search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளச்சாராயம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
    • தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.


    எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் மனித உயிர்களை பலி வாங்கிய கள்ளச்சாராயத்தில் தண்ணீரில் 10% மெத்தனால் கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த வருடம் நடந்த மரக்காணம் கள்ளச்சாராய மரணங்களில் 16% மெத்தனால் கலந்து இருந்ததாக தகவல் வந்தது. தண்ணீரில் 4.5% மெத்தனால் கலந்திருந்தாலே அது உயிரை பறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
    • கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகளும் கண்டன ஆர்ப்பாட்டம், கவர்னரை சந்தித்து கள்ளச்சாராயம் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்தனர்.

    இதனிடையே, கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் இந்த ஆணையம் விரைவில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அவை:-

    * கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

    * எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் மீண்டும் நடைபெறாமல் இருக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

    * சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு மெத்தனால் பயன்படுத்தப்படுவதை தடுக்க மெத்தனால் சேமிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக தற்போது உள்ள விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளை ஆராய்ந்து, அதில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்

    * இது போன்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்தும் பரிந்துரைகளை அளிக்க வேண்டும்.

    • உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளர். அதே ஊரை சேர்ந்தவர் மகேந்திரன்(40). கட்டிட தொழிலாளி. இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், அதே ஊரை சேர்ந்த சிலருடன் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து கடந்த 27-ந் தேதி சாராயம் வாங்கி வந்து குடித்ததும், அவர்களை தவிர மற்றவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து நடந்த அடுத்தக்கட்ட விசாரணைக்கு பிறகு ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோருக்கு சாராயம் குடித்ததால் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், மதுவில் கொசு மருந்து கலந்த தண்ணீரை கலந்து குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இருப்பினும் அவர்களுக்கு சாராயம் விற்றது யார்? என்று ஆழியாறு போலீசார் விசாரணை நடத்தினர். அதில் உடுமலை மாவடப்பு மலைக்கிராமத்தை சேர்ந்த ராமன் என்பவர் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. அவர் மீது ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை.
    • அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    விக்கிரவாண்டி:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயாவை ஆதரித்து திருவாமத்தூர் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 10 நாட்களாக சட்டசபையில் சாராயத்தை தவிர வேறு எதையும் பேசவில்லை. இது சட்டசபை இல்லை சாராய சபை. வேறு ஒன்றையும் பேசவில்லை. சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் இறந்துவிட்டான். குடிநீரில் கழிவு நீர் கலந்துவிட்டது. தண்ணீர் விஷம் ஆகிவிட்டது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள வேண்டும்.

    சாராயம், குடிநீர் அனைத்தும் இப்பொழுது விஷமாகிவிட்டது. இதை மாற்ற வேண்டும் பெரியவர் முதல் சிறியவர் வரை ஒரு மாற்றம் வர வேண்டும் என சொல்கின்றனர்.

    அந்த மாற்றத்தை யார் கொண்டு வருவது, தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க நாங்கள் தயாராக இல்லை, 7அடி தாண்டுவதற்கு 70 அடி பின்னோக்கி செல்ல வேண்டியது உள்ளது. மாற்றம் மாற்றம் என சொல்லிக் கொண்டிருந்தால் மாறாது மாற்றம் என்பது ஒரு செயல், நாம் தான் அதை மாற்ற வேண்டும். மாற்றத்தை தொடங்க வேண்டும் என்றால் நம்மில் இருந்து தொடங்க வேண்டும்,

    கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு 10 லட்சம், பட்டாசு ஆலையில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம், சாகித்யா அகாடமி விருது பெற்றவர்களுக்க ரூ,25 ஆயிரம். அப்படியென்றால் சாகித்ய அகாடமி விருதை விட கள்ளச்சாராயம் குடிப்பது உயர்வானதா?. இது அநீதி என்பது வெளிப்படையாக தெரிகிறது.

    தமிழக மக்கள் நீங்கள் நன்றாக சிக்கிக் கொண்டீர்கள் இதற்கு ஒரே ஒரு வாய்ப்பு மைக் சின்னத்திற்கு வாக்களிப்பது தான், உழைத்து கலைத்த மக்களுக்கு ஒரு பானம் தேவைப்படுகிறது என்கிறார் அமைச்சர் துரைமுருகன். இவர்களை வீட்டுக்கு அனுப்பாமல் நல்ல ஒரு அதிகாரத்தை, ஆட்சியை நம்மால் அளிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

    • டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் ‘கிக்’ இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர்.
    • கள்ளச்சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

    முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கள்ளச்சாராய விற்பனை, கள்ளச்சாராய உயிரிழப்புகள், போதைப் பொருட்கள் விற்பனை, மக்களை மதுவிற்கு அடிமையாக்குவது போன்றவைதான் கடந்த 3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியின் சாதனைகள்.

    இவற்றைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறிவிட்டது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராய விற்பனை என்பது ஆளும் கட்சியினரின் ஆசியோடு நடப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், ஆளும் கட்சியினர் மீது அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டின.

    அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டில் உள்ள உண்மையை நிரூபிக்கும் வகையில், அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் உரையாற்றி இருக்கிறார்.

    அமைச்சர் துரைமுருகன் தன்னுடைய உரையில், "உழைப்பவர்கள் தங்கள் அசதிக்காக மது குடிக்கின்றனர் என்றும்; டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவில் 'கிக்' இல்லாததால், கள்ளச்சாராயம் குடிக்கின்றனர் என்றும்; கள்ளச்சாராயத்தை தடுக்க தெருவுக்கு தெரு காவல் நிலையம் திறக்க முடியாது என்றும்; மனிதர்களாக பார்த்து திருந்தாவிட்டால், கள்ளச்சாராயத்தை ஒழிக்க முடியாது என்றும் கூறி இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.

    அதாவது, கள்ளச்சாராயத்தை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது என்று கூறியிருக்கிறார்.

    கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று சொன்னாலே, கள்ளச்சாராயம் காய்ச்சுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 'கிக்' இல்லாததால் கள்ளச்சாராயம் குடிக்கப்படுவதாக அமைச்சரே தெரிவிப்பது, கள்ளச்சாராய வியாபாரம் தமிழ்நாட்டில் அமோகமாக கொடிகட்டி பறக்க வழிவகுக்கும்.

    அரசே இதை ஊக்குவிப்பது போல் அமைச்சரின் பேச்சு அமைந்துள்ளது. கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கும் தி.மு.க. அரசுக்கு, அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டுள்ள

    வர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கவும், மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்-அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன.
    • மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.

    மதுரை மேலவளவு படுகொலை 27-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவிடத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் அஞ்சலி செலுத்தினார்.

    அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. அரசு மதுபானங்கள் கள்ளச்சாராய மரணங்களுக்கு தீர்வல்ல. ஆகவே மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும். ஆகவே தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போது கள்ளச்சாராயம் காய்ச்சுவதையும் தடுக்க முடியும்.

    கள்ளக்குறிச்சி சாராய விவகாரத்தில் முழு மதுவிலக்கு கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. இது பெண்கள் மூலம் நடத்தப்படும். விரைவில் இடம் அறிவிக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

    • கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது.
    • மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

    உடுமலை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மஞ்சநாயக்கனூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 55). ஆனைமலை ஒன்றிய பா.ஜனதா செயலாளராக உள்ளார். அதே ஊரை சேர்ந்த கட்டிட தொழிலாளி மகேந்திரன்(40).இவர்கள் இருவருக்கும் நேற்று முன்தினம் திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட 2பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் அவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து ஆழியாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மாவடப்பு மலைக்கிராமத்தில் இருந்து ரவிச்சந்திரன், மகேந்திரன் மட்டுமின்றி அதே ஊரை சேர்ந்த லட்சுமணன்(49), செந்தில்குமார்(48), ராமகிருஷ்ணன்(40), மணிகண்டன்(30) ஆகியோரும் சாராயம் வாங்கி வந்து கடந்த 27-ந்தேதி குடித்தது தெரியவந்தது. இதில் ரவிச்சந்திரன், மகேந்திரன் ஆகியோரை தவிர மற்ற 4 பேருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதன் மூலம் சாராயம் குடித்ததால் 2பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் மது குடித்த இடத்தில் ஆய்வு செய்ததில், அங்கு சுகாதாரமற்ற தண்ணீர் இருப்பது தெரியவந்தது. அந்த தண்ணீரை மதுவில் கலந்து குடித்ததால் அவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். அந்த தண்ணீரை போலீசார் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரமும் தெரியவரும் என்றனர்.

    இந்தநிலையில் சாராயம் வாங்கிய உடுமலை மாவடப்பு செட்டில்மெண்ட் கிராமத்துக்கு திருப்பூா் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் 25-க்கும் மேற்பட்ட போலீசார், கோவை மாவட்டத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட போலீசார், உடுமலை வனச்சரகா் மணிகண்டன் தலைமையிலான வன அலுவலா்கள் சென்று கள்ளச்சாராயம் ஏதும் விற்கப்படுகிறதா என்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். மலைவாழ் மக்களிடமும் விசாரணை நடத்தினர். இதனால், ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    வாக்குவாதம் முற்றியதையடுத்து, போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள காட்டுப்பட்டி செட்டில்மெண்ட் கிராமத்தில் தங்கி விசாரணையை தொடா்ந்தனா்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் மஞ்சநாயக்கனூா் கிராமத்தில் ஒரு சிலா் அருந்திய சாராயம் மாவடப்பு கிராமத்தில் இருந்துதான் சென்றுள்ளது என தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து மாவடப்பு கிராமத்தில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனா்.

    • அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
    • மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 4 நாட்கள் தொடர் அமளி மற்றும் தர்ணாவில் ஈடுபட்டதால் இந்த சட்டசபை கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமலேயே காணப்பட்டது. தொடர் அமளி காரணமாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க தடை விதித்து கடந்த 26-ந்தேதி அன்று சபாநாயகர் உத்தரவிட்டார்.

