search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடியூப்"

    • மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர்.
    • அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.

    கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.

    இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை போலீசார் விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மகாவிஷ்ணுவை வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், அரசுப் பள்ளியில் மூடநம்பிக்கை பரப்பி மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாக பேசிய மகா விஷ்ணுவின் வீடியோ, அவரது பரம்பொருள் அறக்கட்டளை யூடியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    • சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார்.
    • இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பித்தப்பை கல்லை அகற்றுவது எப்படி என யூடியூபைப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவரால் 15 வயது சிறுவன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

    தங்களது ஒப்புதலின்றி 'மருத்துவர்' அஜித்குமார் பூரி அறுவை சிகிச்சையைத் தொடங்கியதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து போலி மருத்துவர் தலைமறைவானார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

    • family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆக உயர்வு.
    • தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்வு.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைத்தளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இந்நிலையில் யூடியூப் தனது பிரீமியம் சந்தா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. Family Plan சேவைக்கான மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.189ல் இருந்து ரூ.299 ஆகவும், மாணவர் மாதாந்திர பிரீமியம் கட்டணம் ரூ.79ல் இருந்து ரூ.89 ஆகவும், தனிப்பட்ட ப்ரீமியம் சேவைக்கான கட்டணம் ரூ.129ல் இருந்து ரூ.149 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    தனிநபருக்கான ப்ரீபெய்ட் மாதாந்திர கட்டணம் ரூ.139ல் இருந்து ரூ.159 ஆகவும், தனிநபருக்கான ப்ரீபெய்ட் காலாண்டு (3 மாதம்) கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.459 ஆகவும், தனிநபருக்கான ஆண்டு கட்டணம் ரூ.1290ல் இருந்து ரூ.1490 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சேவையை தொடங்கி 5 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    • சூசன் 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.
    • கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி இன்று காலமானார்.

    சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நல பிரச்சனை காரணங்களால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

    சூசன் மரணத்திற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த என் நண்பர் சூசனின் இழப்பு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார். 

    • காம்பீர் குறித்து சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.
    • அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் காம்பீரின் சுபாவம் குறித்து அவரது இளமைக்கால  கிரிக்கெட் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்துள்ளார்.

     

    காம்பீரை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்த்து வரும் பரத்வாஜ், 12 -13 வயது சிறுவனாக இருக்கும்போது கூட காம்பீர் சிறிய தோல்வியையும் தாங்கிக்கொள்ள முடியாதவராகவே இருந்தார் என்று தெரிவித்துள்ளார். அப்போது மட்டுமல்ல இப்போதும் காம்பீர் ஒரு அப்பாவியான சிறுவன்தான். அவரால் பிறருக்கு தீங்கு நினைக்கவே முடியாது. ஒரு 12 வயது பையன் போலவே இப்போதும் அவர் உள்ளார்.

     

    பலர் அவர் திமிர்பிடித்தவர் என்று கருதுகின்றனர். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே அது தொடர்புடையது. சிறு வயதில் நெட்டுக்குள் அவரை நான் விளையாட வைப்பதுண்டு. அந்த மேட்ச்களில் தொற்றால் கூட காம்பீர் அப்படி அழுவார். அப்போதிருந்தே அவருக்கு தோல்வி என்றால் பிடிக்கவே பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.  

     

    • உடல் எடை குறைப்பு இன்ஃப்ளுயன்சராக பெரும் புகழ் அடைந்தார், மிலா
    • மிலா, எடை குறைப்புக்கு முன்னரும் பின்னரும் இருந்த நிலையை படங்களாக பதிவிட்டார்

    சமூக வலைதளங்களின் வழியாக பல்வேறு விஷயங்களை குறித்து தங்கள் கருத்துகளை கூறி, மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துபவர்கள் "இன்ஃப்ளுயன்சர்கள்".

    முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர், அமெரிக்காவை சேர்ந்த 35 வயதான மிலா டி ஜெசுஸ் (Mila de Jesus).

