என் மலர்
நீங்கள் தேடியது "சாதி சான்றிதழ்"
- ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
- சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
இசை வேளாளர் சாதிச் சான்றிதழ்களை இசை வெள்ளாளர் எனத் தவறான பெயரில் வழங்கப்பட்டு வருவதாக இசை வேளாளர் இளைஞர் கூட்டமைப்பின் நிறுவனர் குகேஷ் சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தன் மகளுக்குச் சாதிச் சான்றிதழ் கோரி மாம்பலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தபோது இசை வேளாளர் என்பதை இசை வெள்ளாளர் எனக் குறிப்பிட்டுச் சாதிச் சான்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
* ஒரு நபரின் சமூகத்தைக் குறிப்பிடும்போது எழுத்துப் பிழைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
* தமிழ், ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக எழுத்துப்பிழை இன்றி சாதி சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.
* சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ், ஆங்கிலத்தில் வேறு வேறாக இருக்கக்கூடாது.
* சாதி சான்றிதழ்களில் எழுத்து பிழைகள் இல்லாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் மனுதாரரின் மகளுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழ்களில் உள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்து கொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.
- பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடைபடுகிறது.
- எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் சாதி சான்றிதழ் வேண்டி தமிழக ஆதியன் பழங்கு–டியின மக்கள் நலச்சங்க மாநில தலைவர் வீரைய்யன் தலைமையில் போராட்டம் நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது :
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 35 ஆதியன் பழங்குடி இனத்தை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த இனத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு இது வரை சாதி சான்றிதழ் வழங்காததால் பள்ளி மாணவர்களின் படிப்பு பாதியிலேயே தடை படுகிறது.
பட்டுகோட்டை மேல ஓட்டங்காடுமற்றும் துறைவிக்காடு, சுக்கிர ன்பட்டி, சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ளவ–ர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க–ப்பட்டுள்ளது. இது போல் எங்கள் பள்ளி மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ்வழங்கிட கும்பகோணம் கோட்டாட்சியருக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
- பிளஸ்-2 தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்ற மாணவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
- சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதால் தனக்கு உயர் கல்வி சேர இயலவில்லை என அதில் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த சுரேஷ்பாபு மகன் நந்தகுமார்(வயது 19). இவர் கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது நடைபெற்ற பொது தேர்வில் கணக்கு பதிவியல் பாட பிரிவில் 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் இன்று தனது தாய் நதியாவுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
அந்த மனுவில், சாதி சான்றிதழ் விண்ணப்பித்து 15 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்றும் இதனால் உயர் கல்வி சேர்வதற்கு பிரச்சினையாக உள்ளது.
அதேபோல் உயர் கல்வி படிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சாதி சான்றிதழ் கிடைக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இவற்றில் மலையாளி இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.
கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாய பணியில் ஈடுபட்டு வரும் இம்மக்களுக்கு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் சாதி சான்றிதழில் இதர வகுப்பினர் (ஓசி) என வழங்கப்படுகிறது.
இதே மலையாள இனத்தை சேர்ந்த மக்கள் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த மாவட்டங்களில் வருவாய் துறை மூலம் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் (எஸ்டி)எனக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தங்களுக்கு இதர வகுப்பினர் என சாதி சான்றிதழ் வழங்கப்படுவதற்கு பதிலாக தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்காக அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் மலையாளி இனத்தை சேர்ந்த மலை கிராம மக்கள் அரசு பணி மற்றும் அரசிடமிருந்து கிடைக்கப்படும் உதவிகள் எதுவும் வராததால் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தங்களுக்கான வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருவதாக கடம்பூர் மலையாளி பழங்குடியின சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் வசிக்கும் மலையாளி இன மக்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வலியுறுத்தி தங்கள் குழந்தைகளை கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை கடம்பூர் பஸ் நிலையம் அருகே மிகப்பெரிய அளவில் சாமியான பந்தல் அமைத்து அதில் பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் என 2000-க்கும் மேற்பட்ட மக்கள் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மதியம் 2 மணி வரை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் பேச்சுவார்த்தை நடத்த எந்த அதிகாரிகளும் முன்வராததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடம்பூர் பெட்ரோல் பங்க் அருகே சக்தி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபி ஆர்.டி.ஓ பிரியதர்ஷினி சம்பவ இடத்திற்கு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் இங்கு நேரடியாக வந்து எங்களிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று கூறினர்.
