search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீச்சல் குளம்"

    • சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தான்.
    • சிறுவன் உயிரிழந்ததையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

    சென்னை:

    சென்னையின் புழல் அருகே உள்ள விநாயகபுரம் பகுதியை சேர்ந்த ரத்தினகுமார்-ராணி தம்பிதியின் மகன் கீர்த்தி சபரீஸ்கர். 10 வயதான இவர் சிறப்பு குழந்தையாவார்.

    இந்த சிறுவன் கொளத்தூரில் நீச்சல் பயிற்சி பெற்று வந்தார். வழக்கம்போல் நீச்சல் குளத்திற்கு பயிற்சிக்கு சென்ற பள்ளி சிறுவன் கீர்த்தி நீரில் மூழ்கி பலியானார்.

    சிறுவன் உயிரிழந்ததையடுத்து பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோரின் புகாரை அடுத்து நீச்சல் குளத்தின் உரிமையாளர் காட்வின், பயிற்சியாளர் அபிலாஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    முறையான பயிற்சி அளிக்காமல் பயிற்சியாளர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததால் சிறுவன் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

    பலியான சிறுவன் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும்.
    • நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அண்மை காலங்களில் கேரளாவில் 4 பேர் மூளைக்காய்ச்சல் நோயினால் இறந்து இருக்கிறார்கள். இந்த மூளைக்காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கடினமான கழுத்து வலி, மன குழப்பம், பிரமைகள் போன்ற சிந்தனைகள் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும்.

    இந்த அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பொது மருத்துவமனை, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

    இந்த நோயில் இருந்து பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் தேங்கி நிற்கும் மாசுபட்ட அழுக்கு நீரீல் குளிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

    தேங்கி நிற்கும் நீர்நிலைகள், குளங்கள், ஏரிகள் போன்றவற்றைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் சுகாதாரமாக உள்ளதா என்று உறுதி செய்யப்பட வேண்டும்.

    பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி நீச்சல் குளத்தின் சுகாதாரம் உறுதி செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தனியார் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான நீச்சல் குளங்களில் போதுமான குளோரினேஷன் பராமரிக்கப்பட வேண்டும்.

    நீர்நிலைகளை சுத்தமாக வைத்திருக்கவும், நீர்நிலைகளில் நுழைவதை கட்டுப்படுத்தவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்களின் வெளியூர் பயணம் மற்றும் சந்தேகத்திற்குரிய நோயின் அறிகுறிகளின் கண்டறிய அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவப் பயிற்சியாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது.
    • சிறுவனின் மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உத்தபிரதேசம் மாநிலம் மீரட் பகுதியில் 15 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள நீச்சல் குளத்தில் வெகு நேரமாக குளித்து மகிழ்ந்துள்ளார். பின்னர் வெளியே வந்த சில நிமிடங்களில் அந்த சிறுவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

    இதைத்தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் சிவல்காஸ் பகுதியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. நீச்சல் குளத்தில் இருந்து வெளியே வந்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அந்த சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    சிறுவனின் மரணத்திற்கு இதுவரை உறுதியான காரணங்கள் தெரியாத நிலையில், அந்த நீச்சல் குளத்தை மூடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் உள்ள டால்பின் நீச்சல் குளம் ஒன்றில் நேற்று (மே 20) ஏராளமானோர் குளித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது இளைஞன் ஒருவன் சாகசம் செய்யும் நோக்கில் நீச்சல் குளத்துக்குள் குதித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாகச் சாகசம் செய்யக் குதித்த இளைஞனின் முழங்கால் நீச்சல் குளத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்த மற்றொரு இளைஞனின் முகத்தில் தாக்கவே மயக்கமடைந்த இளைஞன் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளார்.

    சம்பவ நடந்த இடத்தில் அருகில் பலர் இருந்த போதும் இளைஞரைக் காப்பாற்ற முடியவில்லை. நீச்சல் குள லைப் கார்டும் ( உயிர்காப்பாளரும்) மிகவும் தாமதமாக அங்கு வந்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார். இதனால் அவரின் அலட்சியத்தையும் நீச்சல் குளத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் குறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

    இந்த டால்பின் நீச்சல் குளத்தில் ஏற்கனவே ஒரு உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. எனினும் பாதுகாப்பில் எந்த முன்னேற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து நீச்சல் குளம் இயங்கி வந்ததே மற்றொரு உயிரிழப்புக்குக் காரணம் என்று கண்டனங்கள் எழுந்துள்ளது.

