என் மலர்
நீங்கள் தேடியது "மோசடி புகார்"
- குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.
- பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில முதல்-மந்திரி பினராய் விஜயனின் மகள் வீணா. இவர் எக்சா லஜிக் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் ஐ.டி. நிறுவனம் நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சார்பில் கொச்சின் மினரல் ரூட்டில் லிமிடெட் என்ற தனியார் சுரங்க நிறுவனத்தில் வீணா லஞ்சம் பெற்றதாக புகார்கள் எழுந்தன.
மார்க்கெட்டிங் ஆலோசனை மற்றும் மென்பொருள் சேவைகளை வழங்குவதற்காக தான் எக்சாலஜிக் மற்றும் அதன் துணை நிறுவனமான எம்பவர் இந்தியா பணம் பெற்றதாக வீணா தரப்பில் கூறப்பட்டது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் நெருக்கடி ஏற்பட்டது.
இந்த நிலையில் புகார் குறித்து விசாரணை நடத்தி வந்த தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் வீணா விஜயன் உள்பட 27 பேர் மீது லஞ்ச குற்றம் சாட்டி அவர்கள் மீது கொச்சி பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.
கோர்ட்டு இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பிறகு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பவார்கள்.
160 பக்க குற்றப்பத்திரிகையில் வீணா மற்றும் அவரது நிறுவனம் மீது நிறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 447-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இல்லாத செலவு களை அதிகப்படுத்தி போலி பில்களை உருவாக்குவதன் மூலம் மோசடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது
இந்த பிரிவின் கீழ் குற்றம் உறுதியானால் 6 மாதம் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் தற்போது இந்த புகார் சம்பவம் கேரளாவில் மீண்டும் பரபரப்பை எட்டி உள்ளது.
மகள் மீது லஞ்சக் குற்றம் சாட்டப்பட்டு இருப்பதால் முதல்-மந்திரி பதவியில் இருந்து பினராய் விஜயன் விலக வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.
கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் எம்.பி. கூறுகையில், முதல்-மந்திரியோ அவரது மகளோ ஆதாரங்களை தவிர்க்க முடியாது. பணம் வாங்கியவர்கள் இறுதியில் விளைவுகளை சந்திப்பார்கள். இது 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க கூடிய குற்றமாகும்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வழி தேடுவதற்காக டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசி உள்ளனர். இந்த விஷயத்தில் பினராய் விஜயன், முதல்-மந்திரி பதவியில் இருந்து உடனே விலக வேண்டும் என்றார்.
மதுரை மாநாட்டிலேயே கட்சி இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். சி.பி.எம். கட்சி கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். அதை விடுத்து பினராய் விஜயனை காப்பாற்றினால், அது சி.பி.எம்.மின் வீழ்ச்சியின் தொடக்கத்தை குறிக்கும் என்றார்.
கேரள சட்டமன்ற எதிர் கட்சி தலைவரும் காங்கிரஸ் தலைவர்களின் ஒருவருமான சதீசன் கூறுகையில், இது மிகவும் தீவிரமான விஷயம். குற்றப்பத்திரிகையில் எந்த சேவைகளையும் வழங்காமல் வீணா பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பினராய் விஜயனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்.
பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கூறும் போது, பெரிய அளவிலான ஊழல் நடந்துள்ளது. இதில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். எனவே பினராய் விஜயன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகக் கோரி பா.ஜ.க. போராட்டங்களை நடத்தும் என்றார்.
- காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார்.
- பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா மார்க்கெட் அருகே அடகு கடை நிறுவனம் நடத்தி வந்தவர் நைனா முகமது (வயது 49). இவர் தனது நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்தால் குறைந்த வட்டிக்கு அதிக பணம் தருவதாக நகர் முழுவதும் விளம்பரம் செய்தார்.
இதை நம்பி காரைக்குடி, பழைய செஞ்சை, ரஸ்தா, அமராவதி, புதூர், தட்டடி, கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நகைகளை அடகு வைத்து நைனா முகமதுவிடம் பணம் பெற்று சென்றனர்.
வங்கிகளில் இருந்து நகைகளை மீட்கவும், நில பத்திரங்களை அடமானமாக பெற்றுக்கொண்டும் நைனா முகமது பணம் கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் காரைக்குடி அருகே உள்ள கொரட்டி பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரி (35) என்பவர் நைனா முகமதுவிடம் 46 பவுன் நகைகளை அடகு வைத்திருந்தார். அதற்குரிய பணத்தை வட்டியுடன் செலுத்திய பின்னும் நைனா முகமது நகைகளை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் அவர் தனது நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானார்.
இதனால் சந்தேகம் அடைந்த சோமசுந்தரி இதுகுறித்து காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார்.
இதன் அடிப்படையில் அடகு கடை அதிபர் நைனா முகமது, அவரது மனைவி சிந்துஷ் பானு, உதவியாளர் முத்துப்பட்டணம் செந்தில்குமார் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் நைனா முகமதுவை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களிடம் நைனா முகமது 1000 பவுன் நகையை அடமானமாக பெற்றுக்கொண்டு மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும் முதியவர் ஒருவரிடம் 1½ ஏக்கர் நிலத்தை மோசடி செய்து அதை தனது பெயரில் மாற்றிக்கொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமான காரைக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்களது நகைகளை திருப்பி பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
- நிறைமொழி தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க பணம் கேட்டார்.
- விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவை,
கோவை ஆர்.எஸ்.புரத்தை சேர்ந்த தீபா, ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவையை சேர்ந்த நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நிறைமொழி தாங்கள் அமெரிக்காவில் தொழில் தொடங்க போவதாகவும் அதற்கு பணம் தருமாறும், அதனை உடனே தந்து விடுவதாகவும் தெரிவித்தனர்.
இதனை நம்பி நானும், எனது தம்பி பிரவீனும் அவர்களுக்கு ரூ.90 லட்சம் கொடுத்தோம். ஆனால் பணத்தை பெற்று கொண்ட பிறகு நீண்ட நாட்களாகியும் திருப்பி தரவில்லை.
இதுகுறித்து கேட்டபோது வெள்ளகிணறில் நிவேதிதா தந்தைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து உள்ளதாகவும், அதனை விற்று பணத்தை கொடுப்பதாகவும் தெரிவித்தனர். ஆனாலும் இதுவரை தரவில்லை. எனவே விசாரணை நடத்தி பணத்தை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக நிறைமொழி, அவரது மனைவி நிவேதிதா ஆகியோர் மீது, ராமநாதபுரத்தை சேர்ந்த கேட்டரிங் நிறுவன உரிமையாளர் ஒருவர் வீட்டில் அமெரிக்க டாலர், மற்றும் நகைகள் திருடியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பணத்தை இழந்த ஏராளமானோர் புகார் அளிக்க குவிந்தனர்.
- மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது.
மதுரை
மதுரையை தலைமையிட மாக கொண்ட நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30சதவீத வட்டி தருவதாகவும் தெரி வித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் சிலர் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததனர்.
அதனடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குனரான வீரசக்தி , கமலக்கண்ணன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் மீது பொரு ளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப் பட்டு விலையுயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
நியோமேக்ஸ் நிறு வனத்தின் இயக்குனர்க ளான சைமன் ராஜா, கபில், இசக்கிமுத்து , சகாயராஜா பத்மநாபன், மலைச்சாமி ஆகிய 6 பேரையும் பொரு ளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள்
புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவித்தி ருந்தனர். அதன்படி மதுரை, விருதுநகரில் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமானோர் புகார் அளித்தனர். இன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் 3-வது முறையாக முகாம் நடந்தது. நியோமேக்சில் முதலீடு செய்து பணத்தை இழந்த மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் புகார் மனு அளிக்க குவிந்தனர்.
- தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி.
- தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.
நடிகை கவுதமி, தனக்கு சொந்தமான நிலத்தை அதிக விலைக்கு விற்று தருவதாக மோசடி செய்ததாக போலீசார் புகார் செய்திருந்தார்.
அதாவது, திருவள்ளூர் மாவட்டம் கோட்டையூரில் சுமார் 8.53 ஏக்கர் நிலத்தை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்துவிடடு தனக்கு வெறும் ரூ.4.10 கோடி கொடுத்து ஏமாற்றியதாக கவுதமி புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், புகாரின் பேரில் போலீசார் தலைமறைவாக இருந்த பலராமன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
- கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
- ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த ஒருவர், தனது சகோதரி மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் நிதி நிறுவனம் நடத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021-ம் ஆண்டு முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி உள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத தவணையாக, 50 கோடி ரூபாய்க்கும் மேல் கட்டி ஏமாந்துள்ளனர்.
இது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி, போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டத்தை முடித்து திரும்பிய அமைச்சர் சக்கரபாணியிடம் பொது மக்கள் புகார் தெரிவித்து மனு கொடுத்தனர்.
