என் மலர்
நீங்கள் தேடியது "குட்டி யானை"
- சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.
- மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் வனச் சரகம் வாச்சிக்கொல்லி பீட்டில் சோமன் வயலில் சேற்றில் யானை இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து வனத்துறையினர், கும்கி யானைகள் உதவியுடன் அப்பகுதிக்கு சென்று பாா்வையிட்டனா். தொடா்ந்து முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் யானையை உடல் கூறாய்வு செய்து அதே இடத்தில் புதைத்தனா்.மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலா் கருப்பையா மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். இதில் இறந்து கிடந்தது, ஒன்றரை வயதுடைய ஆண் யானை குட்டி என்றும், நோய் தொற்று காரணமாக இந்த குட்டி யானை இறந்ததாகவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.
- வனத்துறையினர் கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.
வால்பாறை,
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன.
யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி-வால்பாறை ரோட்டில் யானைகள் கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.
அதில் ஒரு குட்டி யானை தும்பிக்கை இல்லாமல் தாய் அரவணைப்பில் செல்வதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பாா்த்து வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து திருச்சூா் மாவட்ட வன அதிகாரி தலைமையில் வனத் துறையினா் அதிரப்பள்ளி வனப்பகுதிக்கு வந்து தும்பிக்கை இல்லாமல் செல்லும் பிறந்து சில மாதங்களேயான குட்டி யானையை கண்டனர்.
அந்த பகுதியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அங்கு செல்கின்றனர். அவர்கள் தும்பிக்கை இல்லாத குட்டி யானையை வீடியோ எடுத்தனர். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கேரள வனத்துறையினர் கூறும்போது, குட்டி யானைக்கு பிறவியிலேயே தும்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். அல்லது பிற வனவிலங்குகள் தாக்கியதில் தும்பிக்கை இழந்திருக்கலாம்.
ஆனால், குட்டி யானை ஆரோக்கியத்துடன், தாய் யானையுடன் உலா வரு கிறது.
அந்த யானையின் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
- வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
இங்கு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆ.ராசா எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்தனர்
அங்கு பொம்மி, ரகு என்ற குட்டி யானைகளை பராமரித்த பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர். மேலும் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அப்போது வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
- வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
- அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பென்னாகரம்,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கட்டமடுவு பகுதியில் இன்றுகாலை குட்டியானை ஒன்று சுற்றித்திரிந்தது.
அந்த யானை திடீரென அப்பகுதி விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.
- யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஊட்டி:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வனப்பகுதியில் தாயை பிரிந்து 5 மாத ஆண் குட்டி யானை தனியாக சுற்றி திரிந்தது.
தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, குட்டி யானையை கண்காணித்து அந்த யானையை தாயிடம் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் குட்டி யானை கிணற்றில் தவறி விழுந்ததில் காயம் அடைந்தது. இதனால் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதைத்தொடர்ந்து, குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பி பராமரிக்க வனத்துறை முடிவு செய்தது. அந்த குட்டி யானையை அழைத்துச் செல்வதற்காக ஆஸ்கர் விருது பெற்ற ஆவணப்படத்தில் நடித்திருந்த பாகன் பொம்மன் முதுமலையிலிருந்து வரவழைக்கப்பட்டார்.
அவரது கண்காணிப்பில், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலைக்கு குட்டி யானை கொண்டு செல்லப்பட்டது. அங்கு வனத்துறையினர் குட்டி யானையை பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைத்தனர்.
குலதெய்வத்துக்கு பூஜை செய்து, ஆரத்தி எடுத்து குட்டி யானையை கரோல் எனப்படும் கூண்டில் அடைத்து வைத்து பராமரித்து வந்தார். கூண்டில் யானை படுப்பதற்காக பஞ்சு மெத்தையும் கொடுக்கப்பட்டிருந்தது.
முதலில் அடம் பிடித்த யானை பின்னர், பொம்மனுடன் சேர்ந்து கொண்டு விளையாட தொடங்கியது. தொடர்ந்து குட்டி யானைக்கு திரவ உணவுகள் வழங்கி யானையை தங்கள் குழந்தை போல பொம்மனும், பெள்ளியும் கவனித்து வந்தனர்.
யானைக்குட்டிக்கு காயம் இருந்ததால், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மருத்துவ குழு ஆலோசனைப்படி குட்டி யானைக்கு மருந்துகளும், உணவுகளும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் குட்டி யானைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
உடனடியாக கால்நடை டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து யானை குட்டிக்கு சிகிச்சை அளித்தனர். இருப்பினும், நள்ளிரவு 1 மணியளவில் குட்டி யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.
குட்டி யானை இறந்த தகவலை அறிந்ததும் அந்த யானை குட்டியை பராமரித்து வந்த பொம்மன், பெள்ளி தம்பதியர் மற்றும் வனத்துறையினர் சோகம் அடைந்தனர்.
இன்று காலை காலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் குட்டியை உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
காயம் அடைந்த குட்டி யானையை மருத்துவர்கள் கண்காணிப்புடன், கூண்டில் அடைத்து பராமரித்து வந்தோம். யானை குட்டி நன்றாகவே இருந்தது.
நேற்று திடீரென யானை குட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டாக்டர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். இருப்பினும் இறந்து விட்டது. யானை குட்டி ஒவ்வாமை காரணமாக வயிற்று போக்கு ஏற்பட்டு இறந்திருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் உடற்கூராய்வுக்கு பின்னரே யானை குட்டி இறந்ததற்கான காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர்.
- குட்டி யானையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
நெல்லை:
தமிழக -கேரள எல்லை யில் தென்காசி மாவட்டம் புளிய ரையை அடுத்த அலிமுக்-அச்சன்கோவில் சாலையில் வளையம் பகுதியில் நேற்று முன்தினம் யானை கூட்டம் ஒன்று சென்றுள்ளது. இதில் ஒன்றரை வயது குட்டி யானையும் இருந்துள்ளது. நேற்று காலை அந்த சாலையில் சென்றவர்கள் பார்த்தபோது யானை குட்டி இறந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து உடனடியாக மண்ணறைப்பாறை வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறை யினர் அங்கு விரைந்து வந்தனர்.
ஆனால் யானைகள் அங்கேயே நின்றதால் வனத்துறையினர் காத்திருந்தனர். பின்னர் யானைகள் வனத்திற்குள் திரும்பி சென்றது.
இதைத்தொடர்ந்து கோனி உதவி கால்நடை அதிகாரி சந்திரன் தலைமையில் யானையின் உடல் அங்கேயே உடற்கூறாய்வு செய்யப்பட்டது. வனவிலங்கு களுக்கு நோய் தொற்று அபாயம் இருப்பதால் குட்டி யானையின் உடல் புதைக்கப்படாமல் தீ வைத்து எரிக்கப்பட்டது.
தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் அச்சங்கோவில் பகுதிக்கு வந்து செல்கின்றனர். குட்டி யானை உயிரிழந்த நிலையில் யானை கூட்டம் அங்கேயே சுற்றி வருவதால் வனப்பகுதிக்குள் யாரும் செல்ல வேண்டாம் என கேரள போலீசார் மற்றும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கையை விடுவதற்கு அந்த குட்டி யானை விரும்பாதது போல் தோன்றியது.
- 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்தது.
யானைக்கும் அதன் பராமரிப்பாளருக்கும் இடையிலான பாசப்பிணைப்பு மிகவும் தூய்மையானது. அந்த வகையில் குட்டி யானை ஒன்று அதன் பராமரிப்பாளரின் கையை பிடித்து இழுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. டுவிட்டரில் ப்யூடென்கெபிடன் என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில் ஒரு குட்டி யானை அதன் பராமரிப்பாளரின் கையை சுற்றி மிகவும் அபிமான முறையில் சுற்றி கொண்டிருந்தது.
பராமரிப்பாளரின் கையை விடுவதற்கு அந்த குட்டி யானை விரும்பாதது போல் தோன்றியது. பாதுகாவலரின் கையை பிடித்துள்ள குட்டி யானை என்ற தலைப்பின் கீழ் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதா பண்ணை வீட்டில் யானைகள் தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
- இறந்தது ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.
கவுண்டம்பாளையம்,
கோவை பாலமலை அருகே நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் நடிகர் சத்யராஜின் சகோதரியான அபராஜிதாவுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு வெளியே ஒரு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளது.
வனத்தை விட்டு வெளியே வரும் காட்டு யானைகள் அவ்வப்போது இங்கு வந்து தண்ணீரை குடித்து விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் இந்த கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.
அப்போது தொட்டிக்குள் குட்டி யானை ஒன்று இறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியான காவலாளி, சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் வன அலுவலர் செல்வராஜ், தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தொட்டிக்குள் கிடந்த குட்டி யானையை பார்த்தனர்.
அப்போது தொட்டிக்குள் கிடந்த யானை ஒரு வயதுடைய காட்டு யானை என்பதும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது. காட்டு யானைகளுடன் தண்ணீர் குடிக்க வந்த போது தவறி தொட்டிக்குள் விழுந்து இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல உதவி பாதுகாவலர் செந்தில்குமார், உள்ளிட்ட வன அலுவலர்கள், மருத்துவர் சுகுமார் விரைந்து வந்தனர்.
தொடர்ந்து இறந்த குட்டி யானையின் உடலை தொட்டியில் இருந்து வெளியே எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதற்காக அந்த தொட்டி உடைக்கப்பட்டு, தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து குட்டி யானை உடற்கூராய்வு செய்யப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையே இன்று அதிகாலை நேரத்தில் 11-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி பண்ணை வீட்டுக்கு வந்தன. அந்த யானைகள் இறந்த குட்டி யானையை தேடி வந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த யானைகள் வீட்டுக்குள் நுழையாதவாறு வனத்துறையினர் தடுத்து பட்டாசு வெடித்து, அந்த யானைகளை வனத்திற்குள் விரட்டினர்.
இதுபற்றி வனத்துறையினர் கூறுகையில் பண்ணை வீட்டுக்கு வெளியே தண்ணீர் தொட்டி உள்ளதால் யானைகள் அடிக்கடி இங்கு வந்து தண்ணீர் குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளன.
அவ்வாறு வந்த ஒரு குட்டி யானை தான் தொட்டிக்குள் விழுந்து இறந்துள்ளது. அந்த குட்டி யானையை தேடி நேற்று 11-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அந்த யானைகளும் இந்த தண்ணீர் தொட்டியில் நீர் அருந்துவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளன என்றனர்.
- வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர்.
- கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது.
மேட்டுப்பாளையம்:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ளது அட்டப்பாடி பாலூர் குடியிருப்பு. இது கோவை மாவட்டத்தை ஒட்டிய பகுதியாகும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு குட்டி யானை ஒன்று அந்த பகுதிக்கு வந்தது. அந்த யானை மிகவும் சோர்வாக காணப்பட்டது. இதுகுறித்து கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் அகளி வனச்சரக அதிகாரி சுமேஷ் தலைமையில் ஊழியர்கள், அட்டப்பாடிக்கு விரைந்து வந்து குட்டி யானையை மீட்டனர்.
பாலக்காடு வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் தண்ணீர் தேடி குட்டிகளுடன் கிராமப் பகுதிகளுக்கு சென்று திரும்புவது வழக்கம். அப்படி வந்த கூட்டத்தில் இந்த குட்டி யானை வழிதவறி பாலுார் குடியிருப்பில் தஞ்சம் புகுந்து இருக்கலாம் என்று தெரிகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் குட்டி யானைக்கு காய்கறி, புற்கள் உள்ளிட்ட சத்தான உணவுப்பொருட்களை வழங்கினர். இதனை ருசித்து சாப்பிட்ட குட்டி யானை அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது.