    தென் அமெரிக்க நாடான பிரேசிலில் பிறந்த மிலா, அமெரிக்க மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநில பாஸ்டன் நகரில் வசித்து வந்தார்.

    அதிக உடல் எடையால் அவதிப்பட்டு வந்த மிலா, சுமார் 6 வருடங்களுக்கு முன் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து, அவரது உடல் மெலிவடைந்து அவர் விரும்பிய உடல் அமைப்பை பெற்றார்.

    மிலா, உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சைக்கு முன்னரும் பின்னரும் தனது உடல் இருந்த நிலையை புகைப்படங்களாக வெளியிட்டார்.

    தனது சமூக வலைதள பக்கங்களில் இது குறித்து விரிவாக பதிவிட்ட மிலாவை பல்லாயிரக்கணக்கான பயனர்கள் பின் தொடர்ந்தனர்.

    இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் சுமார் 60 ஆயிரம் பேரும், யூடியூப் வலைதளத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் மிலாவை பின் தொடர்ந்தனர்.

    மேலும், மிலா பல அழகு குறிப்புகளை தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.

    இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று மிலா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

    தனது முந்தைய திருமண வாழ்க்கையின் மூலம் 4 குழந்தைகளுக்கு தாய் ஆன மிலா, 4 மாதங்களுக்கு முன் மறுமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மிலாவின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்க்க முடியும்.
    • யூடியூப் தளத்திற்குள் நேரடியாக விளையாடலாம்.

    வீடியோக்களுக்கான உலகின் முன்னணி வலைதளமாக யூடியூப் செயல்படுகிறது. இணையத்தில் விளம்பரங்களை தடுக்க செய்யும் ஆட் பிளாக்கர் (Ad Blocker) சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கில் யூடியூப் தனது பிரீமியம் சந்தாவில் (Premium Subscription) சேரும் படி பயனர்களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    மேலும் பிரீமியம் சந்தாவில் புதிய வசதிகளை செயல்படுத்தும் பணிகளில் யூடியூப் தொடர்ந்து மும்முரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில், யூடியூப் பிரீமியம் சந்தாவின் கீழ் கேமிங் செய்வதற்கான வசதியை யூடியூப் அறிமுகம் செய்துள்ளது. புதிய அறிவிப்பின் படி பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா வாங்கும் போது விளம்பரங்கள் இல்லா வீடியோக்களை பார்ப்பதோடு, கேமிங் சேவையை பயன்படுத்த முடியும்.

    புதிய கேமிங் சேவை "யூடியூப் பிளேயபில்ஸ்" (Youtube Playables) என்று அழைக்கப்படுகிறது. இதற்காக யூடியூப் டெஸ்க்டாப் மற்றும் மொபைல் தளங்களில் புதிய பிரிவு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த பிரிவில் பயனர்கள் விளையாடுவதற்காக நிறைய கேம்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவற்றை பயனர்கள் யூடியூப் தளத்திற்குள்ளேயே நேரடியாக விளையாட முடியும்.

    யூடியூப் பிளேயபில்ஸ் சேவை பிரீமியம் சந்தா வைத்திருப்போருக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கேம்களை தற்போதைக்கு டெஸ்க்டாப்-இல் இலவசமாக விளையாட முடியும். மொபைல் செயலியிலும் யூடியூப் பிளேயபில்ஸ் கிடைக்கிறது. எனினும், யூடியூப் பிரீமியம் வைத்திருப்போர் கூட இதில் உள்ள கேம்களை விளையாட முடியாது. அந்த வகையில், இந்த சேவை இன்னும் முழுமையாக வெளியாகவில்லை என்றே தெரிகிறது.

