என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தபால் ஓட்டு"

    • தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
    • வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த தேர்தலுக்கு 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 விவிபேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    இறுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்பு மீண்டும் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் ஓட்டப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். தொடர்ந்து அவை அழிக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்து தேர்தலுக்கு பயன்படுத்தப்படும்.

    இதே போல் தேர்தல் பணியில் ஈரோடு கிழக்கு தொகுதியை தவிர்த்து கோபி, பவானி, பெருந்துறை தொகுதியை சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் தேர்தல் தொடர்பாக 3 கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதே போல் ஓட்டுச்சாவடிகள் தேர்வு அங்கு தேவையான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி பொறியியல் கல்லூரியிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேர்தலில் ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க முடியாத 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும் வாக்காளர்கள் தங்களது ஓட்டுகளை தபால் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை அவர்கள் மாற்றுத்திறனாளிகள் தான் என்பதற்கு தகுந்த அரசு சான்றிதழ் நகல் வழங்க வேண்டும். கொரோனா தொற்று உள்ளவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், சுகாதார அலுவலரிடம் இருந்து பெற்ற சான்றிதழை வழங்க வேண்டும்.

    தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் 12 டி இன்று முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒரு முறை செல்லும்போது சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லை என்றால் 2-வது முறையாகயும் நேரில் சென்று வழங்குவார்கள். 31-ந் தேதிக்குள் இந்த படிவம் வழங்குவார்கள்.

    போதிய விவரங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்தை 31-ந் தேதி முதல் 4-ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து பெற்றுக்கொள்வார்கள்.

    இந்த படிவங்களை பெற சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீட்டுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் செல்லும்போது அவர் அங்கு இல்லை என்றால் 5 நாட்களுக்குள் இருமுறை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வாக்காளர்கள் வீட்டுக்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை பெற்று வருவார்கள்.

    • கடந்த தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 98 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களித்திருந்தனர்.
    • தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    சட்டமன்ற தேர்தலின்போது 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்று திறனாளிகள் தபால் ஓட்டு போடும் வசதியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.

    இந்த நடைமுறை மூலம் வயதானவர்கள் தங்கள் வாக்கினை வீடுகளில் இருந்தே பதிவு செய்யலாம். வாக்குச்சாவடிக்கு வரத் தேவையில்லை.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தபால் ஓட்டு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பை 85 ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தல்களில் 80 வயதுக்கு மேற்பட்ட சுமார் 98 சதவீத வாக்காளர்கள் வாக்குப்பதிவு மையங்களிலேயே வாக்களித்திருந்தனர்.

    தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    கடந்த காலங்களில் 2-3% பேர் மட்டுமே தபால் ஓட்டு அளிக்கும் வசதியை பயன்படுத்தி இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய விளக்கம் அளித்துள்ளது.

    தேர்தல் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

    • வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.
    • தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி அவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்த முறை ஏற்கனவே பல பகுதிகளில் செயல் படுத்தப்பட்டது. தற்போது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    இதில் 12-டி படிவம் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் வீட்டில் இருந்தே வாக்களிக்கும் விருப்பத்தை தெரிவித்தால் அவர்களது வீட்டுக்கு சென்று வாக்கு பதிவு செய்யப்படும்.


    மத்திய பிரதேசம், மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தல்களில் இந்த வசதி அளிக்கப்பட்டு 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்தே வாக்களித்திருந்தனர். அதில் மாவட்ட தேர்தல் அதிகாரி தேர்தல் நாளுக்கு முன்பாக வீட்டில் இருந்தே வாக்களிக்கும் நாளை நிர்ணயிப்பார். வாக்கார்களின் வீட்டுக்கு தபால் ஓட்டு வழங்கப்படும். அதில் அவர்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்.

    அதன்பின் அந்த தபால் ஓட்டை தேர்தல் அதிகாரி வாக்காளரிடம் இருந்து பெற்று கொள்வார்.

    தேர்தல் அதிகாரிகள், ஒரு வீடியோகிராபர் மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் வாக்குப் பெட்டி மற்றும் தனி உரிமைக்கான வசதியுடன் வாக்காளர் வீட்டுக்கு செல்வார்கள். அங்கு வாக்குப்பதிவு வீடியோ எடுக்கப்படும். இது சுமார் 20 நிமிடங்களில் முடிந்து விடும். அவர்கள் வாக்குகள் தபால் வாக்கு மூலம் எண்ணப்படும்.

    • வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.
    • ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், வீட்டில் இருந்தபடியே ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 12,760 மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட 30,822 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள், வீட்டிலிருந்தபடியே தபால் ஓட்டுப் பதிவு செய்ய 12டி படிவத்தில் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

    ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் வீடு வீடாக சென்று, தபால் ஓட்டு பதிவு செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளி, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு படிவம் 12டி வழங்குகின்றனர்.

    இதுதொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூத்த வாக்காளருக்கு விருப்ப படிவம் வழங்குவது குறித்த கூட்டம், சப்- கலெக்டர் சவுமியா தலைமையில் நடைபெற்றது. இதில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டது.

    • விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
    • வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு தபால் வாக்களிக்க தபால் வாக்கு படிவம் கடந்த வாரம் முதல் வினியோகம் செய்யப்பட்டது.

    இதில் ஈரோடு மாவட்ட த்தில் பணியாற்றும் போலீஸ் சூப்பிரண்டு முதல் அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் என மொத்தம் 2,050 பேருக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் தபால் வாக்கு செலுத்தும் படிவம் விநியோகம் செய்யப்பட்டது.

    இதில் விடுமுறையில் உள்ள 50 பேர் தவிர்த்து மீதமுள்ள 2000 பேருக்கும் தபால் வாக்கு அளிக்கும் படிவம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தபால் வாக்கு படிவத்தில் போலீசார் அவர்களது வாக்காளர் அடையாள அட்டை, தொகுதி, வாக்குச்சாவடி எண், தொகுதி வார்டு, வாக்காளர் பட்டியலில் உள்ள பாகம் எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து தேர்தல் பிரிவு போலீசாரிடம் வழங்கி வருகின்றனர்.

    இதனை அவர்கள் சார்ந்துள்ள மாவட்டத்தின் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னங்கள் அடங்கிய பேலட் சீட்டு சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தேர்தல் அலுவலர் மூலமாக அனுப்பப்பட்டு அவர்கள் தபால் வாக்கினை பதிவு செய்வார்கள்.

    போலீசார்கள் தபால் வாக்கினை செலுத்திட தேர்தலுக்கு முன்பாக தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்படும். இந்த தபால் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ந் தேதி திறக்கப்பட்டு எண்ணப்படும் என தேர்தல் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • சென்னையில் 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
    • வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கும் மேற்பட்ட முதியோருக்கு தபால் வழியாக ஓட்டளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக, அவர்களின் வீடுகளுக்கே சென்று, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டி வழங்கியுள்ளனர்.

    சென்னையில், உள்ள 39,01,167 வாக்காளர்களில், 11,369 பேர் மாற்றுத்திறனாளிகள். 85 வயதுக்கு மேற்பட்டோர் 63,751 பேர். மொத்தம், 75,120 பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிப்பதாக கூறி உள்ளனர். 4176 பேர்தான் இதுவரை தபால் ஓட்டு அளிக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 366 பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளர்களான 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட படிவம் 120-ன்படி வீட்டில் இருந்த படியே வாக்களிக்க 1039 மூத்த குடிமக்கள் மற்றும் 612 மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 1651 நபர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    மேற்படி நபர்களிடம் அவர்களின் வீடுகளுக்கே சென்று வாக்குகள் பெற ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 14 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நடமாடும் குழுவிலும் ஒரு வாக்குச்சாவடி தலைமை அலுவலர், ஒரு உதவி வாக்குச்சாவடி அலுவலர், ஒரு நுண்பார்வையாளர், ஒரு காவலர் மற்றும் ஒரு புகைப்பட கலைஞர் ஆகியோர் இருப்பர்.

    வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளர்களின் விவரங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு எந்த தேதியில் எந்த நேரத்தில் அவர்களின் வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்ற தகவலை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாக வாக்காளர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு வேட்பாளர்களின் முகவர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டு அதனடிப்படையில் திங்கட்கிழமை சம்பந்தப்பட்ட வாக்காளரின் வீடுகளுக்கு சென்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மூலம் வாக்காளர் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்ற விளக்கத்தினை அளித்து அதன்பேரில் அவர்களிடம் ரகசிய வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    சென்னையிலும் திங்கட்கிழமை தபால் வாக்குகள் வீடு தேடி சென்று வாங்க உள்ளனர்.

    மேற்படி வாக்களிக்கும் விவரங்கள் அனைத்தும் புகைப்படக்காரர்கள் மூலம் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.

    மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் வாக்களிக்க ஏதுவாக படிவம் 12 மற்றும் படிவம் 12A ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதர மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் பணியாளர்களுக்கு அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இதர மாவட்டங்களில் பணிபுரிய உள்ள காவல் துறையைச் சேர்ந்த காவலர்கள் அஞ்சல் வாக்கு செலுத்தும் வகையில் தனியாக தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வசதி மையம் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.
    • அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர்.

    தருமபுரி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இன்று (4-ந் தேதி) தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்றது.

    அதன்படி மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்கள் வாக்காளர்களிடம் அளிக்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிரிவில் 1897 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 1228 வாக்காளர்களும் என மொத்தம் 3125 வாக்காளர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்து இருந்தனர். இவர்கள் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளபடி வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஒருவர், உதவி வாக்குச்சாவடி அலுவலர் ஒருவர், நுண் பார்வையாளர் ஒருவர், போலீசார் அலுவலர் ஒருவர் மற்றும் வீடியோகிராபர் ஒருவர் ஆகியோர் அடங்கிய குழு வாக்காளர்களின் வசிப்பிடத்திற்குச் சென்று தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த வாக்காளரின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வாக்குகளை பெற்று கொண்டனர்.

    முதியவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி பகுதியில் காலை 7 மணி முதல் தபால் வாக்கு வழங்குதல் மற்றும் பெறும் பணியை மேற்கொண்டனர். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆர்வமுடனும், மகிழ்ச்சியுடனும் தபால் மூலம் தங்களது விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்குகள் செலுத்தினர்.

    அதிகாரிகள் வாக்காளர்களின் இல்லங்களுக்கு போதிய போலீசார் பாதுகாப்புடன், ஒரு நுண் பார்வையாளரும் சென்றனர். தபால் வாக்களிக்கும் நிகழ்வு முழுவதும், ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் காணொளி பதிவாக பதிவு செய்யப்பட்டது.

    தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரி ரமணசரன் தலைமையில் தேர்தல் நடத்தும் குழுவினர் அன்னசாகரம், கொல்ல அள்ளி, எரகாட்டு கொட்டாய், மதிகோன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 33 தபால் வாக்குகளை சேகரித்தனர். இதேபோன்று பென்னாகரம் வாணியர் தெருவில் இன்று முதற்கட்டமாக முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளிடம் தேர்தல் நடத்தும் குழுவினர் தபால் வாக்குகளை செலுத்தினர்.

    தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும்போது, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்களிப்பதை பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் நேரில் பார்வையிடலாம். இப்பணிக்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 தொகுதியில் மொத்தம் 50 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    • மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி இன்று (4-ந் தேதி) காலை 7 மணிக்கு தொடங்கியது.

    மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப் பதிவானது நடைபெற்று வருகிறது.

    அதன்படி தபால் வாக்கிற்காக விண்ணப்பித்திருந்த திருச்சி சாலையில் வசித்து வரும் 86 வயதான முன்னாள் ஆசிரியை ஜெகதாம்பாள் தனது வாக்கினை அவரது இல்லத்தில் இன்று காலை 11 மணியளவில் பதிவு செய்தார்.

    வீட்டில் இருந்தபடியே வாக்களித்தது புதிய அனுபவமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.

    85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தேர்தலின்போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நினைவு கூரத்தக்கது.

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர்.
    • திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 12டி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, தபால் ஓட்டு அளிக்க விருப்பத்தை தெரிவித்தார்கள்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2 ஆயிரத்து 529 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களாக உள்ளனர். 781 பேர் மாற்றுத்திறனாளிகள். அவர்கள் தபால் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தபால் வாக்கு பதிவு செய்ய தனியாக 110 குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் இன்று வீடு வீடாக சென்று தபால் வாக்குகளை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். வேட்பாளர்களின் முகவரும் இந்த குழுவினருடன் சென்ற னர். இந்த காட்சிகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 2 ஆயிரத்து 288 பேர் இருக்கிறார்கள். 600 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு தபால் வாக்குப்பதிவு செய்ய 78 குழுவினர் வீடு வீடாக செல்கின்றனர். இந்த குழு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். நாளையும் தபால் வாக்குகள் பதிவு செய்யப்பட உள்ளது.

    • வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.
    • முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்குச் சாவடிக்கு நேரில் வந்து வாக்கு அளிக்க இயலாத 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏதுவாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்கள் விருப்பப்பட்டால் தபால் வாக்கு அளிக்கலாம் என்ற விபரத்தை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 20-ந் தேதி முதல் 5 நாட்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களிடம் நேரில் சென்று அவர்களது விருப்பத்தை கேட்டனர். மேலும் வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்புபவர்களுக்கு 12 டி விண்ணப்ப படிவத்தை வழங்கினர். அதனை வாக்காளர்கள் பூர்த்தி செய்த பின்னர் படிவங்களை உதவி தேர்தல் அலுவலர்கள் மூலம் சேகரிக்கப்பட்டது.

    நெல்லை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 2,521 மூத்த குடிமக்கள், 1146 மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்தனர்.

    அந்த வாக்காளர்கள் வீட்டில் இருந்தபடி வாக்களிக்கும் விதமாக அவர்களிடம் தபால் வாக்குகளை பெறும் பணி நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் தொடங்கியது. தபால் வாக்குச்சீட்டு வழங்குவதற்கு மண்டல அலுவலர்கள் தலைமையிலான வாக்குச்சாவடி குழு அமைக்கப்பட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களிடம் வாக்குகளை பெற்றனர். பின்னர் அதனை அந்த பெட்டியில் போட்டு சீல் வைத்தனர். இந்த பணிகள் அனைத்தும் நுண் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. முதற்கட்டமாக இன்றும், நாளை மறுநாளும் (8-ந் தேதியும்) தபால் வாக்குகள் பெறும் பணி நடக்கிறது.

    இதனையொட்டி மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் இன்று காலை 7 மணிக்கு தொகுதி முழுவதும் உள்ள ஒவ்வொரு தாலுகா அலுவலகத்தில் இருந்தும் தனி வாகனத்தில் தேர்தல் ஊழியர்கள் அடங்கிய குழு புறப்பட்டு சென்றது. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குகளை பெற்று தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இந்த பணியானது நெல்லை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானூர், சேரன்மகாதேவி, அம்பை, நெல்லை, பாளை, நாங்குநேரி, வள்ளியூர், திசையன்விளை, ராதாபுரம், ஆலங்குளம், கடையம் உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் இருந்து இன்று தொடங்கியது.

    இந்த பணியில் மண்டல அலுவலர் தலைமையில் மண்டல உதவியாளர், சப்-இன்ஸ்பெக்டர் தரத்திலான காவல்துறையினர், உதவியாளர், நுண்பார்வையாளர், வீடியோகிராபர் ஆகிய 6 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    மேற்கண்ட 2 நாட்களிலும் தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு வாய்ப்பாக வருகிற 10-ந் தேதி மீண்டும் இதே போல் ஊழியர்கள் மூத்த குடிமக்களின் வீடுகளுக்கு சென்று வாக்கை பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த பணிகள் முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. முன்னதாக அனைத்து தாலுகா அலுவலகங்களில் இருந்தும் தபால் வாக்குகளை பெறுவதற்காக எடுத்து செல்லும் பெட்டி அரசியல் கட்சியினரின் முன்னிலையில் திறந்து காண்பிக்கப்பட்டது.

    • பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.
    • வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் 100 சதவீத வாக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

    இந்நிலையில் 100 வயது மூதாட்டி தனது வாக்கை தபால் மூலம் பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை (வயது100). இவரது கணவர் ராயப்பன். அவர் இறந்துவிட்டார்.

    மூதாட்டி அஞ்சலை பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது வாக்கை தபால் ஓட்டு மூலம் பதிவு செய்தார். அவரது வீட்டுக்கு தபால் ஓட்டு பெட்டியுடன் அதிகாரிகள் சென்றனர். அங்குள்ள பிரத்யேக அறையில் அவர் தனது வாக்கை பதிவு செய்தார். அந்த ஓட்டு சீட்டை அதிகாரிகள் வாக்கு பெட்டியில் போட்டனர்.

    அவர் 2-வது முறையாக தபால் ஓட்டு போட்டுள்ளார். 2021-ம் ஆண்டு நடந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில் வாக்களித்துள்ளார்.

    இதையொட்டி அவருக்கு வாக்குபதிவு அதிகாரி கந்தசாமி வாழ்த்து தெரிவித்து சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

    நிகழ்ச்சியின் போது தேர்தல் சிறப்பு அதிகாரி செந்தில்குமார் மற்றும் தபால் வாக்கு பதிவு அதிகாரி பாரதிதாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.
    • வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவிநாசி:

    பாராளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப்பதிவு வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாற்றுத்திறனாளிகள், முதியவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரில் சென்று தபால் வாக்குப்பதிவினை பெற்றனர்.

    அவிநாசி பேரூராட்சிக்கு உட்பட்ட 13-வது வார்டு கங்கவார் வீதியில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி தாயம்மாள் (வயது 94) என்பவரது வீட்டிற்கும் நேற்று முன்தினம் அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகள் கொண்டு வந்த தபால் வாக்குப்பதிவு பெட்டியில் தாயம்மாள் தனது வாக்கினை செலுத்தினார். இந்நிலையில் நேற்று தாயம்மாள் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். வாழ்நாளின் இறுதிக்கட்டத்திலும் தனது ஜனநாயக கடமையை தாயம்மாள் செய்து முடித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×