இதனால் போராட்டம் இரவு வரை தொடர்ந்து நடந்தது. இரவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை. தொடர்ந்து இரவு போராட்டம் நீடித்தது.
இந்நிலையில் நள்ளிரவு 12.30 மணியளவில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கடம்பூருக்கு நேரடியாக வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் எங்களுக்கு தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இதற்கு முன்பு இருந்த கலெக்டர் ஏற்கனவே இது சம்பந்தமாக ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் அனுப்பி உள்ளார். நானும் உங்கள் கோரிக்கை குறித்து அரசிடம் பேசி அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்.
எனவே உங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிடுங்கள் என்றார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் 14 மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
- நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- உரிய ஆதார ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தருமபுரி,
நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தருமபுரி உதவி கலெக்டர் கீதாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ள உதவி கலெக்டர்கள் நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக வழிகாட்டி நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தற்போது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள இந்த சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழை மின் வடிவிலான முறையில் பெற்றுள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களுக்கு புதிய மின் வடிவிலான சாதி சான்றிதழை வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
அட்டை வடிவிலான மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழ் வைத்து இருப்பவர்களின் சாதி சான்றிதழை ரத்து செய்து பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பாக புதிய இணைய தொகுப்பு உருவாக்க ப்பட்ட நிலையில் நரிக்குறவர் குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டு ள்ளது.
நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பிலிருந்து பழங்குடியினர் சமுதாயத்திற்கு மாற்றப்படுவதாக மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட 3.1.2023-ம் நாளிலிருந்து இந்த சமுதாயத்தினர் பழங்குடியினர் சாதி சான்றிதழ் பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.
எனவே புதியதாக குருவிக்காரர், நரிக்குறவர் சாதி சான்றிதழ் பெற தகுதி உள்ள நபர்கள் உரிய ஆதார ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதி சான்றிதழை அட்டை வடிவில் வைத்திருப்பவர்கள் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்து இ-சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தர்மபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை தாசில்தார்களும் தங்கள் தாலுகா கட்டுப்பாட்டில் உள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரர், நரிக்குறவர் சாதி சான்றிதழ் அட்டை பெற்று இருந்தால் அதை ரத்து செய்து இ-சாதி சான்றிதழ் வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதல் வேண்டும் என்று 40 பேர் மனு அளித்தனர்.
- மனுக்களை பெற்று கொண்டு சரி பார்த்த உடனே பயனாளிகளுக்கு வழங்கபடும் என உறுதியளித்தார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி ஒன்றியம் நெரிகம் ஊராட்சியில் உள்ள கரியசந்திரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர்மேலான்மைதுறை சார்பில் நரிக்குறவர், குருவிகாரன் சமுக இன மக்கள், பழங்குடி மக்களுக்கு சாதி சான்றில் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவானது ஒசூர் சார் ஆட்சியர் சரண்யா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 30 பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்கினார்.
இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி சான்றிதல் வேண்டும் என்று 40 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்று கொண்டு சரி பார்த்த உடனே பயனாளிகளுக்கு வழங்கபடும் என உறுதியளித்தார்
இந்த நிகழ்ச்சிக்கு சூளகிரி தாசில்தார் பண்ணீர் செல்வி, டெப்டி தாசில்தார் அம்மு, வருவாய் அலுவலர் குமரேசன், கிராம அலுவலர் கார்த்திக், ஊராட்சி மன்ற தலைவர் கங்கராஜ் துணைத் தலைவர் குருவா மற்றும் ஊழியர்கள் ஊர் பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர் . மேலும் இப்பகுதி பழங்குடியின மக்களுக்கு சான்றிதழ் வழங்கிய அரசுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவத்தனர்.