பாலூர் குடியிருப்பில் தஞ்சம் புகுந்த குட்டி யானையை தேடி, தாய் யானை மீண்டும் வரலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கருதினர். எனவே அந்த குட்டி யானை மீண்டும் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அது நேற்று காலை திரும்பவும் பாலூருக்கு வந்து சேர்ந்தது. இது வனத்துறை அதிகாரிகளிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. எனவே குட்டி யானைக்கு மீண்டும் உணவுகள் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர் டேவிட் வினோத் தலை மையிலான டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் அந்த குட்டி யானை ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த குட்டி யானை அட்டப்பாடி காட்டுப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கிருஷ்ணவனம் என்ற பகுதியில் வனத்துறை தற்காலிக குடில் அமைத்து உள்ளது. அங்கு குட்டி யானைக்கு உணவுகள் தரப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், அட்டப்பாடி வனப்பகுதியில் போதிய மழை இல்லை. எனவே அங்கு உள்ள நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. எனவே யானைகள் கூட்டமாக காட்டோரத்தில் இருக்கும் கிராமப்பகு திகளுக்கு வந்து அங்கு உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். அப்படி வந்த யானைகள் கூட்டத்தில் இருந்து தான், அந்த குட்டி யானை வழிதவறி பாலூருக்கு வந்து இருக்க வேண்டும். எனவே அட்டப்பாடி கிருஷ்ணவனம் பகுதியில் குட்டிக்கு தற்காலிக குடில் ஏற்படுத்தி தரப்பட்டு உள்ளது. இது எளிதில் பிரியக்கூடியது. எனவே யானைக்கூட்டம் மீண்டும் திரும்பி வந்து குட்டியை எளிதாக மீட்டு சென்று விடும் என்று நம்புகிறோம். தாய் யானை மீட்க வரவில்லை என்றால் வனத்துறையே அந்த குட்டி யானையை வளர்க்கும் என்று தெரிவித்து உள்ளனர்.
- யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.
- பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் யானை, மான், கரடி, சிறுத்தை, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இதில் யானைகள் மட்டும் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது.
மேலும் தற்போது பலாப்பழம் சீசன் காரணமாக பழங்களை ருசிப்பதற்கு வனப்பகுதியை விட்டு ஊருக்குள் வந்து செல்கின்றன. மேலும் வனப்பகுதியில் உள்ள மூங்கில் தூர்களை உடைத்து சாப்பிடுவதும் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் பர்கூர் வனப்பகுதியில் பெண் யானை மற்றும் அதனுடன் குட்டி யானை துள்ளிக்குதித்து விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அதனை பார்ப்பதற்கு மனதில் ஒரு வகை சந்தோசம் ஏற்படும் வகையில் தாயிடத்தில் ஒரு குழந்தை எப்படி அன்போடு விளையாடி மகிழ்கிறதோ அதேபோல் குட்டி யானை விளையாடி மகிழ்ந்ததை தாய் யானை பார்த்து ரசிப்பது போன்று ஒரு உணர்வு ஏற்பட்டது.
இதனை வனப்பகுதியில் செல்பவர்கள் படம் பிடித்து தங்கள் செல்போனில் வைத்து பார்த்து மகிழ்ந்தனர்.
- யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும்.
- குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. அவைகள் தொல்லையின்றி வாழ்வதற்கு ஏதுவான சூழலை கேரள வனத்துறை செய்துள்ளது. மேலும் உடல்நலம் பாதித்து அவதிப்படும் யானைகளை கண்டறிந்து, அவற்றுக்கு தேவையான சிகிச்சைகளையும் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிரப்பள்ளி ஏழாட்டுமுகம் வனப்பகுதியில் 4 வயது மதிக்கத்தக்க குட்டியானை ஒன்று கடந்த சில மாதங்களாக திரிந்து வருகிறது. அந்த குட்டி யானைக்கு தும்பிக்கை இல்லை. அந்த குட்டி யானையை 4 முறை பொதுமக்கள் பார்த்துள்ளனர்.
ஆனால் இதற்கு முன் பார்த்ததைவிட, தற்போது அந்த யானை மிகவும் சோர்வான நிலையில் திரிவதாக கூறப்படுகிறது. யானைக்குட்டிகளுக்கு 5 முதல் 6 வயது வரை அதன் தாய் பாலூட்டும். ஆனால் இந்த யானை தாயிடம் இருந்து பிரிந்து வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அந்த யானைக்கு தும்பிக்கை இல்லாமல் இருப்பதால் மற்ற யானைகளை போன்று அனைத்து உணவுகளையும் வழக்கம்போல் உண்ண முடியாத நிலையில் இருக்கலாம் எனவும், அதன் காரணமாக அந்த யானை உடல்நிலை மோசமடைந்து சோர்வாக காணப்படலாம் என்றும் யானை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த குட்டி யானைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வனத்துறையினர் முன்வர வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது.
- காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 13 காட்டு யானைகள் முகாமிட்டன. பின்னர் அவை இரவுநேரத்தில் அடர்ந்த காட்டுக்கு திரும்பி சென்றன.
ஒரு குட்டியானை மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து, வழிதவறி பன்னிமடை எஸ்டேட் பகுதியில் சுற்றி திரிந்தது. இதனை அடுத்த நாள் காலையில் பார்த்த தேயிலை தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ஊழியர்கள் விரைந்து வந்து அந்த குட்டி யானையை மீட்டு உணவளித்து பராமரித்தனர்.
தொடர்ந்து பிரிந்த குட்டி யானையை மீண்டும் தாய் யானையுடன் சேர்ப்பதென வனத்துறையினர் முடிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக அந்த குட்டி யானையின் தாயை இனம் கண்டறியும் வகையில் டிரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது காட்டு யானைகள் கூட்டம், பன்னிமடை அடிவாரப்பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டு நிற்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த குட்டி யானையை லாரியில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதிக்கு அருகே கொண்டு சென்று பத்திரமாக விடுவித்தனர். குட்டியானை தாயுடன் ஒன்றுசேர்ந்து அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றது.
இந்த நிலையில் 13 காட்டு யானைகள் கூட்டம் மீண்டும் பன்னிமடை எஸ்டேட் பகுதிக்கு திரும்பி வந்தது. அந்த கூட்டத்தில் தாயுடன் சேர்ந்த குட்டி யானையும் இருந்தது. பின்னர் அவை அங்குள்ள ஆற்றில் இறங்கி தண்ணீர் குடித்தன. அப்போது குட்டியானை தண்ணீரை கண்டதும் உற்சாகம் அடைந்தது. தொடர்ந்து ஆற்றுக்குள் இறங்கி உற்சாகமாக நீச்சல் அடித்து குளியல் போட்டது.
அப்போது குட்டி யானைக்கு பாதுகாவலாக தாயும் ஆற்றுக்குள் இறங்கி குளித்தது. பின்னர் காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு திரும்பி சென்றுவிட்டன.
ஆற்றங்கரை பகுதியில் குட்டி யானை தண்ணீரில் நீந்தி விளையாடி மகிழும் அரிய காட்சியை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
காட்டுக்குள் திரியும் யானைகள் தினமும் குறைந்தபட்சம் 500 லிட்டர் தண்ணீர் குடிப்பது வழக்கம். இதற்காக அவை அடிவாரப்பகுதியில் ஓடும் ஆற்றுக்கு வந்து செல்லும்.
குறிப்பாக மதியம் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் காட்டு யானைகள் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி ஆற்றுக்குள் இறங்கி குளிக்கவும் செய்யும். இதன் ஒரு பகுதியாகதான் இந்த குட்டி யானை ஆற்றில் இறங்கி நீச்சல் அடித்து குளித்துவிட்டு சென்று உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.