என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரடங்கு"

    • நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன.

    நாக்பூர்:

    மராட்டியத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. இந்த கல்லறையை அகற்றக்கோரி கடந்த திங்கட்கிழமை இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதில் நாக்பூரில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அன்று இரவு நாக்பூரில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. குறிப்பாக மகால், ஹன்சாபுரி பகுதிகளில் போராட்டக்காரர்கள் பல வாகனங்களை தீவைத்து எரித்தனர். இதில், 42 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 35 போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 54 பேரை கைது செய்துள்ளனர். கலவரத்துக்கு காரணமான முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக மாநில உள்துறை இணை மந்திரி யோகேஷ் கதம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே சம்பவம் நடைபெற்று 3 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நாக்பூரில் பதற்றம் தணியவில்லை. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    கோட்வாலி, கணேஷ்பேத், தேசில், லகட்கஞ்ச், பச்பாவோலி, சாந்த் நகர், சக்கர்தாரா, நந்தன்வன், இமாம்பாடா, யசோதரா நகர் மற்றும் கபில் நகர் பகுதியில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. மேலும் பதற்றமான பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல அதிவிரைவு படை, கலவர கட்டுப்பாட்டு பிரிவு படையினர் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இருப்பினும் நாக்பூரில் தற்போது சட்டம்- ஒழுங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவங்களை தொடர்ந்து ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள குல்தாபாத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீசார் பலப்படுத்தி உள்ளனர். இந்த பகுதியை டிரோன்கள் பறக்கவிட தடை செய்யப்பட்ட மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இங்கு டிரோன்களை பறக்க விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    வன்முறையை தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகளை அகற்றுவதற்காக சத்ரபதி சம்பாஜி நகரில் 24 மணி நேரமும் போலீசார் சமூக வலைத்தளங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பல்வேறு சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 506 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. மேலும் 80-க்கும் மேற்பட்ட நபர்கள் வலைதளத்தில் மோசமான பதிவுகளை இடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இனிமேல் ஆட்சேபனைக்குரிய பதிவுகள் இடுபவர்கள் மீது குற்ற வழக்குகளை பதிவு செய்வோம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது.
    • கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர்.

    மணிப்பூரில் சூரசந்த்பூர் மாவட்டத்தில், ஹமர் பழங்குடியினத் தலைவர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட்டார்.

    இதனால் ஹமர் மற்றும் ஜோமி பழங்குடியினரிடையே மோதல் ஏற்பட்டது. எனவே சூரசந்த்பூரில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தீர்வு காணும் விதமாக இரு சமூக தலைவர்களும் கடந்த திங்கள்கிழமை அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டினர். ஆனால் நேற்று இரவே மீண்டும் இரு சமூகத்தினரிடையேயும் மோதல் வெடித்தது.

    அப்பகுதியில் ஜோமி பழங்குடியினர் தங்கள் சமூகத்தின் கொடியை ஏற்ற ஹமர் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தபோது இருதரப்புக்கும் வன்முறையில் இறங்கியது. கல்வீச்சு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்கள் நிகழ்ந்தன. இதில் லால்ரோபுயி பாகுமாட்டே என்ற 53 வயது நபர் உயிரிழந்தார்.

    மேலும் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். கலவரத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். கடைகள் மற்றும் சொத்துக்களை சூறையாடிய கலவரக்காரர்களை அடக்க போலீசார் போராடினர். சூரசந்த்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே குக்கி மற்றும் மெய்தேய் பழங்குடியினரையே கடந்த வருடம் முதல் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து பார்வையிட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர் இன்று மணிப்பூர் வருகின்றனர். இந்த கலவரத்தில் இதுவரை 250 க்கும்  அதிகமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள்.
    • தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    பீஜிங்:

    சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

    இதையடுத்து அந்தந்த மாகாண நிர்வாகங்கள் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன.

    இந்த நிலையில் செங்க்சோவ் பகுதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பகுதியில் ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்களை தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு 3 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.

    இந்த தொழிற்சாலையில் பல ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இந்த நிலையில் ஊரடங்குக்கு பயந்து ஊழியர்கள் பலர் ஐ-போன் தொழிற்சாலையில் இருந்து தப்பி ஓடுகிறார்கள். தொழிற்சாலையின் வேலியில் ஏறி, தாண்டி குதித்து ஊழியர்கள் தப்பி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    ஊரடங்கு காரணமாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ஊழியர்கள் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த ஊர்களுக்கு நடைப்பயணமாக செல்ல தொடங்கினர். அவர்கள் சாலையோரம், வயல்வெளிகள், மலைகளிலும் சிறிது நேரம் தஞ்சம் அடைந்தபடி மெதுவாக நடந்து செல்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

    சொந்த ஊர்களுக்கு நடைபயணமாக செல்லும் ஊழியர்களுக்கு உள்ளூர் மக்கள் இலவச விநியோக நிலையங்கள் அமைத்து உணவு வழங்குகிறார்கள்.

    • ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • சீனாவில் மக்கள் போராட்டம் எதிரொலியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது.

    பீஜிங்:

    இரண்டரை ஆண்டுகளாக உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா பெருந்தொற்று சீனாவின் வுகான் நகரில் 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்டது. அதன்பின் பல்வேறு நாடுகளில் பல அலைகளாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தியது. கடும் ஊரடங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பிற நாடுகளை விட பரவலை முன்பே சீனா கட்டுப்படுத்தி இருந்தது சர்வதேச நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    இதற்கிடையே, மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன்படி, சீனாவில் புதிதாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கொரோனா அதிகரிப்பை முன்னிட்டு பல்வேறு மாகாணங்களில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்தது.

    அரசின் இந்த ஊரடங்குக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பூஜ்ய கொரோனா கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக கோரியும் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி மெழுகுவர்த்திகளை ஏந்தியபடியும், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஒரு தசாப்தத்திற்கு முன் ஜின்பிங் பதவியேற்றதில் இருந்து, இதுவரை இல்லாத வகையிலான அரசுக்கு எதிரான மக்களின் இந்த போராட்டம், மக்களின் மிக பெரிய கீழ்படியாமை தன்மை என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், புதிதாக கொரோனா பாதிப்புகள் உச்சமடைந்து வரும் சூழலில், மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக மாவட்ட அளவிலான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தி வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், 7 மாவட்டங்களில் தற்காலிக ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

    கிழக்கு பீஜிங் நகரில் லேசான அறிகுறிகள் ஏற்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு பதிலாக, வீட்டிலேயே தங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த மாடியிலேயே உள்ள அண்டை வீட்டுக்காரர்கள் மற்றும் அந்த தளத்தில் இருந்து மேலே மற்றும் கீழே என 3 மாடியில் வசிக்கும் மக்களும் வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனை பெருமளவிலான மக்கள் வரவேற்று உள்ளனர்.

    மத்திய சீனாவில் சூப்பர் மார்க்கெட்டுகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவு விடுதிகளை மீண்டும் தொடங்குவதற்கான வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    ஆனாலும் பரிசோதனைகள், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் கொள்கைகளுக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென அரசு வலியுறுத்தி உள்ளது.

    • கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.
    • காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் முதன்முறையாக கொரோனோ தொற்று கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கான மக்களை காவு வாங்கி விட்டது. தடுப்பூசி, ஊரடங்கு போன்ற நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அது அடுத்தடுத்து உருமாறி இன்னும் இந்த நோயின் தாக்கம் இருந்து கொண்டு தான் உள்ளது.

    இந்த சூழ்நிலையில் சீனாவில் மீண்டும் காய்ச்சல் தொற்று அதிகரித்து வருகிறது. தினமும் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

    நோய் தொற்று வேகமாக பரவ தொடங்கி உள்ளதால் அதனை கட்டுப்படுத்த சீனாவில் பல நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    சீயான் மற்றும் ஷாங்கி நகரங்களில் தான் இதன் வேகம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து காய்ச்சலால் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து சிகிச்சை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது.

    • ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின.
    • ஹைசன் நகரில் வீடு வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    பியாங்யாங்:

    வடகொரியாவில் சீன நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ரியாங்காங் மாகாணத்தின் ஹைசன் நகரில் வடகொரியா ராணுவத்தின் 7-வது படை பிரிவினர் எல்லை பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர். இந்த மாத தொடக்கத்தில் அவர்கள் ஹைசன் நகரில் இருந்து திரும்ப தொடங்கினர்.

    அப்போது ராணுவ வீரர்களிடம் இருந்து 653 துப்பாக்கி குண்டுகள் மாயமாகின. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தாங்களாகவே மாயமான துப்பாக்கி குண்டுகளை தேடினர். ஆனால் பல நாட்களாக தேடியும் அவர்களால் துப்பாக்கி குண்டுகளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    அதை தொடர்ந்து அவர்கள் இந்த விஷயத்தை தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தினர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து இந்த விவகாரம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    உடனடியாக அவர், துப்பாக்கி குண்டுகள் மாயமான ஹைசன் நகரில் முழு ஊரடங்கை அமல்படுத்தி, துப்பாக்கி குண்டுகள் கிடைக்கும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்தார்.

    மேலும் இது தொடர்பான விசாரணைக்கு தீவிரமாக ஒத்துழைக்குமாறு அங்குள்ள தொழிற்சாலைகள், பண்ணைகள், சமூகக் குழுக்கள் மற்றும் சுற்றுப்புற கண்காணிப்பு பிரிவுகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அதை தொடர்ந்து, ஹைசன் நகரில் வீடு, வீடாக சென்று அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    • தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

    தேனி:

    இந்தியாவில் மக்கள் தொகை உலகிலேயே முதலிடம் பிடித்து சீனாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.