    புதிய கேமிங் சேவையை பயன்படுத்த விரும்புவோர், யூடியூப் -- எக்ஸ்புளோர் -- யூடியூப் பிளேயபில்ஸ் போன்ற ஆப்ஷன்களில் இயக்க முடியும். இந்த சேவையில் கேம்கள் பல்வேறு பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதில் எளிதான கேம்களும் உள்ளன. கடினமான கேம்களும் உள்ளன. முதற்கட்டமாக பயனர்கள் யூடியூப் பிளேயபில்ஸ்-இல் உள்ள கேம்களை இலவசமாக விளையாட முடியும்.

    அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதிக்கு பிறகு கேம்களை யூடியூப் பிரீமியம் பயனர்களுக்கு தொடர்ந்து வழங்குவது பற்றி யூடியூப் முடிவு செய்ய உள்ளது. தற்போதைக்கு கேம்கள் இலவசமாக வழங்கப்படுவதால், பயனர்கள் யூடியூப் பிரீமியம் சந்தா செலுத்தாமலும் கேம்களை விளையாடி பார்க்க முடியும்.

    • யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.
    • ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் ஆன்லைன் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

    இந்நிலையில் பகுதி நேர வேலை தருவதாக கூறி யூடியூப் லிங்கை கிளிக் செய்ய வைத்து ஒரு கும்பல் புதுவித ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில் பணத்தை பறித்து வருகிறது.

    இதுதொடர்பாக சென்னை சைபர் குற்றப் பிரிவு போலீசார் கூறியதாவது:

    தற்போது ஆன்லைன் மூலம் புதிய வகை மோசடி நடந்து வருகிறது. பகுதி நேர வேலை தருவதாக வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் அனுப்புவார்கள். என்ன வேலை என்று ரிப்ளை செய்தால் 'யூடியூப் வீடியோவை லைக் செய்வது' என்று பதில் அளிப்பார்கள்.

    அதன்படி அவர்களின் யூடியூப் வீடியோவை லைக் செய்தால் ரூ.50 முதல் ரூ.500 வரை உடனடியாக பணம் வரும். பின்னர் அவர்கள் நம்மை டெலிகிராம் குரூப்பில் இணைத்து விடுவார்கள். அதில் பகுதி நேர வேலை, முதலீடு என்று 2 வாய்ப்பு தருவார்கள். பகுதி நேர வேலையை தேர்வு செய்தால் ஒரு வேலையை கொடுப்பார்கள். அதற்கு மிக குறைந்த அளவு பணம் கட்ட வேண்டும். அதில் பல படிநிலைகள் இருக்கும்.

    முதல் 2 படிநிலைகள் எளிதாக இருக்கும். அதை செய்து முடித்தவுடன் முதலீடு செய்த பணம் போக 30 முதல் 60 சதவீதம் பணம் நமக்கு கமிஷனாக கிடைக்கும்.

    இப்படி ரூ.13 ஆயிரம் வரை பணத்தை திரும்ப நமக்கு தருவார்கள். அதற்கு அடுத்த படிநிலையில் முதலீடு செய்யும் தொகை ரூ.5 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என படிப்படியாக ரூ.5 லட்சம் வரை உயர்ந்து கொண்டே செல்லும்.

    நாம் அவர்கள் கொடுக்கும் பணியை முடித்துவிட்டால் நமக்கு கமிஷன் தொகை கிடைக்கும் என்று நினைத்திருப்போம். அதாவது நாம் ரூ.10 லட்சம் கட்டி இருந்தால் கமிஷன் தொகை 50 சதவீதத்தையும் சேர்த்து ரூ.15 லட்சம் நமக்கு கிடைக்க இருப்பதாக டிஸ்பிளேயில் காட்டும்.

    அதனால் ஆர்வத்துடன் ரூ.10 லட்சத்தை செலுத்தினால் அதன்பிறகு பணத்தை எடுக்க முடியாது. உங்கள் கணக்கு முடங்கிவிட்டது. பணத்தை எடுக்க வேண்டும் என்றால் உங்களுக்கு வர வேண்டிய ரூ.15 லட்சத்துக்கு 20 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். அதை செலுத்தினால் முழு பணமும் கிடைத்துவிடும் என்பார்கள்.

