என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தைப்பூச திருவிழா"

    • பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.
    • கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    வீரபாண்டி : 

    பொங்கலூர் ஒன்றியம், அலகுமலையில் அகிலாண்ட விநாயகர், ஸ்ரீபெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ ஆதி கைலாசநாதர், ஸ்ரீ வலுப்பூரம்மன், ஸ்ரீ ஆஞ்சநேயர் என அனைத்து மூர்த்திகளுடன் அருள்பாலிக்கும் முத்துகுமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் அடுத்த மாதம் தைப்பூசம் நடைபெறுகிறது.இதையொட்டி திருத்தேர் முகூர்த்தக்கால் அமைக்கும் வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்றது. கோவில் அடிவாரத்தில் தேர்நிலை அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.  

    • தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.
    • விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    வடவள்ளி,

    கோவையை அடுத்த மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திரு விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் 7-ந் தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    29-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.அன்று காலை 6.45 மணி முதல் 7.30 மணிக்குள் கோவில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கிருத்திகை சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்படுகிறது. இதை தொடர்ந்து கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வருகிறார்.

    மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, தீபாராதனை, மாலை 5 மணிக்கு அனந்தசயனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் காலை, மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    பிப்ரவரி 3-ந் தேதி மாலை தங்கமயில் வாகனத்தில் சுப் பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று இரவு 7.30 மணிக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருகிறார்.

    தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண விழா பிப்ரவரி 4-ந் தேதி காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யா ணம் நடைபெறுகிறது.

    காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 11 மணியளவில் வெள்ளை யானை வாகனத்தில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார். பகல் 12 மணி அளவில் தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நடைபெறுகிறது.

    சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருள்கிறார். தேரை பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுக்கின்றனர்.

    தம்பதி சமேதராக சுவாமி கோவிலை சுற்றி வீதி உலா வருகிறார். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ப்படுகிறது.

    தெப்பத் திருவிழா 5-ந்தேதி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12மணிக்கு ஆடுமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா, மாலை 5 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், குதிரை வாகனத் தில் சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருள்கிறார்.

    இரவு7.30 மணிக்கு தெப்பத் திருவிழா, 6-ந் தேதி 12 மணிக்கு மகா தரிசனம், சுவாமி திருவீதி உலா, மாலை 4.30 மணிக்கு கொடி இறக்கு தல் நிகழ்ச்சி நடக்கிறது.7-ந் தேதி வசந்த உற்சவம், மாலை 6 மணிக்கு தங்க ரதத் தில் சுவாமி திருவீதி உலா வருகிறார். இத்துடன் தைப் பூச விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொடியேற்றம்

    இதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்று சிறப்புமிக்க கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந்தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விஷேச தீபாராதனைக்கு பின்பு மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்.

    பிப்ரவரி 5-ந்தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் நடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித் தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழா முன்னிட்டு சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியர்-தெய்வானையை தரிசித்தனர். பால்குடம், காவடி எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இன்று இரவு தந்தத்தொட்டி சப்பரத்தில் தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமியும், சிம்மாசனத்தில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியும் திருவீதி உலா வருகின்றனர். தைப்பூசத்திருநாள் அன்று மட்டும் திருப்பரங்குன்றம் கோவிலில் இரண்டு முருகன், இரண்டு தெய்வானை திருவீதி உலாவருவது வழக்கமாகும்.

    தைப்பூசத் திருநாளை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் காலையில் கணபதி ஹோமம், புண்ணியவாசனம் நடைபெற்று மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி சுரேஷ் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    அழகர்மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோவிலிலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.=

    • கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்றுமாலை அனைத்து கோவில்களிலும் தேரோட்டம் நடக்கிறது.

    ஊத்துக்குளி : திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 28-ந்தேதி கதித்தமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை கீழ் தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதையொட்டி கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.நேற்று காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் சாமி திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும் அதனைத்தொடர்ந்து காலை 5 மணிக்கு மேல் சாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 6:30 மணிக்கு சுவாமி ரத ஆரோகணம் கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4 மணிக்கு திருத்தேர் நிலை தேர்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை பரிவேட்டை நடைபெறும். 7-ந்தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா காட்சி நடைபெறும்.

    வருகிற 8-ந் தேதி காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத்தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு மகா தரிசனம் சுப்பிரமணியசாமி வள்ளி-தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். வருகிற 9-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றது.

    அலகுமலை

    பொங்கலூர் அருகே அலகுமலை முத்துக்குமார பால தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தினசரி உபயதாரர்கள் சார்பாக சாமிதிருவீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இன்று காலை 6 மணிக்கு சாமி திருத்தேர் ஏற்றம் நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தொடங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, கலெக்டர் வினீத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், எம்.எஸ்.எம். ஆனந்தன்,ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ்.குமார், அலகுமலை ஊராட்சித் தலைவர் தூயமணி உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைக்க உள்ளனர். நாளை 6-ந் தேதி மாலை பரிவேட்டையும், 7-ந் தேதி சாமி திருவீதி உலாவும், 8-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    சிவன்மலை

    காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவிலில் தேர்த்திருவிழாவுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 30-ந்தேதி காலை 6 மணிக்கு வீரகாளியம்மன் மலைக்கோவிலுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு பூஜையும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. 11 மணியளவில் விநாயகர் வழிபாடும் தொடர்ந்து முருகன் கோவில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் மதியம் 12 மணியளவில் கொடி ஏற்றப்பட்டது. இதனை கட்டளைதாரர் 24 நாட்டு கொங்கு நாவிதர்கள் செய்திருந்தனர்.பின்னர் சாமி சப்பரத்தில் மலையை வலம் வந்தார். 1 மணிக்கு சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது.தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசாந்தி கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளை நடைபெற்றது.நேற்று காலை 10 மணிக்கு மைசூர் பல்லக்கில் சாமி மலையை வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது.இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் தேர் வடம் பிடித்து பக்தர்களால் பிடிக்கப்பட்டு இழுத்து செல்லப்படும்.

    நாளை 6-ந் தேதி (திங்கட்கிழமை) 2-வது நாளாக மீண்டும் பக்தர்களால் தேர் இழுக்கப்பட்டு மலையை சுற்றி வலம் வரும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச்செல்வார்கள்.வருகிற 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலைதிருத்தேர் நிலையை அடைகிறது.

    வருகிற 10-ந்தேதி தெப்ப உற்சவம் பரிவேட்டை நடக்கிறது. 11-ந் தேதி பகல் 12 மணிக்கு மகா தரிசனம் நடக்கிறது. 12-ந்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்த வாரியும், 14-ந் தேதி மாலை 3 மணியளவில் கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், திருமலைக்கு சாமி எழுந்தருளலும், மலைமீது அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. இரவு கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்த்தலுடன் தேர்த்திருவிழா நிறைவடைகிறது. மலைக்கோவி ல்ஸ்ரீகுழந்தை வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச விழா 28-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் மாலை சுவாமி கிரிவலம் நடைபெற்றது. நேற்று ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், யானை வாகன பவனியும் நடைபெற்றது.

    இன்று காலை 6 மணிக்கு, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி, ஸ்ரீதெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 3மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. தொடர்ந்து 6ந் தேதி பரிவேட்டை, தெப்போற்சவம், குதிரை வாகன பவனியும், 7-ந் தேதி மகா தரிசனம், அன்னதான நிழ்ச்சியும், 8ந் தேதி மஞ்சள் நீர்விழாவும் நடக்கிறது.

    கொங்கணகிரி

    திருப்பூர் கொங்கணகிரியில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கந்த கந்த சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச திருவிழா இன்று நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கந்தபெருமானை வழிபட்டனர்.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருப்பூர் வாலிபாளையம் கல்யாணசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெறுவதால் இந்த வருடம் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. தேரோட்டம் நடைபெறாததால் பக்தர்கள் கவலை அடைந்தனர்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி யில் எல்க்ஹில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச திருவிழா நடந்தது. காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பரிகார தெய்வங்கள், மூலவர், உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் முருகப்பெருமான் ராஜ அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினார். இதை தொடர்ந்து தோரோட்டம் நடை பெற்றது.தேரோட்ட–த்தை மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தைப்பூச திருவிழாவிற்கு வருகை தந்த போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரை நீலகிரி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலை வர் மோகன்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

    தைப்பூசத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு யசோதா மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . மேலும் தேரோட்டத்தையொட்டி நகரின் பல்வேறு பகுதி–களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள முருகன் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச தேர் திருவிழா நடக்கும். நேற்று தைப்பூசத்தையொட்டி காலை முதலே கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக முருகனை தரிசிக்க சக்திமலை முருகன் கோவிலுக்கு வந்த னர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    அதனை தொடர்ந்து தைப்பூச தேர்திருவிழா காமாட்சி தாசர் சுவாமிகள் அவினாசி ஆதினம் முன்னிலையில் நடை– பெற்றது.இவ்விழாவில் கோவில் குருக்கள் பட்டி விநாயகம்,முருகேஷ், ஸ்ரீ சக்தி சேவா சங்கம் தலைவர் போஜராஜன் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் கொடி இறக்குதல், மஹா தீபாராதனை, மவுன பூஜையுடன் விழா நிறைவடைந்தது.

    அரவேணு காமராஜர் நகர் பாலமுருகன் கோவிலிலும் 108-க்கும் மேற்பட்ட பால் குடங்களும், காவடிகளும் எடுக்கப்பட்டு தைப்பூச திருவிழா நடைபெற்றது.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
    • 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி இன்று உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து காலை 7.28 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .

    இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர். 

    • பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
    • வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திசையன்விளை:

    தமிழகத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்று நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில். இக்கோவிலில் சுவாமி லிங்க வடிவில் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். வங்க கடலோரம் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச தேரோட்டத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சுவாமி சந்திரசேகரர்-மனோன்மணி அம்மாள் அலங்கார மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் மேளதாளம் முழங்க கொடி பட்டம் ஊர்வலம் நடந்தது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில் பரம்பரை தர்மகர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்த பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    விழாவில் தேர் கமிட்டி தலைவர் சிவானந்தன், செயலாளர் தர்மலிங்க உடையார், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ராஜன் கிருபாநிதி உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் உதய மார்த்தாண்ட அபிஷேகம், விநாயகர் வீதி உலா, இரவு சாய ரட்சை பூஜை, சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்மாள் அன்ன வாகனம், கைலாய பர்வத வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி குதிரை வாகனத்தில், சிகப்பு சாத்தி, பச்சை சாத்தி வீதி உலா நடக்கிறது. மேலும் இரவில் சமய சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், பரத நாட்டியம், பட்டிமன்றம், வாண வேடிக்கை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு நடக்கிறது. தேர் நிலைக்கு வந்ததும் தீர்த்தவாரியும், மூலவர் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜையும், உச்சிகால பூஜை, உற்சவர் சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேகம், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. 26-ந் தேதி காலை பஞ்சமூர்த்தி வீதி உலாவும், இரவு சந்திரசேகரர்-மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்ம கர்த்தா ப.க.சோ.த.ராதா கிருஷ்ணன் செய்து வருகிறார்.

    • 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும்.
    • தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படும்.

    இத்திருவிழாவின் சிறப்பு அம்சமே பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து முருகபெருமானை தரிசனம் செய்வதுதான். அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத்திருவிழா கொடியேற்றம் இன்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, புன்னியாகவாஜனம், முத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    அதன்பின் காலை 7.30 மணிக்கு கொடிபூஜை, வாத்தியபூஜை நடைபெற்றது. கொடி படம் மங்கள வாத்தியங்கள் முழங்க கோவில் உட்பிரகாரத்தில் கொண்டுவரப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர்.

    திருவிழாவில் இன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் உள்ள விநாயகர், மூலவர், சண்முகர், உச்சவர், துவார பாலகர்கள் மற்றும் வாகனங்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத்திருவிழாவில் தினமும் காலை தந்தபல்லக்கில் முத்துக்குமாரசாமி வீதி உலா நடைபெறும். மேலும் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டு கிடா, காமதேனு, தங்கமயில், தங்ககுதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 24ந் தேதியும், தேரோட்டம் 25ந் தேதியும் நடைபெறுகிறது. தைப்பூச திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி கோவிலுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.

    பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேவஸ்தானம் சார்பில் சிறப்பாக செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்திருவிழா களைகட்டி வரும் நிலையில் பழனியில் திரும்பிய திசையெல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    • முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி.
    • திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று தேரோட்டம்.