    குடும்ப நலத்துறை அதிகாரிகள் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களை ஆய்வு செய்து அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காலகட்டத்தில் இந்த பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    அதன் விளைவாக ஒருபெண்ணுக்கு 3 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உயர் விகித பிறப்பு எனப்படும் இதனை கண்டறிந்து 2 குழந்தைகளுக்கு மேல் மகப்பேறு அடையும் பெண்களுக்கு குடும்ப நல அறுவை சிகிச்சை செய்ய பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து மாவட்ட குடும்பநலத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், தேனி மாவட்டத்தில் உயர் விகித பிறப்பு 36 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திேலயே இது முதலிடம் ஆகும். இதனை குறைக்க குடும்ப நலத்துறை இலக்கு நிர்ணயித்து லேப்ராஸ்கோப்பி குடும்ப நல அறுவை சிகிச்சை நடத்தி வருகிறோம். கம்பம், பெரியகுளம், அரசு ஆஸ்பத்திரிகளில் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை தினந்தோறும் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்தால் ஆஸ்பத்திரியில் தங்காமல் ஒரே நாளில் வீட்டுக்கு சென்று விடலாம். தொற்று, வலி இருக்காது என்றார். குறிப்பாக மாவட்டத்தில் மலை கிராமங்களில் உள்ள மக்களிடம் அதிக குழந்தை பேறினால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்வதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    • இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர்.
    • இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    ஈராக்கின் கிர்குக் நகரில் பல இன மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் குர்திஷ் இன மக்களுக்கும், துர்க்மென் மற்றும் அரேபியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுட்டும், கற்கள் மற்றும் கண்ணாடிகளை எறிந்தும் மோதிக் கொண்டனர். இது பயங்கர கலவரமாக வெடித்தது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.

    பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து சென்று வன்முறையை அடக்கினர். இந்த மோதலில் குர்தீஷ் இனத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் காயம் அடைந்தனர். 2 பேர் மார்பிலும், ஒருவர் தலையிலும் சுட்டு கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதார ஆணைய இயக்குனர் ஜியாத் கலப் தெரிவித்தார். இந்த இன மோதல் காரணமாக அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    • நேற்று முன்தினம் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், 5 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
    • பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

    மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் ஏற்பட்டு, பின்னர் வன்முறையாக மாறியது. மே மாதம் 3-ந்தேதியில் இருந்து வன்முறை பரவத் தொடங்கியது. இந்த வன்முறையில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    மணிப்பூரின் படிப்படியாக வன்முறை குறைந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கிடையே பள்ளத்தாக்கில் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் இருந்து தடுப்பு நடவடிக்கையாக பிஷ்னுபுர், காக்சிங், தவுபால், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இந்த 5 மாவட்டங்களிலும் இன்று மீண்டும் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காக்சிங், இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு ஆகிய மாவட்டங்களில் சாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. தவுபால் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்பட்டுள்ளது. பிஷ்னுபூர் மாவட்டத்தில் காலை 5 மணி முதல் காலை 11 வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.

    இந்த ஊரடங்கு தளர்வு அதிகாரியிடம் உரிய ஒப்புதல் பெறாமல், கூட்டம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது பேரணி போன்றவற்றத்தில் ஈடுபடக்கூடாது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

    • கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
    • உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது

    கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.

    கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.

    மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

    இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.

    உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.

    சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:

    புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

    இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.

    இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • துப்பாக்கி சூட்டில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.
    • முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார்.

    மணிப்பூர் மாநிலத்தின் தௌபால் மாவட்டத்தின் லிலாங் சிங்காவ் பகுதிக்குள் காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் பொது மக்களை நோக்கி நடத்திய திடீர் துப்பாக்கி சூடு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பொது மக்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர். திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் ஊடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தௌபால் மட்டுமின்றி இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

     


    திடீர் துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஆவேசம் அடைந்த உள்ளூர்வாசிகள் மூன்று நான்கு-சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தனர். அந்த வாகனங்கள் யாருக்கு சொந்தமானவை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இன்று நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் பைரன் சிங் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்கும் பணிகளில் காவல் துறை செயல்பட்டு வருகிறது. விரைவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டப்படி தண்டிக்கப்படுவர் என அவர் மேலும் தெரிவித்தார்.  

    • நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
    • கலவரத்தால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.

    புவனேஸ்வர்:

    ஒடிசாவின் பாலசோர் நகரில் உள்ள புஜாக்கியா பிர் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர் அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் ரத்தத்தை சாலையில் வழிந்தோடவிட்டதாகக் குற்றம்சாட்டி நேற்று அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் சாலையில் அமர்ந்து தர்ணா நடத்தினர். அப்போது தர்ணாவில் ஈடுபட்டவர்கள் மீது எதிர்தரப்பிலிருந்து கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

    இதையடுத்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினர். இந்தக் கலவரத்தில் போலீசார் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரி மோகன் சரண் மாஜி, பாலசோர் மாவட்ட கலெக்டரை தொடர்புகொண்டு அங்குள்ள கள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். இந்தக் கலவரத்தால் பாலசோர் பகுதி முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாலசோர் பகுதியில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. கலவரம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×