என் மலர்
நீங்கள் தேடியது "நிதி நிறுவனம்"
- 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டார்.
- பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சுபாஷ். இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.
இவர் ஜூலை மாதம் 29ந் தேதி வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் .சி. புக் காணாமல் போனது தெரிய வந்தது. உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்தும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை,
இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (வயது 24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றி சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருந்த 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பைக்கில் வந்த நபரை பிடித்து விசாரித்த போது வெள்ளகோவிலில் ஜூலை மாதம் நடந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட ஈரோடு, கோணவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மணிகண்டன் (38) என்பது தெரியவந்தது .உடனே மணிகண்டனை கைது செய்து காங்கயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவர் மீது திருப்பூர் ஈரோடு, சேலம், மதுரை, விழுப்புரம், கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது.
நீதிபதி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட மணிகண்டனை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் தற்போது கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மற்றும் ஒருவரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.
- மதுரை பெத்தானியாபுரம் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் ஆவணங்களுடன் புகார் செய்யலாம்.
- இந்த தகவலை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளது.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை பெத்தானியா புரம் சின்னசாமி பிள்ளை தெருவில் தமிழ்மாறன், நிறைமாறன், வேல்முருகன் ஆகியோர் கூட்டு சேர்ந்து ''வி.எல்.சி. அக்ரோ டெக் லிமிடெட்'' என்ற நிறுவனத்தை தொடங்கி கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் அந்த பகுதி மக்களிடம் எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறினர்.
பொதுமக்களை நம்ப வைத்து பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்தனர். முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்த பணத்தையும் திருப்பி தராமல் அவர்கள் நம்பிக்கை மோசடி செய்தனர்.
இதுபோல் அவரது ஊரைச் சேர்ந்த பல முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறும் முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர். அதன்பேரில் மதுரை பொருளாதார குற்றபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து புலன்விசாரணையில் இருந்து வருகிறது.
மேற்கண்ட நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு, கதவு.எண்.4/425A, சங்கரபாண்டியன் நகர், தபால்தந்தி நகர் விரிவாக்கம், பார்க்டவுன் பஸ் நிலையம் எதிர்புறம், மதுரை-14 என்ற முகவரியில் நேரில் ஆஜராகி புகார் மனு அளிக்கலாம். அதன்பேரில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேவை குறைபாடு புகாரில் நடவடிக்கை
- நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள கல்பாலத்தடியை சேர்ந்தவர் சவுந்தர்ராஜ். இவர் தனியார் நிதி நிறுவனத்திடம் கார் கடன் பெற்றிருந்தார். இதனை மாதம் தோறும் கட்டி முடித்த நிலையில், கடன் இல்லை என்ற சான்றிதழ் அவருக்கு வழங்கப்பட வில்லை.
இது பற்றி நிதி நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, மேலும் கூடுதல் தொகை கட்ட வேண்டும் என கூறியதால் அதனையும் சவுந்தர்ராஜ் கட்டி உள்ளார்.
ஆனாலும் நிதி நிறுவனம், அவரது கடனை முடிக்காமல் மேலும் பணம் கேட்டதோடு, சென்னைக்கு நேரடியாக வரவேண்டும் என்றும் கூறி உள்ளது. இதனை தொடர்ந்து குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சவுந்தர்ராஜ் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் குறைதீர் ஆணைய தலை வர் சுரேஷ், உறுப்பி னர் சங்கர் ஆகியோர் விசா ரித்து, நிதி நிறுவன சேவை குறைபாட்டினை சுட்டி க்காட்டி, சவுந்தர்ராஜிக்கு நஷ்ட ஈடு(அபராதம்) ரூ. 1 லட்சம் வழங்க உத்தர விட்டனர். மேலும் அவரி டம் ஏற்கனவே கூடுதலாக வசூ லிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்து 724 மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ. 3 லட்சத்து 95 ஆயிரத்து 724 -ஐ ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். கடன் இல்லை என்ற சான்றிதழையும் உடனே வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- ஆறுமுகம் இசைராஜ் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
- தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
நெல்லை-திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சேரகுளம் அரியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இசைராஜ்(வயது 27).
தற்கொலை
இவர் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை யில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் பணிபுரியும் நிறுவனத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுக்கோட்டைக்கு அவரது உறவினர்கள் விரைந்து சென்றனர்.