    இல்லாவிட்டால் நீங்கள் செய்த பணி தவறாகிவிட்டது. எனவே நீங்கள் இருக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு உங்கள் பணம் பகிர்ந்து அளிக்கப்பட்டுவிட்டது என்று கூறுவார்கள். இப்படி ஒவ்வொரு காரணமாக கூறி உங்களிடம் வெவ்வேறு வழிகளில் பணத்தை பறித்துக் கொண்டே இருப்பார்கள். அதன்பிறகு எந்த பணமும் நமக்கு வராது.

    நமக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் பகுதி நேர வேலை என்பதற்கு பதிலாக முதலீடு என்று தேர்வு செய்தால் நமது சேமிப்பு பணம் முழுவதையும் முதலீடு செய்ய வைத்து அதிக வட்டி தருவதாக கூறி நமது பணத்தை மோசடி செய்து விடுவார்கள்.

    எனவே, இதுபோன்ற ஆன்லைன் மோசடியில் பொது மக்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி நீங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியிலும் புகார் அளிக்கலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • யூடியூப் நிறுவன சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகியுள்ளார்.
    • புதிய சி.இ.ஓ.வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கலிபோர்னியா:

    யூடியூப் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக பதவி வகித்து வந்த சூசன் வோஜ்சிக்கி அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நலக் காரணங்களால் 9 ஆண்டுகளாக இருந்த சி.இ.ஓ பதவியிலிருந்து நேற்று விலகினார்.

    இந்நிலையில், யூடியூப் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீல் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    • வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பாலாஜி தியேட்டர் எதிரே உள்ள சாந்திநகர் விரிவு 2-வது குறுக்கு தெருவில் நேற்றிரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டது.

    உடனே அங்கிருந்தவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது சாலையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த பள்ளி மாணவர்களை அழைத்து செல்லும் வாகனத்தின் கண்ணாடி சேதமடைந்திருந்தது. இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அந்த வாகனத்தின் அருகே கூழாங்கற்கள் சில சிதறி கிடந்தது. வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து சோதனை நடத்தினர். அந்த இடத்தில் கூழாங்கற்கள் மற்றும் பட்டாசு வெடிமருந்தை தவிர வேறு எதுவும் இல்லாததால் வெடிக்கப்பட்டது நாட்டு வெடிகுண்டா என்பதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனையிட்டனர். பல்வேறு பகுதிகளில் இருந்த 8 கேமராக்களை சோதனையிட்டதில் 6 சிறுவர்கள் வெடிகுண்டு வெடித்த சில நிமிடங்களில் வேகமாக ஓடுவதும், சிறிது தூரம் சென்று நடந்து சென்றதும் பதிவாகி இருந்தது.

    இதனையடுத்து அந்த கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவான 6 சிறுவர்களின் அடையாளங்களை கொண்டு போலீசார் கோவிந்தசாலை, திடீர் நகர் உள்ளிட்ட இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இறுதியில் அவர்கள், கண்டாக்டர் தோட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களில் 4 பேரை போலீசார் நேற்று இரவே மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. வீட்டில் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகள் மீதம் இருந்தபோது, அதை வேறு விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என யூடியூப் பார்த்துள்ளனர்.

    அதில் சிறிய ரக வெடிகுண்டு தயாரிக்கலாம் என வந்துள்ளது. உடனே அதை பார்த்து அதில் கூழாங்கற்கள், வெடிமருந்து, துணிகள் சுற்றி 2 வெடிகுண்டுகளை தயாரித்துள்ளனர். ஒரு வெடிகுண்டை அவர்கள் வீசி பார்த்தபோது சத்தம் வராமல் வெளிச்சம் மட்டும் வந்துள்ளது. மற்றோரு வெடிகுண்டை வீசியபோது தான் சத்தத்துடன் வெடித்துள்ளது.

