search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்னக ரெயில்வே"

    • கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து தென்காசி, சங்கரன்கோவில் வழியாக சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 20681-20682) சென்னை தாம்பரத்திற்கு இயக்கப்பட்டு வருகிறது.

    17 பெட்டிகளுடன் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி வந்த நிலையில் அதில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கூடுதலாக ஒரு இரண்டடுக்கு ஏசி பெட்டியும், 2 மூன்றடுக்கு ஏசி பெட்டியும், 2 தூங்கும் வசதி பெட்டியும், ஒரு முன்பதிவு இல்லாத பொது பெட்டியும் இணைக்க தென்னக ரெயில்வே உத்தரவு வழங்கி உள்ளது.

    வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30-ந்தேதி வரை இந்த கூடுதல் பெட்டிகளுடன் ரெயில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே 17 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் தற்போது கூடுதலாக 6 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன் இயங்க இருக்கிறது. இதனால் கூடுதலாக 500 பேர் வரை பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைத்து விட்டதாக பயணிகள் குற்றச்சாட்டு.
    • பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    திருப்பதி:

    வட மாநில தொழிலாளர்களையும் ஏழைகளையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஏற்றிச் செல்லும் முக்கிய போக்குவரத்து சாதனமாக ரெயில்வே துறை இயங்கி வருகிறது.

    வட மாநிலங்களில் இருந்து அதிக அளவில் தொழிலாளர்கள் பயணம் செய்யும் ரெயில்களில் முன்பை விட தற்போது பொதுபெட்டிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தென் மாநிலங்களுக்கு வரும் வட மாநிலத்தினர் நரக வேதனை அனுபவித்து வருவதாக கூறியுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயிலில் பொதுப்பட்டிகள் குறைவாக இருந்தன.

    பொது பெட்டியில் பயணிகள் நுழைய முடியாத அளவுக்கு வட மாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் அதிக அளவில் இருந்தனர். ஏறும்போதே அவர்களுக்கு கடும் நெரிசல் சண்டை ஏற்பட்டது.

    மிகுந்த சிரமத்துடன் உள்ளே நுழைந்த மகிழ்ச்சியில் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஆனால் இருக்கையில் அமர்ந்தவர்களால் எழுந்து கழிவறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் தரையிலேயே படுத்து தூங்கினர்.

    இருக்கையில் அமர்ந்திருந்தவர்களின் காலடிகளுக்கு அடியில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்த படியும் பயணத்தை கழித்தனர். பலர் கால் வைக்கக்கூட இடம் இல்லாத இடத்தில் கால்கடுக்க நின்றனர். கழிவறையிலும் பயணிகள் இருந்தனர். அவர்கள் கழிவறையில் நின்று கொண்டு சாப்பிட்டதை காண முடிந்தது.

    பொதுப்பட்டியில் இருந்த பெண்கள், ஆண்கள் என யாருமே கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    மேலும் பலர் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறி பயணம் செய்தனர். அவர்களை ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை. இதனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகளும் அவதி அடைந்தனர்.

    தெற்கு மத்திய ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்களில் 27 சதவீதம் பேர் ஏ.சி. மற்றும் படுக்கை முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்கின்றனர்.

    பொது பெட்டிகளில் 73 சதவீத பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். சூப்பர் பாஸ்ட் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 5 அல்லது 6 பொதுப்பட்டிகள் இருந்தன. வருவாயை கருத்தில் கொண்டு பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை கணிசமாக குறைத்து விட்டதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது குறித்து ரெயில்வே பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்

    பொதுப் பெட்டிகளில் பயணம் செய்யும் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களை பற்றி ரெயில்வே நிர்வாகம் கவலைப்படவில்லை.

    அவர்களை ஒரு பூச்சிகள் போல நடத்துகின்றனர். பொது பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் பல மணி நேரம் நரக வேதனையை அனுபவித்தபடி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோனார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கையில் குழந்தைகளுடன் இருந்த கர்ப்பிணி ஒருவர் நெரிசலில் சிக்கி காயம் அடைந்து இறந்தார்.

    தெற்கு மத்திய ரெயில்வேயில் உள்ள பெட்டிகளில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என இதுவரை 30 லட்சம் கடிதங்கள் எழுதியுள்ளோம்.