அப்போது அவர்கள் ஆறுமுகம் இசைராஜை சிலர் தற்கொலைக்கு தூண்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக புதுக் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஞானராஜ், வாலிபரை தற்கொலைக்கு தூண்டியதாக தனியார் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- தனியார் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
- மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை பி.பி.குளம் பகுதியில் பி.டி.ராஜன் ரோடு, ஏ.வி.ஆர். காம்பிளக்சில் இயங்கி வந்த பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் (பி.எம்.சி.) என்ற நிதிநிறுவனத்தை சேக் முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குநராக இருந்து கொண்டு நடத்தினார். அவர் பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக உறுதி அளித்தார். உறுதி மொழியில் கூறியது போல் லாபத்தை திரும்ப செலுத்தாததால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை டான்பிட் சிறப்பு கோர்ட்டில் எதிரிகள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. அதன் பின்பு மேற்கண்ட நிதி நிறுவனத்தின் மீது பணம் மோசடி செய்ததாக இதுவரை பல புகார் மனுக்கள் பெறப்பட்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நிதிநிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால் ஏப்ரல் மாத இறுதிக்குள் எமது அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் புகார் கொடுக்குமாறு முதலீட்டாளர்களை கேட்டுக் கொள்கிறோம். மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும் தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய அலுவலக தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
- முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் நீலா தெற்கு வீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக ரவி (வயது 64).
இந்த நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வாட்ஸ்அப் செயலி மூலம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நாகை குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி அலுவலகத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் ரவியிடம் கடந்த 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கட்டிய வைப்புதொகை, சீட்டு தொகை, சேமிப்பு கணக்கு தொகை சுமார் 220 கோடி ரூபாய் திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கீழக்கரை அருகே நிதி நிறுவனத்தில் புகுந்து ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது48). இவர் தனது வீட்டின் எதிர்ப்புறம் உள்ள கட்டிடத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்றுஇரவு வழக்கம்போல் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள், நிதி நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கு கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு தப்பினர்.
இன்று காலை செல்வராஜ் வீட்டிற்கு வெளியே வந்து தனது நிதி நிறுவனத்தை பார்த்தார்.
அப்போது நிதி நிறுவன த்தின் கதவு உடைக்கப்ப ட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். இதையடுத்து அவர் நிதிநிறுவனத்தின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது நிதி நிறுவனத்தில் வைக்ககப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்தை பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் கீழக்கரை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் நிதி நிறுவன த்தில் பதிவாகியிருந்த கைரேகைகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.
நிதிநிறுவனத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கீழக்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கம்ப்யூட்டர்-ஆவணங்களை விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்
- ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலுத்தி சுமார் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்கள்
கன்னியாகுமரி :
குமரி மாவட்டத்தில் உடை யார்விளை, வேர்கிளம்பி, களியல், அழகியமண்டபம் ஆகிய இடங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதி நிறுவனம் தொடங்கப்பட்டு, தனி நபர் கடன், மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பல்வேறு கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதை நம்பி கடன் கிடைக்கும் என்ற நம்பிக்கை யில் கடன் தொகைக்கு ஏற்ப ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலுத்தி சுமார் 3 ஆயிரம் பேர் வரை உறுப்பினர்களாக சேர்ந்ததாக கூறப்படுகிறது.
இவர்களுக்கு கடன் வழங்கும் விழா 14-ந் தேதி அழகியமண்டபம் பகுதியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு, கடன் கேட்டு முன் பணம் செலுத்தியவர்கள் வங்கி கணக்கில் ரூ.100 செலுத்தி ஒத்திகையும் நடத்தினர். இதனால் பணம் செலுத்தியவர்கள் கடன் தொகை கிடைக்கும் என நம்பினர்.
இந்நிலையில் நிதி நிறுவனத்தில் பங்கு தாரர்களாக இருந்து பணியாளர்கள் சேர்ப்பு, உறுப்பினர்கள் சேர்ப்பை நடத்தியவர்கள் 13-ந் தேதியே மாயமானார்கள்.அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது.இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்த அனைவரும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நிதி நிறுவன இயக்குனர்கள் என கூறிய தூத்துக்குடியை சேர்ந்த சியாம் ஜோஸ்வா, துர்கா தேவி, சிவகங்கையை சேர்ந்த வேணுகோபால், திருநெல்வேலியை சேர்ந்த அல்தாப், கும்பகோணத்தை சேர்ந்த சந்தோஷ், பாளையங்கோட்டையை சேர்ந்த ஜமால் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களின் முழு முகவரி மற்றும் அடையாளங்கள் யாருக்கும் தெரியவில்லை. இவர்களின் புகைப்படங்கள் மூலம் அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் குற்றப்பி ரிவு இன்ஸ்பெக்டர் உமா தலைமையில் போலீசார் நேற்று உடையார்விளை மோசடி நிதி நிறுவனத்திற்கு சென்றனர். அப்போது நிறுவனம் பூட்டிக்கிடந்தது.போலீசார் நிறுவன அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து கொடுத்த அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் அலுவலக சாவி உள்ளது என்பதை அறிந்து அவரது உதவியுடன் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றனர்.
அலுவலகத்தின் உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கணக்கு சம்பந்தமான நோட்டு புத்தகங்கள் மற்றும் ஆவணங்களையும் விசாரணைக்காக எடுத்து சென்றனர். இது போல் மற்ற 3 கிளைகளில் உள்ள ஆவணங்களையும் குற்றப்பிரிவு போலீசார் எடுத்து சென்றதாக போலீசார் தெரிவித்தனர்.
