search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சேகர் பாபு"

    • மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துகின்ற திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.

    சென்னை:

    2024-2025-ம் நிதி ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் முதற்கட்டமாக சென்னை மாவட்ட கோவில்கள் சார்பில் வருகிற 21-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று திருவான்மியூரில் 31 ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து, பரிசுகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கிட உள்ளார்.

    அதேநாளில் மாநிலம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளன.

    சென்னையில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்கும் மணமக்களுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை வழங்கினார்.

    பின்னர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறை இறையன்பர்கள் மகிழ்ச்சி கொள்கின்ற வகையில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதுபோன்ற பக்தர்களின் நலன் காக்கும் திட்டங்களை இந்த அரசுதான் நிறைவேற்றி வருகிறது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

    அந்த வகையில் கோவில்கள் சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருவிளக்கு பூஜை நடத்துகின்ற திட்டம் தொடங்கப்பட்டு இதுவரை 17 கோவில்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் ஒரு நபருக்கு ஆகின்ற செலவின தொகை ரூ.800-ல் நான்கில் ஒரு பங்கான ரூ.200 மட்டுமே பக்தர்களிடம் பெறப்படுகிறது. இதர தொகை அந்தந்த கோவில்களே செலவிடுகின்றன. இதன்மூலம் 47,304 பெண் பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கோவில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தில் 20 கோவில்களிலும், நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் 9 கோவில்களிலும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் புதிதாக தொடங்கப்பட்டு 20 கோவில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    கோவில்கள் சார்பில் கமலமுனி சித்தர், சுந்தரானந்த சித்தர், பாம்பாட்டி சித்தர் போன்ற சித்தர்களுக்கும், திருவருட் பிரகாச வள்ளலார், தெய்வப்புலவர் சேக்கிழார், தமிழ் மூதாட்டி அவ்வையார், சமய குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசர், நாலாயிர திவ்ய பிரபந்தம் மறைநூலினை தொகுத்தவரான ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பெயரன் ஆளவந்தார் ஆச்சாரியார், 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், காரைக்கால் அம்மையார் போன்ற அருளாளர்களுக்கும் விழா எடுத்து பெருமை சேர்த்த அரசு திராவிட மாடல் அரசாகும்.

    எந்த ஒரு கோவில் சார்பிலும் மகா சிவராத்திரி விழா தனியாக கொண்டாடப்படாத நிலையில் இந்த அரசு பொறுப்பேற்றபின் 7 கோவில்களில் பக்தர்கள் பங்கேற்புடன் இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 2 கோவில்களில் கொண்டாடப்பட உள்ளது.

    அதேபோல சென்னை மயிலாப்பூரில் கடந்த 2 ஆண்டுகளாக மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழாவும், சுவாமி ஐயப்பனுக்கு மலர் பூஜை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், மானசரோவர் மற்றும் முக்திநாத் புனித தலங்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்-காசி ஆன்மிகப் பயணத்தை ஒன்றிய அரசு அறிவிப்பதற்கு முன்பாகவே முதல் முதலில் செயல்படுத்திய அரசு திராவிட மாடல் அரசாகும். 2 ஆண்டுகளில் 500 பக்தர்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கு 1,003 மூத்த குடிமக்களும் மற்றும் புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கு 1,014 மூத்த குடிமக்களும், அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தில் 1,008 மூத்த குடிமக்களும் பயன்பெற்றுள்ளனர்.

    இத்திட்டங்களுக்கான நிதி அரசு மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலைதுறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2,226 கோவில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதோடு, கோவில்களுக்கு சொந்தமான ரூ.6,792 கோடி மதிப்பிலான 7,069.30 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு கோவில்கள் சார்பில் கட்டணமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    2022-2023-ம் ஆண்டில் 500 ஜோடிக்கும், 2023-2024-ம் ஆண்டில் 600 ஜோடிகளுக்கும் என 1,100 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து அவர்களின் இல்லங்களில் ஒளி ஏற்றிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சேரும்.

    இந்தாண்டு 700 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடத்தி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் வருகிற 21-ந்தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 31 ஜோடிகளுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்க உள்ளார். அதே நாளில் தமிழகம் முழுவதும் 304 ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற உள்ளன.

    இந்து சமய அறநிலையத்துறை ஆளுகைக்குட்பட்ட கோவில்களில் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத அளவிற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் மழைநீர் தேங்கியிருந்த பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு உடனுக்குடன் நீரினை வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    சென்னையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கோவில்கள் சார்பில் 3 நாட்கள் அன்னதானம் மற்றும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

    வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை இரண்டு பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியில் கட்டுமான பணிகள் தொடரலாம் எனவும், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கிடவும் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே விரைவில் பணிகள் தொடங்கப்படும். ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அவற்றை மீட்பதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து மேற்கொள்ளும்.



    சிதம்பரம் நடராசர் கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை பொறுத்தளவில் கோர்ட்டு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளதோடு, அதனை ஆய்வு செய்வதற்கு வெளி மாநிலத்தை சேர்ந்த மாவட்ட கலெக்டரை நியமித்திருக்கிறது. ஆகவே சிதம்பரம் கோவிலில் தவறுகள் நடந்திருந்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறையும், திராவிட மாடல் அரசும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்.

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஏற்பட்ட ரீல்ஸ் பிரச்சனை தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதித்துறை காட்டுகின்ற திசையை நோக்கி பயணிப்போம். புழல் கோவில் பூசாரி ஒருவர் மீது மின்சாரம் தாக்கியது எதிர்பாராமல் நடந்த விபத்தாகும். அனைத்து கோவில்களிலும், முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி அவர்களது துயரங்களை களைவதற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டிருக்கிறார். என்னுடைய பணிகளால் இந்த பொறுப்பு எனக்கு தகுதியான பொறுப்பு என்பதை நான் நிரூபித்து காட்டுவேன் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கின்றார். அவர் பொறுப்புக்கு வந்த உடனேயே சவாலாக இந்த பெருமழை வந்த போதும் அதனை திறமையாக சமாளித்தவர் என்ற நற்சான்றிதழ் மக்களிடம் கிடைத்திருக்கின்றது.

    கோவில்கள் சார்பில் நடத்தப்படும் திருமண விழாவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்ற மணமக்கள் எல்லா நலமும், வளமும் பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போல் கடுமையான ஓய்வில்லாத உழைப்பாளிகளாகவும், மங்காத புகழுக்கு சொந்தக்காரர்களாகவும் நீங்கள் இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

    இந்நிகழ்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார், திருமகள், ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, வான்மதி, ரேணுகாதேவி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் இதுவரை இந்து அறநிலையத்துறையை அணுகவில்லை.
    • கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் இதுவரை இந்து அறநிலையத்துறையை அணுகவில்லை. அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்பவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர அறநிலையத்துறை தயாராக உள்ளது என்றார்.

    இதனிடையே, கிளாம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்டியதில் எந்த தவறும் இல்லை. தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழர்கள் மீது அக்கறை கொண்ட கலைஞர் பெயர் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமானது என்று கூறினார்.

    • ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.
    • ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் சேகர் பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    சென்னை:

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோவிலில் உபகோவிலான திருவெள்ளரை, புண்டரிகாட்ச பெருமாள் கோவிலானது 108 திவ்ய தேசங்களில் 4-வது திருத்தலமாகும். 13-ம் நூற்றாண்டில் ஹொய்சால மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் வடக்கில் நிறைவுபெறாத 2 நிலை ராஜகோபுரமாக அமையப் பெற்றதில் கூடுதலாக 5 நிலைகள் அமைக்க அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பின்படியும், மக்களின் நீண்டநாள் விருப்பத்தின்படியும் பணிகள் மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மாநில வல்லுநர் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டது.

    அதன்படி இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ரூ.7.85 கோடி மதிப்பீட்டில் ராஜகோபுரம் உபயதாரர் நிதியில் இரண்டு நிலையோடு கூடுதலாக 5 நிலைகள் அமைக்கும் திருப்பணிக்கு அடிக்கல் நாட்டினர்.

    முன்னதாக திருச்சி மாவட்டம், மலைக்கோட்டை, தாயுமானசுவாமி கோவிலில் வீற்றிருக்கும் மாணிக்க விநாயகருக்கு உபயதாரர் நிதியில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் தேக்கு மரத்தினால் உருவாக்கப்பட்ட மரத்தேரின் வெள்ளோட்டத்தினை அமைச்சர் பி.கே. சேகர் பாபு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், சட்டமன்ற உறுப்பினர் இனிக்கோ இருதயராஜ், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், இணை ஆணையர்கள் மாரியப்பன், பிரகாஷ், உதவி ஆணையர்கள் ஹரிஹர சுப்பிரமணியன், லட்சுமணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
    • அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    மேல்மலையனூர்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பழுது நீக்கம் செய்யப்பட்ட தங்கத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.

    இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்து அம்மனை தரிசனம் செய்தனர்.

    அதன் பிறகு அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2010-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியின்போது மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புதிதாக தங்கத்தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் விடப்பட்டது. அதன்பிறகு கடந்த 2019-ம் ஆண்டு சிறு பழுது காரணமாக தங்கத்தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களில் ஓடாமல் இருக்கும் தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர் ஆகியவற்றை பழுது நீக்கி சாமிகள் பவனி வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்படி ராமேஸ்வரம், சமயபுரம் மாரியம்மன், திருத்தணி முருகன் கோவில்களில் ஓடாமல் இருந்த தங்கத்தேர் பழுது நீக்கி, பக்தர்களின் நேர்த்திக் கடன் செலுத்தும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 10 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த வெள்ளித்தேர் மற்றும் தங்கத்தேர் பழுது நீக்கம் செய்து தற்போது வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.

    கோவில்களின் வளர்ச்சிக்காக கடந்த 2022-23-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் ஆண்டு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமையும் என கூறுகிறார்கள். இது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்படுவது போல் உள்ளது. இது திராவிட மண். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. ஆட்சி அமையும் என்பது அனைவருக்கும் தெரியும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

    • கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது.
    • மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    வண்டலூர்:

    சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுரஅடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    சமீபத்தில் பெய்த மழையின் போது பஸ்நிலைய முன்பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதியில் புதிதாக மழைநீர்கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் முழுவதும் முடிந்து திறப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார். அப்போது பஸ்நிலையத்துக்குள் பணிகள் முடிந்த பகுதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    மேலும் தற்போது நடந்து வரும் மழைநீர் வடிகால்வாய் மற்றும் மீதமுள்ள பணிகளை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் அமைக்க முதலில் கூறப்பட்ட தொகையை விட ரூ.100 கோடிக்கு பணிகள் கூடுதலாக நடந்துள்ளது. இதற்காக 3-க்கும் மேற்பட்ட சாலைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. கூடுவாஞ்சேரி முதல் மாடம்பாக்கம் வரையிலும், மாடம்பாக்கத்தில் இருந்து ஆதனூர் சாலை, ஆதனூரில் இருந்து வண்டலூர்-வாலாஜா சாலை இணைப்பு, அய்யஞ்சேரி முதல் மீனாட்சிபுரம் வரை, போலீஸ் அகாடமி, வனத்துறைக்கு சொந்தமான இரண்டு கிலோமீட்டர் சாலை அமைக்கும் பணிகள் புதிதாக மேற்கொள்ளப்பட்டது.

    தினமும் 450 பஸ்கள் வந்து செல்லும் வகையிலும், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்ல ஏதுவாகவும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். ஆம்னி பஸ்களுக்கான பஸ்நிலையம் முடிச்சூரில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் இருக்க ரூ.17 கோடி செலவில்1250 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதில் 750 மீட்டர் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் அந்த பணிகளும் முடிந்து விடும்.

    வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் புதிய நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். பயணிகள் பொழுது போக்கிற்கு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பிறகு எந்தவித போக்குவரத்து நெரிசலும் ஏற்படாதபடி அனைத்து நடவடிக்கைகளும் அதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பை கருதி ரூ.13 கோடியில் நவீன காவல் நிலையம் அமைக்கப்படும். தொடர்ந்து மக்களின் நலனுக்காக ஆஸ்பத்திரி என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின் போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் சமய மூர்த்தி, சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    • ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    சட்டசபையில் இன்று விருகம்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஏ.எம்.வி.பிரபாகர ராஜா பேசுகையில், "கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலுக்கு 5 நிலை ராஜகோபுரம் கேட்டோம். அறநிலையத்துறை அமைச்சர் அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். மேலும் பங்குனி உத்திரம் போன்ற திருநாளில் தேர் வேண்டும் என்றும் பக்தர்கள் விரும்புகிறார்கள்.

    எனவே அதை செய்து தருவதுடன் கோவில் தெப்பக்குளத்தையும் சீரமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

    அதற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:-

    "குறுங்காலீசுவரர் கோவிலுக்கு கடந்த கூட்டத்தொடரில் திருத்தேர் வேண்டும் என்று பிரபாகர ராஜா கேட்டார். ரூ.31 லட்சம் செலவில் தேருக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. பசுமடம் கேட்டிருந்தார். அதற்கும் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக அன்னதான கூடத்துக்கும் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடக்க விழா வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. அதற்கு பிரபாகர ராஜா எம்.எல்.ஏ.வுக்கும் அழைப்பு அனுப்பப்படும்.

    இந்த அரசு கேட்பதை மட்டுமல்ல. கேட்காததையும் செய்து கொடுக்கும் அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசுகையில், "பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் கட்டுப்பாட்டில் உள்ள கொடைக்கானல் சித்தர் போகர் வடிவமைத்த முருகன் சிலை அமைந்துள்ள திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அதேபோன்று தினசரி 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பொதுமக்கள் அங்கு வருகை தரக்கூடிய நிலையில் சுபமுகூர்த்த நாட்களில் திருமணம் நடைபெறுவதற்காக திருமண மண்டபமும் கட்டித்தர அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, திருக்கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டி தரப்படும். ஒன்பது நிலை, ஏழு நிலை, ஐந்து நிலை என தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 36 ராஜகோபுரங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதே போன்று பூம்பாறை திருக்கோவில் புனரமைக்கும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    • சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது.
    • ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார்.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையையொட்டி புதிய பஸ்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.ரூ.394 கோடி செலவில் 88.50 ஏக்கர் பரப்பளவில் நவீன வசதிகளுடன் இந்த பஸ்நிலையம் அமைய உள்ளது. சுமார் 6.40 லட்சம் சதுர அடி பரப்பளவில் பஸ்நிலைய கட்டுமான பணிகள் 90 சதவீதத்துக்குமேல் முடிந்து உள்ளன. இந்த புதிய பஸ் நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ்நிலையம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. விரைவில் திறப்பு விழா நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது பஸ் நிலையத்தின் முன்பகுதியில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் பலமணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து பஸ்நிலையம் முன்பு தேங்கும் மழைநீர் பிரச்சினைக்கு நிரந்தர முடிவு செய்த பின்னரே கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

    கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையம் அமைந்துள்ள இடம் உயரமாகவும், ஜி.எஸ்.டி.சாலை மிக தாழ்வாகவும்இருப்பதால் மழை பெய்யும் போது அதிகஅளவு தண்ணீர் தேங்க காரணமாக இருந்தது. இதையடுத்து பஸ்நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் புதிதாக கால்வாய் மற்றும் கல்வெட்டு அமைப்பதற்கான பணிகளை ரூ.17 கோடியில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பஸ்நிலையம் அருகில் தற்போது சுமார் 1 மீட்டர் அகலம் உள்ள மழைநீர் கால்வாயை 2 மடங்கு அகலப்படுத்தி புதிதாக 1180 மீட்டர் நீளத்தில் புதிய கால்வாய் அமைக்கவும், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சுமார் 65 மீட்டர் நீளத்தில் சுரங்கப்பாலம் அமைக்கும் பணிகளை தொடங்க தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் மீதி உள்ள கால்வாய் பணிகள் முழுவதையும் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை கிளாம்பாக்கம் புதிய பஸ்நிலையத்தில் நடைபெறும் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார். அங்கிருந்த ஊழியர்களிடம் பணி குறித்த தகவல்களை கேட்டறிந்தார். மேலும் கால்வாய் பணியை அடுத்த மாதம் இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.
    • ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் இன்று காலை 7.15 மணியளவில் ராஜ கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களின் மீதும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆதீனங்களுக்கும், உபயதாரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும், ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிந்த பிறகு குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோவில்களுக்கு உடனடியாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

    அந்த வகையில் குடமுழுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரிய மாணிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோவிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற கோவில்களுக்கும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

    கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டு தோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கும் 2,500 ஆதி திராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த கோவில்களின் வைப்பு நிதி ரூ.ஒரு லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தி அதற்கான நிதியுதவி ரூ.129.50 கோடியை ஒரே தவணையில் வழங்கியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மேலும், ஒரு கால பூஜை திட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைத்திட ரூ.40 கோடி வழங்கியதோடு, 2023-2024-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைக்க அரசு நிதியாக ரூ.30 கோடியும், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியாக ரூ.10 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,000 கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,030 கோவில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மகிழ்ச்சியோடு நிறைவடைந்துள்ளது. வெகு விரைவில் 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    • கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
    • நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

    சென்னை:

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய 2-வது புத்தகத்தை வெளியிட்டார்.

    அப்போது நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற 07.05.2021 முதல் 31.03.2022 வரை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 167 கோவில்களின் ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் குறித்த விவரங்களை தொகுத்து, வெளிப்படைத்தன்மையுடன் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் முதல் புத்தகம் 17.05.2022 அன்று வெளியிட்டோம்.

    அதனை தொடர்ந்து, 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட கோவில் சொத்துகளின் விவரம், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யப்பட்ட விவரம் ஆகியவற்றை உள்ளடக்கிய 2-வது புத்தகத்தை இன்று வெளியிட்டு இருக்கிறோம்.

    இப்புத்தகத்தில் 01.4.2022 முதல் 31.3.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 330 கோவில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டிடம் மற்றும் திருக்குளம் விவரங்கள், நிலவுடைமை பதிவு மேம்பாட்டு திட்ட நடவடிக்கையின் போது தனிநபர் பெயரில் தவறுதலாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட நிலத்திற்கு மீண்டும் பட்டா பெற்ற 145 கோவில்களுக்குச் சொந்தமான 801.63 ஏக்கர் நிலங்களின் விவரம், கணினி சிட்டாவில் பதிவான தவறுகளை சரிசெய்து 180 கோவில்களுக்கு சொந்தமான 1,434.43 ஏக்கர் நிலங்களுக்கு கோவில் பெயரில் பட்டா பெற்ற விவரம், நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். மூலம் 74514.48 ஏக்கர் கோவில் நிலங்களில் அளவீடு செய்யப்பட்டுள்ள விவரம், அவற்றின் புகைப்படங்கள், அதுகுறித்து நாளிதழ்களில் வெளிவந்த செய்திகள் அனைத்தும் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. இந்நூல்கள் எதிர்காலத்தில் கோவில்களின் சொத்துகளை பாதுகாக்க அடிப்படை ஆதாரமாக விளங்கும்.

    கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுக்கும் பணிகளும், தனிநபர் பெயரிலும், கணினி சிட்டாவிலும் தவறுதலாக பதிவான பட்டா மாறுதல்களை சரிசெய்து கோவில்கள் பெயரில் மீண்டும் பட்டா மாறுதல் செய்யும் பணிகளும் தொடர்ந்து முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்தமாக, கடந்த 07.05.2021 முதல் 07.09.2023 வரை 653 கோவில்களுக்கு சொந்தமான ரூ.5,171 கோடி மதிப்பீட்டிலான 5,721.19 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு உள்ளதோடு, நவீன தொழில்நுட்ப கருவியான டி.ஜி.பி.எஸ். ரோவர் மூலம் 1,48,956.20 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்து பாதுகாக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முதன்மைச் செயலர் டாக்டர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் குமரகுருபரன், ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், ந.திருமகள், ஹரிப் ரியா, தனி அலுவலர்கள் விஜயா, ஜானகி, குமரேசன் உடன் இருந்தனர்.

    • சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார்.
    • கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சென்னை கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் மற்றும் சாலைப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இன்று நடைபெற்றது.

    கூட்டத்தில் கிளாம்பாக்கம் புதிய பஸ் முனையத்திலிருந்து பஸ்கள் போக்குவரத்து நெரிசலின்றி செல்வதற்காக சாலை பணிகள், மழைநீர் வடிகால் பணிகள், மருத்துவ வசதிகள் மற்றும் காவல் நிலையம் குறித்து ஆலோசனை செய்தார். மேலும் இக்கூட்டத்தில் பஸ்களை இயக்கும் பணியினை படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, போக்குவரத்து ஆணையர் அ.சண்முக சுந்தரம், தலைமை வனப்பாது காவலர் கீதாஞ்சலி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 274-வது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பொது மக்களின் போக்குவரத்து இணைப்பினை மேம்படுத்துதல், சென்னை தீவுத் திடலை மேம்படுத்துதல், விளையாட்டு நகரம் அமைத்தல், சென்னை பெருநகர மாநகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த நிதியளித்தல் போன்றவை குறித்து பேசப்பட்டது.

    சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

    2023-2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறி விக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள் குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழு மத்தின் நிர்வாக நடவடிக்கை கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ். முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தொழில், முதலீட்டு ஊக்கு விப்பு மற்றும் வர்த்தக துறை சிறப்பு செயலாளர் பூஜா குல்கர்னி, சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்) எஸ்.சுதர்சனம், (திரு.வி.க.நகர்) பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சி.எம்.டி.ஏ முதன்மை செயல் அலுவலர் கவிதா ராமு, , நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன், குழும உறுப்பினர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சொர்ணாம்பிகை உடனுறை புஷ்பதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் இன்று காலை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கும்பாபிஷேகம் ,கோவில் குளத்தை சீரமைப்பது குறித்தும் கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட காளீஸ்வரர் லிங்கத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டார்.

    பின்னர் அருகில் அருமந்தை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை அவர் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஞாயிறு கிராமத்தில் உள்ள கோவில் திருப்பணிக்கு ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நிதி தேவைப்பட்டால் ஒதுக்கீடு செய்யப்படும். இங்குள்ள கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டித் தரப்படும். அருமந்தை பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 90 ஏக்கர் இடத்தில் முறையாக பேசி வாடகை வசூலிக்கப்படும்.

    அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தில் தகுதி அடிப்படையில் 26 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். முறையாக பள்ளியில் பயின்று சான்றிதழ் வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைப்பு நிதி தொகை ரூ.520 கோடி உள்ளது. சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அறநிலையத்துறை ஆணையர், குமரகுருபரன், இணை ஆணையர் லட்சுமணன், பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன், ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், செயல் அலுவலர்கள் செந்தில்குமார், மாதவன் பிரகாஷ் உடன் இருந்தனர்.

    ×