search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடி 18"

    • தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.
    • இன்று மாலையில் தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி பதினெட்டாம் பெருக்கென்று சப்த கன்னிகளை வணங்கி வழிபட்டால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.

    அதேபோல் ஆடி மாதத்தில் 18-ம் நாள் பெருக்கு அன்று காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளை பல நூற்றாண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். அங்கு மலர் தூவி, தீபாராதனை காட்டி வழிபடுவார்கள்.

    அதன்படி தமிழகத்தில் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றங்ரையில் ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளான இன்று 18 வகையான நைவேத்தியங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர். புதுமண தம்பதிகள் மற்றும் பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி தாலி பிரித்துக்கட்டும் வைபவம் நடத்தினர்.

    நெல்லை குறுக்குத் துறை தாமிர பரணி ஆற்றங்கரையில் சுப்பிர மணிய சுவாமி கோவில் படித்துறையில் திரளான பெண்கள் இன்று காலை முதலே திரண்டு தாமிரபரணி நதிக்கு 18 வகையான பலகாரங்கள் படைத்து சுமங்கலி வழிபாடு நடத்தினர்.

    அதனை தொடர்ந்து புதுமண தம்பதிகள் மட்டுமல்லாது ஏற்கனவே திருமணமான பெண்களும் கலந்து கொண்டு தாலி பிரித்து கட்டும் சடங்குகள் செய்து தாமிரபரணி அன்னையை வழிபட்டனர். இன்று மாலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் முன்பு தொடங்கி சந்திப்பு கைலாசநாதர் கோவில் வரை ஊர்வலமாக வந்து தாமிரபரணி நதிக்கு பூஜை செய்யும் சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதேபோல் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலையில் ஜடாயு படித்துறையில் தாமிரபரணி நதிக்கு ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • காவிரி கரைப்பகுதியில் பொதுமக்கள் புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானி, காவிரி, அமுதநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக உள்ளது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு இங்கு திதி கொடுப்பார்கள்.

    இதற்காக திதி கொடுக்க தனியாக இடங்கள் உள்ளன. மேலும் பொதுமக்கள் பரிகார பூஜை செய்து காவிரி ஆற்றில் புனித நீராடி செல்வார்கள்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கு அன்று புனித நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    கொரோனா தற்போது குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை முதல்நாள் அன்று புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

    இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் பவானி கூடுதுறையில் குவிவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசார் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பவானி படித்துறையில் பாதுகாப்புக்காக 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு இருந்தன. இதேபோல் கொடுமுடி, கருங்கல்பாளையம் காவிரி கரை போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெய்தகனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஏற்கனவே மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120அடியை எட்டி உள்ளது. தொடர்ந்து தண்ணீர் அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து 1.40 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை நெருஞ்சிப்பேட்டை, பிபி அக்ரஹாரம், கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி காவேரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆடிப்பெருக்கை ஒட்டி பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரி ஆற்றில் புனித நீராடவும் பரிகாரப் பூஜைகள் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது.

    தடையை மீறி புனித நீராட வருபவர்கள் பரிகார பூஜை செய்ய வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    இதுபற்றி தெரியாமல் இன்று காலை பவானி கூடுதுறையில் புனிதநீராட வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் நுழைவாயில் முன்பு போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலிலும் இன்று அதிகாலை முதல் ஆடி பெருக்கையொட்டி பொதுமக்கள் ஏராளமான பேர் வந்தனர். ஆனால் காவிரி ஆற்றில் குளிக்கவோ பரிகார பூஜை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல் கருங்கல்பாளையம் காவிரி கரைப்பகுதியிலும் பொதுமக்களுக்கு புனித நீராட பரிகார பூஜை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

    பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியேறுவதால் கொடிவேரி அணையில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகளுக்கு மறுக்கப்பட்டுள்ளது. அணை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணைக்கு வந்த பொதுமக்களை அவர்கள் திருப்பி அனுப்பினர்.

    • இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர்.
    • பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர்.

    கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயணப் பெருமாள் கோவில் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி 18 திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    இதையொட்டி ஆடி 18 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து காவிரியில் புனித நீராடியும், முளைப்பாரி ஆற்றில் விட்டும் காவிரி தாயை வணங்கியும், மகுடேசுவரரை தாசித்தும் செல்வது வழக்கம்.