உடையார்விளை கிளை அலுவலகத்தை குற்றப்பிரிவு போலீசார் திறந்து ஆவணங்களை பார்க்கும்போது பணம் செலுத்தி ஏமாந்த பொது மக்கள் சிலர் சோகத்துடன் அங்கு கூடினர். குற்றப்பிரிவு போலீசார் ஆவணங்களை எடுத்து சென்றதும் அவர்கள் கலைந்து சென்றனர்.
- நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக தெரிவித்துள்ளது
நாகர்கோவில் :
தக்கலை அருகே உள்ள குமாரகோயிலை சேர்ந்த கிருஷ்ணகுமார் வில்லுக்குறி யிலுள்ள ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் நகைக் கடன் எடுத்திருந்தார்.
அடகு வைத்த நகைகளை திருப்புவதற்காக எதிர்தரப் பினரை தொடர்பு கொண்ட போது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அசல் மற்றும் வட்டியினை செலுத்தி நகைகளை திருப்பி கொள்ளலாம் என தெரிவித்திருந்தனர். ஆனால் நுகர்வோருக்கு எந்த வித அறிவிப்பும் கொடுக்காமல் அடகு வைத்த நகைகளை ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வ தாக தெரிய வந்துள்ளது.
உடனே மனுதாரர் நகையை திருப்ப எவ்வளவு பணம் செலுத்த வேண்டு மென கணக்கு விபரம் தருமாறு நேரில் சென்றுள் ளார். ஆனால் அவரை அலைக்கழித்ததுடன் கணக்கு விபரத்தை கொடுக்கவில்லை. அதோடு எந்தவிதமான தகவலும் கூறாமல் அனைத்து நகைகளையும் ஏலம் விட்டு விட்டதாக நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு சேவை குறைபாடு என்பதால் நுகர்வோர் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மனஉளைச்சலுக்கு ஆளான கிருஷ்ணகுமார் கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகி யோர் தனியார் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு நஷ்ட ஈடு ரூ.5 லட்சம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5,000 ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் எனவும், மேலும் அடகு தொகையை பெற்றுக் கொண்டு நகைகளை உடனடியாக திரும்ப வழங்க வேண்டுமென உத்தர விட்டனர்.
- நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம்
நாகர்கோவில் :
குமரி மாவட்டம் பள்ளியாடியை சேர்ந்த எட்வின்பால், புதிய மோட்டார் சைக்கிள் வாங்க திட்டமிட்டார். இதற்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கினார். இதனை தொடர்ந்து இரு சக்கர வாகனத்தை பதிவு செய்த ஒரிஜினல் ஆர்.சி. புத்தகம், நிதி நிறுவனம் வசம் இருந்தது. இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் தொலைந்து விட்டது என நிதி நிறுவனம் கூறியது. இதனைத் தொடர்ந்து எட்வின்பால், வக்கீல் நோட்டீசு அனுப்பினார். ஆனால் உரிய பதில் கிடைக்காததால், கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் எட்வின் பால் வழக்கு தொடர்ந்தார்.
ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் வழக்கை விசாரித்து, நிதி நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டினர். மேலும் பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு புதிய ஆர்.சி. புத்தகம், ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு மற்றும் வழக்கு செலவு தொகை ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தர விட்டனர்.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அறிவிப்பு
- மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது.
நாகர்கோவில் :
குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலைய செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் மூவாற்று முகம் அரங்கன் விளையில் இயங்கி வந்த மூவாற்றுமுகம் சிவ சாஸ்தா சிட்பண்ட் (பி) லிமிடெட் என்ற நிதி நிறுவ னத்தின் மீது, நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டி இருப்பதால், இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்து இது வரையிலும் நாகர்கோவில் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகார் மனு கொடுக்காதவர்கள் உடனடியாக நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு நேரில் வந்து அசல் ஆவணங்களுடன் புகார் மனு கொடுக்கும்படி கேட்டடுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்.
- மேற்கண்ட தகவலை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுரை
மதுரை பீ.பி.குளம் பி.டி.ராஜன்ரோடு ஏ.வி.ஆர். காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் பாரமவுண்ட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிதிநிறுவனம் இயங்கி வந்தது. இதில் சேக்முகைதீன் என்பவர் நிர்வாக இயக்குனராக இருந்து கொண்டு பொதுமக்களிடம் திருக்குறள் புத்தகங்கள் விற்பனை செய்து அதில் கிடைக்கும் லாபத்தின் பகுதிகளை முதலீட்டாளர்களுக்கு திரும்ப செலுத்துவதாக கூறி, உறுதிமொழியில் கூறியதுபோல் திரும்ப செலுத்தாமல் இருந்துள்ளார்.
இதில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்து, அதுச ம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுரை டான்பிட் சிறப்பு நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்து வருகிறது.
எனவே இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள் யாரேனும் இதுவரை புகார் அளிக்காமல் இருந்தால், அசல் ஆவணங்களுடன் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளிக்கலாம்.
மேலும் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தாலும், தாங்கள் பெயரும் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிய 0452-2642161 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவலை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.