அந்த நேரம் காரில் இருந்து இறங்கி வந்த அமைச்சர் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கூறி உள்ளேன். உங்கள் பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
- ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் ஜெகநாதன் விடுவிக்கப்பட்டார்.
- துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
சேலம்:
சேலம் கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல் (60), கணினி துறை இணை பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து அரசு அனுமதியின்றி பூட்டர் அறக்கட்டளை என்ற பெயரில் கல்வி நிறுவனம், அப்டெக்கான் போரம் என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாக புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய கருப்பூர் போலீசார் 4 பேர் மீதும் 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஜெகநாதனை கடந்த 26-ந் தேதி கைது செய்தனர்.
பின்னர் ஒரு வாரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் மற்ற 3 பேரும் தலைமறைவாக உள்ளனர்.
இதற்கிடையே பெரியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள துணைவேந்தர் அலுவலகம், அவரது வீடு, பயணியர் மாளிகை, பதிவாளர் அலுவலகம் உள்பட 7 இடங்களில் 22 மணி நேரம் சோதனை நடந்தது.
இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது. மேலும் துணைவேந்தருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 7 பேரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி பெரியார் பல்கலைக்கழக பொருளாதாரத்துறை தலைவர் பேராசிரியர் ஜெயராமன், மேலாண்மை கல்வி நிறுவன பேராசிரியர் சுப்பிரமணிய பாரதி, விலங்கியல் துறை உதவி பேராசிரியர் நரேஷ் குமார், உளவியல் துறை உதவி பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் விருந்தினர் மாளிகை ஊழியர் நந்தீஸ்வரன் ஆகிய 5 பேருக்கு சம்மன் அனுப்பினர். இதையடுத்து இவர்கள் 5 பேரும் இன்று கருப்பூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
- வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைகளில் 2 கிராமம் முதல் 8 கிராம் வரை வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த குற்றச்சாட்டின் பேரில் அடகு வைத்த வாடிக்கையாளர்கள் கடந்த ஏழு நாட்களாக அடகு வைத்துள்ள நகைகளில் நம்முடைய நகைகளிலும் மோசடி ஏதும் நடந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கூட்டம் கூட்டமாக வருகை புரிந்து நகைகளை திருப்பி வருகின்றனர்.
அப்படி வருகை தந்துள்ள நபர்களில் சிலருக்கு மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்சமயம் வங்கி கிளை மேலாளராக இருந்து வருபவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிய மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் எங்களைப் போன்ற பொதுமக்கள் பண தேவைக்காக அடகு வைக்கும் தங்க நகைகளை வெட்டியும், பற்றவைத்தும், சுரண்டியும் இருக்கும் சூழ்நிலை இருந்து வருகிறது.
மேலும் பாதுகாப்பாக வங்கி லாக்கரில் வைக்கப்பட்டு இருக்கும் நகைகள் எப்படி, யார் மூலம் இவ்வாறான மிகப்பெரிய மோசடிக்கு உட்படுத்தப்படுகிறது? வங்கிக்குள் எவ்வாறு அரங்கேற்றப்பட்டது என்ற விவரத்தை போலீசார் கண்டறிய வேண்டும் என பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த மோசடி தொடர்பாக மாவட்ட குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் வங்கி கிளையின் உயர்மட்ட தணிக்கை குழுவும் கடந்த ஏழு நாட்களாக வாடிக்கையாளர்கள் எத்தனை நபர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி உள்ளது என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் இக்கிளையில் அடகு வைத்திருக்கும் அனைவரும் தங்களது நகைகளை திருப்புவதற்காக மணிக்கணக்கில் நாள்தோறும் காத்துக் கிடந்து திருப்பி வருகின்றனர்.
நாட்டின் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையிலேயே இது போன்ற சம்பவம் நடைபெற்று உள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் வங்கியின் மீது நம்பிக்கையற்ற தன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
- அரசரை போல் போலியாக கையெழுத்திட்ட இளவரசர் முகமது.
- இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
துபாய்:
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது முன்னாள் அதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரைத் தொடங்கும் அரச ஆணையில் தனது தந்தையும் அரசருமான அப்துலஜீசையின் கையொப்பத்தை போலியாக இட்டதாக முன்னாள் மேஜர் ஜெனரலும் உளவுத்துறை அதிகாரியுமான அல்-ஜப்ரி தெரிவித்துள்ளார்.
