search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 98042"

    திருமங்கலம் அருகே மினி பஸ் டிரைவர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது29), மினி பஸ் டிரைவரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது.

    நேற்று காலை இவர் திருமங்கலம் செல்வதாக மனைவி ஹரிணியிடம் கூறி விட்டு வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார். மதியம் 3 மணியளவில் மனைவி ஹரிணி ரமேஷ் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் ஹரிணி தனது உறவினர்களிடம் ரமேஷ் எங்கே இருக்கிறார் எனக்கு தெரியவில்லை. திருமங்கலத்தில் இருந்தாலும் அழைத்து வரும்படி கூறினார். உறவினர்களும் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை திருமங்கலம் வடகரை சாலையில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடலில் காயத்துடன் பிணமாக கிடப்பதாக திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் அவர் மினி பஸ் டிரைவர் ரமேஷ் என்பது தெரியவந்தது.உடனே போலீசார் ரமேஷ் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்தனர்.

    ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ரமேசின் உடலை பார்த்து மனைவி கதறி அழுதார்.

    போலீஸ் விசாரணையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு இரவில் இருசக்கர வாகனத்தில் வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்திருக்கலாம் அப்போது ரமேஷ் தலையில் காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்ததால் உடன் வந்தவர் அப்படியே போட்டு விட்டு சென்றிருக்கலாம் இரவு நேரம் என்பதால் காப்பாற்ற யாரும் வராததால் ரமேஷ் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரது மனைவி ஹரிணி தனது கணவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ரமேஷ் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தது யார்? எதற்காக அவரை அப்படியே விட்டுவிட்டுச் சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனை முடிவில்தான் ரமேஷ் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    பாகிஸ்தான் நாட்டின் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியான சர்தார் அலி முகமது மஹர் மாரடைப்பால் இன்று மரணமடைந்தார்.
    லாகூர்:

    பாகிஸ்தானில் போதை பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரியாக இருந்தவர் சர்தார் அலி முகமது மஹர் (52).  கடந்த 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை சிந்த் மாகாணத்தின் 25வது முதல் மந்திரியாகவும் இருந்தவர். சமீபத்தில் இவரது வீட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது.  இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தின் கான்கர் கிராமத்தில் வசித்து வந்த மஹர் திடீரென மாரடைப்பினால் இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் இம்ரான் கான் இரங்கல் தெரிவித்தனர்.

    2018-ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றார்.  இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதை தொடர்ந்து அவர் மந்திரியானது குறிப்பிடத்தக்கது.
    கஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் உடல்களை மீட்ட மீட்பு குழுவினர் உடலை மலை முகாமில் வைத்துள்ளனர்.
    காத்மாண்டு:

    இந்தியா-நேபாள நாட்டுக்கு நடுவே உள்ள இமயமலையில் கஞ்சன்ஜங்கா சிகரம் உள்ளது. உலகத்திலேயே 3-வது மிகப்பெரிய சிகரமான இதில் ஏராளமான மலையேறும் குழுவினர் ஏறி வருகின்றனர். இந்தநிலையில் சிகரத்தில் ஏறிய இந்தியாவைச் சேர்ந்த 2 பேர் பிணமாக கிடந்தனர்.

    அவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டு மலை முகாமில் வைத்தனர். பின்னர் காத்மாண்டுவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு 2 பேரின் உடல்களும் ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குளிர் ஏற்பட்டதாலும், உடலில் வெப்பம் குறைந்ததாலும் 2 பேரும் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
    உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார்.
    மாஸ்கோ:

    உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான இங்குஷெத்தியாவில் பிறந்தவர்.

    1917 முதல் 1922 வரை ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய அப்பாஸ் இலியிவ், தனது 45 வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று, டிராக்டர் டிரைவரானார். பச்சை காய்கறிகளையும், சுத்தமான பசுவின் பாலையும் தினசரி உணவாக கொண்டு வாழ்ந்து வந்த அப்பாஸ் இலியிவ், நாள் ஒன்றுக்கு சுமார் 11 மணி நேரம் தூங்கும் பழக்கம் கொண்டவர்.

    அத்துடன் மது, புகை போன்ற எந்த போதை பழக்கத்துக்கும் அடிமையாகாத இவர், இதுவரை மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்று கூறப்படுகிறது. அப்பாஸ் இலியிவுக்கு 8 பிள்ளைகளும், 35 பேரப்பிள்ளைகளும், 34 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    செங்கம் அருகே மாதா கோவில் தேரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள அல்லியேந்தல் கிராமத்தில் உள்ள தூய லூர்து மாதா கோவில் திருவிழா நடந்தது. நேற்று இரவு மின் அலங்காரம் செய்யப்பட்ட தேர் ஊர்வலம் நடந்தது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் தேரை இழுத்து வந்தனர். வழிநெடுகிலும் ஏராளமானோர் வழிபட்டனர்.

    வண்ணாரப்பேட்டை தெருவில் வந்தபோது தேரின் உச்சி பகுதி மின் கம்பியில் உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்தது.

    தேரை இழுத்து வந்த அதே ஊரை சேர்ந்த அன்பரசு (50), ஜெபராஜ் (40), ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர். பிலோமின் ராஜ் (45) என்பவர் தூக்கி வீசப்பட்டார். அவர் படுகாயம் அடைந்தார். தேரில் தீப்பொறிகள் பறந்தன.

    இதனைக்கண்ட பொதுமக்கள் சிதறி ஓடினர். அங்கு கூச்சல், அலறல் சத்தம் ஏற்பட்டது. பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்தவர்கள் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பிலோமின் ராஜை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பலியானவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அல்லியேந்தல் கிராமம் சோகத்தில் மூழ்கியது.

    பாய்ச்சல் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திமுக முன்னாள் எம்பி கோவை ராமநாதன் உடல் நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். #DMKexMP #DMK #Ramanathan

    கோவை:

    தி.மு.க. முன்னாள் எம்.பி. கோவை மு.ராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு ராமநாதன் உயிர் பிரிந்தது.

    கோவை ராமநாதன் கோவை தென்றல் என்று அழைக்கப்பட்டவர். கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர் ஆவார்.

    1971-76 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 1984-89 வரை கோவை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார். 1996 கோவை தொகுதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

    மு.ராமநாதன் மாநகர செயலாளர், தணிக்கை குழு உறுப்பினர், அறக்கட்டளை அறங்காவலர், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்து இருந்தார்.

    தற்போது உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினராக இருந்து வந்தார்.

    கோவை ராமநாதனுக்கு ராமகாந்தம் என்கிற மனைவியும், பன்னீர் செல்வம், இளங்கோவன், மு.இரா. செல்வராஜ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

    ராமநாதன் உடலுக்கு முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் திருச்செங்கோடு எம்.பி., கந்தசாமி உள்பட தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். #DMKexMP #DMK #Ramanathan

    சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi
    நெல்லை:

    கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தை சேர்ந்தவர் எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் நெல்லை மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.

    இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். 

    இந்நிலையில், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் உடல்நலக் குறைவால் இன்று  காலமானார். அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    #RIPThoppilMohamedMeeran #SahityaAkademi 
    ஜே.கே.ரித்தீஷ் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #JKRitish #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் தொகுதி முன்னாள் எம்.பி.யும், எனது நண்பருமான ஜே.கே.ரித்தீஷ், இளம் வயதில் திடீரென்று மறைந்துவிட்டார் என்ற துயர செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.



    கருணாநிதியிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய ஜே.கே.ரித்தீஷ், தி.மு.க.வில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாக பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர்.

    நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்தி கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்துவிடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #JKRitish #MKStalin
    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுக்கியது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி (வயது 81). நெசவு தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (71). மகன் கார்த்திகேயன் (45). இருவரும் நெசவு தொழிலாளிகள்.

    இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாமல் மணி நேற்றுமுன்தினம் இறந்தார். நேற்று மாலை மணி உடலுக்கு இறுதி சடங்குகள் செய்து வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்து பாடையில் தூக்கி வைத்தனர். பின்னர் இறுதி ஊர்வலம் தாரை தப்பட்டையுடன் புறப்பட தயாரான போது மிகவும் துக்கத்தில் இருந்த லட்சுமி, திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனால் அருகில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து, லட்சுமி முகத்தில் தண்ணீர் தெளித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

    கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி லட்சுமி உயிரை விட்டது, இறுதி சடங்கில் வந்திருந்த பொதுமக்களுக்கு சோகத்தை ஏற்படுக்கியது.
    குமாரசாமிபேட்டை அருகே இன்று காலை வேன் கவிழ்ந்து பெண் உள்பட 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், குழியனூர், நரசிங்க கோம்பை ஆகிய கிராமத்தை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட கட்டிட கான்கிரீட் தொழிலாளர்கள் 2 வாகனங்களில் ஏரியூருக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தனர்.

    ஒரு பிக்கப் வேனில் பின்புறம் கான்கீரிட் கலவை எந்திரம் பொருத்தப்பட்டிருந்தது. இந்த பிக்கப் வேனின் 10 தொழிலாளர்கள் இருந்தனர்.

    இன்று காலை தருமபுரி குமாரசாமி பேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகத்தடை மீது ஏறிய போது பிக்கப் வேன் எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது.

    இதில் வேனில் இருந்த குழியனூர் பகுதியை சேர்ந்த குமணி மனைவி கலா (வயது40), நரசிங்ககோம்பை பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (45) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் சாலம்மாள் (43), நடுப்பிள்ளை (38), உன்னா மலை (30) உள்பட 7 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த வழியாக வந்த தருமபுரி தி.மு.க. மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி நடந்த விபத்தை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு தடங்கம் சுப்பிரமணி சென்று படுகாயம் அடைந்தவர்களிடம் விசாரித்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தருமபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான கலா, கிருஷ்ணன் ஆகிய 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக தருமபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லாவரம் அருகே கழிவு நீர் தொட்டி இடிந்து 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி கண்ணபிரான் தெருவில் தனியார் தோல் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்சாரி (வயது22), முகமது அவரித் (23), அஜய் (23) ஆகிய தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தொழிற்சாலையில் இருந்த கழிவறையில் அடைப்பு ஏற்பட்டது. அன்சாரி, முகமது அவரித், அஜய் ஆகிய 3 பேரும் நேற்று இரவு 8 மணிக்கு அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் 3 பேரும் கழிவுநீர் தொட்டியில் இறங்கி அடைப்பை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது கழிவுநீர் தொட்டி சுவர்இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் 3 பேரும் சிக்கிக் கொண்டனர்.

    இதில் அன்சாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். முகமது அவரித், அஜய் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

    உடனடியாக அவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே முகமது அபரித் பலியானார்.

    அஜய் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சங்கர்நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சியில் உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் உடலுக்கு அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெறுகிறது. #FormerMinisterSelvaraj
    திருச்சி:

    தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் (வயது 75). என்ஜினீயரான இவர் 1980-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை திருச்சி தொகுதி தி.மு.க. எம்.பி.யாக இருந்தார். இவர் 1987-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளராகவும் இருந்தார்.

    ம.தி.மு.க. தொடங்கப்பட்டபோது, அந்த கட்சிக்கு சென்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்களில் செல்வராஜூம் ஒருவர். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு முசிறி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று தி.மு.க. அமைச்சரவையில் வனத்துறை அமைச்சராக இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் செல்வராஜூக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தார். கடந்த ஓர் ஆண்டு காலமாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் திருச்சி வந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், செல்வராஜ் சிகிச்சை பெற்று வந்த ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நலம் விசாரித்தார்.

    இந்தநிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார். அவரது உடல் தில்லைநகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. செல்வராஜின் உடலுக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    செல்வராஜின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 3 மணி அளவில் திருச்சி தில்லைநகர் முதல் குறுக்கு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்படுகிறது. செல்வராஜூக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.  #FormerMinisterSelvaraj



    ×