search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை பலி"

    • காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.
    • போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானையை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொன்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஜவளகிரி அடுத்து சென்னமாலம் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் தளி அருகே காட்டு யானை தாக்குதலில் முதியவர் ஒருவர் பலியானார் மேலும் விளை பயிர்களையும் யானைகள் நாசப்படுத்தியுள்ளன.

    இந்த நிலையில் சென்னமாலம் கிராமத்தையொட்டி உள்ள கக்கமல்லேஸ்வரம் கோவில் பகுதியில் விவசாய தோட்டத்தில் நேற்று ஒரு காட்டு ஆண் யானை துப்பாக்கி குண்டு பாய்ந்து செத்து கிடந்தது. இதை பார்த்த கிராம மக்கள் ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ராஜமாரியப்பன் ஜவளகிரி வனசரக அலுவலர் முரளிதரன் வனவர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காட்டு யானையை யாரோ மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது தெரியவந்தது.

    இதையடுத்து வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருந்துவ குழுவினரை வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அதிலிருந்த 2 தந்தங்களும் மீட்கபட்டு, அருகில் உள்ள வனப்பகுதியில் யானையின் உடல் புதைக்கப்பட்டது.

    துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட யானைக்கு 15 வயது இருக்கும் என்றும், அது ஆண் யானை என்றும், அந்த யானையை நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    தொடர் அட்டகாசத்தில் காட்டு யானைகள் ஈடுபட்டு வந்ததால், மர்ம நபர்கள் ஆத்திரத்தில் காட்டு யானையை சுட்டுக் கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள். அதன்பேரில் ஜவளகிரி வனத்துறையினரும், போலீசாரும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் உதவி வனப்பாது காவலர் ராஜமாரியப்பன் தலைமையில் 3வனசரக அலுவலர்கள் கொண்ட குழுவினரை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.
    • யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட எல்லயைில் உள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்யா யானைகள் சரணாலயம் உள்ளது.

    இந்த சரணாலயத்தில் 40-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. பல குழுக்களாக பிரிந்து அடிக்கடி தமிழக பகுதிகளுக்குள் புகுந்து தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    குடியாத்தம் அருகே உள்ள மோர்தானா அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. மோர்தானா அணையின் கடைசி பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக மறுபக்கத்திற்கு செல்லும்.

    இந்நிலையில் நேற்று மாலை அணையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அணையின் கரை பகுதியில் குட்டி யானை ஒன்று இறந்து மிதந்து கொண்டிருந்தது.

    இது குறித்து ஆடு மேய்ப்பவர்கள் வனத்துறைக்கும் வருவாய்த்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

    நேற்று இரவு வனத்துறையினர் யானை இறந்து கிடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். ஆனால் அந்த பகுதியில் காட்டு யானைகள் ஆவேசமாக சுற்றி திரிந்தன.

    தூரத்தில் யானை கூட்டம் இருப்பது தெரிந்ததால் வனத்துறையினர் திரும்பி வந்துவிட்டனர்.

    குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா தலைமையில் வனத்துறையினர் இன்று காலையில் மீண்டும் சென்றனர். அப்போது காட்டு யானை கரை ஒதுங்கியது.

    இதனைத் தொடர்ந்து இறந்த யானையை கால்நடை மருத்துவர் கொண்டு மோர்தானா கரைப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

    யானை கரையை கடந்து செல்லும் போது சேற்றில் சிக்கி இறந்ததா? அல்லது ஏதாவது காயம் ஏற்பட்டு நீந்த முடியாமல் இறந்ததா? என பிரேத பரிசோதனைக்கு பின்பு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன.
    • மின் கம்பம் விழுந்த வேகத்தில் யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் வன சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி சமவெளி பகுதிகளுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

    கோவை பூச்சியூர் அடுத்த ராவத்தூர் குள்ளனூர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு இன்று அதிகாலை நேரத்தில் வனத்தை விட்டு வெளியேறிய 30 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை வந்தது.

    வெகுநேரமாக தோட்டத்தில் யானை சுற்றி திரிந்தது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோட்டத்தில் நின்ற காட்டு யானையை அங்கிருந்து வனத்தை நோக்கி விரட்டினர்.

    யானையும் வனத்தை நோக்கி சென்றுவிட்டது. யானை சென்றதால் வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.

    இந்த நிலையில் அவர்கள் சென்ற சில மணி நேரங்களுக்கு பிறகு, அந்த யானை மீண்டும் வனத்திற்குள் இருந்து ஊரை நோக்கி நடந்து வந்தது.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு பட்டா நிலத்திற்கு வந்த யானை, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது சென்று உரசி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பம் உடைந்து யானை மீது விழுந்தது.

    மின் கம்பம் விழுந்த வேகத்தில் யானை எழுந்திருக்க முடியாமல் தவித்தது. யானை மீது மின்கம்பம் விழுந்ததை பார்த்த அப்பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த மக்கள் வேகமாக அருகே ஓடினர்.

    ஆனால் அதற்குள்ளாகவே மின்கம்பத்தில் இருந்து யானை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் யானையின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததில் யானை துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

    உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்து மின் இணைப்பை துண்டித்தனர். தொடர்ந்து மின்கம்பத்தை தூக்கி வீசி விட்டு யானையின் உடலை மீட்டனர்.

    இதற்கிடையே தகவல் அறிந்ததும் உதவி வன பாதுகாவலர் செந்தில் சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் பணியில் கால்நடை டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு தர்மபுரியில் மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்தன. அந்த துயர சம்பவமே இன்னும் நீங்காத நிலையில் கோவையில் மீண்டும் ஒரு யானை மின்கம்பம் விழுந்தும், மின்சாரம் தாக்கியும் இறந்துள்ளது பொதுமக்களிடமும், வன ஆர்வலர்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தமிழகத்தில் தொடர்ந்து மின்சாரம் தாக்கி யானைகள் இறப்பது தொடர்கதையாகி வருவதால் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.
    • நள்ளிரவு மின்சாரம் தாக்கி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே வெலகலஅள்ளி பகுதியில் ஒற்றை யானை ஒன்று நேற்றிரவு சுற்றித்திரிந்தது.

    இந்த நிலையில் நள்ளிரவு மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்தனர். மின்சாரம் தாக்கி இறந்த யானையை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.
    • ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. தாளவாடி மலைப்பகுதியில் உள்ள ஜீரகள்ளி வனச்சரகம், மல்லன்குழி வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒரே பகுதியில் முகாமிட்டுள்ளன.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி மல்லன் குழி கிராமத்தில் விவசாயி மாதேவா என்பவரது விவசாய தோட்டத்திற்கு அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் பள்ளத்தின் அருகே ஒரு காட்டு யானை இறந்து கிடப்பதை அப்பகுதி விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக ஜீரகள்ளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இதில் இறந்தது சுமார் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரிய வந்தது. பெண் யானை உடல் நலக்குறைவால் இறந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பதை கண்டறிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பிரேத பரிசோதனை முடிவில் யானை மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்தது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அருகே உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர் மாதேவா அவரது தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க அமைத்திருந்த மின் வேலியில் உயர் அழுத்தம் மின்சாரம் பாய்ச்சியதும், காட்டு யானை அந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்திருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனத்துறையினர் விவசாயி மாதேவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • குட்டி யானைைய வனத்துறையினர் தேடும் வருகின்றனர்.
    • 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.

    கோவை,

    தமிழக - கேரள எல்லையான வாளையார் அருகே நடுப்பதி ஊர் காட்டு பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானையின் இறந்து கிடப்பதாக பொதுமக்கள் வாளையார் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவி த்தனர்.

    இதனையடுத்து வன அதிகாரி ஆஷிக்அலி தலைமையில் விரைந்து சென்று யானையின் சடலத்தை ஆய்வு செய்தனர்.அப்போது, கடந்த 14-ந் தேதி இரவு கன்னியாகுமரி- அசாம் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி ஒரு குட்டியானை உட்பட 3 யானைகளுக்கு அடிபட்டது என ரெயில் என்ஜின் டிரைவர் தெரிவித்து இருந்தார்.

    இதில் 20 வயது மதிக்கத் தக்க பெண் யானை சம்பவ இடத்திலேயே இறந்தது.

    மற்றொரு பெண் யானையும், குட்டி யானையும் காயமடைந்த நிலையில் காட்டுக்குள் தப்பி சென்றது வனத்துறையினர் ஆய்வில் தெரிய வந்தது. இதனை தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் பார்த்து ள்ளனர். காயமடைந்த யானைகளை அதிகாரிகள் தேடிவந்தனர்.