    பழனி:

    முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனியில், தைப்பூச திருவிழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 6-ம்நாளான நேற்று இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் வண்ண மலர்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு திருமண மேடையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வனையுடன் எழுந்தருளினார். அப்போது 16 வகை அபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் விநாயகர் பூஜை, சங்கல்பம், வருண பூஜை, பஞ்சகவ்யபூஜை, சுப்பிரமணிய பூஜை, வேதபாராயணம், சுப்ரமணியா யாகம், வாத்திய பூஜை நடைபெற்றது. மணமேடைக்கு முன்பு பல வகையான பழங்கள், பட்டுச்சேலை, வேட்டி, திருமாங்கல்யம், வண்ண மலர்கள், இனிப்பு வகைகள் மற்றும் பல்வேறு வகை சீர்வரிசை பொருட்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

    அதன்பின்னர் பொற்சின்னம் இடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை, கன்னிகா தானம், மாங்கல்ய பூஜை நடந்தது. பின்னர் வள்ளி-தெய்வானைக்கு பழனி கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    அப்போது அங்கு கூடி இருந்த பக்தர்கள் "கந்தனுக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா"...! என சரண கோஷம் எழுப்பினர். மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மன்களுக்கு தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம் நடைபெற்றது. தொடர்ந்து திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க மகா தீபாராதனை நடந்தது.

    வெள்ளிரத உலா

    பின்னர் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் திருமண கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். திருமணம் மற்றும் பூஜை நிகழ்ச்சிகளை செல்வசுப்பிரமணியம் மற்றும் குருக்கள் செய்தனர். இரவு 9.30 மணிக்கு மேல் வெள்ளிரதத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார்.

    இன்று தேரோட்டம்

    தைப்பூச திருவிழாவின் 7-ம் திருநாளான இன்று (வியாழக்கிழமை) தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று அதிகாலை 5 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தோளுக்கினியாள் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10.30 மேல் மீன லக்னத்தில் திருத்தேரேற்றமும், தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலை வந்தடைந்த பின்னர் தேர்கால் பார்த்தல் நிகழ்ச்சியும், ரதவீதிகளில் சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    • முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை.
    • அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது.

    கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை பழனி மலை ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாக விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது.

    "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வழக்காடு சொல்லுக்கு ஏற்ப இந்த தைப்பூச நன்னாளில் தங்கள் வேண்டுதல்களை நிறைவேறும் வகையில் வேண்டிக் கொள்ளும் பக்தர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் திருநாளாக தைப்பூசம் அமைகிறது.

    தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றித் திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது. சூரர்களை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும்.

    இதனைப் போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பழனியில், உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூச நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை மனமுருக வேண்டினால் பூரண அருள் பெறலாம்.

    • அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு திருப்பரங்குன்றம்.
    • சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்.

    திருப்பரங்குன்றம்:

    தமிழ்க்கடவுளாக போற்றப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படைவீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இங்கு தைப்பூச திருவிழாவை யொட்டி அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி, பறவை காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்தும், நீண்ட அலகு குத்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தனர்.

    இதில் இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தைப்பூசத் திருவிழாவையொட்டி மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றன.

    இதேபோல மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், துர்க்கை அம்மன், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. திருப்பரங்குன்றத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மலைக்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள பழனியாண்டவர் கோவிலில் பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இங்கு தைப்பூசத்தை முன்னிட்டு பழனி ஆண்டவருக்கு பால், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றன. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்சோலை எனப்படும் சேலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 15-ந்தேதி தொடங்கியது. 16-ந்தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது முதல் தினமும் சுவாமி சிம்மாசனம், பூத, அன்ன, காமதேனு, ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும், பூச்சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

    9-ம் திருவிழாவான நேற்று உற்சவமூர்த்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி தங்கத் தேரில் எழுந்தருளி, மாலையில் யாகசாலை பூஜை நடைபெற்று வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆனார். 10-ம் திருவிழாவான இன்று (25-ந்தேதி) காலை 5 மணிக்கு யாக சாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. காலை 10 மணிக்கு சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடும், 10.30 மணிக்கு மேல் 10.45 மணிக்குள் தீர்த்தவாரி தைப்பூசம், மகா அபிஷேகம், யாகசாலை கலச அபிஷேகம் நடைபெற்றது.

    ×