     

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து, நீச்சல் குளத்துக்கு போலீசார் சீல் வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர். நீச்சல் குளத்தை நிரந்தரமாக மூடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான பரபரப்பான வீடியோ வெளியாகி இதுபோன்ற பல நீச்சல் குளங்களின் பாதுகாப்பு பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.  

    • தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர்.
    • இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது.

    லக்னோ:

    உத்தர பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகி வருகிறது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் தேர்வுகளை முடித்து விடுமுறையை அறிவித்துவிட்டன. இதனிடையே இறுதித் தேர்வுகளை முடிக்காத சில பள்ளிகள் மட்டுமே இயங்கி வருகின்றன.

    இந்நிலையில் வெப்பத்தைத் தணிக்க கன்னோஜ் மாவட்டம் மக்சவுனாபூர் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் இருந்த வகுப்பறையை நீச்சல் குளமாக மாற்றி உள்ளது பள்ளி நிர்வாகம். இந்த தற்காலிக நீச்சல் குளத்தில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பள்ளிக் குழந்தைகள் அதில் இறங்கி விளையாடி வருகின்றனர்.

    இதனால் வெப்பம் தணிவதோடு, குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மகிழ்ச்சியாக துள்ளி விளையாடும் வீடியோவையும் பள்ளி நிர்வாகிகள் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

    வகுப்பறை தரையைச் சுற்றி 2 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பப்பட்டு ஒரு அடி உயரத்துக்கு நீர் நிரப்பப்படுகிறது. இதில்தான் அந்த குழந்தைகள் நீந்தி விளையாடி வருகின்றனர்.

    இதுகுறித்து பள்ளி முதல்வர் வைபவ் ராஜ்புத் கூறியதாவது:-

    "இப்பகுதியில் கடந்த சில நாட்களாக 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவுகிறது. தாங்க முடியாத அளவுக்கு வெப்ப அலையும் வீசுகிறது. எனவே, குழந்தைகளை வெப்ப அலையில் இருந்து காக்க இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். முன்பு வெயில் அதிகமாக இருந்ததால் குழந்தைகள் பள்ளிக்கு வர மறுத்து வீட்டிலேயே இருந்தனர். தற்போது நீச்சல் குளம் கட்டிய பின்னர் அதிக அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்".

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி தங்கவேல். தொழில் அதிபரான இவர் மறைந்த பழம் பெரும் நடிகர் பாலையாவின் பேரன் ஆவார்.

    பா.ஜனதா கட்சியில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் மனைவி மற்றும் 2½ வயது மகனுடன் பங்களா வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் நீச்சல் குளம் உள்ளது.

    கடந்த சில நாட்களாக தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீச்சல் குளத்தில் தண்ணீர் அசுத்தம் ஆனது.

    இதையடுத்து பாலாஜி தங்கவேல் இன்று காலை நீச்சல் குளத்தில் இருந்த தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது நீச்சல் குளத்திற்குள் ஒன்றரை அடி நீளம் உள்ள முதலைகுட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்பு அந்த முதலை குட்டியை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து வைத்தார். இதுபற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து அந்த முதலைகுட்டியை மீட்டு பூங்காவிற்கு எடுத்துச் சென்றனர்.

    வண்டலூர் பூங்காவில் உள்ள முதலை குட்டிகளை உணவுக்காக பறவைகள் தூக்கி செல்லும் போது கீழே விழுவது வழக்கம். இதேபோல் சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம் பகுதியில் உள்ள நீர் நிலைகளில் இதற்கு முன்பும் தவறி விழுந்த முதலைகள் சிக்கி உள்ளது.

    சாலையில் முதலை நடந்து சென்ற சம்பவமும் நடந்து உள்ளது. பறவைகள் தூக்கி சென்ற போது இந்த முதலை குட்டியும் நீச்சல் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    • மாணவ, மாணவிகள் பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் இருந்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள நீச்சல் பயிற்சி தேவைப்படுகிறது.
    • 12 நாட்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் பயிற்சி கட்டணமாக ரூ. 1200 ஜி.எஸ்.டி 18 சதவீதம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி,

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குட்பட்ட நீச்சல் குளம் தருமபுரி இலக்கியம்பட்டியில் அமைந்துள்ளது.

    இந்த நீச்சல் குளத்தில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் மாணவ மாணவிகள் என அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

    மாணவ, மாணவிகள் பேரிடர் காலங்களில் நீர் நிலைகளில் இருந்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள நீச்சல் பயிற்சி தேவைப்படுகிறது.

    இதன் அடிப்படையில் தற்போது மாணவ, மாணவி களுக்கு கோடை விடுமுறை காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    அந்த வகையில் முதற்கட்ட பயிற்சியானது முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பயிற்சி வரும் 9-ம் தேதியும் 3-ம் கட்ட பயிற்சி வரும் 23-ம் தேதியும் தொடங்க இருப்பதால் 8 வயதிற்கு மேற்பட்ட மாணவ, மாண விகள் நீச்சல் பயிற்சியில் கலந்து கொண்டு பயன டைய வேண்டும் என்ற நோக்கத்தில் சிறந்த பயிற்சி யாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இந்த பயிற்சியானது காலை 7 மணி முதல் 8 மணி வரையும், 8 மணி முதல் 9 மணி வரையும், 9 மணி முதல் 10 மணி வரை என மூன்று பிரிவுகளாக நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    12 நாட்களுக்கு பயிற்சி கொடுக்கப்படும் பயிற்சி கட்டணமாக ரூ. 1200 ஜி.எஸ்.டி 18 சதவீதம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • கோடைகாலம் தொடக்கம் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் பல்வேறு இடங்களில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி இறந்ததையடுத்து நீச்சல் பயிற்சி பெற வயது வரம்பு உள்ளிட்ட 8 புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    சென்னை பெரியமேட்டில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் நீச்சல் குளம் உள்ளது. கடந்த வாரம் இங்கு நீச்சல் பழக வந்த கொசப்பேட்டையை சேர்ந்த 7 வயது சிறுவன் தேஜா குப்தா தண்ணீரில் மூழ்கி பலியானான்.

    இதையடுத்து நீச்சல் குளத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் நீச்சல் குளத்திற்கு சீல் வைத்து தற்காலிகமாக மூடப்பட்டது.

    கோடைகாலம் தொடக்கம் மற்றும் பள்ளி விடுமுறை என்பதால் பல்வேறு இடங்களில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து நீச்சல் பயிற்சி பெற 8 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாட்டை சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

    இதேபோல் நீச்சல் பயிற்சிக்கு பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கடிதம், உடல் நலம் குறித்த டாக்டரின் சான்றிதழ் முறையான பயிற்சியாளர், பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை கட்டுப்பாடு உள்ளிட்ட 8 விதிமுறைகள் மாநகராட்சி கொண்டு வந்து உள்ளது.

    நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கி இறந்ததையடுத்து நீச்சல் பயிற்சி பெற வயது வரம்பு உள்ளிட்ட 8 புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்துள்ளது.

    மீண்டும் இது போன்ற விபத்துகள் நடை பெறாமல் இருக்க உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக நீச்சல் குளங்களுக்கான ஒப்பந்ததாரர்களுக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தண்ணீரில் பி.எச்.அளவை சரிபார்த்தல், டைல்ஸ், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சியாளர்கள், கண்காணிப்பு கேமிரா உள்ளிட்டவற்றை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்வார்கள்.

    மெரினா நீச்சல் குளம் திறக்கப்பட்டு பாதுகாப்பு குறித்து கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    திருவொற்றியூர் சண்முகனார் பூங்காவில் உள்ள நீச்சல் குளம் பராமரிப்பில் உள்ளது. மைலேடி நீச்சல் குளத்தில் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும். ஒப்பந்ததாரரும் மாற்றப்பட உள்ளார். கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்கள் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீச்சல் குளத்தில் கோடைகாலத்தை யொட்டி நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது.
    • நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை:

    சென்னை பெரியமேடு மைலேடி பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் பழகிய 7 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவத்தையொட்டி அந்த நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்பட்டது.

    சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியம் அருகில் மைலேடி பூங்கா அமைந்து உள்ளது. இந்த பூங்காவில் சிறுவர்கள் நீச்சல் பழகும் பெரிய நீச்சல் குளம் உள்ளது.

