என் மலர்
நீங்கள் தேடியது "Temple"
- வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
- பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த ரெட்டிச் சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரமோற்சவ விழா விமர்சையாக நடை பெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை சாமிக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கொடி மரத்திற்கும் சாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பல்லக்கில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தினந்தோறும் இரவில் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனத்தில் சாமி வீதியுலா நடைபெறுகிறது. வருகிற 7-ந் தேதி இரவு கருட சேவை விமர்சையாக நடைபெற உள்ளது. பின்னர் விமானத்தில் வசந்த உற்சவம், இரவு யானை வாகனம், மங்களகிரி வாகனம், 10-ந்தேதி காலை வெண்ணைத் தாழி திருக்கோலத்துடன் வீதி உலா, இரவு குதிரை வாகனம் மற்றும் பரிவேட்டை நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் விழா வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலையில் லட்சுமி நரசிம்ம பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும். இதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக கொண்டு வந்து தேரில் கம்பீரமாக எழுந்தருள்வார். பின்னர் அதிகாலை 4.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கி முக்கிய மாடவீதியில் சென்று வந்து நிலை அடையும்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோவிந்தா கோவிந்தா" என்ற பக்தி கோஷத்துடன் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு தீர்த்த வாரி அவரோகணம், 12-ந்தேதி மட்டையடி உற்சவம், இரவு இந்திர விமானத்தில் வீதியுலா, 13-ந் தேதி புஷ்ப யாகம், 14-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) வேல்விழி மற்றும் நிர்வாகத்தினர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
- காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கரூர் என அண்டை மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்ணாரி அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
பண்ணாரி அம்மன் கோவில் அருகே சோதனை சாவடி உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை ஒன்று அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி பண்ணாரி அம்மன் கோவில் அருகே சுற்றி வருகிறது.
வனத்துறையினர் பட்டாசை வைத்து விரட்டினாலும் சிறிது நேரம் மீண்டும் சாலையோரம் வந்து விடுகிறது. காலை, மாலை, இரவு நேரம் என பண்ணாரி அம்மன் கோவில் அருகே அந்த ஒற்றை யானை சுற்றி வருகிறது. இதனால் பண்ணாரி அம்மன் கோவில் செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதைப்போல் வனப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, வனப்பகுதியில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உணவு தண்ணீர் தேடி யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வாகனங்களை வழிமறிப்பது, கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவது தொடர்கதை ஆகி வருகிறது.
தற்போது பண்ணாரி அம்மன் கோவில் அருகே ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. எனவே கோவில் செல்லும் பக்தர்கள், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வனப்பகுதிக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ஒற்றை யானையின் நடமாட்டத்தை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.
- கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
திருப்பூர்:
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு ஒரு போன் வந்தது.
அதில் பேசிய நபர், திருப்பூர் அவிநாசி ரோடு காந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் இருந்து பேசுவதாகவும், தனக்கு அருகே இருந்து மது அருந்திய 2பேர் , திருப்பூர் படியூரில் உள்ள முருகன் கோவில், கோவை மருதமலை முருகன் கோவிலில் வெடிகுண்டு வைக்கப்போவதாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுங்கள் என்று பேசி விட்டு உடனே போனை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சென்னை போலீசார் திருப்பூர் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் திருப்பூர் காந்திநகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சோதனையிட்டனர்.
அப்போது போனில் தகவல்தெரிவித்த நபர் அங்கு இல்லை. மேலும் அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் போனில் பேசிய நபரின் செல்போன் எண் ஆய்வு செய்யப்பட்டது.இதில் போனில் பேசிய நபர் திருப்பூர் அண்ணாநகரை சேர்ந்த சரவணன் (வயது 47)என்பது தெரியவந்தது. இன்று காலை அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் லேசான மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. 2019ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய அவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் உண்மையிலேயே 2பேர் கோவிலில் குண்டு வைத்து தகர்க்க போவதாக பேசியதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தாரா?, அல்லது மனநிலை பாதிப்பு காரணமாக இப்படி செயல்பட்டாரா? என்று போலீசார் சரவணனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் டாஸ்மாக் பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சிகளை பார்வையிட்டு அதில் மர்மநபர்கள் யாராவது வந்து சென்றுள்ளனரா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தையடுத்து திருப்பூர் மாநகரில் கோவில்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் கோவில்களில் குண்டு வைக்கப்போவதாக வந்த தகவலால் திருப்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
- 6-ந்தேதி 2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
10 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது. காலை, இரவு என இருவேளையில் சாமி வீதி உலா நடைபெறும்.
7-ம் நாளான வருகிற 3-ந்தேதி மகா தேரோட்டமும் 6-ந்தேதி அன்று அதிகாலை 4 மணி அளவில் கோவில் வளாகத்தில் உள்ள சாமி சன்னதி அருகில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.
விழாவினை முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
இதில் ஒரு பகுதியாக அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நான்கு வாயில்களில் உள்ள ராஜகோபுரம், அம்மனிஅம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் ஆகிய கோபுரங்களை சுத்தம் செய்தனர்.
தீயணைப்பு வீரர்கள் பிராண்டோ ஸ்கை லிப்ட் 54 மீட்டர் உயரம் வரை செல்லும் அதாவது 162 அடி உயரத்திற்கு மேல் செல்ல கூடிய ராட்சத தீயணைப்பு மீட்பு எந்திரத்தின் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து கோபுரங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
கார்த்திகை தீப திருவிழாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்கிறது. இதற்காக தேர்கள் சீரமைக்கப்படுகின்றன. இன்று காலையில் அருணாசலேஸ்வரர் பவனி வரும் பெரிய தேர் சீரமைப்பு பணி தொடங்கியது.
தேர் சக்கரம், அச்சு, உச்சி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் செய்யப்படுகிறது.
- மீனாட்சி அம்மன் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாள் சித்திரை திருவிழா நடந்து முடிந்தது. இந்த நிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் துணை ஆணையர் அருணாசலம் முன்னிலையில், இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் மட்டுமின்றி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் ஆகிய 10 கோவில்களிலும் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை என்னும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பணிகளில் கோவில் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள், அலுவலர்கள், பணியா ளர்கள், பக்தர் பேரவையினர் மற்றும் ஒய்வு பெற்ற வங்கி அலுவலர்கள் உள்பட சுமார் 250-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் ேகாவில் மற்றும் உப கோவில்களில் காணிக்கை என்னும் பணி, இணையதள யூ-டியுப் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
- நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால்:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விநாயகர் உற்சவம், சுப்பிரமணியர் உற்சவம் நடை பெற்றுவந்தது. விழாவின் முக்கியநிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் (சுந்தரர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசர், திருநாவுக்கரசர் ) புஷ்ப பல்லக்கு வீதியுலா கடந்த 13-ந் தேதி இரவு நடை பெற்றது. தொடர்ந்து 17-ந் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா(தங்க ரிஷப வாகன காட்சி), சிறப்பாக நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை 5.30 மணிக்கு தொடங்கியது. முதல்தேரில் விநாயகரும், 2-வது தேரில் முருகப்பெருமானும், 3-வது தேரில் சென்ப கத்தியாகராஜ சுவாமியும், 4-வது தேரில் நீலோத்பா லாம்பாளும், 5-வதுதேரில் சண்டிகேஸ்வரும் வரிசையாக கொண்டு செல்லப் பட்டது. காலை 9 மணிக்கு செண்பக தியாகராஜசுவாமி திருத்தேரிலிருந்து எண் கால் மண்டபத்திற்கு எழுந்திரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் சாய் ஜெ. சரவணன் குமார், தொகுதி எம்.எல்.ஏ.சிவா, பா. ஜனதா மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான்சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
20-ந் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலாவும், 21-ந் தேதி தெப்போற்சவமும் நடை பெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரி நாதன் தலைமையில் ஊழி யர்கள் செய்து வருகின்றனர்.
- விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.
- வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் யானைகள், காட்டு பன்றிகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதியையொட்டி பகுதிகளில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு விவசாயிகள் பல்வேறு பயிர்கள் பயிரிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்தியூர் அடுத்த மலை கருப்பு சாமி கோவில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கரடிக்கல் பாறை என்ற இடத்தின் அருகே ஜானகி சரவணன் என்பவரின் 8 ஏக்கர் தோட்டம் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகின்றார். இதில் வாழை, சோளப்பயிர், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டுள்ளார்.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக காட்டுப்பன்றிகள் வெளியேறியது. இதையடுத்து காட்டு பன்றிகள் ஜானகி சரவணன் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது.
தொடர்ந்து அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களை அந்த காட்டு பன்றிகள் சேதப்படுத்தியது. அங்கு 1.50 ஏக்கர் அளவில் பயிரிட்டுள்ள பயிர்களில் 75 சென்ட் பயிர்களை முற்றிலும் சேதப்படுத்திஉள்ளது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் இருந்து வரும் இந்த வனவிலங்குகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன விலங்குகள் தோடங்களில் புகாமல் இருக்க விவசாயிகளுக்கு உதவ வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் வனத்துறையினருக்கு வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர்
மேலும் அறுவடைக்கு சில தினங்களில் இருக்கும் நிலையில் பயிர்கள் சேதம் அடைந்ததை கண்டு விவ சாயிகள் வேதனை அடைந்தனர்.
- இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து.
- வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து நடவடிக்கை
கனடாவில் காலிஸ்தான் அமைப்பு தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டியதால் இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள இந்து கோவில் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோவிலுக்குள் புகுந்து பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய தூதரகம் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது.
இந்த நிலையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிரட்டலால் பிராம்ப்டனில் உள்ள திரிவேணி கோவிலில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வருகிற 17-ந்தேதி இந்திய துணைத் தூதரகத்தால் பிராம்ப்டன் திரிவேணி கோவிலில் திட்டமிடப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக போலீஸ் உளவுத்துறை தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து சமூக உறுப்பினர்களிடமும் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கனடாவில் உள்ள இந்துக் கோவில்களுக்கு வருவதை கனேடியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது மிகவும் வருத்தமளிக்கிறது.
திரிவேணி கோவிலுக்கு எதிராக பரப்பப்படும் அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும், கனேடிய இந்து சமூகம் மற்றும் பொது மக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்கவும் போலீசாரை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
கனடாவில் உள்ள இந்து கோவில்களில், வருகிற 16,17-ந்தேதிகளில் இந்திய தூதரக அதிகாரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் என காலிஸ்தான் அமைப்பு தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தனக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக, கனடா எம்.பி., சந்தன் ஆர்யா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
- விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா வருகிற மார்ச் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு அன்றைய தினம் கோவில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமாகி, தொடர்ந்து காலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்பட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 7-ந்தேதி 5-ம் திருவிழாவை முன்னிட்டு மேலக்கோவிலில் (சிவன் கோவில்) இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடக்கிறது. மார்ச் 9-ந்தேதி 7-ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு சண்முகபெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன் கட்டளை மண்டபத்தை வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
தொடர்ந்து மாலை 4.20 மணிக்கு சுவாமி தங்க சப்பரத்தின் மீது சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
வருகிற 10-ந்தேதி 8-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சுவாமி வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து மேலக்கோவில் வருகிறார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு சுவாமி பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேருகிறார்.
11-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 9-ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
12-ந்தேதி (புதன்கிழமை) 10-ம் திருவிழாவை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. அன்று விநாயகர், சுவாமி, அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளி ரதவீதியில் வலம் வந்து நிலையம் சேர்தல் நடக்கிறது.
மறுநாள் (13-ந்தேதி) 11-ம் திருவிழாவை முன்னிட்டு இரவு 10 மணிக்கு மேல் தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று தெப்பத்தில் சுவாமி 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
14-ந்தேதி 12-ம் திருவிழா அன்று மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவு பெறுகின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.