    இதனையடுத்து 4 பேரையும் போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறி, தேர்வில் தோல்வி அடைய நேர்ந்தது.
    • நஷ்டஈடாக ரூ.75 லட்சம் வழங்க கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரினார்.

    புதுடெல்லி :

    மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் கிஷோர் சவுத்திரி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், யூடியூப்பில் காட்டப்படும் ஆபாச விளம்பரங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தான் தேர்வில் தோல்வியடைந்ததற்கு கூகுள் நிறுவனம் இழப்பீடு அளிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், விளம்பரங்கள் பிடிக்கவில்லையென்றால் அவற்றை பார்க்க வேண்டாம் என தெரிவித்தனர். அதற்கு, ஆபாச விளம்பரங்களால் தனது கவனம் சிதறி, தேர்வில் தோல்வி அடைய நேர்ந்தது. எனவே நஷ்டஈடாக ரூ.75 லட்சம் வழங்க கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரினார்.

    அதையடுத்து நீதிபதிகள், கோர்ட்டின் நேரத்தை வீணடித்ததற்காக ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என மனுதாரருக்கு உத்தரவிட்டனர். அதற்கு அவர், தான் வேலையற்று இருப்பதால், அபராதம் விதிக்காமல் மன்னிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு நீதிபதிகள், விளம்பரம் தேவைப்படும்போதெல்லாம் கோர்ட்டுக்கு வருவீர்களா என கேட்டதுடன், அபராதத் தொகையை குறைத்தாலும், மன்னிக்கமாட்டோம் என தெரிவித்து, அபராதத்தை ரூ.25 ஆயிரமாக குறைத்தனர்.

    • யூடியூப் செயலியில் தொடர்ச்சியாக புது அப்டேட்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
    • சமீபத்தில் தான் யூடியூப் செயலியில் புது அம்சங்கள் வழங்கப்பட்டன.

    யூடியூப் செயலியின் அனைத்து தளங்களிலும் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஷாட்ஸ் மற்றும் லைவ் வீடியோ பிரிவுகளுக்கு தனியே புது டேப்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சேனல் பேஜசில் செய்யப்படுகின்றன. இதன் மூலம் பயனர்கள் இடையூறில்லா வியூவிங் அனுபவத்தை பெறலாம்.

    இதுதவிர கிரியேட்டர்கள் மற்றும் யூடியூபர்கள் தங்களின் தரவுகளை ஒவ்வொரு பிரிவுக்கும் ஏற்ப சிறப்பாக பிரித்து காட்சிப்படுத்த முடியும். டிக்டாக் வெளியானதில் இருந்து இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் குறிகிய நேரத்தில் ஓடும் வீடியோ ஃபார்மேட்டை வழங்க துவங்கி விட்டன. அந்த வகையில் யூடியூப் ஷாட்ஸ் டிக்டாக் போட்டியாளராக கூகுள் அறிமுகம் செய்த சேவை ஆகும்.

    வீடியோ மற்றும் ஷாட்ஸ் பிரிவுகளில் ஒவ்வொரு வீடியோவும் பக்கவாட்டுகளில் மாறும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. ஷாட்ஸ் வீடியோக்களின் தம்ப்நெயில் செங்குத்தாக செவ்வக வடிவில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வீடியோக்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தானாக மாறிக் கொண்டே இருக்கும். தற்போது யூடியூபில் ஷாட்ஸ் மற்றும் வீடியோக்களுக்கு தனி டேப்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு செய்வதில் பயனர்கள் அவர்கள் விரும்பும் ஷாட்ஸ், வீடியோ அல்லது லைவ் ஸ்டிரீம் உள்ளிட்டவைகளை அதன் டேப்களில் இருந்தபடி பார்க்க முடியும். இதனால் அனைத்து தரவுகளுக்கும் முக்கியத்துவம் கிடைக்கும். மேலும் பயனர் அதிகம் விரும்பும் பிரிவில் அந்த டேபிற்கு நேரடியாக சென்று தரவுகளை பார்த்து ரசிக்கலாம்.

    ×