என் மலர்
நீங்கள் தேடியது "கோவி செழியன்"
- சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
- கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் நடந்தது.
சட்டமன்ற உறுப்பி னர்கள், கடலூர் அய்யப்பன், சூலூர் கந்தசாமி, சேந்தமங்கலம் பொன்னுசாமி, விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் சதன்திரு மலைக்குமார், தென்காசி பழனிநாடார் மற்றும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர், கோரிக்கை மனுக்கள் குறித்து கட்டளை குடியிருப்பு, பூலாங்குடியிருப்பு சாலை, இலத்தூர், நயினாரகரம் அப்துல்கலாம் தெரு, சங்குபுரம் பகுதி, சாம்பவர் வடகரை பேரூராட்சி வித்தன்கோட்டை கிராமம், தென்காசி நகரத்தின் மையப்பகுதியிலுள்ள சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், செங்கோட்டை என்.எச். சாலையில் இருந்து கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது செங்கோட்டை நகராட்சி மூலம் சாலை அமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகர்சாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் , துணைத் தலைவர் சுப்பையா, சாம்பவர்வடகரை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
- அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம் கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோருக்குத் தேவைப்படும் தகவல்களை வழங்கும் உதவி மையம் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறையின்கீழ் 13 பல்கலைக் கழகங்கள், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள், 10 பொறியியல் கல்லூரிகள். 52 தொழில்நுட்பக் கல்லூரிகள், சிறப்பு நிறுவனங்கள், 162 அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இக்கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சேர்க்கைக்காகவும் மற்றும் இதர காரணங்களுக்காகவும் மேற்குறிப்பிட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும்.
பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், ஆராய்ச்சிப் படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்கள், துறை அலுவலகங்களின் அமைவிடம், தனியார்களின் கோரிக்கை தொடர்பாக எந்த அலுவலரை அணுகுவது.
அலுவலக நடைமுறைகள், தனியார்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள ஏதுவாக மேற்குறிப்பிட்டுள்ள உயர்கல்வித்துறையின்கீழ் இயங்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்ட ஓர் உதவி மையம்" கல்லூரியின் முதன்மையான இடத்தில் ஏற்படுத்தப்படும்.
இந்த மையம் பயனாளிகளுக்கு எளிதில் உதவும் வகையில் அமைக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கோவி.செழியன் கூறி உள்ளார்.
- மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார்.
- முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர்.
மதுரை:
மதுரை அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கு இணங்க அவரது வழிகாட்டுதலின்படி அரசு கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பல வகை தொழில் நுட்ப கல்லூரிகளின் ஆசிரியர்களுக்கான 2024-25 ஆண்டுக்கான பணி மாறுதல் திணை வழியாக ஒளிவு மறைவு அற்ற பொது கலந்தாய்வு நடத்த உத்தரவு விடப்பட்டது.
அதன் அடிப்படையில் இணைய வழியாக மனு செய்த 377 ஆசிரியர்களின் மனுக்களில் தகுதி உடைய 198 நபர்களுக்கு பணி மாறுதல் ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது. அதே போல் தொழில்நுட்பக் கல்லூரியில் பணிபுரியும் 285 நபர்களின் மனுக்கள் பெறப்பட்டு தகுதியுடைய 93 பணியிடங்களுக்கு பணி மாறுதல் ஆணையும் இன்று வழங்கப்பட்டது.
இதுவரை இல்லாத நிலையில் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படைத்த்தன்மையுடன் இந்த அரசு செயல்படுகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் கவர்னரால் எந்த அளவுக்கு இடர்பாடுகள் நிலவுகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.
மாநில உரிமை, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை பேணி காப்பதில் முதல்வர் கவனமாக உள்ளார். அத்துடன் அந்த விஷயத்தில் முதலமைச்சர் கண்ணும் கருத்துமாக இருந்து எங்களுக்கு அறிவுரை கூறி வருகிறார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் விரைவில் துணைவேந்தர் நியமனம் செய்யப்படுவர். அந்த பணியும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
சென்னை அண்ணா பலகலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி. செழியன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்.
