என் மலர்
நீங்கள் தேடியது "பறவைகள்"
- தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது.
- வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் நஞ்சராயன் குளம் நீராதாரமாக மட்டுமல்ல பறவைகள், பூச்சிகள், பட்டாம்பூச்சிகள் வசிக்கும் பல்லுயிர் சுழற்சி மண்டலமாகவும் மாறியுள்ளது. இக்குளத்தில், தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயம் அமைய உள்ளது. தற்போது சரணாலய பணி வேகமெடுத்துள்ளது. மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்பட்டு வனத்துறை வசம் குளம் முழுமையாக ஒப்படைக்கப்பட உள்ளது.
குளத்தின் மண் கரை 2,797 அடி நீளம் அமைக்கப்பட்டுள்ளது. குளத்தில் அதிகபட்சமாக 39.50 அடி தண்ணீர் தேக்கப்படுகிறது. மொத்தம்2.53 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.தனியார் நிறுவனம் வாயிலாக குளத்தில் அமைய உள்ள கட்டமைப்பு வசதிகள் மற்றும் பறவைகள் சரணாலயம் பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணி நடந்து வருகிறது. வனத்துறை முழுமையான சர்வே நடத்தி முழு எல்லையை கண்டறிந்துள்ளது. குளத்தின் மொத்த பரப்பு 310 ஏக்கர்.
திருப்பூர் கூலிபாளையம் ரோட்டின்,ரெயில்வே பாலத்துக்கு முன்பாக இடது புறம் செல்லும் மண்பாதையே, பறவைகள் சரணாலயத்தின் பிரதான பாதையாக மாறப்போகிறது. கூலிபாளையம் ரோட்டில், அலங்கார வளைவும், அங்கிருந்து அணுகுசாலையும் அமைக்கப்படுகிறது.
அணுகுசாலை அருகிலேயே பார்க்கிங் வசதியும் அங்கிருந்து சென்றால் ரெயில்வே பாதை நெருங்கும் இடத்தில் கன்சர்வேஷன் சென்டர் அமைக்கப்படுகிறது. குழந்தைகள் விளையாட்டு பூங்கா, பட்டாம்பூச்சி பூங்கா, ஆக்சிஜன் பூங்கா அமைய உள்ளது.
சிறு கூட்டரங்கு, கருத்தரங்கு வளாகம், வரவேற்பு அறை, டிக்கெட் கவுன்டர், மூங்கில் பூங்கா ஆகியவை அமைகின்றன. அங்கிருந்து நஞ்சராயன் நகரை ஒட்டியபடி குளக்கரையில் சென்றால் நஞ்சராயன் நகர், தென்கோடி எல்லையில் உயரமான வாட்சிங் டவர் அமைக்கப்படுகிறது. ஏறத்தாழ குளத்தின் மையப்பகுதியை நெருங்கி விடுவதால் அங்கிருந்து குளத்தின் முழு பரப்பையும் பார்க்க முடியும்.
வனத்துறை 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தாலும், அப்பணிகளை 5 ஆண்டுகளில் பல பிரிவுகளாக செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட உள்ளது.
முதல் ஆண்டில் (2022-23) ரூ.13.25 லட்சம்,2வது ஆண்டில் ரூ. 86.30 லட்சம் ,3வது ஆண்டில் ரூ. 3.60 கோடி,4வது ஆண்டில்ரூ. 1.35 கோடி, 5வது ஆண்டில், 1.54 கோடி என பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் பறவைகள் சரணாலயம் உருவாக 5ஆண்டுகளாகிவிடும்.
இந்நிலையில் திருப்பூர் பசுமை ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சியுடன் கரம் கோர்த்து நமக்கு நாமே திட்டத்தில், பணிகளை 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அனைத்து அமைப்பினர், தன்னார்வலர்கள், விவசாயிகள் இணைந்த ஒருங்கிணைந்த தயாரிப்பு குழு கூட்டம் விரைவில் திருப்பூரில் நடைபெற உள்ளது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் அடங்கிய குழு இத்திட்ட பணிகளை செம்மையாக செய்திட திட்டமிட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
- குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் நஞ்சராயன் குளம் தமிழகத்தின், 17 -வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.
கடந்த மாதம் ரஷ்யா, மங்கோலியா பகுதிகளில் இருந்து வரும் பட்டைத்தலை வாத்து, தட்டைவாயன், நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண்கொத்தி, பொரி மண்கொத்தி, சிறு கொசு உள்ளான், பேதை உள்ளான், மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, கென்டிஷ் பட்டாணி உப்புக்கொத்தி ஆகிய பறவைகள் வந்துள்ளன.
இதுமட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர் காகம், பழுப்பு நாரை, மடையன், கரண்டிவாயன், நெடுங்கால் உள்ளான், புள்ளிமூக்கு வாத்து, சிவப்பு மூக்கு ஆள்காட்டி, மீன்கொத்திகள் என பறவைகள் வந்தன. வழக்கமாக கூட்டமாக வரும் பறவையினங்கள் 20க்கும் குறைவான எண்ணிக்கையில் வந்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:- வெளிநாட்டு பறவைகள், குளிர்கால வலசையாக நஞ்சராயன்குளம் வந்துள்ளன. வழக்கமாக 100 முதல் 200க்கும் அதிகமான பறவைகள் கூட்டமாக வந்து செல்லும். இம்முறை 20க்கும் குறைவான பறவைகளே வந்துள்ளன. குறிப்பாக சிறப்பு விருந்தினராக கருதப்படும் பட்டைத்தலை வாத்து 7 மட்டுமே திருப்பூர் வந்துள்ளன.
வெளிநாட்டு பறவைகள் தண்ணீரில் நடந்து சென்றுதான் உணவு தேடும். ஆழமான குளம், தண்ணீர் அதிகம் உள்ள குளங்களில் தங்காது. குளத்தில் அதிகம் தண்ணீர் இருப்பதால் அருகே உள்ள மற்ற பகுதிக்கு சென்றிருக்கும்.கோவை, ஈரோடு பகுதியிலும் பறவை வரத்து குறைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களுடன் இதுகுறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் உள்பட அரியவகை பறவைகள் வலசை பயணமாக வரும்.
- நீலகிரி மாவட்டம் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கலாம்.
அரவேணு:
சர்வதேச அளவில் பறவைகள் வந்து செல்லும் வலசை பாதைகளில், முக்கியமான பாதையாக நீலகிரி மாவட்ட மலைத்தொடர் பகுதி உள்ளது.
நீலகிரி சிறந்த உயிர்ச் சூழல் மண்டலமாக உள்ளதால், ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாட்டுப் பறவைகள் உள்பட அரியவகை பறவைகள் வலசை பயணமாக வரும்.
இந்த பறவைகள் அங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து, மீண்டும் அவை எங்கிருந்து வந்ததோ அதே இடத்திற்கே திரும்பி சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளன.
இந்த ஆண்டு தொடர் மழை மற்றும் உறைபனி பொழிவு குறைவு காரணமாக, பறவைகளின் வலசைப்பாதை பயணம் சற்று தாமதமாக தற்போது துவங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு யுரோப்பியன் கிரீன் வுட் பெக்கர், ப்ளூ கேப்பிடூ ராக் திரஷ், லாங் கிரே பாபுலர், ஹிரோஷியன் வுட் பெக்கர், லாங் டைல் சிறைக், சினோரியஸ் டிட், ஒயிட் ஐ, கிரேட்டர் கோணிகர், வேக்டைல், இந்தியன் ரோலர், ரோஸ் ரிங் பேரகிட், ஹான்பிள் ஆகிய அரிய வகை பறவைகள் வந்துள்ளன.
பறவைகளை நீலகிரியின் பல்வேறு இடங்களில் எளிதாக காண முடிகிறது. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா மலைச் சிகரம் கோடநாடு காட்சி முனை, கோத்தகிரி லாங்வுட் சோலை, கேத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, பர்லியார், குன்னூர் டால்பின்ஸ் நோஸ் காட்சி முனை, கூடலூர் ஊசிமலை காட்சி முனை ஆகிய பகுதிகளில் பறவைகள் இடம் பெயர்கின்றன.
இந்த பறவைகளை பறவைகள் ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு கழித்து, புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் பறவைகளின் சொர்க்கம் என்றே அழைக்கலாம். ஆண்டுதோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்கின்றன.
தற்போது முக்கிய இடங்களில், பறவைகளின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இதற்கு காலநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாகவே தொடர் மழை, பனிப்பொழிவு இல்லாத காரணத்தால் பறவைகளின் உள்ளூர் இடம் பெயர்வு தாமதமாகவே துவங்குகின்றது. இந்த பருவநிலை மாற்றம் இயற்கைக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவால் ஆகும்.
எனவே மரங்களை வளர்த்து, சுற்றுச் சூழலை பாதுகாத்து, பருவநிலை மாற்றம் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
- 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணக்கான பறவைகள் வந்திருப்பது தெரியவந்தது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கனக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது. அந்த பறவைகளை கணக்கெடுக்கும பணிநடைபெற்று வருகிறது.
திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடிக்கரை வனச்சரகர்அயூப்கான் மற்றும் கல்லூரி மாண வர்கள், வனத்துறையினர் என12 குழுக்களாக பிரிந்து 47 பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கோவை தீவு, இரட்டை தீவு பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது. பூநாரை,செங்கால் நாரை கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், வகைகள், கடல் கலா, கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகையான லட்சக்கணகான பறவைகள் வந்திருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது.
கணக்கெடுப்பு முழுமையாக முடிந்த பிறகு வந்துள்ள பறவைகளின் எண்ணிக்கை குறித்து தெரியவரும் என்று வனத்துறை அலுவலர் ஆயூப்கான் தெரிவித்தார்.
- பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
- கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளிலிருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்கின்றன.
இந்த ஆண்டு பறவைகள் சரணலாயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்தன.
அந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வந்தது.
திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான் மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் என 12 குழுவினர் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.
சரணாலயத்தில் உள்ள கோவை தீவு, இரட்டை தீவு, பம்பு ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த ஆண்டு கோடியக்கரைக்கு பூநாரை, செங்கால் நாரை, கூழைகிடா நாரை, 40 வகையான உள்ளான், கடல் காகம் என 200-க்கும் மேற்பட்ட வகை, வகையான பறவைகள் வந்துள்ளன. 2 நாட்கள் நடந்த கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள், வனத்துறையினர் இணைந்து பறவகைளை கணக்கெடுத்தனர்.
இந்த ஆண்டு போதுமான மழை பெய்ததால் பறவைகளுக்கு ஏற்ற சூழல் கோடியக்கரையில் நிலவுகிறது.
தற்போது கடும் பனிப்பொழிவு காரணமாக பறவைகள் சொந்த நாட்டுக்கு முன்கூட்டியே திரும்ப தொடங்கி விட்டதாக கோடியக்கரை வன அலுவலர் அயூப்கான் தெரிவித்தார். பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களுக்கு வன அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.
- கடந்த ஆண்டை விட இருமடங்கு இனங்கள்
- அரிய வகை அமூர் வல்லூறுகள் இந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டன
நாகர்கோவில்:
ஆண்டுதோறும் 2 பருவ மழைகள் பெய்யும் குமரி மாவட்டத்தில் பெய்வதால், நீர் நிலைகள் நிறைந்து காணப்படும்.
இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் குமரி மாவட்டம் வருவது வழக்கம்.
அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குமரி மாவட்டத்தில் வசிக்கும் இந்த பறவைகள், பிப்ரவரி மாதம் இங்கு இருந்து இடம் பெயரும். குமரி மாவட்டத்திற்கு ஆண்டு தோறும் வரும் பறவை இனங்கள் எவை? எத்தனை பறவைகள் வருகின்றன என்பதை வனத்துறை கணக்கெடுத்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு முதல் கட்டமாக 20 நீர் நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமை யில் இந்த பணி நடைபெற்றது.
சுமார் 50 பறவைகள் ஆர்வலர்கள், வனப்பணி யாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பறவைகள் வந்திருப்பது உறுதியானது. கடந்த ஆண்டு 72 பறவை இனங்கள் வந்ததாக கணக்கெடுப்பில் உள்ளது.
ஆனால் இந்த ஆண்டு அது இருமடங்காக அதிக ரித்து 163 பறவை இனங்கள் வந்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக ஊசிவால் வாத்து, நீல சிறகு வாத்து, தட்டை வாயன், பொன்னிற உப்பு கொத்தி, சாம்பல் உப்பு கொத்தி, பேதை உள்ளான், அறிவாள் மூக்கு மற்றும் ஏராளமான உள்ளுர் பறவைகளும் வந்துள்ளன.
மொத்தம் 20 குழுக்களாக பிரிந்து நடத்திய இந்தக் கணக்கெடுப்பில் மொத்தம் 163 இனத்தைச் சேர்ந்த 10,094 பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன. குறிப்பாக அரிய வகை அமூர் வல்லூறுகள் இந்த ஆண்டு அதிகமாக காணப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
- திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடை பெற்றது.
- வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். வடகிழக்கு பருவமழை திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி பறவைகள் சரணாலயமாக உள்ளது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவிலான இந்த வடுவூர் ஏரிக்கு நவம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இருக்கும்.
முத்துப்பேட்டை அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரத்திலும் பறவைகள் சரணாலயம் உள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை பகுதியில் தொடங்கும் அலையாத்திக்காடு ஆசியாவிலேயே பெரிய மாங்குரோவ் காடாக உள்ளது. இந்த மூன்று இடங்களிலும் மற்றும் அதனை சுற்றி பறவைகள் வரக்கூடிய அனைத்து நீர் நிலைகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு வனத்துறை சார்பில் 2 கட்டமாக நடைபெறும்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வடுவூர் ஏரி, உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், முத்துப்பேட்டை அலையாத்திக்காடு உள்ளிட்ட 20 நீர் நிலைகளில் முதற்கட்டமாக பறவைகள் கணக்கெடுக்கும் பணி நேற்று நடந்தது.
வடுவூரில் நடந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கி பறவைகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் அறிவொழி, துணை கலெக்டர் கீர்த்தனாமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 102 இனங்கள் காணப்பட்டது பறவை ஆராய்ச்சியாளர்கள், ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.முதற்கட்ட கணக்கெடுப்பில் வடுவூர் ஏரி, முத்துப்பேட்டை அலையாத்திக்காடு, உதயமார்த்தாண்டபுரம் உள்பட 20 நீர்நிலைகளில் 102 பறவை இனங்கள் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது.
நத்தை கொத்தி நாரை, சிறிய உள்ளான், வெள்ளை அரிவாள் மூக்கன், நாம கோழி, நெடுங்கால் உள்ளான், நீர் காகம், ஐரோப்பா கரண்டிவாயன், ஆலா, மடையான் ஆகிய இனங்களில் ஒவ்வொன்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் தங்கி இருப்பது தெரிய வந்தது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் நீர் நிலைகளில் தங்கி உள்ளது. ஏராளமான வெளிநாட்டு பறவைகளும் வந்துள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 2-ம் கட்ட கணக்கெடுக்கும் பணி வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ளது என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
திருப்பூர்:
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக தத்தெடுத்த கிராமமான கருமாபாளையத்தில் 7 நாட்கள் சிறப்பு முகாம் கடந்த 28 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அதன்படி 4ம் நாளான இன்று கிராமத்தில் உள்ள பறவைகளை கணக்கீடு மற்றும் கண்டறிதல் நிகழ்வு நடைபெற்றது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கலந்து கொண்டார். அவரின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் பறவைகளை கண்டறிய கிராமத்தின் உட்புறம் கிட்டதட்ட 2.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து 29 வகையான பறவைகளை கண்டறிந்தனர்.
- 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது.
- அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
கோவை:
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி நடக்கும்.
நீர் பறவைகள் மற்றும்நில பறவைகள் என 2 கட்டங்களாக இந்த கணக்கெடுப்பானது நடை பெற்று வருகிறது.
நீர் பறவைகளின் கணக்கெடுப்பானது, ஜனவரி 28 மற்றும் 29-ந் தேதிகளிலும், நில பறவைகளின் கணக்கெடுப்பானது மார்ச் 4, 5-ந் தேதிகளில் நடத்தப்படுகிறது.
இதில் முதலில் கடந்த 28 மற்றும் 29-ந் தேதிகளில் நீர்பறவைகள் கணக்கெடுப்பு நடந்தது.
கோவை மாவட்டத்தில் வாளையார், செம்மேடு உக்குளம், பேரூர், உக்கடம், குறிச்சி, செங்குளம், கிருஷ்ணாம்பதி, வெள்ளலூர், சிங்காநல்லூர், பள்ளிபாளையம், கண்ணம்பாளையம், ஆச்சான்குளம், சூலூர், பெத்திக்குட்டை, செல்வம்பதி, நரசம்பதி, இருகூர்குளம், வேடப்பட்டி, காளப்பட்டி என 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த 20 இடங்களிலும் நீர் பறவைகள் கணக்கெடுப்பு பணி 2 நாட்களும் மும்முரமாக நடந்து வந்தது. இதில் பறவை ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் என 5 பேர் அடங்கிய குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த கணக்கெடுப்பில் சராசரியாக 55 வகையான பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன. கோவையில் உள்ள குளங்களுக்கு மொத்தமாக 9,500 பறவைகள் வந்துள்ளன. இதனை கணக்கெடுப்பு குழுவினர் பார்வையிட்டு கணக்கெடுத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
கிளி, கழுகு, வாத்து, ஹார்ன்பில், பஞ்சுருட்டான், காமன் டெர்ன், மீன்கொத்தி, நாரை வகைகள், தூக்கணாங்குருவி என பல வகையான பறவைகள் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக பெத்திக்குட்டை பகுதியில் 89 பறவைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் அரிய வகை பறவை இனங்களில் வாளையார் பகுதியில் கிரே ஹார்ன்பில் எனப்படும் சாம்பல் நிற இருவாச்சியும், பெத்திக்குட்டையில் ஆஸ்ப்ரே கழுகு வகையும் கண்டறியப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிவகாசி அருகே இனப்பெருக்கத்திற்காக குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை கிராம மக்கள் கண்டு மகிழ்கின்றனர்.
- அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோட்டையூர் கண்மாய் பகுதியில் வெளிநாடுகளில் இருந்து செங்கால் நாரை, நீர் கோழிகள் உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்துள்ளன.
அவைகள் இங்குள்ள புளியமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்களில் நூற்றுக்கணக்கில் கூடு கட்டி தங்கியுள்ளன. அவைகள் குஞ்சு பொறித்து வளரும் தருவாயில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தாய் நாட்டிற்கு திரும்பி செல்ல தொடங்கும்.
அதுவரை இங்குள்ள கண்மாயில் மீன்களைப் பிடித்து உண்டு வாழும். பறவைகள் எழுப்பும் சத்தத்தையும், அவைகளின் அழகையும் காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து செல்வார்கள்.
ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக வரும் வெளிநாட்டு பறவைகளை இப்பகுதியை சேர்ந்தவர்கள் துன்புறுத்துவதில்லை. அவர்கள் பறவைகளை தங்களது அழையாத விருந்தாளிகளாகவே கருதுகின்றனர்.
பறவைகள் தங்கி இருக்கும் சமயத்தில் தீபாவளி பண்டிகை வந்தாலும் வேறு ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிகள் இருந்தாலும் மக்கள் மரங்களில் தங்கியிருக்கும் பறவைகளை கருத்தில் கொண்டு பட்டாசுகளை வெடிக்க மாட்டார்கள். அவைகளை வேட்டையாடாமல் பாதுகாப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
- வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் அடங்கிய குழுவினர் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளில் 2-ம் கட்டமாக ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில், பறவைகள் ஆராய்ச்சியாளர் சிவக்குமார் முன்னிலையில், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரநிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில் 2-ம் கட்டமாக ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுவாச்சூர், வேலூர், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், எளம்பலூர், மயிலூற்று அருவி ஆகிய பகுதிகளில் காப்பு காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது.
- பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் வருவது வழக்கம்
- மொத்தம் 23 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடை பெற்றன
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் ஆண் டுதோறும் 2 பருவ மழைகள் பெய்வதால் இங்குள்ள நீர்நி லைகளில் எப்போதும் தண் ணீர் நிறைந்து காணப்படு கிறது. இதனால் உணவு, இனப்பெருக்கம் மற்றும் புக லிடம் தேடி இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந் தும், வெளிநாடுகளில் இருந் தும் பறவைகள் வருவது வழக் கம். பொதுவாக அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் இறுதி வரை பறவைகள் வருகின்றன.
அவ்வாறு வரும் பறவை களில் எத்தனை இனங்கள் உள்ளன? பறவைகளின் எண்ணிக்கை எந்த அளவு உள்ளது? என்பது குறித்து வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பை 3 கட் டமாக நடத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன் படிமுதற்கட்டமாக நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு புத்தளம், தேரூர், சுசீந்திரம், மேம்பனூர், அச்சன்குளம், இறச்சகுளம், ராஜாக்கமங்கலம் உள்பட 20 இடங்களில் கடந்த ஜனவரி மாதம் 29-ந்தேதி நடந்தது.
இதனைதொடர்ந்து காடு கள் மற்றும் நிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நேற்று நடந்தது. மாவட்ட வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் 47 பறவையியலாளர்கள், 50 வனப்பணியாளர்கள் மூலம் கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டது. இந்த பணி நேற்று காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை வனப்பகுதிகள், கிராமப் புறப்பகுதிகள் மற்றும் நகர்ப்புறப்பகுதிகள் என 3 வகையான இடங்களில் நடந்தது.
மாவட்டத்தில் அசம்பு, கோதையார், மாறாமலை, பாலமோர், தெற்குமலை உள் பட 14 வனப்பகுதிகளிலும், உதயகிரி, ஆரல்வாய்மொழி, ஆசாரிபள்ளம், கோணம் போன்ற 9 நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகள் உள்பட மொத்தம் 23 இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றன.
இதில் சுமார் 173 இனங்களைச்சேர்ந்த 3,864 பறவைகள் கண்டறியப்பட்டன. இது கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட 2,002 பறவைகளை விட அதிக மாகும்.
நேற்று நடைபெற்ற கணக்கெடுப்பில் மலை இருவாட்சி, தீக்காக்கை, பூமன் ஆந்தை, கள்ளிக்குயில் போன்ற பறவைகள் காணப்பட்டன. வனப்பகுதிகளில் காணப்படும் அரிய வகையான இந்தியபொன்னுத்தொட்டான் நகர்ப்புறப்பகுதியான ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.