    இதே நிலை தெற்கு ரெயில்வேயில் இயக்கப்படும் சில ரெயில்களிலும் நீடித்து வருகிறது. நீண்ட தூர ரெயில்களில் பொதுப்பட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றனர்.

    • மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் ரெயில்கள் ரத்து.
    • 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    சென்னை:

    தாம்பரம் ரெயில்வே யார்டில் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால் கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு மின்சார ரெயில் போக்குவரத்தில் பெரும் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதேபோல் சில விரைவு ரெயில்கள் செங்கல்பட்டில் இருந்து புறப்பட்டு செல்லும் சில வெளி மாநில ரெயில்கள் அரக்கோணம், காட்பாடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

    எனவே இந்த ரெயில்களின் மாற்றங்கள், புறப்படும் இடம், நேரம் பற்றிய தகவல்களை பயணிகள் எளிதில் அறிந்து கொள்ள வசதியாக 2 தொலைபேசி எண்களை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது. அந்த உதவி எண்கள் வருமாறு:-

    044-25354995, 044-25354151 இந்த எண்களில் 24 மணிநேரமும் பயணிகள் தொடர்பு கொள்ளலாம். நாளை மறுநாள் (18-ந் தேதி) வரை இந்த உதவி எண்கள் செயல்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
    • ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும்.

    இடைக்கோடு, தேவிகோடு மற்றும் புலியூர்சாலை ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறி அவர்கள் அன்பை ஏற்று வாங்கினோம். மேலும் அவர்கள் தெரிவித்த குறைகளை கேட்டு அவற்றை நிவர்த்தி செய்ய உறுதி அளித்தோம்.


    அன்னை இந்திரா காந்தி அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மேல்புறம் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நன்றி கூறும் பயணத்தை ஆரம்பித்தோம்.

    விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து நன்றி சொல்ல வருகிறோம்.

    தென்னக ரெயில்வேயின் பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்களை சென்னையில் சந்தித்து இரணியல் ரெயில் நிலையத்தை ஒட்டி ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.


    தற்போது திட்டமிட்டிருக்கும் ஜல்லி கிடங்கு நடைமேடைக்கு மிக அருகில் இருப்பதால் அங்கிருந்து கிளம்பும் தூசு மற்றும் மாசு பொருட்கள் பொதுமக்களுக்கு தீங்கை ஏற்படுத்தும் என தெரிவித்தேன்.

    இந்த ஜல்லி கிடங்கை நடைமேடையில் இருந்து சற்று தூரம் தள்ளி அமைக்க வேண்டும் எனவும்,

    இந்த பிரச்சனைக்கு சமூக தீர்வு காண்பதற்காக ரெயில்வே துறையின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்வதற்கு அனுப்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டேன்.

    • ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
    • இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (ஜூலை 23) துவங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தினமும் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 55 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    இந்த நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ரெயில் சேவைகள் ரத்து செய்யும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக இன்று வழக்கம் போல் ரெயில் சேவைகள் இயங்கும்.

    எனினும், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டும் புறநகர் ரெயில்கள் முன்பு அறிவித்தப்படி இயங்காது. வருகிற சனிக்கிழமை (ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) புறநகர் ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை புறநகர் ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போல் ரத்து செய்யப்படும். 

    • நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.

    தஞ்சாவூா்:

    தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கரூர்-திருச்சி ரெயில் வழித்தடத்தில் குளித்தலை மற்றும் பெட்டவாய்த்தலை ரெயில் நிலையங்கள் இடையே பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, நாளை (திங்கட்கிழமை) மற்றும் 27-ந்தேதி ஆகிய 2 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, சேலம்-மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண்-16812) கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூரில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் மயிலாடுதுறைக்கு நாளை (திங்கட்கிழமை) மாலை 4.45 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் புறப்படும்.

    இதேபோல், திருச்சி-ஈரோடு முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (வண்டி எண்-06809) திருச்சியில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, நாளை (திங்கட்கிழமை) மாலை 5.10 மணிக்கும், 27-ந்தேதி மாலை 4.40 மணிக்கும் புறப்படும். 27-ந்தேதி பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில் (வண்டி எண்-16844) கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். திருச்சி-பாலக்காடு டவுன் ரெயில் (16843) கரூரில் இருந்து பாலக்காடு டவுனுக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.
    • வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை.