    இந்த நிலையில், காட்டில்தேன் மற்றும் நெல்லிக்கனி சேகரிக்க சென்றவர், நடுப்பதி காட்டுப்பகுதியில் அருவி ஒன்றின் அருகே காட்டு யானை இறந்து கிடந்ததை பார்த்தனர்.

    அவர்கள் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் கால்நடை டாக்டர் ஜோயி டேவிட் தலைமையில் அங்கு விரைந்து சென்றனர்.

    யானை உடலை மீட்ட வனத்துறை ஊழியர்கள் உடற்கூறு பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் வாளையார் வனப்பகுதியில் ஆழமான குழி தோண்டி புதைத்தனர்.

    ரெயிலில் அடி பட்ட மேலும் ஒரு குட்டி யானையை வனத்துறை யினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் மோதி ஒரு யானை பலியானதாக ரெயிலின் கார்டு தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
    • யானை குட்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் வயலார் வனபகுதி வழியாக சுமார் 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை உள்ளது.

    இந்த பகுதியில் அடிக்கடி வனவிலங்குகள் நடமாடும் என்பதால் ரெயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படும். என்றாலும் அவ்வப்போது வனவிலங்குகள் ரெயிலில் அடிப்பட்டு பலியாவது உண்டு.

    அந்த வகையில் நேற்று காலை இந்த வழியாக சென்ற கன்னியாகுமரி-திப்ரூகர் ரெயில் மோதி ஒரு யானை பலியானதாக ரெயிலின் கார்டு தென்னக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். வயலார் கோட்டமுட்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறினார்.

    உடனே ரெயில்வே அதிகாரிகளும், வனத்துறையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு சுமார் 20 வயதான யானை ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தது. அதன் அருகே யானை குட்டி படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது. குட்டியை வனத்துறையினர் மீட்டு கால்நடை துறை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குட்டி யானைக்கு சிகிச்சை அளித்தனர்.

    • பாக்கு மரத்தை யானை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது.
    • யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் யானை உடல் புதைக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பிதுர்காடு பகுதியில் நேற்று ஆண் யானை ஒன்று வலம் வந்தது. வனப்பகுதியில் நின்ற மரங்களை முறித்து சாப்பிட்டது.

    அங்கு நின்ற பாக்கு மரத்தை யானை தனது தலையால் மோதி சாய்க்க முயன்றது. அப்போது அந்த பகுதியில் சென்ற மின் கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக யானை மீதே விழுந்தது. இதில் யானை மீது மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தது.

    இன்று காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் யானை இறந்து கிடப்பது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று யானையின் உடலை மீட்டனர். அந்த இடத்திலேயே யானையின் உடல் கூராய்வு செய்யப்பட்டது. பின்னர் யானை உடல் புதைக்கப்பட்டது.

    அந்த பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மின்சாரம் தாக்குதலில் இருந்து வன விலங்குகளை காப்பதற்காக கடந்த வாரம் வனத்துறையினரும், மின்சாரத் துறையினரும் இணைந்து ஆய்வுப்பணி மேற்கொண்டனர். இந்தநிலையில் அங்கு மேலும் ஒரு யானை உயிரிழந்தது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • கழிவு நீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் காட்டு யானை ஒன்று விழுந்து இறந்து கிடந்தது.
    • கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பரிசோதனை செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள காலி மைதானத்தில் காட்டு யானை ஒன்றின் பிளிறல் சத்தம் கேட்டப்படி இருந்தது.

    இதுபற்றி அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது அங்குள்ள கழிவு நீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் காட்டு யானை ஒன்று விழுந்து இறந்து கிடந்தது.

    ஊருக்குள் தண்ணீர் குடிக்க வந்த யானை, அங்கிருந்த குழியில் தவறி விழுந்து இறந்து உள்ளது.

    இதையடுத்து வனத்துறையினர் யானையின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டது.

    கிரேன் மூலம் யானையின் உடல் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் கால்நடை மருத்துவர்கள் யானையின் உடலை பரிசோதனை செய்தனர். இதனை தொடர்ந்து யானையின் உடலை அடக்கம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ×