என் மலர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் பலி"
- தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
- திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரனின் மகன் ஜெகநாதன் (வயது 19). மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகன் (18) இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஜெகநாதன் பிஎஸ்சி பயர் அண்ட் சேப்டி 3-ம் ஆண்டும், விக்னேஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரிக்கு சேங்காலிபுரம் பகுதியில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் பள்ளி வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.
இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.
- வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையானது மிக சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
இங்கு தேயிலை தோட்டங்கள், நீர்நிலைகள், காண்போரை கவரும் வகையில் உள்ளன. இவற்றை கண்டு ரசிக்க தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அந்த வகையில் கிணத்துக்கடவு அருகே உள்ள மணிகண்டபுரத்தை சேர்ந்த வினித்(வயது20), தனுஷ்(20), அஜய்குமார்(20), பெரியகளந்தையை சேர்ந்த சரத்(20), உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த நபில்(20) ஆகியோர் தனது நண்பர்கள் 10 பேருடன் வால்பாறைக்கு மோட்டார் சைக்கிளில் சுற்றுலா வந்தனர்.
அவர்கள் தேயிலை தோட்டங்களை சுற்றி பார்த்து விட்டு, சோலையாறு சுங்கம் நல்லகாத்து ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக 5 பேரும் ஆற்று சுழலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நல்ல காத்து ஆற்றுப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கூலாங்கள் பகுதிக்கு சென்று சோலையார் எஸ்டேட் பகுதி வழியாக சென்று மீண்டும் நல்லகாத்துப் பகுதி வழியாக வனப்பகுதிக்கு செல்கிறது.
இந்த ஆற்றுப்பகுதியில் குளித்து விளையாடுவதற்கு நன்றாக இருக்கும் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு குளித்து வருகிறார்கள்.
தற்போது மாணவர்கள் பலியானதை அடுத்து நேற்று முதல் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது.
- லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
சேலம்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வெட்டு வெந்நியை அடுத்த தறியன் விளையை சேர்ந்தவர் பிரபாகர் சிங், இவரது மகன் கேம்கோ (21), தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபத்தை சேர்ந்தவர் சத்தியபிரவீன் (21), சேலம் அங்கம்மாள் காலனி குப்தா நகரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் கவுதம் (21), சரண் (21) மற்றும் ஜெகநாத் (21) இவர்கள் 5 பேரும் புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் கல்லூரி விடுமுறையையொட்டி மாணவர்கள் 5 பேரும் கேம்கோவுக்கு சொந்தமான காரில் சேலத்திற்கு புறப்பட்டனர். காரை மாணவர் கேம்கோ ஓட்டி வந்தார். இவர்கள் வந்த கார் நள்ளிரவு 12.30 மணியளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மல்லூர் அருகே உள்ள பொய்மான் கரடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு சாலையோரம் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் காற்றாடி என்ஜின் ஏற்றிய டாரஸ் லாரி டீசல் போடுவதற்காக நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத கேம்கோ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த லாரியின் பின் பகுதியில் பயங்கரமாக மோதினார்.
இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த மாணவர் கேம்கோ மற்றும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மாணவர் கவுதம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தனர். காயம் அடைந்த மற்றவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த மல்லூர் போலீசார் மற்றும் ரோந்து போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த மாணவர் ஜெகநாத்தை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான காயம் அடைந்த சத்தியபிரவீன் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் மாணவர் சரண் காயமின்றி தப்பினார்.
விபத்தில் இறந்த கேம்கோ மற்றும் கவுதமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுது புரண்டனர். இந்த சம்பவம் அரசு ஆஸ்பத்திரியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே லாரியை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனர் தப்பியோடி விட்டனர்.
- சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர்.
- உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மதுராந்தகம்:
மேல்மருவத்தூர் அருகே கண்டெய்னர் லாரி மீது பஸ் உரசியதில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற 3 கல்லூரி மாணவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-
மதுராந்தகத்தில் தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு மேல்மருவத்தூர் அருகே உள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்த கமலேஷ்(வயது19), சூனாம்பேடு தனுஷ்(19), மோகல்வாடி பகுதியை சேர்ந்த மோனிஷ்(19) உள்ளிட்டோர் படித்து வந்தனர். அவர்கள் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
இன்று காலை கமலேஷ் உள்ளிட்ட மாணவர்கள் அனைவரும் வழக்கம் போல் சூனாம்பேட்டில் இருந்து அச்சரப்பாக்கம் வழியாக மதுராந்தகம் நோக்கி சென்ற தனியார் பஸ்சில் கல்லூரிக்கு புறப்பட்டனர். பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தனர்.
மேல்மருவத்தூர் அருகே சிறுநாகலூர் என்ற இடத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்று கொண்டு இருந்த போது சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி மீது திடீரென பஸ் உரசியது.
இதில்படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த கமலேஷ், தனுஷ், மோனிஷ் மற்றும் ஒரு மாணவர் என 4 பேர் இடிபாட்டில் சிக்கி சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் கமலேஷ், தனுஷ், மோனிஷ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். மற்றொரு மாணவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் உயிருக்கு போராடிய மாணவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான 3 மாணவர்களின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் பஸ்சின் மற்றொரு படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மேலும் 5 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர்.
பலியான 3 மாணவர்களும் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் பலியானது பற்றி அறிந்ததும் அவர்களது பெற்றோர் கதறி துடித்தனர். மாணவர்களின் உடல்களை பார்த்து உடன் படித்த மாணவர்கள் கண்ணீர் வடித்தனர். இதனை பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.
- ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் நகப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் வினித் (20). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவரது நண்பர்களான தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மகன் நந்தகுமார்(21) மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.
நேற்று வினித் வீட்டிற்கு அவரது நண்பர்களான நந்தகுமார், ஷேக் பெருசல்லி சாகிப் ஆகியோர் வந்துள்ளனர். பின்னர் மாலை சுமார் 3 மணியளவில் நகப்பாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு நண்பர்கள் 3 பேரும் குளிக்க சென்றுள்ளனர். இரவு 7 மணி ஆகியும் வீட்டிற்கு வராததால் வினித்தின் பெற்றோர் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது ஆற்றின் கரைப்பகுதியில் 3 பேரின் உடைகள் மற்றும் செல்போன், அவர்கள் அணிந்திருந்த செருப்புகள் மட்டும் இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ராஜவேல், ஜெர்மையா அருள் பிரகாஷ், செல்வம், கார்த்திகேயன், பூபதி, சரவணகுமார், சரவண கணேஷ் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் காணாமல் போன 3 கல்லூரி மாணவர்களையும் காவிரி ஆற்றில் மீன்பிடி படகுமூலம் தேடினர்.
இரவு 11 மணி வரை தேடி பார்த்தனர். இரவு இருள் சூழ்ந்ததன் காரணமாக தண்ணீரில் மாயமான மாணவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து 11 மணியுடன் தேடும் பணி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 2-வது நாளாக நாமக்கல் தீயணைப்பு வீரர்கள் நகப்பாளையம் காவிரி ஆற்றுக்கு வந்து மீன்பிடி படகு மூலம் காவிரி ஆற்று தண்ணீரில் மூழ்கி காணாமல் போன 3 பொறியியல் கல்லூரி மாணவர்களை தொடர்ந்து தேடினர்.
அப்போது வட்டப்பாறை என்ற பகுதியில் பாறை இடுக்கில் இருந்து மாணவர் வினித் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தொடர்ந்து மேலும் நந்தகுமார், ஷேக் பெசருல்லி சாகிப் ஆகிய 2 கல்லூரி மாணவர்களின் உடல்களையும் மீட்டனர். அவர்களின் உடல்களை பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
- சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம்.
திருப்பூர்:
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஈரோட்டிற்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
காலை 8-30 மணியளவில் திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பல்லகவுண்டன்பாளையம் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையோரம் கவிழ்ந்தது.

இதில் பஸ்சில் பயணித்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய 5 கல்லூரி மாணவர்களின் கை-கால்கள் துண்டாகியது. அவர்கள் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேர் சுய நினைவு இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். சில பயணிகள் பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் ஊத்துக்குளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ்கள் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக செங்கப்பள்ளி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர். சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.

டிரைவர் அதிவேகமாக பஸ்சை இயக்கியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பஸ் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் விபத்தில் பலியான 2 பேரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதும், அதில் ஒருவர் விருமாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் பெரியசாமி (வயது 20), மற்றொருவர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.
பெரியசாமி செங்கப்பள்ளியில் இருந்து பஸ்சில் ஏறியுள்ளார். அடுத்த 5 நிமிடத்தில் அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.