தனிப்பட்ட ஒரு மாணவி பாதிக்கப்பட்டுள்ள இச்சம்பவத்தை அரசியல் ஆக்க விரும்புகிறவர்கள் கடந்த ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அன்றைய ஆட்சியாளர்களின் அழுத்தத்தால் காவல்துறையில் புகார் அளிக்கக் கூட பாதிக்கப்பட்டவர்கள் பயந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மாணவி ஒருவர் புகார் அளித்துள்ளது மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியின் புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க நான்கு சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்தி வரும் விசாரணையில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவரிடம் இருந்து பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில், "கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டவர். திமுக நிர்வாகி, தமிழக மக்கள் இதை எவ்வளவு காலம் பொறுத்துக்கொள்ள வேண்டும்?. மு.க. ஸ்டாலின் எப்போதாவது பொறுப்பேற்பாரா?" என எக்ஸ் பக்கத்தில் பா.ஜ.க. அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதனாவர் குறித்து அண்ணாமலையின் கருத்திற்கு அமைச்சர் கோவி. செழியன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய அவர், "பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் என்பவர் திமுக நிர்வாகி என்பது உண்மை அல்ல" என்று விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அவர், " எது நடந்தாலும் திமுகவை குறை கூறுவது அண்ணாமலையின் இயல்பான குணம். அண்ணாமலை கூறுவதால் அது அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது என்று அர்த்தமல்ல, அது உண்மையும் அல்ல" என்றார்.
- பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
- அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் முத்தாண்டிபட்டி, ஆச்சாம்பட்டி, புதுக்குடி உள்ளிட்ட 30 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய அங்காடி கட்டிடங்கள், பள்ளிக்கட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு கட்டிடங்களை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திறந்து வைத்தார் .
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23-ம் தேதி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது குறித்து 25-ம் தேதி போலீஸ் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் 3 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், பெண் பிள்ளைகள், மாணவிகள் நலன் குறித்து குழுக்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி, நடைபெற்ற நிகழ்வு குறித்து உடனடியாக பாதுகாப்பு குழுவிடம் சொல்லி இருந்தால் இன்னும் துரித நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக இருந்திருக்கும். தனிப்பட்ட அச்ச உணர்வு, பெண்மைக்குரிய பாதுகாப்பு, மனநிலை இவைகளை மனதில் வைத்து இரண்டு தினங்கள் கழித்து கூறி இருந்தாலும் கூட குற்றவாளியை உடனே கைது செய்து இருக்கிறோம்.
குற்றவாளிக்கு விரைந்து தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கொண்டு மாணவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை மனதில் வைத்து அரசியல் செய்ய முற்பட்ட கட்சி தலைவர்களுக்கு தரும் விளக்கம் என்னவென்றால், கடந்த காலங்களில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு எல்லாம் மாநில அரசே துணை நின்ற சம்பவம் உண்டு.
பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசிய போதெல்லாம் நிராகரித்தார்கள். ஆனால் தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் 3 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்து இருக்கிறோம். கடந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அச்சப்பட்டார்கள். அது ஆளுங்கட்சியின் அழுத்தம்.
ஆனால் தற்போது பாதிக்கப்பட்ட மாணவி புகார் இரண்டு நாள் கழித்து அளித்தாலும் சுதந்திர உணர்வோடு யாருடைய தங்கு தடை இன்றி நடவடிக்கை எடுத்திருப்பதை பாராட்ட மனமில்லாமல் இதை காரணம் காட்டி அரசை குறை சொல்லும் மனநிலை தான் உள்ளது.
அரசின் செயல்பாடு, பல்கலைக்கழகங்கள், காவல்துறையின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
இருந்தாலும் மாணவிகளின் நலன் காக்க பெருந்துணை புரிவோம். மூன்று மாத காலம் அமைதியாக இருந்த தமிழகத்தில் மீண்டும் தனது குணத்தை காட்ட ஆரம்பித்து விட்டார் அண்ணாமலை. தி.மு.க. ஆட்சி செயல் சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளது. தோல்வி பயத்தில் அண்ணாமலை உளறி கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளிக்கும்.
- அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.
சென்னை :
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* தேசிய மகளிர் ஆணைய விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை தமிழக அரசு அளிக்கும்.
* அண்ணா பல்கலைக்கழகத்தில் துரதிருஷ்டவசமாக எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் மாணவிகள் கல்லூரி கமிட்டியிடம் தாமாக வந்து புகார் அளிக்க வேண்டும்.
* வேறு எதுவும் கிடைக்காததால் அரசியல் கட்சியினர் மாணவி வன்கொடுமை சம்பவத்தை அரசியல் ஆக்குகின்றனர்.
* மாணவி வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசியல் ஆக்க விரும்பவில்லை.
* சட்டத்தின்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
* அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் முட்புதர்களை அகற்றும் பணியும் அனைத்து இடங்களிலும் மின் விளக்கு பொருத்தும் பணியும் நடைபெற்று வருகிறது என்றார்.
