என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திமுக அரசு"
- தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
- பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை எழும்பூரில் பாமகவினர் போராட்டம் நடத்தினர்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான போராட்டத்தில் ஏராளமான பாமக-வினர் பங்கேற்றனர். மின்கட்டண உயர்வையும், தமிழக அரசையும் கண்டித்து பாமக-வினர் கோஷம் எழுப்பினர்.
இந்நிலையில் பாமக போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:
* தமிழக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது.
* 2 மாதங்களில் தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்.
* இன்றும் மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது பெரும் மோசடி.
* திமுக அரசிற்கு நிர்வாக திறமை என்பதே கிடையாது.
* பணத்திற்காக தனியாரிடம் மின்சாரத்தை வாங்கி கொண்டிருக்கின்றனர்.
* அரசு துறைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி விட்டதாக அன்புமணி குற்றச்சாட்டி உள்ளார்.
- மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
- அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்கும் வகையில் ஏழை, எளிய பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வந்ததோடு, வறுமைக் கோட்டிற்கு கீழ் எவருமே இருக்கக் கூடாது என்ற கொள்கைப் பிடிப்போடு அயராது பாடுபட்டவர் இதயதெய்வம் அம்மா அவர்கள்.
"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கே இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதை லட்சியமாக கொண்டு வாழ்ந்த இதயதெய்வம் அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு சுயநலமும், துரோக சிந்தனையும் கொண்ட பழனிசாமியின் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த திமுக, தமிழக மக்களின் மீது எண்ணற்ற சுமைகளை ஏற்றி அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
தேர்தல் நேரத்தில் வழங்கிய வாக்குறுதிகளையோ, மக்கள் நலத்திட்டங்களையோ செயல்படுத்தாத திமுக அரசு, அதற்கு மாறாக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மூன்றாவது முறையாக மின் கட்டணத்தை உயர்த்தியிருக்கிறது.
மின்சார உற்பத்தியை பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு, ஒவ்வொருமுறை மின்கட்டணத்தை உயர்த்தும் போதும் மத்திய அரசின் மீது பழியை சுமத்தி மக்களை திசைதிருப்பும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது.
ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் திறனற்ற திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை மறைக்க,
• நூறு சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்ட சொத்துவரி
• அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டணம் உயர்வு
• ஆறுமுறை உயர்த்தப்பட்ட பால் மற்றும் பால்பொருட்களின் விலை உயர்வு
• விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு
• நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பு பலமடங்கு உயர்வு
• முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு
• மறைமுகமாக உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம்
• அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் சாலைவரி (Road Tax)
என எண்ணற்ற வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி ஏழை, எளிய பொதுமக்களின் மீது சுமைகளை ஏற்றுவது தான் திமுக அரசின் திராவிட மாடல் சாதனையா? நனவிலும் பதவி, கனவிலும் பதவி என பதவிப் பித்தர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் திமுகவினருக்கு மக்கள் படும் துன்பங்களும், வேதனைகளும் எப்படி புரியும்? என அனைத்து தரப்பு மக்களும் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.
அத்தியாவசியப் பொருட்கள் இல்லாத நியாய விலைக்கடைகள், உயிர்காக்கும் மருந்துகள் இல்லாத அரசு மருத்துவமனைகள், தமிழக அரசின் கீழ்மட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை எழுந்திருக்கும் ஊழல் மற்றும், முறைகேடு புகார்கள், நகரங்கள் தொடங்கி கிராமங்களின் கடைத்தெரு வரை வந்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களால் எதிர்காலத்தை இழக்கும் இளைய சமுதாயம், நாள்தோறும் அரங்கேறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் என அடிதடியும், அடாவடியுமே அடையாளமாக கொண்டிருக்கும் திமுகவிற்கு ஏன் வாக்களித்தோம் என எண்ணி வருந்தும் சூழலுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்படி, அனைத்து துறைகளிலும் ஏற்பட்டுள்ள நிர்வாகத் தோல்விகளை மறைக்க வரிகளையும், கட்டணங்களையும் உயர்த்தி மக்கள் மீது சுமைகளை ஏற்றும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 22.07.2024 (திங்கள் கிழமை) அன்று மாலை காலை 10.00 மணியளவில் தமிழகத்தின் அனைத்து வருவாய் மாவட்ட தலைநகரங்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்று கண்டனப் பேரூரை ஆற்றவிருக்கிறார்கள்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் அந்தந்த வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகள், கழக அமைப்புச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், ஊராட்சி கழக செயலாளர்கள், வட்ட/வார்டு/கிளைக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என கூறியுள்ளார்.
- மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
- GR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருப்பதாவது,
மத்திய அரசின் Revamped Distribution Sector Scheme (RDSS) திட்டத்தில் நிதி பெறவே மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளோம் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன அதே பொய்யை மீண்டும் சொல்கிறது திமுக அரசு.
இது தொடர்பாக 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பத்திரிகையாளர்களைச் சந்தித்து திமுகவின் திசைதிருப்பும் முயற்சியைத் தமிழக மக்களிடம் எடுத்துரைத்தோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக என்ன செய்துள்ளது என்பதைப் பார்ப்போம்.
* பொருத்தப்படவேண்டிய ஸ்மார்ட் மீட்டர், DT மீட்டர், Feeder மீட்டர்களின் எண்ணிக்கை: 3,06,82,343 (மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய எண்ணிக்கை)
* பொருத்தப்பட்ட மீட்டர்களின் எண்ணிக்கை: 1,30,861 (4%)
* தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம் தனியாரிடம் செய்த மின் கொள்முதல் மதிப்பு.
2021-22: 39,365 கோடி ரூபாய்
2022-23: 50,990 கோடி ரூபாய்
2023-24: 65,000 கோடி ரூபாய்
* கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு செய்த தனியார் மின் கொள்முதல் மதிப்பு: 1,55,355 கோடி ரூபாய்.
* RDSS திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளவேண்டிய எந்த பணிகளையும் திமுக செய்யவில்லை, மாறாக மின் கட்டணத்தை மட்டும் உயர்த்தியுள்ளது.
* கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த ஒரே மாற்றம், நலிவடைந்த BGR நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் திமுக அரசால் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரத்து செய்யப்பட்டது மட்டுமே.
இவ்வாறு அவர் கூறியுள்ளர்.
- கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது?
- பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு பேரிடியாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வன்மையான கண்டனத்துக்குரியது.
ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் தாங்க முடியாத சுமையை திமுக அரசு ஏற்றுவது வாக்களித்து அதிகாரத்தை வழங்கிய மக்களை வாட்டி வதைக்கும் கொடுங்கோன்மையாகும்.
திமுக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள உயர்த்தப்பட்ட மின்கட்டண அறிவிப்பின்படி, பொதுமக்கள் 400 மின்அலகு வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்அலகு ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம், தற்போது ரூ.4.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 401 மின்அலகு முதல் 1000 மின்அலகு வரையிலான வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றிற்கு 50 காசுகள் வரை சீராக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 40 காசுகளும், கிராமப்புற குடிசை வீடுகளுக்கான மின் கட்டணம் மின்அலகு ஒன்றுக்கு 45 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி வேளாண் மற்றும் அரசு விதைப்பண்ணைகள், விசைத்தறி, கிராம ஊராட்சி மன்றங்கள், சிறு குறு தொழில்நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்கள் முதல் பாதுகாப்புபடை வீரர்களின் குடியிருப்புகள் என அனைத்திற்கும் ஏறத்தாழ 5 விழுக்காடு அளவிற்கு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளது திமுக அரசு.
ஏற்கனவே, எரிபொருள் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு, சுங்க கட்டண உயர்வு என அடுத்தடுத்த விலை உயர்வால் ஏழை மக்கள் வாங்கும் திறனை முற்றிலும் இழந்து அல்லலுறும் நிலையில் தற்போது மின்கட்டணத்தையும் மீண்டும் உயர்த்தி இருக்கும் திமுக அரசின் சிறிதும் மனச்சான்றற்ற செயல் அப்பட்டமான கொடுங்கோன்மையாகும்.