    இதற்காக இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கொடுமுடியில் குவிய தொடங்கினர். இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதையடுத்து கொடுமுடி காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் காவிரி ஆற்றில் துணி துவைக்க, நீராட, கால்நடைகள் குளிப்பாட்ட தடை விதிக்கப்பட்டது.

    இதனால் ஆற்றங்கரை பகுதி முழுவதும் தடை ஏற்படுத்தி போலீஸ், தீயணைப்பு துறை வீரர்களை கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். இதனால் பக்தர்கள் யாரும் எங்கும் சென்று காவிரி ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    மேலும் பலர் கொடுமுடிக்கு முளைப்பாரி எடுத்து வந்தனர். தடை விதித்துள்ளதால் ஆற்றங்கரை ஓரத்தில் செல்லும் புகளூரான் வாய்க்காலில் குளித்தும், முளைப்பாரி விட்டும் சென்றனர்.

    இந்த நிலையில் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் குளிப்பதற்கு வசதியாக கொடுமுடி பேரூராட்சி சார்பாக கோவில் முன்பு ஷவர் அமைத்து சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர். இதையடுத்து பக்தர்கள் அந்த ஷவர் மூலம் புனித நீராடி மகுடேஸ்வரரை வழிபட்டனர்.

    • இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.
    • புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர்.

    ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.

    கர்நாடகத்தில் பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பி அங்கிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் காவிரி ஆற்றின் இருகரைகளையும் தொட்டுச் செல்கிறது. தற்போது காவிரி ஆற்றில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அகண்ட காவிரி கடல் போல் காட்சி அளிக்கிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆடிப்பெருக்கு நாளன்று காவிரி கரையோரங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தொற்று கட்டுக்குள் இருக்கும் நிலையில் பாரம்பரிய நிகழ்வான ஆடிப்பெருக்கை கொண்டாட தடை ஏதும் விதிக்கப்படவில்லை. ஆனால் காவிரியில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பாதுகாப்புடன் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா காவிரி கரையோர பகுதிகளில் களை கட்டியது.

    திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. அவர்கள் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, தேங்காய், காதோலை கருகமணி, அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு விளக்கேற்றி பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் மிதக்க விட்டனர். காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

    புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி புதிய ஆடைகள் அணிந்து கொண்டனர். மேலும் திருமணத்தின் போது மணமக்கள் அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்தும் விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

    அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக்கொண்டனர்.

    ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் ஆபத்து ஏற்படலாம் என்பதால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்குழாய் மூலம் ஷவர் போன்ற அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. ஆனாலும் பொதுமக்கள் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு பகுதிக்குள் நின்று நீராடினர். மேலும் எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

    அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்து விடாமல் தவிர்ப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    மேலும் காவிரி ஆற்றில் ரப்பர் படகுகளில் தீயணைப்பு துறையினர் ரோந்து பணியில் இருந்தனர். தடுப்புகளை தாண்டி ஆற்றின் ஆழமான பகுதிக்கு வர யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று தொடர்ந்து அவர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்த வண்ணம் இருந்தனர்.

    இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த் தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி காவிரி கரையோர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 62 இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது.

    ஆடிப்பெருக்கையொட்டி மாலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் காவிரி அன்னைக்கு சீர் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக காலை 6 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தங்க பல்லக்கில் புறப்பட்டு வந்தார். காலை 11.30 மணிக்கு அவர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்தை வந்தடைந்தார். மாலை 4 மணிக்கு நம்பெருமாள் காவிரி அன்னைக்கு பட்டுப்புடவை, பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் அடங்கிய சீர் வரிசையை வழங்குகிறார்.

    சேலம் மாவட்டத்தில் மேட்டூர் மற்றும் அங்கிருந்து காவிரி புறப்படும் கரை யோரங்களில் ஆடிப்பெருக்கு விழா களை கட்டியது. தற்போது மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பல்வேறு இடங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

    மேட்டூர் அணை பாலம் பகுதி மற்றும் அணைக்கட்டு முனியப்ப சுவாமி கோவில் ஆகிய 2 இடங்களில் மட்டுமே ஆடிப்பெருக்கு விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டாக ஏமாற்றமடைந்த மக்கள் இந்த ஆண்டு திரண்டு வந்து உற்சாகமாக கொண்டாடினர். இதேபோல் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதிகளிலும் புதுமண தம்பதிகள், கன்னி பெண்கள், பொதுமக்கள் திரண்டு ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், ஜேடர் பாளையம், மொளசி, குமாரபாளையம், சோழசிராமணி, பரமத்திவேலூர், மோகனூர் ஆகிய ஊர்களில் காவிரி கரையோரம் திரண்ட மக்கள் அம்மனை தரிசித்து வழிபட்டனர். காவிரியில் கூடுதல் தண்ணீர் பாய்வதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. காவிரி ஆற்றில் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    தஞ்சை மாவட்டத்தில் புத்திய மண்டபத்துறை மற்றும் காவிரி பாயும் திருவையாறு பகுதிகள், ஆடிப்பெருக்கை முன்னிட்டு களை கட்டியது. தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆறு, கும்பகோணம் மகாமக குளம், பகவத் படித்துறை பகுதியிலும் அதிக அளவில் பொதுமக்கள் ஆடிப்பெருக்கை கொண்டாடினர்.

    மயிலாடுதுறை மாவட்டம் காவிரி துலா கட்டத்தில் ஆடிப்பெருக்கான இன்று அதிகாலை முதல் பொதுமக்கள் ஒன்றுகூடி காப்பரிசி, காதோலை, கருகமணி, பழங்கள் உள்ளிட்டவற்றை வாழை இலையில் படைத்து தங்களது வாழ்வு வளம் பெற காவிரி அம்மனை வழிபட்டன்.

    ஈரோடு மாவட்டத்தில் வெகு விமரியைாக கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா இன்று காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் களையிழந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் பவானி கூடுதுறை, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், ஈரோடு அம்மாப்பேட்டை காவிரி கரையோர பகுதிகள், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஆடிப்பெருக்கை கொண்டாட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில், நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவில் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்கான இன்று ஏராளமான கன்னி பெண்கள், சுமங்கலி பெண்கள் திரண்டு வழிபட்டனர். அவர்கள் தாலி கயிறையும் மாற்றிக் கொண்டனர். இன்று மாலை தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது.

    மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் திரண்ட ஏராளமான சுமங்கலி பெண்கள் பொற்றாமரை குளத்தின் படிகளில் நின்று தாலி கயிறை மாற்றிக் கொண்டனர். பின்னர் மீனாட்சி-சுந்தரேஸ்வரரை வழிபட்டனர்.

    • பவானி கூடுதுறை புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது.
    • திதி, தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை.

    பவானி :

    பவானி கூடுதுறையில் பவானி, காவிரி, கண்ணுக்கு புலப்படாத அமுதநதி என 3 நதிகள் சங்கமிப்பதால் புனித நீராட சிறந்த தலமாக விளங்குகிறது. மேலும் திருமண தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த பரிகார தலமாகவும் விளங்குகிறது. அமாவாசை நாட்களில் ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். இதற்காக பரிகாரம் செய்ய தனித்தனி இடங்கள் உள்ளன. மேலும் வேத விற்பன்னர்கள் பலரும் அங்கு உள்ளார்கள்.

    இதேபோல் ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கானோர் புனித நீராட கூடுதுறையில் குவிவார்கள். குறிப்பாக புதிதாக திருமணம் ஆன பெண்கள் முளைப்பாரி விட்டு விரைவில் குழந்தை வரம் வேண்டும் என்று புனித நீராடி புது மஞ்சள் கயிறும் கட்டிக்கொள்வார்கள்.

    இந்த நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடிப்பெருக்கன்று புனிதநீராட மாவட்ட நிர்வாகம் தடை விதித்து இருந்தது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதால் சில நாட்களுக்கு முன்பு ஆடி அமாவாசை அன்றும், ஆடி முதல்நாள் அன்றும் புனித நீராட அனுமதி அளிக்கப்பட்டது. ஏராளமானோர் அப்போது புனித நீராடினார்கள். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கன்று புனித நீராட அனுமதி அளிக்கப்படும் என்று பக்தர்கள் எண்ணினார்கள்.

    இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக காவிரியில் வெள்ளப்ெபருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகிறது. அதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் ஆடிப்பெருக்கான இன்று (புதன்கிழமை) பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராடவும், முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும் அனுமதி இல்லை என பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், 'பவானி காவிரி ஆற்றங்கரையோரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி வீதி, தினசரி மார்க்கெட் அருகே உள்ள பகுதி மற்றும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு,' வேண்டுகோள் விடுத்து உள்ளார். இதையொட்டி தேவையான ஏற்பாடுகளை செய்ய நகராட்சி ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள் தேவையான தயார் நிலையில் உள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.

    இதையொட்டி பவானி கூடுதுறையில் பாதுகாப்புக்காக 60-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    கொடுமுடி காவிரி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீர நாராயண பெருமாள் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் தலமான இந்த கோவில் சிறந்த பரிகார தலம் ஆகும். இந்த நிலையில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் கொடுமுடி காவிரி ஆற்று படித்துறையில் குளிக்கவும், திதி, தர்ப்பணம் மற்றும் பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்கள் காவிரி ஆற்று பகுதிக்கு செல்லாதவாறு தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டி உள்ளதால், உபரிநீர் பவானி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. எனவே ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) காவிரி ஆற்றில் நீராடுவதற்கும், சடங்குகள் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

    • ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு.
    • சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

    இன்று (புதன்கிழமை) ஆடிப்பெருக்கு தினமாகும்.

    ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு. பதினெட்டாம் பெருக்கு அன்று காவிரி ஆற்றுக் கரைகள், ஏரி, குளங்களில் அனைவரும் ஒன்று கூடி நீர் தேவதையை பிரார்த்தித்துக் கொண்டு ஆனந்தமாக குடும்பத்துடன் கொண்டாடுவார்கள்.

    விவசாயம் செழிக்க வேண்டும் என்று விவசாயிகளும் காவிரிக்கு பூஜை செய்வார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர் பிடிப்புப் பகுதியில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கி வரும். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பார்கள். இப்போது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால்தான் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை பூஜை செய்து பின் உழவு வேலையைத் தொடங்குவதே சிறந்தது.

    மதுராந்தகம் கோதண்டராமருக்கு நாளை சிறப்பு திருமஞ்சனம்

    ஆடிப்பெருக்கு. சகல நதி தீரங்களிலும் ஆடிபதினெட்டு விழா, சஷ்டிவிரதம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் இரட்டைத் தோளுக்கினியானில் தீர்த்த வாரி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி. திருவாடானை சிநேகவல்லியம்மன் திருக்கல்யாணம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் திருக்கல்யாணம் திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, ஆடி-18 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை சஷ்டி பின்னிரவு 2.46

    வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : அஸ்தம் மாலை 4.38

    வரை பிறகு சித்திரை.

    யோகம் : மரண/சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12-1.30 மணி.

    எமகண்டம் : காலை 7.30 - 9 மணி

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 -7 மணி. மாலை 4-5 மணி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம் - கண்டிப்பு

    ரிஷபம் - அமைதி

    மிதுனம் - பிரீதி

    கடகம் - களிப்பு

    சிம்மம் - பயணம்

    கன்னி - உற்சாகம்

    துலாம் - உழைப்பு

    விருச்சிகம் - நேர்மை

    தனுசு - கட்டுப்பாடு

    மகரம் - விவேகம்

    கும்பம் - நன்மை

    மீனம் - உதவி

    • ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும்.
    • இன்று புனித நதிகளுக்கு சீர் செய்து வணங்குவது சிறப்பு.

    ஆடி 18 (3.8.2022)

    ஆடிப் பெருக்கு எனும் ஆடி பதினெட்டு விழா மிகவும் சிறப்பானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், எந்த திதியில் வந்தாலும் செய்யும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

    இயற்கை சக்திகளில் சூரியனுக்கு அடுத்தபடியாக தனி முக்கியத்துவம் தரப்படும் கிரகம் சந்திரன். கால புருஷனுக்கு நான்காம் வீடான கடக ராசி சந்திரனின் ஆட்சி வீடாகும். காலச்சக்கரத்தின் நான்காவது ராசி அதிபதி சந்திரனுக்கு சொத்து, சுகம், வண்டி, வாகனங்கள் முதலியவற்றை தருகின்ற அதிகாரம் உண்டு. சந்திரன் மனோகாரகன் அதாவது மனதை ஆள்பவன்.

    சந்திரன் சுப கிரகங்களுடன் சேரும் போது யோக மாகவும், அதுவே ராகு-கேது, சனி போன்ற கிரகங்களுடன் சேரும் போதும் அவயோக தோஷமாகவும் மாறுகிறது. சந்திரன் தரும் யோகங்கள் ஒருவரை வாழ்க்கையில் உச்சத்தை அடைய வைக்கும்.

    வறுமை நிலையில் இருக்கும் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைக்கு சந்திரனால் யோகம் இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தால் அந்த குடும்பம் செல்வ வளத்துடன் கூடிய கோடீஸ்வரர் குடும்பமாக மாறிவிடும். அந்தளவுக்கு யோகத்தை வழங்ககூடிய அமைப்பு சந்திரனுக்கு உண்டு. சந்திரனால் பாதிக்கப்பட்டால் வறுமை தண்ணீரில் கண்டம், திருமணதடை, தோல்விகள், மனநிலை பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன.

    கடக ராசி கடலும் கடல் சார்ந்த இடமுமான நீர் ராசியாகும். எனவே கால புருஷ 5-ம் அதிபதி சூரியன் கால புருஷ 4-ம் அதிபதி சந்திரன் வீட்டில் சஞ்சரிக்கும் ஆடி மாதத்தில் தென் மேற்குப் பருவ மழை பெய்து காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வருவதைத்தான் 'ஆடிப்பெருக்கு' என்று கொண்டாடுகிறார்கள். தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். அனைத்து நதிகளும் நீர் நிரம்பி காணப்படும்.

    பயிர் செழிக்க வளம் அருளும் அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடி 18ல் பதினெட்டாம் பெருக்கு விழா, நதிக்கரைகளிலும் ஆற்றங்கரைகளிலும் கொண்டாடப்படுகிறது. உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல், கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூஜைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இன்று புனித நதிகளுக்கு சீர் செய்து வணங்குவது சிறப்பு.

    நதிக்கரையில் உள்ள கன்னி தெய்வங்களை கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். கன்னி தெய்வங்களை சுமங்கலிப் பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிந்து வழிபாட்டால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். இன்று சப்த கன்னிகளை வழிபட்டால் திருமண தடை அகலும்.

    நீர் நிலைகளுக்கு செல்ல முடியாதவர்கள் ஆடிப்பெருக்கு பூஜையை நதிக்கரை மட்டுமில்லாமல் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். நிறை குடத்தில் இருந்து ஒரு செம்பு தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு சேர்த்தால் போதும். வழிபாட்டுக்குரிய தீர்த்தம் தயாராகி விடும். திருவிளக்கேற்றி அந்த தீர்த்தத்தை விளக்கின் முன் வைக்க வேண்டும்.

    ஒரு அம்மன் படத்துக்கு உதிரிப் பூக்கள் தூவி தெரிந்த மந்திரங்களைச் சொல்லி வணங்க வேண்டும். கற்பூர ஆரத்தி செய்து கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட புண்ணிய நதிகள், அகத்தியர் ஆகியோரை மனதார நினைத்து வணங்க வேண்டும். சர்க்கரை பொங்கல் படைத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    செம்பிலுள்ள நீரை கால் மிதி படாத இடத்திலோ அல்லது செடி, கொடியிலோ ஊற்றி விட வேண்டும். இந்த பூஜையால் வீட்டில் வளம் பெருகும் என்பது ஐதீகம்.

    ஜனன கால ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள், சந்திர தசை புக்தி நடப்பவர்கள், சந்திரனுக்கு சனி, ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் ஆடிப்பெருக்கில் புனித நீராடினால் சந்திர தோஷம் நீங்கும். தாய், தந்தை மற்றும் முன்னோர்களின் நல்லாசி கிடைக்கும். வீடு வாகன யோகம் சித்திக்கும்.

    • சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின் போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது.
    • மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் காவல்துறை மற்றும் வேலூர் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது.

    இதனிடையே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சோழசிராமணி, மாரப்பம்பாளையம், ஜமீன் இளம்பிள்ளி, குறும்பல மகாதேவி, அரசம்பாளையம், ஜேடர் பாளையம் தடுப்பணை, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிப்பாளையம், ஆனங்கூர், அய்யம்பாளையம், பிலிக்கல் பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், பரமத்தி வேலூர் மற்றும் பாலப்பட்டி வரையிலான காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபற்றி உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பாக தண்டோரா மூலமும் மற்றும் ஒலிபெருக்கி மூலமும், எச்சரிக்கை பலகைகள் அமைத்தும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பரமத்திவேலூர் போலீஸ் டி.எஸ்.பி,கலையரசன், காவல் ஆய்வாளர் வீரம்மாள் உள்ளிட்ட போலீசார் காவிரி ஆற்றின் நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×