- முதன்முறையாக காணிக்கர் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
- 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் இன மக்களுக்கு முதல்முறையாக காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர் இன மக்களுக்கும் பழங்குடியினர் பிரிவில் காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அடுத்து பரமக்குடி சார் ஆட்சியில் அலுவலகத்தில் 17 நபர்களுக்கு காணிக்கர் என சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது. அதேபோல் 15 பேருக்கு பழங்குடியினர் (எஸ்.டி) என சான்றிதழ் வழங்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ, முருகேசன் காணிக்கர் சாதி சான்றிதழை வழங்கினார். இதில் பரமக்குடி உதவி ஆட்சியாளர் அப்தாப் ரசூல், பரமக்குடி தாசில்தார் ரவி, கமுதி தாசில்தார் சேதுராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக நரிக்குறவர் இன மக்களுக்கு காணிக்கர் என ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
- இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
- வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பட்டியல் இன எஸ்.சி சாதி சான்று கேட்டு பலமுறை மனு அளித்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி. தந்தையின் மறைவுக்கு பிறகு தாய் சரோஜாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 375 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவி ராஜேஸ்வரி, உயர்கல்வி கனவுகளுடன், கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளார்.
பன்னியாண்டி சமூகத்தை சேர்ந்த இவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை.
அப்போது சாதி சான்று இல்லாததால், மாணவியின் உயர்கல்வி கேள்வி குறியானது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 17-ந் தேதி விஷம் குடித்தார்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து, திருவண்ணாமலை போலீசார் மாணவி ராஜேஸ்வரியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த தனக்கு, எஸ்சி சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் வழங்கவில்லை. இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகளை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.
என்னுடன் படித்த மாணவிகள், கல்லூரியில் படிக்க செல்கின்றனர். சாதி சான்றிதழ் இல்லாததால், கல்லூரி படிப்பை தொடர முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற என்னுடைய கனவு, நிறைவேறாததால், மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தேன் என தெரிவித்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்தார். இது திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு பன்னியாண்டி சங்கத்தினர் சாதி சான்றிதழ் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்கள் இன்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் கூறுகையில்:-
பன்னியாண்டி சமூகத்தைச் சேர்ந்த மாணவி ராஜேஸ்வரி 12-ம் வகுப்பில் 367 மதிப்பெண் பெற்றும், சாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் மேல்படிப்பை தொடர முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.
இத்தனை ஆண்டுகள் ஆகியும் ஒரு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பது அரசாங்கத்தின் தோல்வியாக கருகிறோம்.
வேலூர் மாவட்ட அதிகாரிகள் பிரிட்டிஷ்காரர்களை போல் மக்களிடம் நடந்து கொள்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பன்னியாண்டி சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு உடனடியாக பட்டியலென எஸ்சி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் சாதிச் சான்றிதழ் கொடுக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றார்.
- உதவி கலெக்டர் வழங்கினார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
செய்யாறு அருகே அரும்பருத்தி கிராமத்தில் நரிக்குறவர்கள் 95 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கலெக்டர் முருகேஷ் உத்தரவின் பேரில் 145 நரிக்குறவர்கள் அளித்த விண்ணப்பத்தின் மீது செய்யாறு சப் கலெக்டர் ஆர். அனாமிகா அரும்பருத்தி கிராமத்திற்கு நேரில் சென்று வீடு வீடாக நரிக்குறவர்களிடம் விசாரணை செய்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அரும்பருத்தி நரிக்குறவர் காலணியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்யாறு தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் 145 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் கலைமதி ,கிராம நிர்வாக அலுவலர் முத்துராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- 500-க்குமேற்ப்பட்டோர் தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
- ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் சுமார் 171மலை கிராமங்களில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். கல்வராயன் மலையில் 8ஆயித்துக்கு மேற்பட்ட மாணவ -மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் உயர்நிலை, மேல்நிலை, மற்றும் கல்லூரிக்கல்வி பயில சுமார் 500-க்குமேற்ப்பட்டோர் மலைவாழ் சாதி சான்றிதழ் கேட்டு கல்வராயன்மலை தாலுகா அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்து 3 மாதங்களுக்கு மேலாகியும் வருவாய் துறையினர் கண்டு கொள்ளாமல் இருப்பதால் உயர்கல்வி பயில முடியாமல் அரசு நலத்திட்ட உதவிகள் பெற முடியாமல் அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி மாணவ -மாணவிகள் அவதிஅடைந்துள்ளனர்.
