search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா பெண் டாக்டர் கொலை"

    • ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.
    • இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக 31 வயதான சஞ்சய்ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

    இவன் போலீசாரிடம் தன்னார்வ தொண்டனாக பணிபுரிந்து வந்தவன். அதை பயன்படுத்தி தான் அவன் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.

    இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான். அதில் அவன் கூறி இருப்பதாவது:-

    கடந்த 8-ந்தேதி இரவு நானும், எனது நண்பனும் வடக்கு கொல்கத்தாவில் விபசாரம் நடக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கு நாங்கள் நள்ளிரவு வரை உல்லாசமாக இருந்தோம்.

    பிறகு நள்ளிரவு 2 மணிக்கு மற்றொரு சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கும் நீண்ட நேரம் பெண்களுடன் இருந்தோம். அதன் பிறகு தனது நண்பன் மோட்டார் சைக்கிளில் அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.

    அதிகாலை 3.50 மணிக்கு நான் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். வளாகத்தில் அமர்ந்து மது அருந்தினேன். 4 மணி அளவில் கருத்தரங்கு நடக்கும் கூடத்துக்கு தூங்கலாம் என்று சென்றேன்.

    அப்போது அங்கு பயிற்சி பெண் டாக்டர் தூங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் மீது பாய்ந்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டேன். அவர் அலறினார். இதனால் அவரது கழுத்தை நெரித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.

    மேலும் அவன் கூறுகையில், "மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் நான் சிக்கி விட்டேன். என்னிடம் விசாரிப்பது போல கல்லூரி முதல்வரையும் விசாரிக்க வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்," என்றான்.

    • மேற்குவங்கத்தில் பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது.
    • தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என தலைமை நீதிபதி குறிப்பிட்டார்

    புதுடெல்லி:

    கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி சந்திரசூட், சமூகத்தில் வேரூன்றியிருக்கும் ஆணாதிக்க சார்புநிலை காரணமாக பெண் டாக்டர்கள் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். நாட்டில் நிலைமை மாறுவதற்கு தேசம் இன்னொரு பலாத்காரம் வரை காத்திருக்காது என குறிப்பிட்டார். மேலும், மருத்துவத் துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைக்கு அருணா சான்பாக் வழக்கு ஒரு எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்தார்.

    இந்தியாவில் மருத்துவத் துறையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்கு அருணா சான்பாக் வழக்கு ஆகும்.

    கடந்த 1967-ம் ஆண்டு 25 வயதான செவிலியர் அருணா சான்பாக், மும்பை கே.இ.எம். மருத்துவமனையில் உள்ள அறுவைசிகிச்சைப் பிரிவில் பணியில் சேர்ந்தார். அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் சந்தீப் சர்தேசாய் என்பவருக்கும், அருணாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. 1974-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தனர்.

    1973, நவம்பர் 27-ம் தேதி அதே மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ உதவியாளர் சோகன்லால் பார்த்தா வால்மிகி என்பவர் அருணாவை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, நாய் சங்கிலியால் அருணாவின் கழுத்தை நெரித்தார். இந்த தாக்குதலால் அருணாவுக்கு மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, அவரது உடல் உறுப்புகள் செயலிழந்தன.

    சுமார் 40 ஆண்டுக்கு மேலாக அருணா சான்பாக் அதே நிலையில் இருந்தார். அந்த காலகட்டத்தில் அருணா சான்பாக்கை கே.இ.எம். மருத்துவமனையின் ஊழியர்களே கவனித்து வந்தனர்.

    இதற்கிடையே 2011-ம் ஆண்டு பத்திரிக்கையாளர் பிங்கி விரானி என்பவர், அருணா சான்பாக்கை கருணை கொலை செய்ய வேண்டும் எனக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நாடுமுழுவதும் பேசுபொருளாக மாறிய நிலையில், 2011, மார்ச் 7-ம் தேதி இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

    அருணா சான்பாக் மூளைச்சாவு அடையவில்லை என்பதால் அவரை கருணை கொலை செய்ய உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

    அதேசமயம், அருணாவின் குடும்ப உறுப்பினர்களோ அல்லது பாதுகாவலர்களோ கோரிக்கை விடுத்தால் கோர்ட் அனுமதியுடன் அருணாவிற்கான உயிர்காக்கும் கருவிகளை துண்டிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் தெரிவித்திருந்தது. இதையடுத்து, 2015, மே 18-ம் தேதி நிமோனியா பாதிப்பால் அருணா சான்பாக் உயிரிழந்தார்.

    இதில் அருணா சான்பாக்கை தாக்கிய சோகன்லால் பார்த்தா வால்மிகி மீது திருட்டு மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவர்மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்படாத நிலையில் 7 ஆண்டு சிறை தண்டனைக்குப் பின் சோகன்லால் பார்த்தா வால்மிகி விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு.
    • மாணவிகளிடம் கலந்துரையாடி, பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    ஊட்டி:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே பெண் மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் போராட்டம் நடந்தது.

    இந்த நிலையில் இந்த சம்பவம் எதிரொலியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளிலும் ஆய்வு செய்து அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக டி.ஜி.பி சங்கர் ஜூவால் உத்தரவிட்டார்.

    அதனை தொடர்ந்து நேற்று ஊட்டி மாவட்ட அரசு மகப்பேறு மருத்து வமனையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது மருத்துவமனை வளாகத்துக்குள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, அறைகள், உள்ளே செல்லும் வழி, வெளியேறும் வழி, எவ்வளவு மருத்துவ பணியாளர்கள் உள்ளனர் என்பது குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் மருத்துவம னையில் எவ்வளவு கண்காணிப்பு காமிராக்கள் உள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டில் உள்ளது? மருத்துவ ஊழியர்கள் போதிய பாதுகாப்புடன் உள்ளனரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மருத்துவ கல்லூரி மாணவிகளிடமும் கலந்துரையாடி, அவர்களிடமும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இதேபோல் குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தராஜன் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மருத்துவர்களின் அறைகள், குடியிருப்புகள் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். கோத்தகிரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில், குன்னூர் டி.எஸ்.பி.பாஸ்கர், கோத்தகிரி இன்ஸ்பெக்டர் ஜெயமுருகன், போக்கு வரத்து இன்ஸ்பெக்டர்பதி ஆகியோர் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆஸ்பத்திரியில் எவ்வளவு மருத்துவப் பணியாளர்கள் உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, இது தொடர்பாக ஆஸ்பத்திரியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தனர்.

    ஊட்டி மகப்பேறு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்ட பின் போலீஸ் சூப்பிரண்டு என்.எஸ்.நிஷா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மகப்பேறு மருத்துவமனையை பொறுத்த வரை வளாகத்துக்குள் பாதுகாப்புக்காக ஊழியர்கள் உள்ளனர்.

    27 கண்காணிப்பு காமிராக்கள் உள்ளது. சில காமிராக்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். மருத்துவமனைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் தினமும் மருத்துவ மனைகளில் காவல்துறை மூலம் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பான அறிக்கை காவல்துறை தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள், மருத்து வர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை மூலமாக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×