search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகழாய்வு பணி"

    • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது.
    • சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    செய்துங்கநல்லூர்:

    கடந்த 2020-ம் ஆண்டு நடந்த மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்து இருந்தார்.

    இதையடுத்து ஆதிச்சநல்லூரில் முதல்கட்டமாக அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து அருங்காட்சியக பணிகளும் நடந்து வருகிறது.

    இதற்கிடையில் ஆதிச்சநல்லூரில் புதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய ஆதிச்சநல்லூரை சுற்றியுள்ள திருக்கோளூர், அகரம், கொங்கராயகுறிச்சி, ஆதிச்சநல்லூர், கருங்குளம் ஆகிய 5 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முதல் முறையாக வாழ்விடப்பகுதிகளை கண்டறிய திருக்கோளூரில் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் தற்போது வரை 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அகழாய்வு பணியில் இடைக்கால நாணயங்கள், வெண்கல வளையல், வெண்கல மோதிரம், கண்ணாடி மணிகள், சுடுமண் மணிகள், சுடுமண் சிலைகள், கண்ணாடி வளையல் துண்டுகள், சீன பானை ஓடுகள் என 324 தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன.
    • கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தொல்லியல் துறையினரால் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இதில் பண்டைய கால தமிழர்களின் வரலாற்றுக்கு சான்றாக பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்தன. சிந்து சமவெளிக்கு நிகராக கீழடி வைகை நாகரிகம் விளங்கி இருக்கும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக கீழடி அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, ஆகிய பகுதிகளில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன.

    கடந்த ஏப்ரல் மாதம் கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது.

    9 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த அகழாய்வில் தங்க அணிகலன், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சூடு மண்ணால் செய்யப்பட்ட விலங்கின் உருவங்கள், ஆட்ட காய்கள், வட்டச் சில்லுகள், கண்ணாடி மணிகள், செப்பு ஊசி, எலும்பினால் செய்யப்பட்ட கூர்முனை கள் என 183 தொல்பொருட்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் 4 அகழாய்வு குழிகளில் 35 சென்டிமீட்டர் ஆழத்தில் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவை கொண்டு அமைக்கப்பட்ட தரைத்தளமும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரைத்தளம் 3 செ.மீ. முதல் 6 சென்டி மீட்டர் தடிமனுடன் காணப்படுகிறது.

    9-ம் கட்ட அகழாய்வு பணியில் பானை ஓடுகள், எலும்பு மற்றும் கரி மாதிரிகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அறிவியல் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படும் என தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
    • விரைவில் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிட த்தக்கது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது.

    தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழி களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்நிலையில் அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரிய மூட்டும் விதமாக 4 வளையங்களைக் கொண்ட இந்த வெண்கல வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த முதுமக்கள் தாழி 30 சென்டி மீட்டர் அகலம் மற்றும் 58 சென்டி மீட்டர் உயரம் கொண்டது. இது வளைந்த மற்றும் விரல்தடம் பதித்த வாய்ப்பகுதி கொண்டதாக இருந்தது. இச்சிறிய அளவிலான ஈமத்தாழியில் 2, 3 ஈமப்பொருட்களே வைக்கப்பட்டிருந்தது. இதன் உள்ளே மிகச்சிறிய அளவிலான மண்டை ஓட்டின் எலும்பு மற்றும் கை எலும்பு கிடைத்தது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட வளையல்களானது 3.5 சென்டி மீட்டர் விட்டமும், 0.2 சென்டி மீட்டர் கன அளவும், 22 கிராம் எடையும் கொண்டு அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளும் வடிவில் 4 வளைய ங்களைக் கொண்டதாக உள்ளது. இந்த வளையல் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த வெண்கல வளையல்கள் ஆகும். ஈமத்தாழி, மண்டை ஓடு, வளையல்கள் ஆகியவற்றின் அளவைக் கொண்டு இது 5 முதல் 8 வயது வரையிலான குழந்தை யுடையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