கிராமப்புற குடிசை வீடுகளுக்கும், வேளாண்மைக்கும், விதை பண்ணைக்கும் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதுதான் திராவிட மாடலா? அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின்கட்டணத்தை திமுக அரசு அதிகரித்திருப்பது சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீடுகளில் வசிப்போருக்கு மிகப்பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும். மேலும் வணிகப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் சிறு-குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் என அனைத்துத் தரப்பு மக்களும் இக்கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். பாஜக அரசின் ஜிஎஸ்டி வரி உயர்வால் மீண்டுவரமுடியாமல் முடங்கிய சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தற்போதுதான் மெல்ல மெல்ல மூச்சுவிடும் நிலையில் தற்போதைய திமுக அரசின் மின்கட்டண உயர்வு அவர்கள் தொழில் செய்ய முடியாதபடி மீண்டும் முடக்கும் பேராபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தகால மின்கட்டண உயர்வுக்கு இந்திய ஒன்றிய அரசை கைகாட்டிய திமுக அரசு, தற்போதைய மின் கட்டண உயர்வுக்கு யாரை கைகாட்டப்போகிறது? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் மக்கள் நலனைப் பற்றிச் சிறிதும் அக்கறையின்றி, குருதி உறிஞ்சும் அட்டைப்போல மக்களைக் கசக்கிப் பிழிந்து, வழிப்பறிபோல வரியைப் பறிக்க நினைப்பது சிறிதும் அறமற்ற கொடுங்கோன்மையாகும். பாராளுமன்றத்தேர்தலிலும், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் வென்ற பிறகு தந்திரமாக மின்கட்டணத்தை உயர்த்தும் திமுக அரசின் முடிவு வாக்களித்த மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே, மக்களை வாட்டிவதைக்கும் வகையில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டண உயர்வை திமுக அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மின்கட்டணத்தை இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடும் முறையைக் கைவிட்டு, ஒவ்வொரு மாதமும் கட்டணம் செலுத்தும் முறையை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
- திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
- 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக மக்களை அனைத்து வகைகளிலும் வாட்டி வதைப்பதற்கென்றே ஒரு ஆட்சி தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சியாக நடந்து வருகின்றது. வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழக மக்கள் கடுமையான மின்வெட்டாலோ, மின் கட்டண உயர்வாலோ பாதிக்கப்படுவது வாடிக்கை. 2011-ல் அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு, மின் பற்றாக்குறையாக இருந்த தமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக மாற்றிக் காட்டியதை அனைவரும் நன்கறிவார்கள்.
தமிழக மக்களின் சுமையைக் குறைக்க 100 யூனிட் விலையில்லா மின்சாரத்தை வழங்கியது அம்மாவின் அரசு. இதன் பலனைக்கூட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனுபவிக்கக்கூடாது என்ற தீய எண்ணத்துடன் ஆண்டுதோறும் இந்த விடியா
திமுக அரசு மின்கட்டணத்தை உயர்த்தி வருவது எவராலும் ஏற்க முடியாது.
* திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் முதல் ஏமாற்றம் 2022 தைப் பொங்கல் பரிசு.
* பிப்ரவரி 2022-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பிறகு விடியா திமுக அரசு தமிழக மக்களுக்கு அளித்த பரிசு சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என்று பல வரி உயர்வுகள்.
* குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டோர் வரை, அனைவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் விடியா திமுக அரசு அளித்த பரிசு, பலமுறை பால் பொருட்களின் விலை உயர்வு.
* 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மின் கட்டண உயர்வு.
* தொடர்ந்து 2023-ஆம் ஆண்டு செப்டம்பரில் இரண்டாம் முறையாக மின் கட்டண உயர்வு. இதன் காரணமாக விசைத்தறி, சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வீட்டு இணைப்பில் பொதுவான பயன்பாட்டாளர்கள் (வணிக கட்டணம் நிர்ணயம்) பாதிப்பு.