கனடாவில் உள்ள அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா கடந்த 2015-ம் ஆண்டு போா் பிரகடனம் செய்தது. தாக்குதல் நடத்துவதற்கான அரச உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை அரசரை போல் போலியாக கையொப்பமிட்டு இளவரசா் முகமது பின் சல்மான் பிறப்பித்திருந்தாா். அரச ஆணையில் தனது தந்தையின் கையொப்பத்தை போலியாக இட்டார்.
வயது மூப்பு காரணமாக அரசரின் மூளைத் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. அதை பயன்படுத்தி இளவரசா் ஹவுதி கிளா்ச்சியாளா்கள் மீது போா் தொடுத்தாா். இளவரசர் முகமது தனது தந்தைக்குப் பதிலாக போரை அறிவிக்கும் ஆணையில் கையெழுத்திட்டார். அப்போது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
எனது இரண்டு குழந்தைகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறேன். எனவே எனது குழந்தைகள் மற்றும் எனது நாட்டின் நலனுக்காக பேசுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. என்னை கொல்ல இளவரசர் விரும்புகிறார்.
என் கொலைக்கு அவர் திட்டமிட்டார். நான் இறந்து கிடக்கும் வரை அவர் ஓயமாட்டார். அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றார்.
முன்னாள் அதிகாரியின் இந்த குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா கருத்து தெரிவிக்கவில்லை.
- 2 குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.
- தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்குப் பதிவு.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வெள்ளப் பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கருப்புச்சாமி. இவரது மனைவி வேலுமணி (வயது 30). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பச்சாமி விபத்தில் இறந்து விட்டார்.
இந்த நிலையில் வேலுமணி லாரி புக்கிங் ஆபீசில் வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வருகிறார்.
வேலுமணியிடம் ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருவதாக திண்டுக்கல் நந்தவனப்பட்டியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் இளங்கோ ரூ.1 லட்சம் வாங்கி உள்ளார். 2 ஆண்டுகள் ஆன பின்பும் இளங்கோ வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது தான் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறினார். ஆனால் பணத்தையும் தராமல் ஏமாற்றினார்.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வேலுமணி புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் வடமதுரை போலீசார் தி.மு.க. பிரமுகர் இளங்கோ மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் 2 ஆண்டுகளாக தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றிய இளங்கோவை கைது செய்யாமல் போலீசார் அலைக்கழிப்பதாகவும் தனக்கு பணம் கிடைக்கவில்லை என கூறி 2 குழந்தைகளுடன் இன்று வடமதுரை போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தும் அவர் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர்.
- பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள்
கோவை:
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவையில் பிரபலமான நகை கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தங்க சீட்டு மற்றும் சேமிப்பு திட்டம் நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் நாங்கள் சேர்ந்துள்ளோம்.
இந்த கடையின் பங்குதாரர்கள் எங்கள் கடையில் பல்வேறு திட்டங்கள் உள்ளதாகவும், மேற்படி திட்டங்களில் சேர்ந்து பயன் பெறுமாறு எங்களை நம்பிக்கையூட்டினர். இதனை நம்பி நாங்களும் அந்த திட்டங்களில் சேர்ந்து பணம் கட்டினோம்.
ஆனால் அவர்கள் கூறியபடி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணத்தை கட்டிய பின்னரும், எங்களுக்கு நகையோ, பணத்தையோ கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டால், தருவதாகவே கூறி வருகிறார்கள். ஒரு வருடமாகியும் இன்னும் தரவில்லை.
இந்நிலையில் பணத்தை கேட்டு நாங்கள்அனைவரும் பங்குதாரரின் வீட்டிற்கு சென்றோம். அங்கு அவர்களிடம் நாங்கள் செலுத்திய பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம், நகையை தரமுடியாது என மிரட்டும் தொனியில் பேசினர்.
இதுநாள் வரை பணத்தை திரும்ப கொடுத்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தோம். ஆனால் தற்போது அவர்கள் கூறுவதை பார்த்தால் பணத்தை கொடுக்கமாட்டார்கள் என்பது தெரிகிறது.
மேலும் பணத்தை கேட்டு சென்றால் தகாத வார்த்தையால் பேசியும், கடையின் ஊழியர்களை வைத்து மிரட்டியும் வருகிறார்கள். எனவே கடையின் பங்குதாரர், அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர்களிடம் இருந்து நாங்கள் செலுத்திய தொகையினை திரும்ப பெற்று தந்து, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.