    சென்னை:

    மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ரெயில்வே துறையில் கோவிட் காலத்தில் ஏற்றப்பட்ட கட்டண உயர்வை கைவிடக்கோரிய போராட்டத்திற்கு வெற்றி.

    வெளிப்படையாக அறிவித்தால் எதிர்கட்சி கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக கருதப்படும் என்பதால் சாதாரணக் கட்டணத்தை வசூலிக்க சத்தமில்லாமல் சுற்றறிக்கை.

    தேர்தல் வந்தால் தான் எளிய மனிதர்களின் கோரிக்கை மத்திய அரசின் நினைவுக்கு வருகிறது என கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • தென்னக ரயில்வேயில் பயணிகள் ரெயிலுக்கான கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    நகரப் பகுதிகளோடு கிராமப்புற மக்களை இணைக்கும் வகையில் பல ஆண்டுகளாக பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. பாசஞ்சர் ரெயில் என்று கூறப்படும் இந்த ரெயில்கள் எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    முக்கிய நகரங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்குள் மட்டும் சென்று வரும் ரெயில்களில் கட்டணம் குறைவாக இருந்ததால் மக்கள் அதிகளவில் பயன்படுத்தினர். விவசாய விளைபொருட்கள் எடுத்துச் செல்லவும் இது உதவுவதால் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த உணவு பொருட்களை நகரப்பகுதிகளுக்கு கொண்டு வருவது வழக்கம்.

    எல்லா ரெயில் நிலையங்களிலும் நின்று செல்வதால் பயணிகள் ரெயில்களுக்கு கிராம மக்கள் இடையே அதிக வரவேற்பு இருந்தது.

    இதற்கிடையே, கொரோனா காலத்தில் பயணிகள் ரெயில், மெயில் எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றப்பட்டது. இதனால் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. இது அப்போது எதிர்ப்பை ஏற்படுத்தினாலும் கொரோனா காலத்தில் பெரிதாக பேசப்படவில்லை. கடந்த 3 ஆண்டாக மெயில் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது.

    இந்நிலையில், மீண்டும் இந்த ரெயில்கள் பயணிகள் ரெயில்களாக மாற்றம் செய்து ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 21-ம் தேதியில் இருந்து இது மீண்டும் நடைமுறைக்கு வந்தது.

    நாடு முழுவதும் உள்ள மெயில் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில்களாக மாற்றப்பட்டதால் கட்டணமும் குறைந்தது. தமிழகத்தில் சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட டிவிஷன்களில் இயக்கப்படும் இத்தகைய ரெயில்களில் இனி சாதாரண கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம் அதிகபட்சமாக ரூ.30 வரை கட்டணம் குறைய வாய்ப்புள்ளது.

    இதுவரையில் மெயில் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. புதிய அறிவிப்புக்கு பிறகு பயணிகள் ரெயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட கட்டணம் தற்போது குறைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
    • ரெயிலை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இந்த ரெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பயணிகளுக்கு ஸ்ரீவைகுண்டம் மற்றும் புதுக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்த உணவுப் பொருட்களை கொண்டு வந்து உணவு அளித்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் வந்து பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தென்னக ரெயில்வே மேலாளரிடம் தங்களது பகுதி வழியாக பாலக்காடு வரை செல்லும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிற்காமல் செல்கிறது எனவும், இந்த ரெயிலை ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


    இந்த நிலையில் ரெயில் பயணிகளுக்கு உணவளித்த ஸ்ரீவைகுண்டம் மக்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் சோதனை முறையில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி வரும் குடியரசு தினமான நாளை 26-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 25-ந்தேதி வரை அதாவது 3 மாத காலத்திற்கு சோதனை முறையில் இந்த ரெயிலானது ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ஸ்ரீவைகுண்டம் மக்களின் நற்செயலை பாராட்டி நன்றி கடன் செலுத்தும் விதமாக தென்னக ரெயில்வே எடுத்த இந்த முடிவு ஸ்ரீவைகுண்டம் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    • பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
    • பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டம் சார்பில் பண்டிகை காலகட்டங்களிலும், சீசன் காலங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக சென்னை தாம்பரத்திற்கு (நாகர்கோவில்-தாம்பரம்) சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டு அந்த ரெயில் இந்த மாதம் இறுதி வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், வார இறுதி நாள் மற்றும் பண்டிகை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தற்போது இந்த ரெயில்களின் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரெயில்(06012) அடுத்த மாதம் 3, 10, 17, 24, 31, அடுத்த ஆண்டு ஜனவரி 7, 14, 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை நேரத்தில் சென்னை புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(06011) இன்று, அடுத்த மாதம் 4, 11, 18, 25, வருகிற ஜனவரி மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய திங்கட்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

    • மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் மட்டுமின்றி சென்னை, கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்து 150-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் நாட்டில் உள்ள மிகப்பழமையான ரெயில் நிலையங்களில் ஒன்றாகும்.

    கடந்த 1873-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ரெயில் நிலையத்தில் இருந்து தான் உலக பாரம்பரிய சின்னமான நூற்றாண்டு பழமை வாய்ந்த நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் இருந்து ஊட்டி மலை ரெயில் மட்டுமின்றி சென்னை, கோவைக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    மேட்டுப்பாளையம் ரெயில் நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்து 150 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு ரெயில் நிலையத்தின் பழமையையும், முக்கியத்து வத்தையும் உணர்த்தும் வகையில் ரெயில்வே நிர்வாகம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை இலவசமாக மலை ரெயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி இன்று காலை 10 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சுற்று வட்டாரப்பகுதிகளான ஓடந்துறை, காட்டூர், ஊமப்பாளையம், மணிநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 200 பேர் மேட்டுப்பாளையம் முதல் கல்லாறு வரை ஊட்டி மலை ரெயிலில் தென்னக ரெயில்வே சார்பில் அழைத்து செல்லப்பட்டனர். ரெயில் பெட்டியில் ஏறியது முதல் ரெயில் கிளம்பும் வரை மாணவ, மாணவிகள் சத்தமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்கள் அனைவரும் ஒரே மாதிரி டீ சர்ட் அணிந்து 150-வது ஆண்டு விழாவை கொண்டாடினர்.

    இந்த ரெயிலை இயக்குநர் மற்றும் சீனியர் டிவிசனல் மெக்கானிக்கல் என்ஜினீயர் பரிமளக்கு மார், நீலகிரி மலை ரெயில் உதவி இயக்குநர் சுப்ரமணி மற்றும் ரெயில் ஆர்வலர் டி.எல்.எஸ்.ராஜேந்திரன், ஹபிபுல்லா உள்ளிட்ட பலர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ரெயில்வே ஊழியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.
    • சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது.

    சென்னை:

    வண்டலூர் அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் முனையம் கட்டப்பட்டு உள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பஸ் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

    வண்டலூரில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தூரத்திலும் ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் இந்த பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    புறநகர் பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. தினமும் ஒன்றரை லட்சம் பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த பஸ் முனையம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பஸ் பயணிகளுக்கு வசதியாக ஊரப்பாக்கத்துக்கும் வண்டலூருக்கும் இடையே கிளாம்பாக்கத்தில் ரெயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தென்னக ரெயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்த கோரிக்கையை ஏற்று புதிய ரெயில் நிலையம் அமைக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது. தென்னக ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறார்.

    புதிய ரெயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரெயில்வே துறைக்கு ரூ.40 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது.

    சென்னை கோட்ட ரெயில்வே துறை சார்பில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்கான சர்வே மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்ததும் வேலைக்கான டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட ஒரு வருடத்துக்குள் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதிய ரெயில் நிலையம் கட்டுவதற்கு ரூ.20 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ரூ.4 கோடி நிதியை வழங்க முடிவு செய்துள்ளது.

    புதிய ரெயில் நிலையத்துக்கான நிலங்கள் ரெயில் பாதையின் இருபுறமும் கிடக்கின்றன. இது தவிர தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில அரசுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன. ரெயில் நிலையம் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது.

    வருவாய் துறை சார்பில் ஒப்புதல் அளிக்க தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த புதிய ரெயில் நிலையம் பஸ் நிலையத்துக்கு இணைப்பாக அமைவது வடசென்னை மற்றும் தென் சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ×