search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனங்கிழங்கு"

    • பனங்கிழங்கில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம்.
    • பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித்தன்மை கூடுகிறது.

    பனங்கிழங்கு ஒரு சத்தான மற்றும் ஆரோக்கியமான கிழங்குவகை. இது பல நன்மைகளை வழங்குகிறது.

    பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் உதவுகிறது.

    பனங்கிழங்கில் கலோரிகள் குறைவு மற்றும் நார்ச்சத்து அதிகம். இது உங்களை நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது.

    ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள் பனங்கிழங்கு சாப்பிடலாம். இதில் இரும்புச்சத்து நிறைவாக இருக்கிறது.

    பனங்கிழங்கில் கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் எலும்புகளுக்கு உறுதித்தன்மை கூடுகிறது. இதனால் எலும்பு முறிவு, தசை சுருக்கம், எலும்பு அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது.

    புரதச்சத்து தேவைப்படுவோர் பனங்கிழங்கை சாப்பிடலாம். இதில் புரதம் இருப்பதால் சைவ விரும்பிகளுக்கு பனங்கிழங்கு உதவும்.

    பனங்கிழங்கு ஆண்மையை அதிகரிக்க உதவியாக இருக்கிறது. இதை நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்துவதுண்டு. விந்து எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், அதன் வீரியத்தை பெருக்குவதிலும் சிறப்பாக செயலாற்றுகிறது.

    பெண்களின் கருப்பை ஆரோக்கியத்திற்கு பனங்கிழங்கு உதவுகிறது. இதை வேக வைத்து தூளாக்கி அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் கருப்பை வலு பெறும்.

    • பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும்.
    • இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக, விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைவித்த பயிர்களை அறுவடை செய்ய, அவற்றுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்குவார்கள்.

    பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை ஆகியவற்றுடன் பனங்கிழங்கும் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.

    தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரத்தின் பாகங்களில் பதநீர், நுங்கு, கருப்பட்டி, பனங்கற்கண்டு, ஓலை, பனங்கட்டைகள் என அனைத்தும் பயன்படுகிறது.

    இதில், நுங்கு பருவம் கடந்துவிட்டால், அது பனம் பழமாக மாறும்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, காம நாயக்கன்பட்டி, முத்துலாபுரம், அயன்வடமலாபுரம், வேம்பார், விளாத்திகுளம், குளத்தூர் பகுதிகளில் லட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாத கடைசியில் பனை விதைகளை தனித்தனியாக பிரித்து, குறுமணல் பகுதியில் தொழிலாளர்கள் புதைத்து வைப்பார்கள். புரட்டாசி மாதத்தில் பெய்யும் மழையில் ஈரப்பதம் ஏற்பட்டு, விதை முளைத்து, பனங்கிழங்காக மாறும்.

    இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் குறுமணலில் இருந்து பனங்கிழங்கு அறுவடை பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.

    இங்கு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை கோவில்பட்டி, சாத்தூர், ராஜ பாளையம், மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறும்போது, "பனங்கிழங்கு தமிழர்களின் பாரம்பரிய மருத்துவ குணமுள்ள பொருளாகும். இந்தாண்டு ஒரு கிழங்கு ரூ. 4 முதல் 6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக மழை இல்லாத நிலையில் இந்த ஆண்டு தொடர் மழை பெய்த காரணத்தினால் பனங்கிழங்கு விளைச்சல் நன்றாக வந்துள்ளது. 20 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ரூ.100 முதல் ரூ.125 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசு ஆண்டுதோறும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. அதனுடன் சேர்த்து பனங்கிழங்கு கட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பனைத்தொழில் செய்வோரின் வாழ்வாதாரம் உயரும்" என்றார்.

    • ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.
    • 20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளான வேம்பார், தாப்பாத்தி, தொப்பம்பட்டி, சொக்கலிங்கபுரம், ஆற்றங்கரை, அயன் வடமலாபுரம், வேடப்பட்டி, விருசம்பட்டி, புளியங்குளம், சித்தவநாயக்கன்பட்டி, குளத்தூர், பனையூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பனைத்தொழிலாளர்கள் பனைத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இப்பகுதியில் தமிழ் மாதமான ஆடி மாதத்தில் பனங்கொட்டைகளை (பனம் பழங்களை) மண்ணுக்கடியில் புதைத்து, மார்கழி, தை மாதங்களில் விளைந்த பனங்கிழங்குகளை அறுவடை செய்வது வழக்கம்.

    அதன்படி, தற்போது பனங்கிழங்குகள் அறுவடை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வாறு அறுவடை செய்யப்படும் பனங்கிழங்குகளை சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    20 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.100-க்கும், 10 கிழங்கு கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பனை மரத்திலிருந்து பனங்கொட்டைகளை வெட்டி மண்ணில் புதைத்து பனங்கிழங்கு அறுவடை செய்து வருகின்றனர்.

    ஆனால் விளாத்திகுளம் பகுதிகளில் பனை மரத்திலிருந்து விழும் பனங்கொட்டைகளை எடுத்து மண்ணில் புதைத்து அதன் மூலம் பனங்கிழங்கு அறுவடை செய்வதால், அதிக ருசித்தன்மையுடனும், மருத்துவகுணத்துடனும் இருப்பதாக இப்பகுதி பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

    மேலும், பனைத் தொழிலாளர்களுக்கு பனங்கிழங்கு அறுவடை கூலி, ஏற்றுமதி - இறக்குமதி கூலி என அனைத்திற்கும் கூலி கொடுப்பதால், தங்களுக்கு போதிய அளவில் லாபம் கிடைப்பதில்லை என்று பனைத்தொழிலாளர்கள் கூறுகின்றனர். இதனால் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்குவதைப் போல இந்தாண்டு பனங்கிழங்குகளை அரசே பனைத் தொழிலாளர்களிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். மேலும் ரேஷன் கடைகளில் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வந்தால், பனைத் தொழிலாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

    அதேபோல் பனைத் தொழிலாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் கடனுதவி செய்ய வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மழை பெய்யாததால் பனங்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன.

    இங்குள்ள தென்னந் தோப்புகள் மற்றும் வீட்டின் கொல்லை புறங்களில் புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் விவசாயிகள் பனங்கொட்டைகளை நடவு செய்தனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டில் மழை இல்லாததால் பனங்கிழங்கு முழுமையான வளர்ச்சி பெறவில்லை.

    இதனால் கிழங்கு பருமன் குறைந்து விளைச்சல் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம், அரண்மனை, சாலைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை பெண்கள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 25 கிழங்குகள் உள்ள கட்டு ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து பனங்கிழங்கு விற்பனை செய்யும் பெண் கூறுகையில், இந்த ஆண்டு பனங்கிழங்கு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தாமதமாக விற்பனைக்கு வந்துள்ளது.

    விளைச்சல் குறைவு காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விலை அதிகமாகி விட்டது. பொங்கல் பண்டிகை என்பதாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது என்பதாலும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தொடக்கத்தில் ஒரு கட்டு ரூ.100-க்கு விற்பனையானது தற்போது ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை நெருங்கி விட்டதால் கிழங்கின் விலை மேலும் குறைவதற்கான வாய்ப்பில்லை என்றார்.

    • தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது.
    • தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது.

    எட்டயபுரம்:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் விவசாயிகள் என அனைவரும் கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. பயிறுவகைகள், சிறுதானியங்கள், பணப் பயிர்கள், எண்னை வித்துக்கள் என பயிரிட்டு உள்ளனர்.

    அவை தற்போது கதிர் பிடித்து அறுவடைக்கு தயாராகி வருகிறது. தமிழர் திருநாள் தைப்பொங்கல் மற்றும் அதன் மறுநாள் மாட்டுப்பொங்கலன்று நிலத்தில் பாடுபட்ட கால் நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    உடன்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி, வெங்கடாசலபுரம், கருப்பூர், அயன்வடமலாபுரம், வேடப்பட்டி, குளத்தூர், பெரிய சாமிபுரம், பனையடிப்பட்டி ஆகிய கிராமங்களில் லட்சக்க ணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம் வரையாகும்.

    நுங்கு அதன்பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ பனை விதைகளை நிலத்திற்கடியில் தோண்டி புதைத்து மண்ணால் மூடிவிடுவார்கள். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உருவெடுக்கும். தைப்பொங்கலுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறுகிறது. தற்போது பொங்கலுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்கு தயாராகி வருகிறது.

    கடந்த வருடம் 25 கிழங்கு ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது. போதிய மழை இல்லாததால் 1½ அடி வளரவேண்டிய பனங்கிழங்கு தற்போது அடிப்பாகம் மட்டும் விரிவடைந்து அதிகம் வளராமல் உள்ளது. இருப்பினும் நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வாங்கி செல்கின்றனர். இங்கிருந்து அனைத்து நகரங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    தைப்பொங்கலுக்கு ரேசன்கடைகளில் பச்சரிசி, வெல்லம், கரும்புடன் பனங்கிழங்கு வரக்கூடிய காலங்களில் வழங்க வேண்டும் என கரிசல் பூமி விவசாயிகள் சங்கம் தலைவர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 

    • ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை 4 மாதங்கள் சீசன் சமயத்தில் பனங்கிழக்கு கிடைக்கும்.
    • சேலம் மாநகரில் உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனங்கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகர் பகுதியில் பனங்கிழங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை 4 மாதங்கள் சீசன் சமயத்தில் பனங்கிழக்கு கிடைக்கும்.

    சேலம் மாநகரில் கடைவீதி, ஆற்றோரம் தெரு, வாசவி மஹால் இறக்கம், பால் மார்க்கெட், ஆனந்தா இறக்கம், உழவர் சந்தைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பனங்கிழங்குகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

     இது குறித்து பனங்கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், "பனங்கிழங்கில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. ஒவ்வொரு சீசனிலும் நமக்கு இயற்கை ஒரு உணவை கொடுக்கும். அந்த உணவை நாம் கண்டிப்பாக சாப்பிட்டால் நோயற்ற வாழ்க்கை அமையும்.

    பனங்கி–ழங்கை சாப்பிட்டால் மலச்சிக்கல் வராது. மேலும் உடலுக்கு தேவையான இரும்பு, நார்ச்சத்து கிடைக்கும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கை இடித்து அதனுடன் பால் சேர்த்து சாப்பிடலாம். மேலும் கருப்பட்டி சேர்த்தும், பூண்டு, மிளகு, உப்பு சேர்த்தும் பனங்கிழங்கை சாப்பிடலாம். இவ்வளவு நன்மைகள் தரும் பனங்கிழங்கு ஒரு கட்டு 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான்.
    • இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது.

    ஈரோடு:

    தமிழர் பண்டிகையான பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருபவைகளில் முக்கியமான ஒன்று பனங்கிழங்குதான்.

    தலை பொங்கல் கொண்டாடும் புதுமண தம்பதிகளுக்கு பெண் வீட்டார் சார்பில் சீதன ங்களுடன் பனங்கிழங்கும் வழங்குவது மரபாக கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை சில நேரங்களில் மார்ச் மாதம் வரை பனங்கிழங்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு பனங்கிழங்கு சீசன் தொடங்கி உள்ளது. தற்போது தான் பனங்கி ழங்கு வரத்தொடங்கி உள்ளது.

    ஈரோடு மாநகரில் பஸ்நிலையம் பகுதி, வ.உ.சி. மார்க்கெட் பகுதி, கடை வீதி, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பனங்கிழங்குகளை ஏராளமான விவசாயிகள் கட்டுகளாக கட்டி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். 10 கிழங்குகள் உள்ள ஒரு கட்டு ரூ.50 முதல் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சி க்கலை தீர்க்கக்கூடியது. உடலுக்கு வலு சேர்க்கும். பனங்கிழங்கை வேகவைத்து சிறு, சிறு துண்டாக நறுக்கி காயவைத்து அதனுடன் கருப்பட்டி சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து கிடைக்கும்.

    பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டால் உடல் உறுப்புகள் பலம் பெறும். பெண்களின் கர்ப்பப்பை பலம் அடையும். பனங்கிழங்கு வாயு தொல்லை உடையது. எனவே இதை தவிர்க்க பனங்கிழங்குடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம். இனிப்பு தேவைப்படுகிறவர்கள் கருப்பட்டி சேர்த்து இடித்து சாப்பிடலாம்.

    பனங்கிழங்கில் நார் சத்தும் அதிகம் இருப்பதால், இதை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பூமியில் இருந்து பனங்கி ழங்கை பிரித்தெடுக்கும் போது, விதையில் இருந்து தவின் கிடைக்கும். தவின் சாப்பிட்டால் வயிற்று வலி, ஒற்றை தலைவலி உள்ளிட்ட நோய்கள் குணமாகும்.

    வயிறு மற்றும் சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள் பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால் பசி நீங்குவதுடன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

    ×