search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல் எஸ்டேட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது
    • இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்

    இந்தியாவில் கடந்த 30 வருடங்களில் கல்வி கற்பதற்கான செலவு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்த விவாதம் இணையத்தில் நடந்துவருகிறது. இதற்கு காரணம் ஐதராபாத்தில் பள்ளியில் எல்.கே.ஜி பயில்வதற்கான கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்து விட்டதாக பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டதே ஆகும்.

    தனது பதிவில் அவர், இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 9 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கல்லூரிப் படிப்புகளுக்கான கட்டணங்கள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டிருந்தார். தற்போது இதற்கு பதிலளித்துள்ள தமிழகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர், சோஹோ Zoho நிறுவன சிஇஓ ஸ்ரீதர் வேம்பு அவரது கருத்தை ஆமோதித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது, இந்தியாவில் நகர்புர ரியல் எஸ்டேட்களின் அதிக விலையினால் கல்வி பயில்வதற்கான கட்டணமும் கட்டுபடியாகாத அளவு உயர்ந்துள்ளது. இந்த ரியல் எஸ்டேட்களில் அரசியல்வாதிகளின் ஊழல் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    • ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் இந்த நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.
    • குறைந்த விலையில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனமாக செயல்படும் எனக் கூறப்படுகிறது.

    அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Reliance Infrastructure) தனது தொழிலை விரிவடையச் செய்யும் வகையில் தற்போது புதிதாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளது. அந்த நிறுவனத்தறி்கு ஆர்.ஜே.பி.பி.எல். (Reliance Jai Properties Private Limited) எனப் பெயரிட்டுள்ளார்.

    இந்த நிறுவனம் மூலம் மலிவான விலையில் வீடு கட்டிக்கொடுப்பதுதான் இலக்கு என அனில் அம்பானி நிறுவனம் தெரிவித்தள்ளது. ஏப்ரல் மாதத்தில் அனில் அம்பானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு 308 ரூபாய் இருந்தது. தற்போது 225.85. ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது இந்த நிலையில் அனில் அம்பானி நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

    பிரதம மந்திரி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தை குறிவைத்து குறைந்த விலையிலான வீடுகளை கட்டுக்கொடுக்கம் வேலையை குறிவைத்து இந்த நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் எனர்ஜி லிமிடெட்டின் கீழ் கடந்த 12-ந்தேதி ரிலையன்ஸ் ஜெய் பிராப்பர்ட்டிஸ் தனியார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. சொத்துக்கள் கையகப்படுத்துதல், விற்பனை செய்தல், குத்ததைக்கு விடுதல் போன்ற இந்த நிறுவனம் ஈடுபட உள்ளது.

    சில மாதங்களுக்கு முன் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் இவருடைய நிறுவனங்கள் திவால் அடையும் நிலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

    • ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர்.
    • இந்த மோசடிவேலையில் தந்தையும் உடந்தை என்று தெரியவந்துள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கூட்டாக சேர்ந்து மாணவர்கள், வியாபாரிகள், வக்கீல்கள், இல்லத்தரசிகள் என வகைதொகை இல்லாமல் பலரை ஏமாற்றி ரூ.400 கோடி வரை திருடியுள்ளது அம்பலமாகியுள்ளது.

    நிகாரிகா வென்டியூர்ஸ் என்ற போலி நிறுவனத்தை நடத்தி வந்த அபிஷேக் திவேதி அவரது மனைவி நிஹாரிகா ஆகியோர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து அதிக லாபம் சமாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டி பலரை ஏமாற்றி பணம் பறித்து கடைசியில் தப்பிச் சென்றுள்ளனர். பாதிக்கட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

     

    இந்த மோசடி வேலையில் அபிஷேக்கின் தந்தை ஓம் பிரகாஷும் உடந்தை என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மூவர் மீதும் போலீசார் FIR பதிந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட நிகாரிகா நிறுவனம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று நண்பர்கள் உறவினர்கள் என சுமார் 200 பேர் வரை ஏமாற்றியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

    • 12.5 பில்லியன் டாலர் மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்
    • 12.5 பில்லியன் டாலர் என்பது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ஆகும்

    வியட்நாம் நாட்டில் 12.5 பில்லியன் டாலர் நிதி மோசடி செய்ததாக 67 வயதான ரியல் எஸ்டேட் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

    12.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி) என்பது வியட்நாம் நாட்டின் 2022 ஜிடிபியில் கிட்டத்தட்ட 3% ஆகும்.

    2012 முதல் 2022 வரை சைகோன் ஜாயின்ட் ஸ்டாக் கமர்ஷியல் வங்கியை அவர் சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, ஆயிரக்கணக்கான போலியான நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலமாகவும் இந்த நிதி மோசடியை அவர் செய்துள்ளார் என்று அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது

    இந்த வழக்கை தெற்கு வியட்நாமில் உள்ள ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரித்தது. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பெண் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வியட்நாமில் நடைபெற்று வரும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்த நிலையில் தான் பெண் தொழிலதிபர் ட்ரூங் மை லான் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். இவரின் கைதை அடுத்து அப்போது ஜனாதிபதி பதவியில் இருந்த வோ வான் துவாங் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத்தகைய ஊழல்களால் வியட்நாமில் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் 1,300 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அந்நாட்டின் சந்தையில் இருந்து விலகியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    • 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    தெலுங்கானா மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் சிவ பாலகிருஷ்ணா. இவர் வருமானத்திற்கு அதிகமாக பல நூறு கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது.

    இதன் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவினர் சிவ பாலகிருஷ்ணாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 20 இடங்களில் நேற்று காலை 5 மணி முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சிவ பாலகிருஷ்ணா வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து 100 கோடிக்கு மேலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    அவருடைய வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கட்டுகட்டாக பணம், தங்க கட்டிகள் நகைகள், 60 உயர் ரக கைக்கடிகாரங்கள், சொத்து ஆவணங்கள், 14 செல்போன்கள், 10 லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

    அவரது வீடுகளில் இருந்து ரூ.40 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகைகளை அதிகாரிகள் எண்ணும் வீடியோ காட்சி சமூக வலைதளகளில் பரவி வருகிறது.

    தங்க நகைகள், செல்போன்களை குவித்து வைத்து வீடியோவாகவும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    சிவபாலகிருஷ்ணா மீது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் தொடர்பான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது பதவியை பயன்படுத்தி பெரும் அளவில் சொத்துக்களை குவித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

    தொடர்ந்து அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனை நாளை வரை நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்கி லாக்கர் மற்றும் வெளியிடப்படாத சொத்துக்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர் .

    ஒரு அதிகாரியின் வீட்டில் கட்டு கட்டாக பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • விஜயன் காட்டு பகுதியில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தார்.
    • தன்னுடன் மது குடித்த 2 பேருடன் விஜயன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் சுரண்டை வரகுணராமபுரம் அம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் விஜயன் (வயது 50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் நேற்று முன்தினம் வேலை விஷயமாக ஆலங்குளம் வந்துள்ளார். தனது வேலையை முடித்துவிட்டு ஆலங்குளம் ஜோதி நகர் அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.

    நகை கொள்ளை

    அங்கு மது வாங்கி கொண்டு அருகிலுள்ள காட்டு பகுதியில் உட்கார்ந்து குடித்து கொண்டிருந்தார். அப்போது 3 பேர் விஜயன் அருகில் உட்கார்ந்து மது குடித்துள்ளனர். இதில் அவர்கள் நண்பர்களாகி மேலும் விஜயனை குடிக்க வைத்துள்ளனர்.

    தொடர்ந்து அவரை காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்ற போது திடீரென மேலும் 3 பேர் வந்துள்ளனர். 6 பேரும் சேர்ந்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து விஜயன் கழுத்தில் வைத்துக் கொண்டு கழுத்தில் இருந்த 22 கிராம்செயின், கை செயின் 20 கிராம், மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து அதில் இருந்த அவரது மகனின் 120 கிராம் வெள்ளி கொடி, 40 கிராம் எடை கொண்ட 2 வெள்ளி கை செயின், ரொக்கம் 60 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அவரது மோட்டார் சைக்கிள் சாவியையும் எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்த தப்பியோடி விட்டது.

