என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 95993"

    • டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது.
    • புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.

    புதுடெல்லி:

    13 தனியார் அறக்கட்டளைகள் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.

    இதில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் தி புருடென்ட் மற்றும் ஏ.பி.ஜெனரல் எலக்ட்ரோல் டிரஸ்ட் மட்டும் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 8 அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.464.81 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பதாக கூறி உள்ளது.

    இதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் ரூ.336.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ரூ.18.4 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    இந்த அறக்கட்டளை உள்பட மொத்தம் 5 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.481.05 கோடியை வழங்கி உள்ளன.

    இதில் 72 சதவீத நிதியை பாரதிய ஜனதா பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 3.8 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது.

    2020-21-ம் ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து ரூ.258.4 கோடி நன்கொடைகளை வழங்கி உள்ளது. இதில் பாரதிய ஜனதா ரூ.215.5 கோடி(82 சதவீதம்), மற்றும் காங்கிரஸ் ரூ.5.4 கோடி(2.1 சதவீதம்) பெற்றுள்ளன.

    2021-2022-ம் ஆண்டில் காங்கிரசை விட மாநில கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.

    டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது. இதில் புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.

    புரூடென்ட் அறக்கட்டளையிடம் இருந்து டி.ஆர்.எஸ். கட்சி பெற்ற நிதி ரூ.40 கோடி ஆகும். இதே அறக்கட்டளை சமாஜ்வாடி கட்சி ரூ.27 கோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 கோடி, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரசுக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளது.

    • குல்பர்கா தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • மல்லிகார்ஜூன கார்கேவின் திறமையை அங்கீகரிப்பதற்காக, பிப்ரவரி 2021- ல் அவரை மேல்சபையின் எதிர்க்கட்சித் தலைவராக்கியது.

    காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். 9 தடவை எம்.எல்.ஏ.ஆகவும், 3 தடவை எம்.பி. ஆகவும் இருந்த சிறப்பு இவருக்கு உண்டு. புத்த மதத்தை பின்பற்றும் கார்கே, மென்மையானவர், அமைதியாக பேசக்கூடியவர், நிதானமானவர், எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். குல்பர்கா மாவட்டத்தில் உள்ள வார்வாட்டியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த கார்கே, பி.ஏ., சட்டம் படித்து சிறிது காலம் பயிற்சி செய்தார். பிறகு 1969-ல் காங்கிரசில் சேர்ந்தார்.

    கார்கே 1969-ல் தனது சொந்த ஊரான குல்பர்காவின், நகர காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து, மாநில அரசியலில் நீண்ட காலமாக பதவியில் இருந்து வருகிறார். 1972-ம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் அரசியலில் நுழைந்தார். அதில் அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து எட்டு முறை தேர்தலில் வென்று சாதனை செய்தார். 1976-ம் ஆண்டு தேவராஜ் அர்ஸ் அரசில் முதல் முறையாக அமைச்சரானார்.

    1970-களின் பிற்பகுதியில் இந்திரா காந்தியுடனான மோதலுக்குப் பிறகு தேவராஜ் கட்சியைவிட்டு வெளியேறி காங்கிரசை (யு) இயக்கியபோதுதான் கார்கே கிளர்ச்சிப் போக்கைக் காட்டினார். கார்கே, அரசுடன் சென்றார். ஆனால் 1980 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கர்நாடகாவில் அர்ஸ் காங்கிரஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் கார்கே காங்கிரசுக்குத் திரும்பினார்.

    1980-ல் குண்டுராவ், 1990-ல் எஸ்.பங்காரப்பா, 1992 முதல் 1994 வரை எம்.வீரப்ப மொய்லி அரசில் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, அனைத்து காங்கிரஸ் அரசுகளிலும் அமைச்சராக இருந்தார். 1996-99 மற்றும் 2008-09-ல் எதிர்க்கட்சித் தலைவராகவும், 2005-08 முதல் மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். 2009-ல் தேசிய அரசியலுக்குச் செல்வதற்கு முன்பு, அவர் முதல் முறையாக மக்களவையில் நுழைந்தார்.

    மன்மோகன் சிங் அமைச்சரவையில், முதலில் தொழிலாளர் அமைச்சராகவும், பின்னர் ரெயில்வே மற்றும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இலாகாவும் கார்கேவுக்கு வழங்கப்பட்டது.

    2014-ல் காங்கிரஸ் அவமானகரமான தோல்வியைச் சந்தித்து மக்களவையில் வெறும் 44 உறுப்பினர்களாகக் குறைக்கப்பட்டபோது கார்கேவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குல்பர்கா தொகுதியில் 2-வது முறையாக வெற்றி பெற்ற கார்கே, மக்களவையில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மகாபாரதத்தை எடுத்துரைத்து, கார்கே பேசுகையில், லோக்சபாவில் நாம் 44-ஆக இருக்கலாம், ஆனால் நூறு கவுரவர்களால் பாண்டவர்கள் ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் என்றார். அதன்பிறகு லோக்சபாவில் ஐந்து ஆண்டுகள் கட்சிக்கு உத்வேகத்தை அளித்தார்.

    2019-ம் ஆண்டில், அவரது தேர்தல் வாழ்க்கையில் முதல்முறையாக, கார்கே தோல்வியை ருசித்தபோது, கட்சி அவரை ராஜ்யசபாவிற்கு கொண்டு வந்து விசுவாசமான மூத்த தலைவருக்கு வெகுமதி அளித்தது. மேலும், அவரது திறமையை அங்கீகரிப்பதற்காக, பிப்ரவரி 2021- ல் அவரை மேல்சபையின் எதிர்க்கட்சித் தலைவராக்கியது.

    இந்தியில் சரளமாகப் பேசக்கூடிய கார்கே, சுதந்திரத்திற்குப் பிறகு தெற்கில் இருந்து காங்கிரஸ் தலைவராக பதவியேற்கும் ஆறாவது தலைவர் ஆவார். பி.பட்டாபி சீதாராமையா, என்.சஞ்சீவ ரெட்டி, கே.காமராஜ், எஸ்.நிஜலிங்கப்பா மற்றும் பி.வி.நரசிம்மராவ் ஆகியோர் தெற்கில் இருந்து வந்த மற்ற தலைவர்கள்.

    குறிப்பாக மிக முக்கியமாக, இரண்டரை தசாப்தங்களுக்கு பிறகு காந்தி குடும்பத்திற்கு வெளியே, கட்சியை வழிநடத்தும் முதல் நபர் மல்லிகார்ஜூன கார்கே ஆவார்.

    • 5 ஏஜெண்டுகள் முன்னிலையில் அனைத்து மாநில வாக்குகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு கலைக்கப்பட்டன.
    • இன்று பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பிறகு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    பாராளுமன்றத்துக்கு 2014, 2019-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி ராஜினாமா செய்தார்.

    தற்காலிக தலைவராக சோனியா பொறுப்பேற்றார். ராகுலை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவர் ஏற்கவில்லை.

    இதற்கிடையே காங்கிரசில் அதிருப்தி தலைவர்களாக உருவான ஜி-23 தலைவர்கள் சோனியா, ராகுலுக்கு பதிலாக புதிதாக ஒருவரை தேர்தல் நடத்தி தேர்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன் பேரில் காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்ய அக்டோபர் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் இருவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. அவர்கள் இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரசாரிடம் ஆதரவு திரட்டினார்கள்.

    இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் 68 இடங்களில் கடந்த திங்கட்கிழமை ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது. காங்கிரஸ் நிர்வாகிகளில் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 9,500-க்கும் மேற்பட்ட வர்கள் வாக்களித்தனர். 96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    மாநில தலைநகரங்களில் நடந்த ஓட்டுப்பதிவுக்கு பிறகு ஓட்டுப் பெட்டிகள் அனைத்தும் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கிரஸ் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

    இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. 5 ஏஜெண்டுகள் முன்னிலையில் அனைத்து மாநில வாக்குகளும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு கலைக்கப்பட்டன.

    பிறகு அவை 100, 100 கட்டுகளாக கட்டப்பட்டன. அந்த பணி முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகலில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பிறகு முடிவு அறிவிக்கப்படுகிறது.

    • காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டனர்.
    • பொதுத் தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    புதுடெல்லி:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிட்டதால் தேர்தல் நடத்தப்பட்டது.

    பொதுத்தேர்தல் போல் அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

    வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுப் பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டன. அதன்பின் எல்லா மாநிலங்களில் இருந்தும் ஓட்டுப் பெட்டிகள் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டன.

    தமிழகத்தில் பதிவான ஓட்டுகள் 4 பெட்டிகளில் உள்ளன. அந்தப் பெட்டிகள் விமானம் மூலம் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டன.

    இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் எண்ணும் பணி டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

    முதலில் அனைத்து ஓட்டு பெட்டிகளையும் திறந்து மொத்தமாக டிரம்மில் கொட்டி கலக்கப்படும். எந்த மாநிலத்தில் யாருக்கு எவ்வ ளவு வாக்குகள் என்பதை கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கலந்த பிறகு நூறு நூறாக பண்டல் போடப்படும். அதன் பிறகு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சரி பார்க்கப்படும். பிறகு வேட்பாளர் வாரியாக வாக்குகள் பிரிக்கப் பட்டு எண்ணப்படும்

    ஓட்டு எண்ணிக்கை முடிந்து இன்று பிற்பகலில் முடிவுகள் வெளியாகும். அப்போது காங்கிரசின் புதிய தலைவர் யார்? என்பது தெரிந்துவிடும்.

    • இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.
    • டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    புதுடெல்லி:

    இமாச்சல பிரதேசத்துக்கான சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    அதன்படி, இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதன்படி 46 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் பொதுச் செயலர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்.

    • மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
    • நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வாக்களிக்கின்றனர். மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    இந்த தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே (வயது 80), சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    • இரு வேட்பாளர்களும் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.
    • நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.

    புதுடெல்லி:

    2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த பின்னர், தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டுவருகிறார். ஆனால் நிரந்தர தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியின் மூடுத்த தலைவர்கள் வலியுறுத்த தொடங்கினர். அதேசமயம் ராகுல் காந்தியை மீண்டும் தலைவர் ஆக்குவதற்கு ஒரு குழுவினர் தீவிரம் காட்டினர். ஆனால் தலைவர் பதவியை ஏற்க ராகுல் சம்மதிக்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே (வயது 80), சசி தரூர் (வயது 66) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர்.

    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. அந்தந்த மாநிலத்தில் வாக்களிக்கத் தகுதியுடைய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர். டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வாக்களிக்கின்றனர். பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் சங்கனகல்லு என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களிப்பார்.

    மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் வாக்குச் சீட்டுகள் ஒன்றாக கலக்கப்படும். 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். 24 ஆண்டுகளுக்கு பின் காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    • காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது.
    • நேரு-காந்தி குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் நாற்காலி வெளியே செல்கிறது.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. நாட்டின் பழமையான கட்சி என்ற பெருமைக்குரிய காங்கிரஸ் கட்சிக்கு வயது 137. இந்த நெடிய பயணத்தில், அந்த கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டி ஏற்பட்டிருப்பது இது 6-வது முறை ஆகும்.

    இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை. 24 ஆண்டுகளுக்கு பிறகு அந்த குடும்பத்தைச் சேராத ஒருவர் இன்றைய தேர்தல் மூலம் தலைவர் நாற்காலியை அலங்கரிக்கப்போகிறார்.

    இன்றைய தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே, சசி தரூர் என இருவர் களத்தில் நின்றாலும், யார் வெற்றி பெற்றாலும் அவர் தென் மாநிலத்தவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். மல்லிகார்ஜூன கார்கே, நமது அண்டை மாநிலமான கர்நாடகத்தை சேர்ந்த மூத்த தலைவர். அதே போன்று சசி தரூர் மற்றொரு அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் ஆவார்.