முன்பெல்லாம் சாதி சான்று கேட்டு விண்ண ப்பித்தால் 3 மாதத்திற்கு ஒருமுறை வருவாய் துறையி னர் மலைவாழ் மக்களிடம் நேரடியாக விசாரணை செய்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்குவார்கள். ஆனால் தற்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் மாணவ - மாணவிகள் சாதி சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ண ப்பித்தும் இதுவரை நேரடி விசாரணைக்கு அல்லது ஜாதி சான்றிதழ் கொடுப்பதற்கான அறிகு றியே இல்லாமல் இருக்கிறது. ஆகையால் மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்.
- சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15,000 மலையாளி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இனமக்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதி சான்று பெற்றுள்ளனர்.
ஆனால் ஈரோடு மாவ ட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்கின்றனர். இதனால் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடம்பூர் மலை குத்தியாலத்தூர் ஊராட்சி கரளியம், கல் கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பாளையம், அத்தியூர் உள்பட 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கைகள் அடங்கிய பதவிகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் 21 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள்.
- தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சென்னை:
சென்னை தாம்பரத்தை அடுத்த படப்பை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். 48 வயதான இவர் தனது மகனுக்காக சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.
இவரது வீடு காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ளதால் அங்குள்ள வருவாய் அலுவலகங்களுக்கு சென்று மனு செய்து முறையிட்டுள்ளார்.
ஆனால் மலைக்குறவன் இனத்தை சேர்ந்த வேல் முருகனுக்கு சாதி சான்றிதழ் வழங்குவதில் காலம் தாழ்த்தி இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் வேல்முருகன் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதையடுத்து அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஐகோர்ட்டுக்கு சென்று உயிரை மாய்த்துக்கொள்ள அவர் திட்டமிட்டார்.
இதன்படி நேற்று மாலை அவர் ஐகோர்ட்டு வடக்கு கோட்டை சாலையில் உள்ள நுழைவு வாயில் அருகே சென்றார்.
மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி வேல்முருகன் திடீரென தீக்குளித்தார். தீயில் எரிந்த நிலையில் ஐகோர்ட்டு வளாகத்துக்குள் ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினகரன் தீயில் கருகிய வேல் முருகனை காப்பாற்ற முயன்றார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் தினகரனுக்கும் காயம் ஏற்பட்டது. தீக்குளிப்பு சம்பவத்தால் ஐகோர்ட்டு வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
இதை தொடர்ந்து படுகாயம் அடைந்த வேல்முருகனை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு வேல்முருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடினார்கள். இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று காலை 6 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக எஸ்பிளனேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேல்முருகன் சாதி சான்றிதழுக்காக யார் யாரையெல்லாம் சந்தித்து பேசி உள்ளார்? எதற்காக சாதி சான்றிதழ் கொடுக்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்? என்பது போன்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தீக்குளித்த வேல்முருகன் உயிருக்கு போராடிய நிலையில் அளித்துள்ள வாக்குமூல வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் மகனுக்கு சாதி சான்றிதழ் கிடைக்காத காரணத்தினாலேயே தீக்குளித்தேன் என்று அவர் கூறுவது பதிவாகி இருக்கிறது.
தீயில் கருகிய நிலையில் வேல்முருகன் அளித்துள்ள இந்த வாக்குமூலம் கண்களை குளமாக்குகிறது.