என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பீடி இலைகள்"

    • கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர கிராமங்கள் வழியாக படகுகளில் இலங்கைக்கு சட்டவிரோதமாக பீடி இலை, கடல் அட்டை, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கடத்தப்படுபவதை தடுக்க நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை மாவட்டத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் கூடங்குளம் பகுதியில் சோதனை சாவடி அமைத்து நெல்லை மாவட்ட போலீசாரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கூடங்குளம் கடல் வழியாக படகில் தடை செய்யப்பட்ட பீடி இலையை ஒரு கும்பல் கடத்துவதற்கு முயற்சி செய்வதாக நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே அவரது தலைமையின் கீழ் இயங்கும் தனிப்படை கூடங்குளம் பகுதிக்கு விரைந்தது.

    கூடங்குளம் அருகே உள்ள உலகரட்சகர்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தினர். டிரைவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தபோது அதில் சுமார் 2 டன் அளவு பீடி இலை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது கூடங்குளத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு பீடி இலையை அனுப்பி வைக்க கொண்டு செல்வதாக அவர் தெரிவித்தார்.

    அந்த நேரத்தில் ஒரு காரில் வேகமாக வந்த 4 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் காரை திருப்பிக்கொண்டு தப்ப முயன்றது. அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தபோது அந்த கும்பல் தான் பீடி இலையை இலங்கைக்கு கடத்த முயன்றது என்பது தெரியவந்தது.

    இதையடுத்து பீடி இலையுடன் லாரியையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் போலீசாரின் பிடியில் சிக்கிய 5 பேரையும் கூடங்குளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று நடத்திய விசாரணையில், அவர்கள் கூத்தங்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனா(வயது 70), தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சண்முகம்(25), ஏரலை சேர்ந்த சந்தோஷ்குமார்(23), தூத்துக்குடியை சேர்ந்த அந்தோணி ராஜ்(36), வள்ளியூர் அருகே உள்ள தளபதி சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார்(42) என்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் கடல் வழியாக கடத்த முயன்ற பீடி இலையின் இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • இந்திய கடலோர காவல்படையினர் நடவடிக்கை.
    • 4 படகுகளில் இருந்த 104 மூட்டை பீடி இலைகள் பறிமுதல்.

    மன்னார் வளைகுடாவில் வஜ்ரா கப்பல் மூலம் இந்திய கடலோர காவல்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது சர்வதேச கடல் எல்லைக்கு அருகே 4 படகுகளை கண்ட அவர்கள் அதனை வழிமறித்தனர். அந்த படகுகளில் இருந்த மீனவர்கள், கடலோர காவல்படையினரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர், அவர்களை விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் தூத்துக்குடி துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

    விசாரணையில் இரண்டு இந்திய படகுகள் மற்றும் இரண்டு இலங்கை படகுகள் மூலம் பீடி இலையை கடத்த முயன்றது தெரிய வந்தது. இந்த 4 படகுகளிலும் சுமார் 2.8 கிலோ எடை கொண்ட 104 மூட்டை பீடி இலைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள்,பின்னர் உள்ளூர் அதிகாரிகளிடம் மீனவர்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகுகளையும் ஒப்படைத்தனர். அந்த மீனவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

    • தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
    • தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க கடலோர காவல்படையினரும், போலீசாரும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், தூத்துக்குடி நகர உட்கோட்ட சிறப்பு படை போலீஸ் தலைமை காவலர் மாணிக்கராஜ் மற்றும் மகாலிங்கம், சாமுவேல், செந்தில் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் போலீசாரை பார்த்ததும் அங்கு நின்று கொண்டிருந்த மினிலாரியில் இருந்து சிலர் தப்பி ஓடினர். எனினும் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் அவர் மினிலாரியை ஓட்டிவந்த தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் (வயது41) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் மினிலாரியை சோதனையிட்டனர். அதில் 49 மூட்டைகளில் 2,500 கிலோ பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவைகள் தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்த முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சார்லசை கைது செய்தனர்.

    மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து. பீடி இலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதில் தொடர்புடையவர்கள் யார்- யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடிக்கு வெளிமாவட்டத்தில் இருந்து பீடிஇலைகள் கடத்தப்பட்டு வருவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தலைமையிலான போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை சாலை ரோச் பூங்கா பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு லோடு ஆட்டோ நின்று கொண்டிருந்ததது. அப்போது போலீசாரை பார்த்ததும் ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பிச் சென்றனர்.

    போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 42 மூட்டைகளில் 35 கிலோ பீடிஇலைகள் கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பீடிஇலைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து பீடிஇலைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? பீடிஇலைகள் இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டார்களா? இதில் தொடர்புடையவர்கள் யார்-யார்? என விசாரணை நடத்தி, தப்பி ஓடிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பீடிஇலைகள், மோட்டார் சைக்கிள்களை படத்தில் காணலாம்.

    • கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது
    • ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராமேசுவரம்:

    அண்மை காலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக தங்கம், போதை பொருட்கள் உள்ளிட்டவற்றை கடத்துவது அதிகளவில் நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட 35 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகிறது

    இலங்கையில் பீடி தயாரிக்கப்படும் இலைகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. அதிக விலை போகும் இந்த இலைகள் தமிழகத்தில் இருந்து கடத்தப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை ராமேசுவரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் 9 மூட்டைகள் கேட்பாரற்று கிடப்பதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மூட்டைகளை பிரித்து சோதனையிட்ட போது அதில் பீடி இலைகள் இருந்தன. ஒவ்வொரு மூட்டையிலும் 30 கிலோ என மொத்தம் 270 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக சமூக விரோதிகள் கொண்டு வந்திருக்கலாம் எனவும், ஆனால் எந்த காரணத்திற்காகவும் விட்டு சென்றார்கள் என தெரியவில்லை.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது.
    • கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் பாலம் அருகில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த லோடு வேனை நிறுத்த சொல்லியபோதும் லோடுவேன் நிற்காமல் தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலையில் திரும்பி சென்றது.

    இதனைத்தொடர்ந்து அந்த லோடு வேனை பின் தொடர்ந்து சென்று போலீசார் தடுத்து நிறுத்திய போது டிரைவர் மற்றும் மற்றொருவர் காட்டுப் பகுதியில் தப்பி ஓடிவிட்டனர்.

    இதனையடுத்து போலீசார் லோடு வேனை சோதனை செய்ததில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலை பண்டல் இருந்தது தெரியவந்தது. இதனால் தப்பியோடிய 2 பேரும் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டுள்ளதை அறிந்த போலீசார் லோடு வேனை பறிமுதல் செய்தனர்.

    கைப்பற்றப்பட்ட பீடி இலைகளை தூத்துக்குடி சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க உள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்கள் யார்? எங்கிருந்து கடத்தி வந்தனர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடற்கரை வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு தூத்துக்குடி கடற்கரை சாலை மீன்பிடி துறைமுகத்தை அடுத்து இனிகோநகர் பகுதியில் சந்தேகப்படும்படியாக வந்த லோடு ஆட்டோவை போலீசார் மறித்தனர்.

    அப்போது போலீசாரை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் லோடு ஆட்டோவை நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

    லோடு ஆட்டோவை போலீசார் சோதனை செய்தபோது அதில் 40 மூடைகளில் 2 டன் பீடி இலைகள் இருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர்.
    • படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோர பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக 'கியூ' பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், சுரேஷ், தலைமை காவலர்கள் ராமர் இருதயராஜ், பழனி, இசக்கி மற்றும் போலீசார் கடற்கரையோர பகுதிகளில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    இன்று அதிகாலை வேம்பார் கலைஞானபுரம் கடற்கரையோர பகுதியில் சந்தேகத்திடமாக மினிலாரி மற்றும் படகுடன் 6 பேர் நின்றிருந்தனர். உடனடியாக அங்கு சென்ற போலீசார் படகு மற்றும் மினிலாரியை சோதனை செய்தனர்.

    அப்போது அதில் பீடி இலைகள் 40 மூட்டைகளில் மொத்தம் 1,200 கிலோ இருந்தது தெரியவந்தது. மேலும் அவை தூத்துக்குடியில் இருந்த இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

    இதனைத் தொடர்ந்து படகு மற்றும் லோடு ஆட்டோவில் இருந்த பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கடத்தலில் ஈடுபட்ட மணக்கரை கீழூரை சேர்ந்த சரவணன் (23), மாரியப்பன் (38), பாளையங்கோட்டை சாந்திநகர் 3-வது தெருவை சேர்ந்த லூர்து அந்தோணி (41), கம்பராமாயண தெருவை சேர்ந்த முத்துக்குமார் (38), நெல்லை கான்சாபுரம் நொச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தூர் (20), முருகன் கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் (40) ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.
    • போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடலோர பகுதி வழியாக பீடி இலைகள், மஞ்சள் மற்றும் டீசல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையோர பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட இருப்பதாக கடலோர பாதுகாப்பு குழுமம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் இன்று அதிகாலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது தூத்துக்குடி தாளமுத்துநகர்-ராஜபாளையம் கடற்கரையோரமாக சந்தேகத்திற்க்கு இடமாக வந்த மினிலாரியை மறித்து சோதனை நடத்தினர்.

    அப்போது திடீரென போலீசார் வருவதை கண்டதும் மினிலாரியில் இருந்தவர்கள் அதனை நிறுத்தி விட்டு கீழ இறங்கி தப்பி ஓடி விட்டனர். போலீசார் மினி லாரியை சோதனை செய்தபோது அதில் 32 மூடைகளில் ஆயிரம் கிலோ பீடி இல்லைகள் இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்த போலீசார் பீடி இலைகளை கடத்த முயன்றவர்கள் யார்? மினி லாரியில் இருந்து தப்பி ஓடியவர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
    • பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை வழியாக இலங்கைக்கு பீடி இலை பண்டல்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வேகமாக வந்த மினி வேனை சப்-இன்ஸ்பெக்டர் முத்து மாரி தேவேந்திரன் உட்பட போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் 40 மூட்டைகளில் 1,200 கிலோ பீடி இலைகள் இருப்பதும், இதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி ஆரேக்கியபுரத்தைச் சேர்ந்த ஆதவன் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும், பீடி இலைகளுடன் வேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள், மஞ்சள் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இதை தடுக்க போலீசார் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் இருந்து படகு மூலம் 2 டன் பீடி இலைகள் கடத்தி சென்ற 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து பீடி இலைகள் மற்றும் படகு ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    கடத்தலில் ஈடுபட்டதாக தூத்துக்குடி இனிகோ நகர், சிலுவைபட்டி மற்றும் லூர்தம்மாள்புரம் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது19), அபிஷ்டன் (19), மரிய அந்தோணி (20), டிஜோ(24), காட்வே (19) ஆகிய 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கடற்கரை வழியாக படகு மூலம் பீடி இலைகளை கடத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
    • வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாள முத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் 'கியூ'பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தலைமை காவலர் ராமர், இருதயராஜ் மற்றும் போலீசார் இன்று அதிகாலை ரோந்து சென்றனர்.

    அப்போது சந்தேகத்திற்கிடமாக அங்கு வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் அதனை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். இதனைத் தொடர்ந்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ பீடி இலை பண்டல்கள் மற்றும் உயிர் கொல்லி பூச்சி மருந்துகள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள 425 கிலோ கட்டிங் செய்த பீடி இலை 17பண்டல்கள் மற்றும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 8,750 பாக்கெட்டுகளில் அடைத்து 15 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த மருந்து பொருட்கள் ஆகியவை இருந்தது அவற்றை இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததும் தெரிய வந்தது.

    அவற்றை கைப்பற்றிய போலீசார் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×