    தனிப்படை விசாரணை

    இச்சம்பவம் குறித்து விஜயன் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தன்னிடம் இருந்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். அதன் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் விஜயன் தன்னுடன் சேர்ந்து மது குடித்த 2 பேருடன் தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை வைத்து போலீசார் அவரிடம் நகைகளை பறித்து சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.

    ஆலங்குளத்தில் ஏற்கனவே நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒரு மாத காலத்திற்குள் வேறு பணியிடத்திற்கு சென்று விட்டார். புதிய போலீசார் இங்கு இல்லை என கூறப்படுகிறது. இதனால் ரோந்துபணியில் ஈடுபடுவது இப்பகுதியில் குறைந்துள்ள காரணத்தால் குற்ற சம்பவங்கள் பெருகி வருவதாகவும், இதனை தடுக்க போதிய காவலர்களை நியமித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ரியல் எஸ்டேட் அலுவலகத்தை உடைத்து 20 பவுன்-ரூ 23 லட்சம் கொள்ளை போனது.
    • கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வரு கின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தங்குடி டி.எம்.நகர் கிழக்கு மெயின் ரோட்டில் வசிப்பவர் சையத்கான் (வயது56), ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டின் எதிரே இவரது அலுவலகம் உள்ளது.

    வழக்கம்போல் இரவு அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதி காலையில் பார்த்த போது அலுவலகத்தின் கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்தி ருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.23 லட்சம் ரொக்கம் மற்றும் 25 பிளாட் பத்திரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கே.புதூர் போலீசில் சையத்கான் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபு ணர்கள் வரவ ழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.

    மேலும் அந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.அதன் அடிப்படையில் பணம், நகைகள், பத்திரங்கள் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது.
    • இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது. புதிய வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. கட்டுமான தொழிலிலும் தொய்வு நிலை காணப்பட்டது.

    இந்நிலையில் கொரோனா தொற்று கடந்த ஆண்டில் குறைந்ததால் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வேகம் எடுத்தது. புதிய கட்டுமான திட்டங்களும் தொடங்கப்பட்டன.

    வீடு வாங்குவதில் பொது மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள். இதன் காரணமாக வீடுகள் மற்றும் மனைகள் விற்பனை கடந்த ஆண்டு முதல் அதிகரித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இதே நிலை காணப்பட்டது.

    தமிழகத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கடந்த 2022-23-ம் நிதியாண்டில் 34.41 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.17 ஆயிரத்து 296 கோடி வருமானம் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள 63 பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் 5.83 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இதன் மூலம் ரூ.7 ஆயிரத்து 727 கோடி வருமானம் கிடைத்துள்ளது.பத்திரப்பதிவுத்துறை மூலம் கிடைக்கும் மொத்த வருமானத்தில் 44 சதவீதம் சென்னையில் இருந்தே கிடைத்துள்ளது.

    கடந்த 2021-2022-ம் நிதியாண்டில் சென்னை மண்டலத்தில் 3.4 லட்சம் பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது.

    சென்னை குன்றத்தூர், திருப்பத்தூர், கூடுவாஞ்சேரி, சேலையூர், ஆவடி, சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் மட்டும் கடந்த நிதி ஆண்டில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவாகி உள்ளன. இதன் மூலம் இந்த பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலம் வாங்குவது, வீடு வாங்குவது போன்றவற்றில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். சென்னையில் முக்கியமான இடங்களில் நிலத்தின் விலை அதிகரித்துள்ளதால் நடுத்தர மற்றும் உயர்வருவாய் பிரிவினர் குன்றத்தூர், அம்பத்தூர், ஆவடி, சோழிங்கநல்லூர், மேடவாக்கம், திருப்போரூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வாங்குகிறார்கள்.

    சென்னையில் அதிகபட்சமாக குன்றத்தூரில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் 27 ஆயிரத்து 705 பத்திரங்கள் பதிவாகி உள்ளன. அதற்கு அடுத்த படியாக திருப்போரூரில் 25 ஆயிரத்து 941 பத்திரங்கள் பதிவாகி உள்ளன.

    இனிவரும் காலங்களில் வீடு, நிலம் வாங்கும் ஆர்வம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபி:

    திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் சுகந்தி. இவருக்கு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், பாரதிநகரில் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டை கோபிசெட்டிபாளையம் வடக்கு பார்க் வீதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் என்பவர் வாங்க விலை பேசினார். வீட்டை ரூ.3 கோடிக்கு வாங்க சுதர்சன் முடிவு செய்தார். அதன்படி முன் பணமாக சுதர்சன் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார். இதன் பின்னர் சுதர்சன் அந்த வீட்டின் சாவியை வாங்கிக் கொண்டார்.

    இந்நிலையில் சுதர்சன் புதிதாக வாங்க இருக்கும் வீட்டில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும், புதிய வீட்டிற்கு மீதி பணம் கொடுப்பதற்காகவும் 4 பேக்குகளில் ரூ.2.80 கோடியை புதிய வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் வைத்து பூட்டி சென்றார். வீட்டில் பணம் இருக்கும் விஷயம் சுதர்சன் பங்குதாரர்களான கோபி அடுத்த களஞ்சியம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (26), கோபி அடுத்த கேடாரை பகுதியை சேர்ந்த பிரவீன் (25) ஆகியோருக்கு மட்டுமே தெரியும்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சுதர்சன் புதிய வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது ரூ.2.80 கோடி பணம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து கோபிசெட்டி பாளையம் போலீசில் சுதர்சன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் கைரேகை நிபுணர்களும் கொள்ளை நடந்த வீட்டிற்கு வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு சியாமளாதேவி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலு, வடிவேல்குமார், கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செ ல்வம் ஆகிய கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    மேலும் வீட்டில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை நடந்த அன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு வெள்ளை நிற கார் புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. அதில் 2 பேர் சென்றதும் பதிவாகி இருந்தது. இதை அடிப்படையாக வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களான ஸ்ரீதர் மற்றும் பிரவீன் என்ன தெரிய வந்தது. இதில் ஸ்ரீதர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

    ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சனின் பங்குதாரர்களாக ஸ்ரீதர் மற்றும் அவரது நண்பர் பிரவீன் ஆகியோர் இருந்துள்ளனர். இதில் ஸ்ரீதர் என்ஜினீயரிங் படித்துவிட்டு தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் சுதர்சனன் வீட்டில் ரூ.2.80 கோடி பணம் இருப்பது ஸ்ரீதருக்கும், பிரவீனுக்கும் தெரிந்து உள்ளது. பணத்தைத் திருட 2 பேரும் திட்டம் போட்டு உள்ளனர்.

    அதன்படி சம்பவத்தன்று வெள்ள நிற காரில் வந்து வீட்டுக்குள் இருந்த ரூ.2.80 கோடி பணத்தை 4 பேக்குகளில் வைத்து திருடி சென்றுள்ளனர். முதலில் சுதர்சனத்துடன் ஸ்ரீதரும் புகார் கொடுக்க வந்திருந்தார். அவரது நடவடிக்கையில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. அவரிடம் 2 நாட்களாக விசாரணை நடத்தினோம். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார்.

    பின்னர் உரிய முறையில் விசாரித்தபோது 2 பேரும் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டனர். முதலில் வெள்ளை காரில் பணத்தை திருடி அவர்கள் பின்னர் சிறிது தூரம் சென்றதும் அந்த காரில் இருந்து இறங்கி மற்றொரு காரில் சென்று உள்ளனர். அந்த காரில் தான் பணத்தை வைத்திருந்தனர். நாங்கள் அந்த காரில் இருந்த பணத்தை மீட்டு உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதனையடுத்து மீட்கப்பட்ட பணம் கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. போலீஸ் நிலையம் மட்டுமின்றி போலீஸ் நிலைய சுற்று வட்டார பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தொடர்ந்து ஸ்ரீதர் மற்றும் பிரவீனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் தான் பணம் திருடப்பட்ட அதற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    • வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர்.
    • அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரிடம் கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) என்பவர் சந்திரன் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும்,அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொ ண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து சந்திரன் கடந்த 12-ம் தேதி காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே பதுங்கியிருந்த 4 நபர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரை ப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

    பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றிக் கொண்டனர். மேலும் 6 பத்திர தாள்களில் சந்திரனின் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடம் இருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டுள்ளது.பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ள னர்.அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில் கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தலைமறைவாக இருந்த மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையம் போலீசார் சுங்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் வந்த மூன்று நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் பெருந்தொழுவு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து திருப்பூர் கல்லாங்காட்டை சேர்ந்த சுபாஷ் (32),அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (30 ) மற்றும் திருப்பூர் புது பஸ் நிலையத்தைச் சேர்ந்த சிங்காரவேலன் (33 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தைசாமி உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் கொத்தனார் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 55), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி கலா.

    கடந்த சில மாதங்களாக சிவக்குமாருக்கும் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் குழந்தைசாமி என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்று இரவு குழந்தைசாமி செல்போனில் சிவகுமாரிடம் பேசினார். அப்போது கொடுக்கல் வாங்கல் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்வோம் என்று கூறி அழைத்துள்ளார். இதை நம்பிய சிவகுமார் அவருடன் காரில் சென்றதாக தெரிகிறது.கோட்டையூர் கிராமத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு குழந்தைசாமி சிவக்குமாரை அழைத்துச் சென்றார்.

    அங்கு பண பிரச்சினை தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த குழந்தை சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மணிகண்ட பிரபு, செல்லையா, பாலாஜி உள்பட 4 பேர் சிவகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் வலியால் துடித்த அவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து குழந்தைசாமி உட்பட அந்த கும்பல் அவரை காரில் ஏற்றிக் கொண்டு வீட்டு முன்பு போட்டு விட்டு சென்றது.வீட்டின் வெளியே சிவக்குமார் ரத்த காயங்களுடன் பேச்சு மூச்சின்றி கிடப்பதை பார்த்து அவரது மனைவி கலா அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் கணவரை காரைக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிவக்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிவக்குமார் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக பள்ளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குழந்தைசாமி உட்பட 5 பேரை தேடி வருகின்றனர். பண பிரச்சினையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    • லாபத்தில் 50 சதவீதம் தந்து விடுவதாக நம்பிக்கை வார்த்தை மூலம் யாஸ்மின் என்னிடம் அடிக்கடி பேசி வந்தார்.
    • கொடுத்த பணத்தை கேட்டால் கூலிப் படையை ஏவி உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரத்தை அடுத்த மணிமங்கலத்தை சேர்ந்தவர் முகமது அஷ்ரப் புகாரி. இவர் வெளிநாட்டில் தனியார் கப்பல் நிறுவனத்தில் கேப்டனாக உள்ளார்.

    இவர் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:-

    எனக்கும் எனது குடும்பத்து நெருங்கிய உறவினர்களாகவும், எனது நண்பர்களாகவும் சென்னை மதுரவாயலை சேர்ந்த யாஸ்மின் பானு மற்றும் அவரது கணவர் எஸ்.எம்.பி. சாதிக் ஆகியோர் இருந்து வந்தனர்.

    தனது கணவர் சாதிக் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருவதாகவும் அதில் இருந்து லாபம் ஏற்படுத்தி தருவதாகவும், நீங்கள் இந்த தொழிலில் முதலீடு செய்தால் அதற்கு பதிலாக வியாபாரத்தில் வரும் லாபத்தில் 50 சதவீதம் தந்து விடுவதாக நம்பிக்கை வார்த்தை மூலம் யாஸ்மின் என்னிடம் அடிக்கடி பேசி வந்தார்.

    அவரது கணவர் சாதிக்கும் யாஸ்மினும் சேர்ந்து எனது வீட்டுக்கு வந்து அவர்களது ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்யுமாறு என்னை மூளைச் சலவை செய்தனர். இதனால் நானும் அவர்களது பேச்சை நம்பி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இவர்கள் இருவரும் காண்பிக்கும் இடங்களை நான் அனுப்பும் பணத்தில் வாங்க ரூ.2 கோடியே 26 லட்சம் வரை இருவரும் வங்கிக் கணக்குகள் மூலமாகவும் ரொக்கமாகவும் பெற்றுக் கொண்டனர்.

    மேலும் நான் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்ததால் என்னிடம் வாங்கிய பணத்திற்கு நிலங்களை அவர்கள் தங்கள் இருவர் பெயரிலேயே வாங்கிக் கொள்வதாகவும், அவற்றை விற்ற பின்னர் அதன் முதலீட்டையும், லாபத்தையும் எனக்கு முறையாக கணக்குக் காட்டி ஒப்படைத்து விடுவதாகவும் உறுதியளித்தனர். அந்த வகையில் நானும் நம்பிக்கையின் பேரில் அதற்கு சம்மதித்தேன்.

    சாதிக்கும், யாஸ்மின் பானுவும் ஒரு கார் வாங்கி வாடகைக்கு விட்டால் அதிலும் அதிக வருமானம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டி அதில் வரும் வருமானத்தையும் என்னிடம் தந்து விடுவதாகவும் கூறினார். நானும் அதை நம்பி மதுரையில் உள்ள மாருதிகார் விற்பனை நிலையத்தில் இருந்து மாருதி ஸ்விப்ட் காரை ரூ.10 லட்சத்துக்கு வாங்கி கொடுத்து எனது பெயரிலேயே பதிவு செய்தும் கொடுத்தேன். அந்த காரினை சாதிக்கும் அவரது மனைவி யாஸ்மினும் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த பணத்துக்குரிய லாபத் தொகை தொடர்பாக சாதிக்கிடமும், யாஸ்மினிடமும் கேட்டபோது அதற்காக உறுதி பத்திரம் எழுதி தந்து விடுகிறேன் என்று கூறி அவர்கள் எனக்கு தர வேண்டிய ரூ.2 கோடியே 26 லட்சம் பணத்தில் மேற்படி எதிரிகள் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த நான்கு கடன் ஒப்பந்த பத்திரத்தில் ரூ.1 கோடியே 20 லட்சத்துக்கு மட்டும் எழுதி தந்தனர்.

    மீதத் தொகை ஒரு கோடியே ஆறு லட்சம் ரூபாய் குறித்து கேட்டபோது எங்களுக்கு கணக்கு தணிக்கை பிரச்சினை வரும். ஆகையால் எங்களது கணக்கு தணிக்கை அதிகாரியிடம் கேட்டு மீதத் தொகையான ரூ.1 கோடியே 6 லட்சம் ரூபாய்க்கான கடன் பத்திரம் எழுதி தருகிறோம் என்று சொன்னார்கள்.

    இதற்கிடையில் நான் வேலை நிமித்தமாக கப்பலுக்கு வெளிநாட்டுக்கு போக வேண்டி இருந்ததால் மீதி தொகைக்கு எழுதி வாங்க வேண்டிய கடன் பத்திரங்களை என்னால் எழுதி வாங்க இயலவில்லை.

    பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளபடி ஒரு வருட வாய்தா காலமும் முடிவடையும் தருவாயில் இருப்பதால் மேற்படி யாஸ்மின் பானு, சாதிக்கை அணுகி பணத்தை திரும்ப கேட்டபோது பணத்தையெல்லாம் திருப்பித் தர முடியாது. இன்னுமா எங்களை நம்பிக் கொண்டிருக்கிறாய் கொடுத்த பணத்தை கேட்காமல் இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு நல்லது இல்லையென்றால் கூலிப் படையை ஏவி உன்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தனர்.

    எனவே சாதிக் மற்றும் அவரது மனைவி யாஸ்மின் ஆகியோர் மீது சட்டப்படியாக கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்கள் மோசடி செய்து அபகரித்த பணத்தை மீட்டு கொடுத்து எனது உயிருக்கும், உட மைக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தாம்பரம் மத்திய குற்றப் பிரிவு போலீசார், கணவன்-மனைவி இருவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் மனைவி யாஸ்மின் முன் ஜாமீன் வாங்கியுள்ளார். சாதிக்கின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×