    இந்த நீச்சல் குளத்தில் கோடைகாலத்தை யொட்டி நீச்சல் பயிற்சி நடந்து வருகிறது.

    தினமும் ஏராளமான சிறுவர்கள் நீச்சல் பழகி வருகிறார்கள். நேற்று முன்தினம் மாலையில் கொசப்பேட்டை ராகேஷ் என்பவரின் மகன் தேஜா (வயது 7) நீச்சல் பழகி கொண்டிருந்தான்.

    அப்போது திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் பலியானான். இதுகுறித்து சென்னை பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து உதவி கமிஷனர் ஹரிக்குமார் தலைமையில் விசாரணை செய்து வந்தனர். இதையொட்டி நீச்சல் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த சம்பவத்தையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் பெரியமேடு நீச்சல் குளத்துக்கு 'சீல்' வைக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது. அது பற்றிய அறிவிப்பு பலகையும் அங்கு வைக்கப்பட்டு உள்ளது.

    • பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர்.
    • திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான்.

    சென்னை:

    சென்னை கொசப்பேட்டை பட்டாளம் ஹாஜி முகமது அப்பாஸ் தெருவை சேர்ந்த வர் ராகேஷ்குப்தா. இவரது மகன் தேஜா (வயது7).

    வேப்பேரி அகர்வால் வித்யாலயா பள்ளியில் தேஜா 2-ம் வகுப்பு படித்து வந்தான். பெரியமேட்டில் உள்ள மைலேடி பூங்கா நீச்சல் குளத்துக்கு தினமும் சென்று தேஜா நீச்சல் கற்று வந்தான்.

    நேற்று மாலை 6 மணி அளவில் தனது தாத்தாவுடன் சிறுவன் நீச்சல் குளத்துக்கு சென்றான். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டான். பயிற்சியாளர்களான செந்தில், சுமன் ஆகியோர் நீச்சல் குளத்தில் 15 சிறுவர்களுக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து தேஜாவும் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டான்.

    அப்போது திடீரென சிறுவன் தேஜா தண்ணீரில் மூழ்கினான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயிற்சியாளர் செந்தில் நீரில் மூழ்கிய தேஜாவை மீட்டு வெளியில் கொண்டு வந்தார். உடனடியாக மோட்டார்சைக்கிளில் வைத்து அருகில் உள்ள ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மாணவன் தேஜாவை மயங்கிய நிலையில் கொண்டு சேர்த்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் தேஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து சென்று தேஜாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    இது தொடர்பாக பெரிய மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவன் உயிரிழப்புக்கு நீச்சல் பயிற்சியாளர்களின் கவனக்குறைவு காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் முடிவில் சிறுவனின் உயிரிழப்புக்கு கவனக்குறைவு காரணமாக இருப்பது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    நீச்சல் பயிற்சிக்கு சென்ற இடத்தில் சிறுவன் தேஜா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அவனது உறவினர்கள் மற்றும் பள்ளி நண்பர்கள், ஆசிரியர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுரை மாநகராட்சி நீச்சல் குளத்தில் சிறுவர்கள்-வாலிபர்கள் திரண்டனர்.
    • நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

    மதுரை

    மதுரை தல்லாகுளத்தில் மாநகராட்சியின் நீச்சல் குளம் உள்ளது. பராமரிப்பு பணி காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த நீச்சல்குளம் செயல்படாமல் இருந்தது. இந்நிலையில் புனரமைப்பு பணிகள் முடிந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நீச்சல்குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

    புதுபொலிவுடன் காணப்படும் இந்த நீச்சல்குளத்தில் ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து குளித்து சென்றனர். இங்கு குளிப்பதற்கு சிறுவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 40 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அந்த கட்டணத்தை செலுத்தி தினமும் ஏராளமானோர் குளித்து வந்தனர்.

    இந்நிலையில் மதுரையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவிலும் கடும் வெப்பம் நிலவி வருகிறது. வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெப்பத்தை தணிக்க சிறுவர்கள், வாலிபர்கள் நீர்நிலைகளுக்கு சென்று நீண்ட நேரம் நீராடி மகிழ்கின்றனர்.

    அதிலும் மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்திற்கு வருகின்றனர். விடுமுறை தினமான இன்று இன்று ஏராளமான சிறுவர்கள், வாலிபர்கள் திரண்டனர். இதனால் அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்ததால் நுழைவு கட்டண சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் வயது வித்தியாச மின்றி அனைவரும் காத்திருந்தனர்.