    மற்றொரு முதுமக்கள் தாழியில் உயர் அளவிலான வெள்ளீயம் கலந்த இரண்டு வெண்கலகாப்பு 2 மீட்டர் ஆழத்தில் கிடைத்தது. இந்த முதுமக்கள் தாழியில் குவளை, கிண்ணம், தட்டு, பிரிமனை போன்ற பல ஈமப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. ஈமத்தாழியின் உள்ளே மண்டை ஓடு, கைகால் எலும்புகள் உடைந்த நிலையில் கிடைத்தது. இதன் உள்ளே 4 ஈமப்பானைகள், 22 சென்டி மீட்டர் நீளமுள்ள இரும்பாலான குறுவாள், 5.5 சென்டி மீட்டர் விட்டமும், ½ சென்டி மீட்டர் கன அளவும், 24 கிராம் எடையும் கொண்ட இரண்டு காப்பு வடிவிலான வளையல்கள் ஆகியவை வைக்கப்பட்டிருந்தது. இதுவும் அளவுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்ளு ம் வடிவில் உருவாக்கப்ப ட்டிருந்தது.

    விரைவில் ஆதிச்ச நல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ளது குறிப்பிட த்தக்கது. 

    • வெம்பக்கோட்டையில் விரைவில் தொடங்க உள்ள 2-ம் கட்ட அகழாய்வு பணி தொடங்கப்பட உள்ளது.
    • அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள வெம்பக்கோட்டை வைப்பற்றின் வடகரையில் அமைந்துள்ள உச்சிமேட்டில் 25 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் மேட்டில் கடந்த ஆண்டு முதலாம் கட்ட அகழாய்வு நடைபெற்றது.

    அகழாய்வில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தம் மூலம் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பதக்கம், சுடுமண்ணாலான தொங்கட்டான், பகடைக் காய், அழகிய வேலைப்பாடு களுடன் கூடிய சுடு மண் அகல் விளக்கு, அழகிய கலை நயம் மிக்க கண்கவர் குவளை உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில் 2-ம் கட்ட அகழாய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மீண்டும் 2-ம் கட்ட அகழாய்வு தொடங்க உள்ளதாக தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

    முதல் கட்ட அகழாய்வின் முடிவில் சங்கு வளையல்கள் இங்கு தயரிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும், அவைகள் வெளி நாடுகளில் வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு தொன்மையான பொருட்கள் கண்டறியப் பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியை 2ம் கட்ட அகழாய்வில் அறிய முடியும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரி வித்துள்ளனர். இதன் மூலம் தமிழர்கள் வெளி நாடுகளுடன் கொண்டுள்ள வணிக தொடர்பை அறிய முடியும்.

    • முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக இன்று அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது.
    • ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 3 இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் தொடங்கியது. அகழாய்வு பணியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார்.

    இந்த அகழாய்வு பணியில் 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்க கால வாழ்விடப் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இந்த பணிகள் கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது.

    இந்நிலையில் தொடர்ந்து ஆதிச்சநல்லூர் பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கு அனுமதி பெற உள்ளதாகவும் அனுமதி கிடைத்த பின்னர் வாழ்விடப் பகுதிகளை கண்டறிவதற்கான அகழாய்வு பணிகள் தொடங்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில் கடந்த வருட இறுதியில், ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்விடப் பகுதிகளை கண்டறிய 5 இடங்களில் அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம் அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய 5 இடங்களில் மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் முதல் கட்டமாக ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள திருக்கோளூரில் முதல் கட்டமாக இன்று அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. தொடர்ந்து மற்ற பகுதிகளிலும் இந்த அகழாய்வு பணிகள் நடைபெறும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆதிச்சநல்லூரில் இதுவரை புதைவிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் மிகப்பெரிய அளவில் வாழ்விடப் பகுதியில் எங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த பணிகளை மத்திய தொல்லியல் துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ், ஏரல் தாசில்தார் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஆய்வாளர் எத்தீஸ் குமார், முத்துக்குமார், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெம்பக்கோட்டையில் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • கடந்த செப்டம்பர் மாதத்தில் முதல்கட்ட பணிகள் நிறைவடைந்தது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜய கரிசல்குளம் பகுதியில் தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதத்தில் அகழாய்வு பணிகள் நடந்தது.

    அதில் ஏராளமான சங்கு வளை யல்கள், அயல் நாட்டு வர்த்தகத்திற்கு பயன்படுத் தக்கூடிய முத்திரைகள், சதுரங்க கட்டைகள், சிறுவர்கள் விளையாட பயன்படுத்திய சில்வட்டுகள், விசில், அணிகலன்கள், பெண்கள் அணியக்கூடிய தங்க ஆபரணங்கள், மண்பானைகள், தங்க காசுகள், சூது பவளம் தக்கலி, சுடுமண்ணால் ஆன பொம்மைகள், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட பண்டைய கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

    இதற்காக 25 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. 15 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதத்தில் பணிகள் நிறைவடைந்தது. முதலாவது அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் விருது நகரில் நடந்த புத்தக கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.

    அதை ஏராளமானோர் பார்வையிட்டனர். புத்தக கண்காட்சியில் சில பொருட்கள் மட்டுமே பார்வைக்கு வைக்கப் பட்டன. முழுமையாக எடுக்கப்பட்ட பொருட்களை சிவகாசி அல்லது வெம்பக் கோட்டையில் அருங்காட்சியமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    2-வது கட்ட அகழாய்வு பணி ஜனவரி மாதத்தில் தொடங்கப்படலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் இன்னும் 2-வது கட்ட பணி தொடங்கப்படாமல் உள்ளது. எப்போது தொடங்கும் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும் இல்லை.

    2-வது கட்டப்பணி தொடங்கினால் மேலும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் கிடைப்பதுடன் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 2-ம் கட்ட அகழாய்வை உடனே தொடங்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது.

    • அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார்.
    • முதல் கட்ட அகழாய்வில் மொத்தம் 1,010 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப்பேரரசின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் இராசராசனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் இராசேந்திரனால் சோழநாட்டின் தலைநகராக இந்நகரம் தோற்றுவிக்கப்பட்டது.

    கங்கைகொண்டசோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதையும் சோழப்பேரரசர்களின் அரசியல் தளமாக மாற்றப்பட்டதையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைகொண்டசோழபுரத்தை உருவாக்கிய முதலாம் இராசேந்திரனின் ஆட்சியின் போது, முடிகொண்டசோழன் திருமாளிகை, கங்கை கொண்ட சோழன் மாளிகை, சோழகேரளன் திருமாளிகை என்ற பெயர்களில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த 11.2.2022 அன்று தொடங்கி வைத்தார். சோழப் பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும்.

    கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள மாளிகைமேட்டில் அகழாய்வு மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன.

    அதன்படி, புதையுண்ட செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட சான்றுகளின் மூலம் கட்டடப்பகுதிகள் செங்கற்களின் அடிப்பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், கிடைக்கப்பெற்ற செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன.

    செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உலோகப் பொருட்கள் குறிப்பாக அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினாலான பொருட்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினாலான பொருட்கள், வட்டச்சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    செலடன் மற்றும் போர்சலைன் எனப்படும் சீனப் பானையோடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. இவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பை வெளிப்படுத்துகின்றன.

    கங்கைகொண்டசோழபுரம் (மாளிகைமேடு) அகழாய்வுப் பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 19 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் மொத்தம் 1010 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 


    இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.11.2022) அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது.
    • அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ஸ்ரீபரும்புதூர்:

    ஒரகடம் அருகே வடக்குப்பட்டு ஊராட்சி பகுதியில் பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொல்பொருட்கள் கிடைத்து இருந்தது.

    மேலும், வடக்குப்பட்டில் பாதுகாக்கப்பட்ட மூன்று தொல்லியல் மேடுகள் உள்ளன. அந்த மேடுகளில், அகழாய்வு செய்ய, மத்திய தொல்லியல் துறையினர் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் முதல் கட்டமாக வடக்குப்பட்டில் உள்ள ஒரு தொல்லியல் மேட்டில் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில் அகழாய்வு செய்ய காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கிடைத்தது.

    இதையடுத்து வடக்குப்பட்டில் அகழாய்வு பணிகள் இன்று தொடங்கியது. இதில், சிறப்பு அழைப்பாளராக கீழடி அகழாய்வு பணிகளை மேற்கொண்ட பிரபல தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு அகழாய்வு பணிகளை தொடங்கி வைத்தார்.

    சென்னை வட்டார தொல்லியல் கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் 3 மாதம் அகழாய்வு பணியில் ஈடுப்பட உள்ளனர். இந்த அகழாய்வின் மூலம் வடக்குப்பட்டில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று தொடக்க காலம் முதல் உள்ள வாழ்விடச் சான்றுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் இந்த அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தொல்லியல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.

    ×