    137 ஆண்டு கால காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற மல்லிகார்ஜூன கார்கேவுக்கு வயது 80. சசி தரூருக்கு வயது 66.

    9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநில காங்கிரஸ் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு, இவர்களில் ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்போகிறார்கள்.

    இதற்கான வாக்குப்பதிவு டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திலும், தமிழ்நாட்டில் சென்னை சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைமையகங்களிலும் இன்று நடக்கிறது.

    மல்லிகார்ஜூன கார்கேயும் சரி, சசி தரூரும் சரி இருவருமே, இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பம் நடுநிலை வகிக்கிறது, என்கிறார்கள்.

    ஆனாலும் மல்லிகார்ஜூன கார்கே, நேரு குடும்பத்தின் ஆதரவு வேட்பாளராகவே பார்க்கப்படுகிறார். கட்சியின் மூத்த தலைவர்கள் அவருக்கு ஆதரவுக்கரம் நீட்டுகின்றனர். சசி தரூர், ஐ.நா. சபையின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விட்டு காங்கிரசில் சேர்ந்து அரசியல் களத்தில் குதித்தவர். அதனால்தானோ என்னவோ அவர் தன்னை மாற்றத்துக்கான வேட்பாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.

    இந்த தேர்தலின் முக்கியத்துவம் என்று எதைச்சொல்கிறீர்கள் என்று கேட்டபோது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்த விரிவான பதில் இது-

    "காங்கிரஸ் கட்சி தனது 137 ஆண்டு கால வரலாற்றில், தலைவர் பதவிக்கு 6-வது முறையாக உள்கட்சி தேர்தலை சந்திக்கிறது.

    ஊடகங்கள் 1939, 1950, 1997, 2000 ஆகிய 4 தேர்தல்களை முக்கியமாக காட்டுகின்றன. ஆனால், 1977-ம் ஆண்டும் தேர்தல் நடந்தது. அதில் பிரமானந்த ரெட்டி தலைவர் ஆனார்.

    பொதுவாகவே எப்போதுமே இத்தகைய பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியின் 'ஒருமித்த கருத்து மாடல்' என்பதில் நான் நம்பிக்கை வைத்து வந்துள்ளேன். நேருவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்த அணுகுமுறையில் மிகவும் பிரபலமாக திகழ்ந்தவர் காமராஜர்தான்.

    என்னைப் பொறுத்தமட்டில், அமைப்பு தேர்தல்கள், உள்ளபடியே கட்சி அமைப்பை வலுப்படுத்தும் என்பதில் பெரிதான நம்பிக்கை இல்லை. தனிப்பட்ட நோக்கங்களை வேண்டுமானால் அது நிறைவேற்றலாம். ஆனால் ஒரு கூட்டுணர்வை உருவாக்குவதில் அவற்றின் மதிப்பு சந்தேகத்துக்கு உரியதுதான். ஆனாலும் கூட தேர்தல்கள் நடப்பது ஒரு விதத்தில் குறிப்பிடத்தக்கதுதான்.

    வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்திய ஒற்றுமை நடைபயணத்துடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல் அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் குறைந்ததுதான். இந்த இந்திய ஒற்றுமை நடைபயணம், காங்கிரசுக்கு மட்டுமல்ல இந்திய அரசியலுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே அமையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் 1992-96 ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைவராக இருந்தார். அதன் பின்னர் சீதாராம் கேசரி தலைவர் பதவிக்கு வந்தார். அவரைத் தொடர்ந்து 1998-ல் காங்கிரஸ் தலைவர் ஆனவர் சோனியா காந்தி. 2017 வரை அவர் நீடித்தார். அவரைத் தொடர்ந்து அவரது மகன் ராகுல் காந்தி தலைவர் ஆனார். 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் அவர் பதவி விலக, மீண்டும் சோனியா காந்தி தலைவர் பதவிக்கு வந்தார்.