    வாலிபர்களும், சிறுவர்க ளும் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

    • நீச்சல் குளத்தை கண்டதும் குதூகலம் அடைந்த செங்கமலம் யானை அதன் உள்ளே இறங்கி தண்ணீரை துதிக்கையால் எடுத்து தனது உடல் மேல் பீய்ச்சியடித்து உற்சாகமாக குளித்தது.
    • குளத்தில் யானை விளையாடி மகிழ்ந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள யானை செங்கமலம் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் காணப்படும்.

    இதனால் இந்த யானை பக்தர்களால் 'பாப்கட்டிங்' செங்கமலம் என அன்புடன் அழைக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் யானை செங்கமலத்தை பார்க்காமல் செல்லமாட்டார்கள்.

    குறிப்பாக விடுமுறை நாட்களில் யானை செங்கமலத்தை காண கோவிலுக்கு வரும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பக்தா்களின் செல்லப்பிள்ளையாக திகழும் யானை செங்கமலத்தின் தலையில் உள் முடிகளின் அமைப்பு மற்ற யானைகளில் இருந்து சற்று வித்தியாசமாக இருக்கும்.

    தலையில் வளர்ந்த முடிகள் முன்பக்க நெற்றியை மறைக்கும் வகையில் கீழ்நோக்கி வரிசையாக இருக்கும். யானை செங்கமலத்தை குளிக்க வைக்கும்போது வாரத்துக்கு ஒரு முறை அதன் தலைமுடிக்கு ஷாம்பு போடப்படும். பின்னர் யானையின் தலைமுடியை அதற்கென வடிவமைக்கப்பட்ட பெரிய சீப்பு மூலம் சீவி அலங்கரித்து நிறுத்தப்பட்டிருக்கும். இந்த யானையை கண்டால் பக்தர்கள் மனதில் தனி குதூகலம் பிறக்கும்.

    இந்த யானைக்கு வெப்பம் தாக்காதவாறு இருக்க யானை இருக்கும் ஷெட்டின் மேற்புறம் மூங்கில் தட்டியால் பந்தல் அமைக்கப்பட்டு மின்விசிறியும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாரந்தோறும் கால்நடை டாக்டர் மூலம் யானையின் உடல் நலன் பரிசோதிக்கப்படுகிறது.

    யானையை குளிக்க வைக்க என தனியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் யானை மீது பீய்ச்சி அடிக்கப்பட்டு யானை குளிப்பாட்டப்பட்டு வந்தது. இதில் போதிய அளவில் யானையின் உடலை குளிர்விப்பது சிரமமாக இருந்தது. எனவே யானைக்கு நீச்சல் குளம் கட்ட வேண்டும் என பக்தர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் செலவில் கோவில் வளாகத்தில் யானைக்கு தனியாக நீச்சல் குளம் கட்டும் பணி தொடங்கப்பட்டு நிறைவடைந்தது. நீச்சல் குளம் 25 அடி நீளம், 25 அடி அகலம், 9 அடி ஆழத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீர் நிரப்பும் பணி நிறைவடைந்து.

    நேற்று காலை நீச்சல் குளம் திறப்பு விழா நடந்தது. நீச்சல் குளத்தை டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். பின்னர் செங்கமலம் யானை பக்தர்கள் புடை சூழ நீச்சல் குளத்துக்கு அழைத்து வரப்பட்டது.

    நீச்சல் குளத்தை கண்டதும் குதூகலம் அடைந்த செங்கமலம் யானை அதன் உள்ளே இறங்கி தண்ணீரை துதிக்கையால் எடுத்து தனது உடல் மேல் பீய்ச்சியடித்து உற்சாகமாக குளித்தது. அப்போது குளத்தில் யானை விளையாடி மகிழ்ந்ததை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். பின்னர் பாகன் ராஜா யானையை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார். இந்த நிகழ்ச்சியில் மன்னார்குடி நகரசபை தலைவர் மன்னை சோழராஜன், ஆணையர் சென்னு கிருஷ்ணன், துணைத் தலைவர் கைலாசம், நகர தி.மு.க செயலாளர் வீரா.கணேசன், கோவில் செயல் அதிகாரி மாதவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×