என் மலர்
நீங்கள் தேடியது "இ-பாஸ்"
- வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
- சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு
ஊட்டி:
ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.
குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.
வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.
மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.
மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.
மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-
கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.
அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.
மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.
அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.
- வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது.
- இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.
ஊட்டி:
நீலகிரியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா வருகிற 10-ந்தேதி மலர் கண்காட்சியுடன் தொடங்க உள்ளது. மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் தயார் செய்யப்பட்ட 388 ரகங்களில் 65 ஆயிரம் மலர் தொட்டிகளை மலர் மாடத்தில் காட்சிப்படுத்தும் பணியை கலெக்டர் அருணா இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஊட்டியில் வருகிற 10-ந் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. 10-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை என 10 நாட்கள் இந்த கண்காட்சி நடக்க உள்ளது.

மலர் கண்காட்சியை பார்வையிட நுழைவு கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.75 ஆகவும், பெரியவர்களுக்கு ரூ.150 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சியும் நடத்த உள்ளோம் ரோஜா கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
பழ கண்காட்சி 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது. ரோஜா கண்காட்சியை பார்வையிட நுழைவுக்கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.500, பெரியவர்களுக்கு ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சியில் மொத்தம் 6.5 லட்சம் மலர்கள் மக்கள் பார்வையிட வைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நீலகிரியில் அமல்படுத்தப்பட உள்ள சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் நடைமுறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த கலெக்டர் அருணா, இ-பாஸ் தொடர்பாக மாலையில் தெரிவிக்கிறேன் என்றார்.
- நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.
- ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
ஊட்டி:
நீலகிரிக்கு ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் இ-பாஸ் பெற்றே வருகின்றனர்.
இ-பாஸ் விண்ணப்பித்த உடனே கிடைத்து விடுகிறது. இருந்தாலும் பெரும்பாலானோர் இ-பாஸ் எடுத்து செல்ல வேண்டும் என்பதால் வருவதில் சற்று தயக்கமே காட்டி வருகின்றனர்.
நீலகிரியில் அமல்படுத்தப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
நேற்று முன்தினம் தாவரவியல் பூங்காவிற்கு 25,600 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில் நேற்று 11,600 சுற்றுலா பயணிகள் மட்டுமே பூங்காவை சுற்றி பார்க்க வந்துள்ளனர். இதேபோல் ரோஜா பூங்காவுக்கு 5 ஆயிரத்து 750 பேரும், குன்னூர் சிம்ஸ் பூங்கா 2,751 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 555 பேரும், தேயிலை பூங்கா 909 பேரும், மரவியல் பூங்காவுக்கு 80 பேரும் என மொத்தம் ஒரு நாளில் 21 ஆயிரத்து 680 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
வழக்கமாக கோடை சீசனையொட்டி ஒவ்வொரு நாளும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதும். வியாபாரமும் களைகட்டும்.
ஆனால் இ-பாஸ் நடைமுறையால் நேற்று ஊட்டியில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
தொழில் பாதிப்பு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் அந்த சமயத்தில் தான், எங்களுக்கு வியாபாரமும் நன்றாக நடக்கும். இந்த சீசன் காலத்தில் நடக்க கூடிய வியாபாரம் மூலமாகவே எங்களுக்கு ஓரளவு வருமானமும் வரும்.
அந்த வருமானத்தை வைத்து தான் சீசன் இல்லாத நேரங்களில் சமாளித்து வருகிறோம். இப்படிப்பட்ட நிலையில் சீசன் நேரத்திலும் இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதனால் வியாபாரம் முற்றிலும் பாதிப்படை ந்து, எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் 2 லட்சத்து 80 ஆயிரம் சுற்றுலா பயணிகளில் 40 ஆயிரம் பேராவது வந்திருப்பார்களா என்பது சந்தேகமே. இனி மழை காலம் தொடங்கி விடும் என்பதால் சுற்றுலா வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான வணிகர்கள் வருமானம் இழப்பதோடு அதை சார்ந்து வாழும் பல லட்ச குடும்பங்களும் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- அந்தந்த சோதனை சாவடிகளிலேயே இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.
- இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா கூறியிருப்பதாவது:-
சென்னை ஐகோர்ட்டு, நீலகிரி மற்றும் கொடைக்கானல் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்களுடைய விவரங்களையும், பயணிக்கும் வாகனங்களின் எண்களையும் அவர்கள் வரும் நாள், தங்கும் கால அளவு, தங்கும் இடம் ஆகிய விவரங்களை முன்கூட்டியே இணையதளத்தின் மூலமாக தெரிவித்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று அந்த அடிப்படையில் வாகனங்களும், சுற்றுலா பயணிகளும் அனுமதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.
இதனை பரிசாத்த முறையில் நடைமுறைப்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களுக்கு இ-பாஸ் பெற்று வரும் நடைமுறை கடந்த 7-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இ-பாஸ் இல்லாமல் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளின் வாகனங்களுக்கு எந்தவொரு சிரமமின்றி இ-பாஸ் கிடைத்திடும் வகையில் அந்தந்த சோதனைச் சாவடிகளிலேயே மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பணியாளர்களை இ-பாஸ் பதிவு செய்யும் பணிகளில் ஈடுபடுத்தி இ-பாஸ் பெற்று தரப்படுகிறது.
மேலும் மாவட்டத்தில் உள்ள துணை ஆட்சியர் நிலையில் அலுவலர்களை கொண்டு மேற்காணும் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி முதல் நேற்று 8-ந் தேதி மாலை வரை சுமார் 3 லட்சத்து 17 ஆயிரத்து 102 சுற்றுலாபயணிகள், 58 ஆயிரத்து 983 வாகன ங்களில் பயணம் செய்ய இ-பாஸ் முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு வருகை தர பதிவு செய்துள்ளனர்.
இ-பாஸ் நடைமுறை குறித்து சுற்றுலாபயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் தங்கும் விடுதிளின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், தாங்கள் வழங்கும் அறை முன்பதிவிற்கான ரசீதில் நீலகிரி மாவட்டத்துக்குள் வருகை தருவதற்கு இ-பாஸ் கட்டாயம் என்ற விழிப்புணர்வு வாசகம் அவசியம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
- கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது.
ஊட்டி:
தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலேயே ஊட்டி, கொடைக்கானல் என்பது மிகவும் முக்கியமானது.
இங்குள்ள இயற்கை காட்சிகள், அருவிகள், எண்ணற்ற சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும், இங்கு நிலவும் குளு, குளு கால நிலையை அனுபவிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஊட்டி, கொடைக்கானலில் கோடைவிழா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்பட பல்வேறு வகையான கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பசுமையான சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவருமே இ-பாஸ் பெற்று சென்று வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 10-ந் தேதி மலர் கண்காட்சி மற்றும் ரோஜா கண்காட்சி தொடங்கியது. மலர் கண்காட்சியையொட்டி பூங்காவில் மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள 65 ஆயிரம் மலர் தொட்டிகளில் மலர்கள் பூத்து குலுங்கி அங்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுத்து வருகிறது.
இதுதவிர 2 லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு மலைரெயில், டிஸ்னி வேர்ல்டு, மற்றும் பல்வேறு மலர் அலங்காரங்களையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.
வழக்கமாக கோடை மாதம் மற்றும் மலர் கண்காட்சியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு நாளும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால் இந்த மாதம் முழுவதும் நீலகிரி மாவட்டமே களைகட்டி காணப்படும். வியாபாரமும் படுஜோராக நடந்து வரும்.
ஆனால் இந்த ஆண்டு இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து விட்டது. கண்காட்சி தொடங்கி இன்றுடன் 5 நாட்கள் ஆகிறது. ஆனால் மலர் கண்காட்சியை பார்வையிட ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வருகின்றனர். அதிகபட்சமாக கடந்த 12-ந் தேதி 21 ஆயிரம் பேர் வந்திருந்தனர். மற்ற நாட்களில் அதனை விட மிகவும் குறைவாகவே வந்துள்ளனர்.
சுற்றுலாபயணிகள் வருகை குறைவு காரணமாக மலர் கண்காட்சிக்கான நுழைவு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. தற்போது ரூ.125 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஊட்டி வியாபாரிகள் சங்க மாவட்ட நிர்வாகி பரூக் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் நீலகிரியில் நடக்கும் கோடைவிழாவை காண அனைத்து பகுதிகளிலும் இருந்து எண்ணற்ற சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். இதனால் இந்த ஒரு மாதம் முழுவதும் நீலகிரியில் வியாபாரமும் நன்றாக நடக்கும்.
வழக்கமாக கோடை விழாவின் போது நடக்கும் மலர் கண்காட்சியை பார்க்க ஏராளமானோர் வருவார்கள். ஆனால் இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. இங்குள்ளவர்களுக்கு எளிதாக இ-பாஸ் கிடைத்து விடுகிறது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு விண்ணப்பித்த உடன் இ-பாஸ் கிடைப்பதில்லை. பலமுறை முயற்சி செய்த பின்னரே இ-பாஸ் கிடைப்பதாகவும், அதானாலேயே பலரும் இங்கு வருவதை தவிர்த்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு மற்றும் இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாவை நம்பி நடந்து வரும் அனைத்து தொழில்களும் பாதிப்படைந்துள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இ-பாஸ் நடைமுறையால் கொடைக்கானலுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, இ-பாஸ் நடைமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை வழக்கத்தை விட குறைந்துள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் அதனை நம்பி நடக்கும் வியாபாரம் முற்றிலும் களை இழந்து விட்டது. தொழிலாளர்களும் கடும் பாதிப்படைந்துள்ளனர் என்றனர்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுநாள் மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இதனை பார்வையிட சுற்றுலாபயணி கள் வருகை அதிகம் இருக்கும் என எதிர்பார்த்து வியாபாரிகள் காத்து இருக்கிறார்கள்.
- இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
- நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி.
சேலம்:
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் இருந்தால் தான் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் ஊட்டி, கொடைக்கானலில் சுற்றலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது.
இந்த இடங்களை தவிர்த்து மற்ற இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
வழக்கமாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுமார் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். தற்போது சராசரியாக 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தினம் வருகிறார்கள்.
இன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இருசக்கர வாகனங்கள், பஸ்களில் வந்தனர்.இதுபோல் மேட்டூருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
அணையை ஒட்டியுள்ள காவிரி ஆற்றில் நீராடி மகிழ்ந்த அவர்கள் பின்னர், அணைக்கட்டு முனியப்பனை தரிசனம் செய்தனர். பூங்காவில் உள்ள மீன் காட்சியகம், மான் பண்ணை, முயல் பண்ணை, பாம்புப் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கொல்லிமலையில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றை பார்த்து சுற்றுலாப் பயணிகள் மகிழச்சி அடைந்தனர்.
- சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகம்.
- பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.
ராமேஸ்வரம்:
தமிழகம் முழுவதும் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்கள், ஆன்மீக தலங்கள், கோடை வாசஸ்தலங்கள் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் சென்று வர தொடங்கி உள்ளனர்.
கொடைக்கானல், ஊட்டி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை தவிர்ப்பதற்காக அங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக மாநிலம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் சுருளி, கும்பக் கரை, குற்றாலம் போன்ற அருவிகள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக காட்டாறு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கும், குளிப்பதற்கும் தற்காலி கமாக தடை விதிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் இது போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு ஆன்மீக தலங்களை நோக்கி படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இதையடுத்து ராமேசுவரத்திற்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. ராமேசுவரத்தில் குவிந்து உள்ள பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திற்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கனக்கான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் இன்று அதிகாலையில் வருகை தந்தனர்.
அக்னி தீர்த்த கடற்கரையில் நீராடினர். இதன் பின்னர் ராமநாத சுவாமி கோவிலுக்குள் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். இதன் பின்னர் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
இதனைதொடர்ந்து, தனுஸ்கோடி, அரிச்சல் முனை, கோதரண்டராமர் கோவில், ராமர்பாதம் மற்றும் முன்னாள் குடியர வை தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் தேசிய நினைவிடம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்து செல்பி எடுத்துக் கொண்டனர்.