- பல்கலைக்கழக நேரம் தவிர வேறு யார் வந்தாலும் உரிய அடையாள அட்டை காட்டி, பதிவு செய்து தான் வர வேண்டும்.
- குற்றத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகவும், உயர்கல்வி துறையும் துணை இருக்கும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த சம்பவம் நடந்தபோது நேரம் 8 மணி.
* பல்கலைக்கழகத்திற்குள் ஞானசேகரன் அடிக்கடி வந்துபோய் பழக்கத்தில் இருந்துள்ளார். அவருடைய மனைவி பல்கலைக்கழக தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதுவே பல்கலைக்கழகத்திற்குள் வந்து செல்ல சாதகமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகப்பட்டு இவரை உள்ளே வராதே என்று சொல்லக்கூடிய சூழல் இல்லாமல் இருந்துள்ளது.
* இப்பொழுது நாங்கள் தெளிவாக சொல்லி இருக்கிறோம். பல்கலைக்கழக நேரம் தவிர வேறு யார் வந்தாலும் உரிய அடையாள அட்டை காட்டி, பதிவு செய்து தான் வர வேண்டும்.
* வாகனங்களில் வந்தால் கூட அவர்களை சிசிடிவி கேமராவில் கண்காணித்து, படம் எடுக்க வேண்டும். வாகன எண்ணையும் குறிப்பிட வேண்டும்.
* குற்றத்தை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழகவும், உயர்கல்வி துறையும் துணை இருக்கும். அரசு பெருந்துணையாக இருக்கும்.
* பிளாட்பார்ம் ஓரத்தில் ஞானசேகரன் பிரியாணி கடை வைத்து இருப்பதாகவும், பல மாணவர்களுக்கு அவர் தெரிந்த முகம் என்பதாலும், அவருடைய மனைவி பணியாற்றுகிறார் என்பதாலும் வருவார் என்று சொல்கிற செய்தி தான். அது இன்னும் விசாரணையில் தான் முழுமையாக தெரியும்.
* இந்த சம்பவத்தில அவருடைய மனைவியின் பங்கு உள்ளதா? என்பது விசாரணையின்போது தெரியும் என்று கூறினார்.
- அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கோவி.செழியன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கான அனைத்து நடவடிக்களையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆபத்துக் காலங்களில் உடனடியாக காவல்துறையை தொடர்பு கொள்ள உதவும் 'காவல் உதவி' (Kaaval Uthavi) செயலியை அனைத்துப் பெண்களும் குறிப்பாக மாணவிகள் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அவசர காலங்களில் சிவப்பு நிற `அவசரம்' என்ற பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பயனாளர் விவரம், தற்போதைய இருப்பிட விவரம் மற்றும் வீடியோ, கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்டு காவல்துறையின் அவசர சேவை வழங்கப்படும்.
மாணவிகள் காவல் உதவி செயலியை தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்வதை அனைத்துக் கல்லூரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இச்செயலியை Google Play Store, App Store-இல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
- புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குறிப்பிட்ட அந்த நபர் யார்? #யார்_அந்த_SIR ? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளதாவது:-
முதலமைச்சராக இருந்தபோது 13 அப்பாவி பொதுமக்களைக் காக்கைக் குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டுக் கொன்றதையே டி.வி.யைப் பார்த்து தெரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி இன்னும் திருந்தாமல் பத்திரிகைகளில் வந்த கிசுகிசுவை அடிப்படையாக வைத்து போராட்டம் என்ற பெயரில் மக்களை வாட்டி வதைக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்.
இன்று கூட திராவிட மாடல் அரசின் முன்னோடி திட்டமான புதுமைப்பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று முடித்து உயர்கல்வி பயில்வோருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை திராவிட மாடல் ஆட்சியில் மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
- யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
- தமிழகத்தை தொடர்ந்து யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரளா தீர்மானம் நிறைவேற்றியது.
தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் யுஜிசி வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு.
'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமையையும் கிடையாது' எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டிப்பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது.
கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent) உள்ள போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக UGC அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை. கல்வி சார்ந்த வழிகாட்டிகளை வழங்கக் கூடிய UGC ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறது.
ஒன்றிய அரசின் UGC விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது; யூஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யூஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர்.
மோடி அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என மிரட்டியபோது முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டது. அதன் விளைவுகளை இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
தேசியக் கல்விக்கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள்.
இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திராவிட மாடல் அரசு அஞ்சாது! பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.
துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுப்பதோடு கல்வியாளர் அல்லாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்றும் தனது அடிப்படை கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்ட பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது NET/ SET தகுதி பெற்றவர்களோ பேராசியர்கள் ஆகலாம் என யூஜிசி வரைவறிக்கை தெரிவித்திருப்பது கல்வித் துறையைச் சீரழித்து மாணவர்களின் கல்விக் கனவைப் பாழாக்கிவிடும். இதன் ஆபத்தை உணர்ந்துதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த வரைவறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதமும் எழுதினார்.
ஒன்றிய பாஜக அரசின் இந்த செயல் தமிழ்நாட்டின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல். அதனால்தான் நமது முதலமைச்சர், "பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் தமிழகத்துடன் இணைந்து இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிராகரித்து சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் ஒன்றிணைந்து, நமது கல்வி நிறுவனங்களின் மீதான மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும்" என்று கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார். அதன்படியே இன்று கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளை காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
விஷ செடியையும், விஷம செயலையும் முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியம். அப்படியே மோடி அரசிற்கு உட்பட்ட UGC-யின் இந்த சர்வாதிகார செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி கூட்டாட்சிக்குக் குழி பறிக்கும் UGC வெளியிட்ட வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனைத் திரும்பப் பெறும் வரை திராவிட மாடல் அரசும், தமிழ்நாட்டு மக்களும் தங்களது எதிர்ப்பில் இருந்து ஒரு நொடியும் பின் வாங்க மாட்டார்கள்.மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மோடி அரசிற்கு எதிராக ஒன்றுபடுவோம். மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை... நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை" என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்
- மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது.
- செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம்.
ஈரோடு:
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் (சி.என்.சி) கல்லூரி அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் செழியன், தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி வளாகத்தில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சி.என்.சி. கல்லூரியை நிர்வாகத்தினர் நடத்த முடியாத சூழ்நிலையில் தமிழக அரசு நடத்துவதற்காக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக நீண்ட காத்திருப்பிற்கு பிறகு கிடைத்துள்ளது.
மொத்தம் 52 ஏக்கர் கொண்ட இக்கல்லூரியில் 40 ஏக்கரில் விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். இது குறித்து உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் ஆய்விற்கு வந்துள்ளார் என்றார்.
பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியாரால் உருவாக்கப்பட்டு மாணவர்களின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இக்கல்லூரி பல தலைவர்களை உருவாக்கியுள்ளது. நிர்வாக காரணங்களால் தற்போது தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இங்கு விளையாட்டு அரங்கம், மிகப்பெரிய நூலகம் மற்றும் ஐ.ஏ.எஸ் அகாடமி அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இது பெரியாருக்கான பாராட்டிற்குரிய செயல். விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்த உயர்க்கல்வித்துறை பணிகளை துரிதப்படுத்தும்.
ஈரோட்டில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுகலை விரிவாக்க மையம் தொடர்ந்து நடத்த வழிவகை உள்ளதா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசு 2500 கவுரவ விரிவுரையாளர்கள் அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இது போதிய அளவில் இல்லை. மூன்றரை ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த செட் தேர்வு மார்ச் மாதம் ஆசிரியர் வாரியத்தால் நடத்தப்பட உள்ளது. விரைவில் அதற்கான ஹால்டிக்கெட் வழங்கப்பட உள்ளது. 6 மாதத்திற்கு ஒருமுறை செட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதால் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடத்தி ஆசிரியர் பணியிடத்தை நிரப்ப உள்ளோம். கடந்த அ.தி.மு.க. 10 ஆண்டுகள் ஆட்சியில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது. தி.மு.க. ஆட்சி அமைந்த ஒன்றரை ஆண்டுகளில் 5 ஆயிரம் ரூபாய் உயர்த்தி தற்போது 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
செட் தேர்விற்கு பிறகு மார்ச் மாத இறுதியில் ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் நிரந்தரப் பேராசிரியர்கள் நியமிக்க உள்ளோம். அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஜூன் மாதத்தில் 4 ஆயிரம் பேராசிரியர்கள் பணி நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.
ஈரோட்டில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின் போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, எம்.பி.க்கள் கே.இ.பிரகாஷ், அந்தியூர் செல்வராஜ், சந்திர குமார் எம்.எல்.ஏ., மேயர் நகரத்தினம், மாநகர செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணைச்செயலாளர் செந்தில்குமார், மண்டல தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திருவாசகம் உள்பட பலர் உடன் இருந்தனர்.