    இப்போது மீண்டும் நேரு-காந்தி குடும்பத்திடம் இருந்து காங்கிரஸ் தலைவர் நாற்காலி வெளியே செல்கிறது. அந்த நாற்காலியில் அமரப்போகிறவர் மல்லிகார்ஜூன கார்கேவா அல்லது சசி தரூரா, அவர்கள் எத்தனை காலம் அந்த பதவியை அலங்கரிப்பார்கள். அறிவதற்கு வரலாறு ஆவலாய் காத்திருக்கிறது.

    • அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.
    • மல்லிகார்ஜூன கார்கே வந்ததும் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளுடன் சத்திய மூர்த்தி பவன் அமர்க்களப்பட்டது.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்காக போட்டியாளர்களாக களத்தில் நிற்கும் மல்லிகார்ஜூன கார்கேவும், சசிதரூரும் அனைத்து மாநிலங்களுக்கும் சென்று காங்கிரசாரிடையே ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கடந்த 6-ந் தேதி சசிதரூர் தமிழகத்துக்கு வந்தார். அவர் சத்தியமூர்த்தி பவனுக்கு வந்தபோது மாநில நிர்வாகிகள் யாரும் வரவேற்க வரவில்லை. ஒரு சிலர் மட்டும் வந்திருந்தார்கள். கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவருக்கு வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.

    நேற்று மல்லிகார்ஜூன கார்கே வந்ததும் தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகளுடன் சத்திய மூர்த்தி பவன் அமர்க்களப்பட்டது. வரவேற்பு பதாகைகள், கட் அவுட்டுகள் சத்திய மூர்த்தி பவனில் அணிவகுத்தன. கார்கே பேசுவதற்காக தனி மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. 8 மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு அனைவரும் வந்திருந்தனர்.

    வரவேற்புக்காக ஏராளமானோரை திரட்டி வந்தும் அமர்க்களப்படுத்தினார்கள். எந்த வேட்பாளருக்கும் சோனியா, ராகுல் ஆதரவு இல்லை என்று அறிவித்தார்கள். அப்படி இருந்தும் காங்கிரசார் வரவேற்பதில் ஏன் பாரபட்சம் காட்டினார்கள் என்று தெரியவில்லை.

    இதை சசிதரூரே வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசார் என்னை வரவேற்கவில்லை. எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அது இதுதான் காங்கிரஸ் ரகசியம். நாங்கள் இதை வெளிப்படையாக சொல்ல முடியாது. மேலிடத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கார்கேதான் என்றார்கள். அப்படியென்றால் ஏன் தேர்தல் நடத்த வேண்டும் என்றதும் அவர்களுக்கே உரித்தான பாணியில் இதெல்லாம் சகஜம்தான் என்றனர். காங்கிரசுக்குள் இப்படி தப்புத்தப்பாக எடுக்கப்படும் முடிவுகள்தான் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தப்புக்கணக்காகி விடுகிறது.

    • மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.
    • ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருமலை:

    ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார்.

    கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபயணம் சென்றார். அங்குள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள ராம்புராவில் இருந்து ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திற்கு சென்றார்.

    ஜசிரகல்லு சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் சைலஜா நாத் மற்றும் மூத்த தலைவர்கள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மாதேனஹள்ளி, லட்சுமிபுரம், டிஹீரேஹால், ஓபுலாபுரம் செக் போஸ்ட் வழியாக ராகுல் காந்தி பாதயாத்திரை மேற்கொண்டார்.

    அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு உற்சாகமாக கையசைத்தனர். இளைஞர்கள் செல்பி எடுத்து ஆரவாரம் செய்தனர்.

    இதை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஓபுலாபுரத்தில் மாலை 6.30 மணிக்கு ராகுல்காந்தி ஆந்திர எல்லையில் நடைபயணத்தை முடித்தார்.

    மீண்டும் கர்நாடக மாநிலம் சென்றார். பெல்லாரியில் உள்ள ஹலகுண்டி மடம் அருகே இரவு தங்கினார்.

    மீண்டும் வருகிற 18-ந் தேதி காலை ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து 22-ந் தேதி வரை ஆந்திராவில் 100 கிலோ மீட்டர் பாத யாத்திரையை மேற்கொள்ள உள்ளார்.

    • ஒரு குடும்பம்-ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றுவேன்.
    • மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள்.

    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மல்லகார்ஜுன கார்கேவும், சசிதரூரும் போட்டியிடுகின்றனர். இதில், அகில இந்திய அளவில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இந்த நிலையில், 2 தலைவர்களும் தங்களுக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

    கடந்த 6-ந் தேதி சசிதரூர் சென்னை சத்தியமூர்த்தி பவன் வருகை தந்து வாக்குகள் சேகரித்தார். அவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்து வரவேற்பு அளிக்கவில்லை. இந்த நிலையில் மல்லிகார்ஜுன கார்கே சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக மற்றும் புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்தார். அவருடன் கேரள மாநில முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் தேசிய செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி, புதுவை வைத்திலிங்கம் எம்.பி., புதுவை மாநில முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்து இருந்தனர். உட்கட்சி தேர்தல் விதிமுறைகளின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் மேடைக்கு கீழே முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.

    கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

    உங்களிடம் ஆசீர்வாதமும், வாக்குகளையும் பெற வந்தேன். கட்சியின் மூத்த தலைவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறேன். மற்றவர்கள் போல என்னிடம் எந்த வாக்குறுதியும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளே எனது வாக்குறுதி. கடந்த 4 மாதங்களுக்கு முன் உதய்ப்பூர் மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன். கட்சியில் காலியாக உள்ள இடங்களுக்கு உடனடியாக ஆட்களை நியமிப்பேன்.

    ஒரு குடும்பம்-ஒரு பதவி, எல்லா மட்டங்களிலும் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு போன்றவற்றை நிறைவேற்றுவேன். ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். ஆனால், மோடியும், அமித்ஷாவும் இந்தியாவின் ஒற்றுமையை பிரிக்க பார்க்கிறார்கள். எனவே, மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபடுவேன்.

    1969-ல் காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவராக பொறுப்பேற்று படிப்படியாக பல்வேறு பதவிகளை அடைந்து, இன்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அளவிற்கு வந்துள்ளேன். நான் ஏணியின் அடிப்பகுதியில் இருந்து படிப்படியாக மேலே ஏறி வந்தவன். சிலர் (சசிதரூர்) நேராக மேலே இருந்துவிட்டு இப்போது கீழே பார்க்கிறார்கள். அவர்களுக்கு பெரிய பள்ளமாக தெரிகிறது.

    நான் செல்கிற இடங்களில் எனக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அதே நேரத்தில் நான் செல்கிற இடங்களில் எல்லாம் பத்திரிகையாளர்கள் என்னிடம் நீங்கள் ரிமோட் கண்ட்ரோலாக செயல்படுவீர்களா? ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவீர்களா? என்று கேட்கிறார்கள். நான் அப்படி ஒன்றும் செயல்பட மாட்டேன். நான் கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவன். நான் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை செயல்படுத்துவேன். அதுவும் உங்களுடன் (காங்கிரஸ் நிர்வாகிகளுடன்) இணைந்து செயல்படுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் துணை தலைவர்கள் கோபண்ணா, பொன் கிருஷ்ணமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் காண்டீபன், தளபதி பாஸ்கர், ஆர்.டி.ஐ.பிரிவு துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் நாஞ்சில் பிரசாத், எம்.எஸ்.திரவியம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மருதம் நலச்சங்கம் சார்பில் நெல்லை மாநகரில் பாளை உள்ளிட்ட பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்.
    • தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் உறவினர் மீது கடந்த மாதம் சென்னையில் வைத்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் கண்ணன் ஐ.ஏ.எஸ். என்பவர் தாக்குதல் நடத்தியதாக அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மருதம் நலச்சங்கம் சார்பில் நெல்லை மாநகரில் பாளை உள்ளிட்ட பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    மேலும் போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×