பக்தர்கள் அதிகளவில் வருகையை முன்னிட்டு காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் உமாதேவி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
- சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்
ஊட்டி:
சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தங்குமிடம், கழிப்பறை உள்பட பல்வேறு அடிப்படை விஷயங்களும் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்க்க முடியாமல் அதிருப்தி அடைகின்றனர். உள்ளூர் மக்களும் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வருகையில் கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்காக முதல்கட்டமாக இ-பாஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதன்படி கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் நீலகிரிக்குள் வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு உள்ளது. இதற்காக https:/;/epass.tnega.org என்ற பிரத்யேக இணையதளம் வெளியிடப்பட்டு அதன்மூலம் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும் கடந்த செப்டம்பர் 30-ந்தேதிவரை இ-பாஸ் எடுத்து வர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது மறுஅறிவிப்பு வரும்வரை நீலகிரியில் இ-பாஸ் நடைமுறை தொடர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபவ்யா தண்ணீரு கூறுகையில், நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மறுஅறிவிப்பு வரும்வரை இ-பாஸ் நடைமுறை தொடரும்.
இ-பாஸ் நடைமுறைப் படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 5 மாதங்களில் மட்டும் 2 3/4 லட்சம் வாகனங்களில் 13 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை.
- சோதனை சாவடிகளிலேயே சோதனை.
கொடைக்கானல்:
ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது.
இ-பாஸ் பெறாத வாகனங்கள் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. வார விடுமுறை காரணமாக காலை முதலே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.

இ-பாஸ் மற்றும் வழக்கமான சோதனைக்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
மேலும் 5 லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலுக்கும் தலா ரூ.20 பசுமை வரி வசூலிக்கப்பட்டது.
இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருேக உள்ள சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இ-பாஸ் பெறாமல் வந்த வாகனங்களை சுங்கச்சாவடி அருகிலேயே நிறுத்தி சோதனை செய்ததால் மற்ற வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இ-பாஸ் குறித்து தெரியாமல் வந்த சுற்றுலாப் பயணிகள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம் இ-பாஸ் பெறுவது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
மலைச்சாலையில் இ-பாஸ் சோதனை செய்வதால் குறுகிய இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு மற்றும் காமக்காபட்டி சோதனைச்சாவடியிலும், பழனி அடிவார பகுதியிலும் கொடைக்கானல் வருவதற்கு முன்பே சுற்றுலாப் பயணிகளிடம் இ-பாஸ் சோதனை மேற்கொண்டால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம்.
மேலும் நேர விரையமும் தவிர்க்கப்படலாம். எனவே அடிவாரப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளிலேயே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கொடைக்கானலுக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் இ-பாஸ் சோதனை செய்யப்படுகிறது.
- கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அளவுக்கு அதிகமான சுற்றுலா வாகனங்கள் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க கடந்த மே7-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை உயர் நீதிமன்ற உத்தரவுபடி இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தும் இங்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி இ-பாஸ் அனுமதி குறித்து கொடைக்கானல் நகருக்குள் நுழையும் முன்பு பயணிகளிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது
பொதுநலன் கருதி மற்றும் மக்கள் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட இம்முடிவு வரும்18ம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
- தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
- தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு ஒத்திவைப்பு.
சென்னை:
ஈரோடு கிழக்கு சட்ட மன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.-ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் வாக்கா ளர்களை கொட்டகைகளில் அடைத்து வைப்பதை தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி கொங்குதேச மறுமலர்ச்சி மக்கள் கட்சியைச் சேர்ந்த கே.பி.எம்.ராஜா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், தொகுதி யின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமகன் ஈ.வெ.ரா மரணத்தை தொடர்ந்து 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவும், மற்ற வேட்பாளர்கள் வாக்காளர்களை அணுகுவதை தடுக்கவும் ஒவ்வொரு வார்டிலும் கொட்டகைகளை அமைத்து, அதில் வாக்காளர்களை தங்க வைக்கப்பட்டனர்.
கொட்டகைகளில் தங்க வைக்கப்பட்ட வாக்காளர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
ஓட்டுக்குக்கு பணம் வழங்கப்பட்டது. அதனாலேயே அந்த தேர்தலில் நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். தற்போது நடக்க உள்ள தேர்தலில் கொட்டகை பாணி பின்பற்றக் கூடும்.
இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 8-ந்தேதி மனு அளித்தேன்.
அதில், தொகுதிக்கு வரும் வெளியாட்களுக்கும், வெளியூர் செல்லும் தொகுதி வாக்காளர்களுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். தேர்தல் முறைகேடுகள் குறித்து புகார் அளிக்க ஆன்லைன் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தேன். அதனை பரிசீலிக்கும் படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர், மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும். யார் தான் சலுகைகள் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர், மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.