* பாராளுமன்றத் தேர்தலில் 39-க்கு 39 இடங்களைப் பெற்ற இருமாப்பில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடன், நேற்று முதல் தமிழக மக்களின் நெற்றியில் பட்டை நாமத்தைப் போட்டு மூன்றாம் முறையாக 5 சதவீத மின் கட்டண உயர்வை பரிசளித்திருக்கிறார் விடியா திமுக அரசின் நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சர்.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வாலும், 2024, ஏப்ரல் மாதம் முதல் நியாய விலைக் கடைகளில் சமையல் எண்ணெய், பருப்பு போன்றவைகளை வழங்காமலும் மக்களை துன்பத்திற்குள்ளாக்கிய இந்த ஏமாற்று மாடல் அரசு, மூன்றாம் முறையாக மின்கட்டண உயர்வு என்ற ஒரு பேரிடியை தமிழக மக்களின் தலையில் இறக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
* அம்மா ஆட்சியில் மின்கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் 'மின்சாரத்தை தொட்டால்தான் ஷேக் அடிக்கும், மின்சார கட்டணத்தைக் கேட்டாலே ஷேக் அடிக்குது' என்று வசனம் பேசியவாறு வானத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.
* 'சொன்னதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம்' என்று நாடக வசனம் பேசிய ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை உயர்த்தி, சொல்லாததையும் செய்துவிட்டார்!
* ஆட்சிக்கு வந்தவுடன் மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடுவோம் என்று சொன்னதை இந்த கையாலாகாத அரசு நிறைவேற்றியதா? என்று அல்லலுறும் மக்கள் கேட்கிறார்கள்.
* உங்கள் நிர்வாகத் திறமையின்மையின் சுமையை மக்கள் தலைகளில் திணிப்பது அநியாயம்! மக்களை வாட்டி வதைப்பதே விடியா திமுக அரசின் வாடிக்கை.
மக்களுக்குத் தேவையில்லாமல் வரி மற்றும் கட்டணச் சுமையை ஏற்றும்போதெல்லாம் அதனை ஒப்பீடு செய்ய, தங்களுக்கு வசதியாக இதர மாநிலங்களையும் விடியா தி.மு.க. அரசு துணைக்கு அழைத்துக்கொள்கிறது. தமிழகத்தில் ஆட்சி செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களே தவிர, மற்ற மாநிலங்களை ஒப்பீடு செய்து வரிச் சுமையை தமிழக மக்கள் தலையில் கட்டுவதற்கல்ல. மத்திய அரசு ஆணையின்படி மின்சார வாரியத்தின் இழப்பை, எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியில் செய்ததுபோல் மாநில அரசே ஏற்றுக்கொண்டிருக்கலாம்.
எனவே, விலைவாசி உயர்வு, வரி உயர்வு போன்றவைகளால் மக்களின் கோபம் எரிமலையாக வெடிப்பதற்கு முன்பு, பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டண உயர்வையும், விசைத்தறி மற்றும் சிறு, குறு தொழில்கள், தொழில் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
நம்மை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்ற மமதையில் பொம்மை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைக்கனத்தோடு செயல்படுவாரேயானால், கொதிப்படைந்துள்ள தமிழக மக்கள், விடியா திமுக ஆட்சிக்கு தக்க பாடத்தைப் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை.
- பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதா சமூக நீதி?
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் கிடக்கும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 10,402 பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து மூன்றாண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சமூகநீதிக்கான ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டியலினத்தவருக்கான சமூக நீதியை மூன்றாண்டுகளாக முடக்கி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டு, தகுதியானவர்கள் கிடைக்காததால் நிரப்பப்படாமல் பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்ட ஏராளமான இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பின்னடைவுப் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு திமுக அரசு அறிவித்தது.
அதன்பின், அடுத்த 6 மாதங்களுக்கு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் முடிவில் தமிழக அரசின் 34 துறைகளில் பட்டியலினத்தவருக்கு 8100, பழங்குடியினருக்கு 2302 பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமலிருப்பது தெரியவந்தது. அவை சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் தமிழக அரசு உறுதியளித்திருந்தது.
ஆனால், அதன்பின் மூன்றாண்டுகள் ஆகப்போகும் நிலையில், சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இறையன்பு அவர்கள் இருந்த காலத்தில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு துறைகளின் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட சமூகநீதி கண்காணிப்புக் குழுவும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. பின்னடைவுப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று 17.10.2022-ஆம் நாள் அறிக்கை மூலம் நான் வலியுறுத்தினேன். ஆனால், அதன்பின்னர் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை.
பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாத விவகாரத்தில் கடந்த ஆண்டு தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் தலையிட்டது. அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் அடுத்த 3 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் தேதி தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹல்தர் ஆணையிட்டார். ஆனால், அந்த ஆணையைக் கூட தமிழக அரசு மதிக்கவில்லை. இப்போது வரை பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே விட்டு வைக்கப்பட்டுள்ளன.
பின்னடைவுப் பணியிடங்களை நிரப்புவது கடினமான ஒன்றல்ல. எந்தத் துறைகளில் எவ்வளவு இடங்கள் பின்னடைவுப் பனியிடங்களாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு நினைத்தால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்பு ஆள்தேர்வு அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்து பின்னடைவு பணியிடங்களையும் நிரப்பிவிட முடியும். ஆனால், அந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்பதே உண்மை.
தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறி வருகிறார். திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், அதற்கு முன்பே பத்தாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள 10,402 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பதா சமூக நீதி?
13 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள 10,402 பின்னடைவுப் பணியிடங்களில் 7090 பணி இடங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையிலும், மதுவிலக்குத் துறையிலும் தான் உள்ளன என்பது வேதனையான உண்மை. உள்துறையை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கு இந்த உண்மை தெரியாதா?
சமூக படிநிலையில் மிகவும் கீழாக இருக்கும் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகத் தான் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி 10,402 பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சமூக நீதியை தடுத்து நிறுத்துவது தான் சமூக நீதியா?
பின்னடைவு பணியிடங்கள் உரிய காலத்தில் நிரப்பப்பட்டிருந்தால், 10,402 குடும்பங்கள் வறுமையிலிருந்தும், சமூக பின்னடைவிலிருந்தும் மீண்டிருக்கும். அதை செய்யத் தவறியது திமுகவின் சமூக அநீதி இல்லையா?
சமூகநீதி என்பதை வெற்று வார்த்தைகளில் மட்டும் வெளிப்படுத்தாமல், செயலிலும் காட்ட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். தமிழக அரசின் 34 துறைகளில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுப் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; சமூகநீதியை காக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
- எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியிலிருந்து கொண்டுவரப்பட்ட சாராயம் அருந்திய 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது.
நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று விடியா திமுக முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது.
அடிப்படை நிர்வாகச் சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்தத் திராணியற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அண்டை மாநில சாராயங்கள் புழங்குவதை தடுப்பது அரசின் கடமை என்பதை உணர்ந்து, எல்லைகளில் மதுவிலக்கு சோதனைகளை தீவிரப்படுத்தவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- மாறாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது.
- மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தான்.
சென்னை:
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பரப்புரை மேற்கொண்ட மாநில விளையாட்டு மற்றும் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ''கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்படி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 60 ஆயிரம் பேர் மாதம் ரூ.1000 நிதியுதவி பெற்று வருகின்றனர்" என்று பேசியுள்ளார். தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டத்தில் வெறும் 60 ஆயிரம் பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்துறை தான். அத்துறையின் அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின் தான். அதனால் அவர் சொல்லும் புள்ளிவிவரம் மிகவும் சரியாகத் தான் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் மிகக்குறைந்த அளவிலானவர்களுக்கு உரிமைத் தொகையை கொடுத்து விட்டு, அதை சாதனை போன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் மாநிலம் முழுவதும் 1 கோடியே 16 லட்சம் மகளிர் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறுகின்றனர். அதன்படி பார்த்தால் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் சராசரியாக 3.05 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பெரிய மாவட்டங்களில் விழுப்புரம் மாவட்டமும் ஒன்று. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஏழைகள் வாழும் மாவட்டம் இதுதான். அதன்படி பார்த்தால் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பயனாளிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், சராசரியாக வழங்கப்பட வேண்டிய பயனாளிகளில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டும் தான் உரிமைத் தொகை வழங்கப்படுவதாக உதயநிதி ஸ்டாலின் உரையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
விழுப்புரம் மாவட்டம் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பின் தங்கிய மாநிலமாக திகழ்கிறது. இந்த மாவட்டத்தில் தான் மிக மிக பின் தங்கிய வன்னியர்களும், ஒடுக்கப்பட்ட பட்டியலினத்தவரும் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட மாவட்டத்திற்கு மிக அதிக எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். மாறாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு மிகக்குறைந்த எண்ணிக்கையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது என்றால், அது விழுப்புரம் மாவட்டத்திற்கும், விழுப்புரம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கும் இழைக்கப்படும் துரோகம் தானே, அநீதி தானே? இதற்குக் காரணமானவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா?
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்ட சரியான தருணம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தான். இந்தத் தேர்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் திமுக அரசு அதன் தவறுகளையும், துரோகங்களையும் மக்கள் மன்னிக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு விழுப்புரம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
- சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள்.
- பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது,
சென்னை அடையாறு எல்.பி.சாலையில் மாநகரப் பேருந்து எரிந்ததாக செய்திகள் வந்துள்ளன. பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் சமயோசிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் பாராட்டுகள்.
விடியா திமுக ஆட்சியில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படாதது குறித்தும், முறையான பராமரிப்பு இல்லாமல் இயங்கும் பழுதடைந்த பேருந்துகள் குறித்தும் தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இதுபோன்று மக்கள் உயிருக்கே ஆபத்தான விபத்துகள் ஏற்பட காரணமாக இருக்கும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
அரசுப்பேருந்துகளில் நம்பி பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடாமல், பயன்பாட்டில் இருக்கும் பேருந்துகளுக்கு தர ஆய்வு நடத்தியும், புதிய பேருந்துகளை இனியாவது கொள்முதல் செய்தும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.
- சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
- தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருநெல்வேலியில் அரசுப்பள்ளி மாணவர்களிடையே ஜாதி ரீதியான பிரச்சனையால் நேற்று ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகேட்டு அதிர்ச்சியுற்றேன்.
சமூகநீதி என்று மேடையில் மட்டும் பேசும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் ஜாதி ரீதியான மோதல்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ள நிலையில், பள்ளிகளிலேயே இதுபோன்ற சம்பவம் நிகழ்வது கவலையளிக்கிறது.
சமத்துவம் பேணும் கல்வியின் உறைவிடமாம் பள்ளிகளில் ஜாதி, மதம் உள்ளிட்ட பிரிவினைவாதத்திற்கு என்றும் இடமில்லை என்பதை உறுதிசெய்யவேண்டியது அரசின் கடமை.
எனவே, வெற்று விளம்பர வார்த்தைகளை மட்டும் கூறுவதை விடுத்து, பள்ளிக்கூடங்களில் ஜாதிப் பிரிவினைகளை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சமத்துவ எண்ணங்களை போதிக்குமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.
- சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது கேரள அரசு.
- இதனால் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்க அம்மாநில அரசு முயற்சி செய்கிறது.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக மவுனம் சாதித்து, தமிழகத்தின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளைக் கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனியாவது தி.மு.க. அரசின் முதல்வர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.
- பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன.
- 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, மருத்துவ தேர்வாணையத்தின் மூலமாகவோ, ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலமாகவோ, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாகவோ அல்லது பத்திரிகை விளம்பரத்தின் மூலமாகவோ நிரப்பப்படும்.
இந்த முறையைக் கடைபிடிப்பதன்மூலம் அரசுப் பணிகளில் இருப்போருக்கு பதவி உயர்வு ஏற்படுவதோடு, இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிவகை ஏற்படும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தி.மு.க. ஆட்சியில் நிலவுகிறது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில், சார்புச் செயலாளர் நிலை முதல் செயலாளர் நிலைவரை ஓய்வு பெற்றவர்கள் அதே பணியில் அமர்த்தப்படுகின்றனர். இன்னும் சொல்லப்போனால், 65-வயதைத் தாண்டியவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, அனைத்துத் துறைகளிலும் கடைநிலை ஊழியர் முதல் உதவியாளர் பதவி வரையிலான பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் வெளிமுகமை மூலம் நிரப்பப்படுகின்றன. இதன் காரணமாக, அங்குள்ளவர்களுக்கு பதவி உயர்வு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் தி.மு.க. அரசால் பறிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சமூகநீதி தாரை வார்க்கப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஓய்வு பெற்றவர்களை பணியிலிருந்து உடனடியாக நீக்கிவிட்டு அந்த இடங்களை பதவி உயர்வு மூலம் பணியில் உள்ளவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்