட் டத்தில் இருந்து கட்டுமான பொருட்கள் செல்வதை தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு குமரி மாவட்டத்தில் தேங்காப் பட்டணம் மீன்பிடி துறை முகத்திற்கென்றே அனுமதி பெறப்பட்ட குமரி மாவட்டத்தின் குவாரிகளிலுள்ள கட்டுமான பொருட்களையும் துறை முக கட்டுமானத்திற்கு பயன்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
மேலும் உடனடியாக தேங்காப்பட்டணம் துறை முக கட்டுமான பணி களை தொடங்கவில்லை எனில் வரும் 17-ந்தேதியில் இருந்து குமரி மாவட்டத்தின் சாலைகள் வழியாக விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை காங்கிரஸ் கட்சியின் அனைத்து பிரிவுகளும் இணைந்து சிறைபிடிக்கும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் கூறி உள்ளார்.
- மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார்.
- குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது.
கடலூர்:
சிதம்பரம் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாசலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அதிரடி சோதனை மேற்கொண்டார். சிதம்பரம் பகுதியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தகுதிச் சான்று பெறாமல் சென்ற வாகனங்கள் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது பல வாகனங்களில் ஓட்டுநர் உரிமம், காப்புச் சான்று ஆகியவையும் இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. ஒரே நாளில் பள்ளி குழந்தைகள் ஏற்றிச் செல்லும் 6 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு மேல் நடவடிக்கைக்காக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா கூறியதாவது:-
ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் குழந்தைகளை ஏற்றி செல்லும் பொழுது அவைகளையும் நாங்களே கண்காணிக்க வேண்டி உள்ளது. எந்த பள்ளி நிர்வாகமும் இந்த வாகனங்களை குறித்து கவலைப்படுவதில்லை. அதே போல பெற்றோர்களும் வாகனத்தின் தரம் குறித்து கவலைப்படுவதில்லை . இந்த விஷயத்தில் பெற்றோர் பள்ளி நிர்வாகம் எல்லோருக்கும் பொறுப்பு இருக்கிறது. தகுதி சான்று வழங்கிய வாகனங்களின் இடது புறத்தில் அந்த வாகனத்தின் அனைத்து விபரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். பெற்றோர்கள் அதனைப் பார்த்து வாகனத்தின் தரம் குறித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். மேலும் தகுதி சான்று இல்லாமல் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக இல்லாமல் இருந்தால் வாகனம் சிறைபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
- இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
- ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களின் படகுகளையும், மீனவர்களையும் சிறைப்பிடித்து செல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அவ்வாறு சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் இலங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்படுகிறார்கள். மத்திய, மாநில அரசுகளின் பேச்சுவார்த்தை அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், மீனவர்களின் படகுகளை இலங்கை நாட்டுடமையாக்கி வருகிறது.
இதனால் விடுதலையானபோதும், வெறும் கையுடன் தாயகம் திரும்பும் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து மாற்று தொழிலை தேடி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற கோரிக்கை பன்னெடுங்காலமாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 1,800-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 420 விசைப்படகுகளில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அவர்கள் இந்திய கடல் எல்லையான கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி பாலா, கிரீம்ஸ் ஆகியோருக்கு சொந்தமான படகுகளில் சென்ற 15 மீனவர்களை சிறைப்பிடித்தனர்.
அவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் அபகரித்துக் கொண்டதோடு, மீனவர்களை காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மீன்பிடி தடை காலம் முடிந்து ஒரு மாதம் ஆவதற்குள் இரண்டு முறை மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் சக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலம் காலமாய் நடக்கும் இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்தனர்.
அதன்படி இன்று ராமேசுவரம், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 820 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதன் காரணமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலையிழந்து உள்ளனர்.
அதேபோல் மீன்பிடி தொழிலை சார்ந்த ஐஸ் பேக்டரிகள், மீன்கூடை தூக்கும் தொழிலாளர்கள், டீசல் விநியோக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியின்றி வீடுகளுக்குள் முடங்கினர்.
இன்று ஒருநாள் மீனவர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ராமேசுவரம் பகுதியில் மட்டும் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வர்த்தகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
- காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
- பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது.
இதனை கண்ட மாமல்லபுரம் மீனவர்கள் 5 பைபர் படகுகளில் கடலுக்குள் சென்று காரைக்கால் மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்து அதில் இருந்த 14 மீனவர்களை சிறைபிடித்தனர். அவர்களை படகில் ஏற்றி கரைக்கு அழைத்து வந்தனர். விசைப்படகை கடலிலேயே நிறுத்தி வைத்தனர்.
இதே போல் இன்று காலையில் பாண்டிச்சேரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகில் மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் வந்து மீன் பிடித்தனர். அவர்களையும் மாமல்லபுரம் மீனவர்கள் சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை நீடிக்கிறது. மாமல்லபுரம் மீனவர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது.
- பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு தடம் எண்.1-ல் அரசுப் பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சினை சாத்தநத்தம் வரை நீட்டித்து அமைச்சர் சி .வெ.கணேசன் நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் இன்று காலை சாலையில் திரண்டனர்.. அவ்வழியே வந்த 2 அரசு பஸ்களை சிறைபிடித்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். கோடங்குடியில் இருந்து பஸ் இயக்கப்படும் போது, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு வசதியாக இருந்தது.
தற்போது இந்த வழித்தடத்தை நீட்டித்து சாத்தநத்தம் கிராமத்தில் இருந்து இயக்குவதால் குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கள் கிராமத்தில் இருந்து திட்டக்குடிக்கு செல்ல இயலாது. அதனால் தங்கள் கிராமத்தில் இருந்து இயக்கிய வழித்தடத்தை நீட்டிப்பு செய்யாமல் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கூறினர். இதனை அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் போக்குவரத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இது தொடர்பாக ஆலோசி த்து நடவடிக்கை எடுக்க ப்படுமென பொதுமக்களை சமாதானம் செய்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
- இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி வழியாக 100-க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் விபத்துகளை குறைக்க உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அவதி
இந்த நிலையில் சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் பாலம் வழியாக செல்கின்றன. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
உயர்மட்ட பாலம் அமைக்கும் முன்பு அனைத்து பஸ்களும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று சென்றன. ஆனால் தற்போது சில நிறுத்தங்களை தவிர்த்து பாலம் வழியாக பஸ்கள் சென்று விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சிறைபிடிப்பு
இந்த நிலையில் நேற்று இரவு சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற 5 தனியார் பஸ்கள் வழக்கம் போல் பாலம் வழியாக இயக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பா.ம.க. ஒன்றிய செயலாளர் பி.எஸ்.கே.செல்வம் தலைமையில் பூசாரிப்பட்டி பகுதியில் அந்த 5 பஸ்களையும் சிறைபிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் பஸ்கள் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்ல போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனை மீறி சேலத்தில் இருந்து ஓமலூர் வழியாக தர்மபுரி செல்லும் பஸ்கள் சில நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக தெரிவித்தனர். பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். போலீ சார் அவர்களை சமாதா னப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர்.
- சங்கராபுரம் அருகே லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் அருகே மூங்கில்துறைப்பட்டு பகுதியில் இருந்து பழையூருக்கு செல்லும் சாலையில் தினசரி ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் சென்று வருகின்றன. இதன் காரணமாக சாலையில் அதிகளவு புழுதி பறப்பதால், கடும் சிரமமடைந்து வந்தனர். இந்த நிலையில் அவ்வழியாக வந்த லாரி டிரைவரிடம், அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் லாரியை இவ்வழியாக இயக்காமல் மாற்று வழியில் இயக்குமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து டிரைவர் லாரியை சாலையின் குறுக்கே நிறுத்தி, என்னை இந்த வழியில் செல்லக்கூடாது என்று கூறினால், நீங்கள் யாரும் இவ்வழியாக செல்லக்கூடாது என்றார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் லாரியை விடுவித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறை.
- எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடிப்பு.
தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2 படகுகளுடன், மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.
கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
- நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் ராஜூ ஆகியோருக்கு சொந்தமாக இரண்டு நாட்டுப்படகுகள் (பெரிய ரக வல்லம்) 22 மீனவர்கள் நாகை மாவட்டம், ஆறுகாட்டுத்துறை துறைமுகத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்கள் கடலுக்கு சென்றால் 3 முதல் 5 நாட்கள் வரை கடலில் தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு திரும்புவார்கள்.
இந்நிலையில், வழக்கம் போல மீன்பிடிக்க சென்ற நிலையில் நேற்று (சனிக்கிழமை) நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் 22 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த விலை உயர்ந்த மீன்களையும் சிங்கள கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இதனைதொடர்ந்து, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் சுதாகர், மேரிட்டேன், சிவா, பெவின்ராஜ், அந்தோணிராஜ், திப்பி ஜோன், ரோஜன், பாஸ்கர், ஜீனோ, ரோஜன் உள்ளிட்ட 22 பேரும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ராமேசுவரத்திற்கு வந்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் சந்தித்து கைது குறித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்பேரில், நிர்மலா சீதாராமன் இலங்கை அரசுடன் பேசி பாரம்பரிய மீனவர்கள் என்று எடுத்துக்கூறி மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து இலங்கை அரசு 22 மீனவர்கள் இனி மேல் எல்லை தாண்டி மீன் பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து அவர்களது படகுகளுடன் 22 மீனவர்களை விடுவித்தனர். இன்று அந்த 22 மீனவர்களும் பாம்பன் துறைமுகத்திற்கு வருகின்றனர்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாம்பன் மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டது மீனவர்களிடையே பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் இலங்கை சிறையில், 2-வது முறையாக எல்லை தாண்டியதாக கூறி சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாம்பன் மீனவர் நம்பு முருகனை விடுதலை செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது தாயார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அதனை பரிசீலிப்பதாக மந்திரி உறுதியளித்துள்ளார்.