    இதனால் 27-ந் தேதியில் இருந்து இன்று வரையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை கூட்டத்தொட ரில் பங்கேற்கவில்லை. கடைசி நாளான இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    வருவாய் துறை, தொழில் துறை, சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதங்களும் நடைபெற்று முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மகளிர் உரிமைத் தொகையை ஏற்கனவே 1 கோடியே 15 லட்சம் பேர் பெற்றுவரும் நிலையில், மேலும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு அதனை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் வெளியானது.

    இப்படி பல்வேறு அறிவிப்புகள் மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைந்தது. 9 நாட்கள் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில் காலவரையறையின்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.

    • கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை.

    சென்னை:

    கள்ள சாராய குற்றங்களுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்டசபையில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூயிருந்தார்.

    இதற்கு, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2023 ஆம் ஆண்டு, 23 பேர் பலியாகக் காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமான அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு, கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியான பின்பும், மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமியைப் பதவி நீக்கம் செய்யவில்லை. திமுக மூத்த தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமான, போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவன் ஜாஃபர் சாதிக்குக்கு, திமுகவில் உயர் பதவி கொடுத்து, ரூ.2,000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்தீர்கள்.

    இத்தனையும் செய்து விட்டு, தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937ல், தண்டனைகள் கடுமையாக இல்லை என்று திருத்த மசோதா கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது, இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை என்று கூறியுள்ளார்.


    • கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமுல் வாங்கியதாக குற்றச்சாட்டப் பட்டுள்ளது.
    • கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தை சேர்ந்த சுமார் 229 பேர் கடந்த 18-ந்தேதி விற்பனை செய்யப்பட்ட மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.

    கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளிட்ட கடும் உபாதைகளால் இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பலரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாக உள்ளது.

    எதிர்கட்சிகள் இது தொடர்பாக சிபிஐ வேண்டும் என வலியுறுத்திய நிலையில், தமிழக அரசு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக இரண்டு டிஎஸ்பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 டி.எஸ்.பி.க்கள் உட்பட 9 போலீசாரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அவர்களுக்கு சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கைதான கண்ணுக்குட்டியிடம் போலீசார் மாமூல் வாங்கியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை நடந்து வருவது தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இதுவரை கள்ளச்சாராய விவகாரத்தில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    • 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
    • தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.

    கோகிலாவுக்கு ஏற்பட்டு இருக்கும் சோகம் உலகில் யாருக்கும் ஏற்பட கூடாது. அந்த சிறுமிக்கு தற்போது 16 வயதே ஆகிறது.

    உலகம் எப்படிப்பட்டது? உறவினர்கள் எத்தகையவர்கள்? நட்பு வட்டாரங்களின் நோக்கம் என்ன? என்பது போன்ற எதுவுமே தெரியாத பருவம். சுருக்கமாக செல்ல வேண்டுமானால் வஞ்சகம் நிறைந்த இந்த உலக வாழ்க்கையின் எந்த ஒரு பாகத்தையும் அனுபவித்து அறியாத பருவத்தில் இருப்பவள்.

    மற்ற சிறுவர்-சிறுமிகள் ஓடியாடி துள்ளி விளையாடி துளியும் கவலை இல்லாமல் வாழும் நிலையில் மனதில் அந்த சிறுமி பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு ஏற்பட்ட இந்த சோகத்துக்கு காரணம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்.

    அந்த சம்பவத்தில் பலியான 64 பேரில் கோகிலாவின் தாயும், தந்தையும் அடங்குவார்கள். ஒரே நாளில் தனது தாயையும், தந்தையையும் கள்ளச்சாராயத்துக்கு பறி கொடுப்போம் என்று கோகிலா கனவிலும் நினைத்து பார்த்துக் இருக்க மாட்டாள்.

    அவளது தந்தை சுரேஷ். பெயிண்டர். தாய் வடிவுக்கரசி. பண்ணையில் வேலை பார்தது வந்த கூலித்தொழிலாளி. அவர்கள் இருவரும் சேர்ந்து குடும்பத்தை நடத்தி வந்தனர். 20க்கு 20 அடி வாடகை வீட்டில் வசித்த வந்த அவர்கள் தினசரி உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் காலத்தை தள்ளியவர்கள்.


    அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை நட்சத்திரம் மகள் கோகிலா. 2 மகன்கள் ஹரிஸ், ராகவன். கோகிலாவுக்கு 16 வயது. ஹரிசுக்கு 15 வயது, ராகவனுக்கு 14 வயது.

    இந்த இளம் வயதில் இந்த 3 பிஞ்சுகளையும் தவிக்க விட்டுவிட்டு சுரேசும், வடிவுக்கரசியும் கள்ளச்சாராயத்துக்கு பலியாகி உள்ளனர். இவர்களில் சுரேஷ் தினமும் உடல்வலி நீங்குவதற்காக கள்ளச்சாராயம் குடிப்பதை பழக்கத்தில் வைத்திருந்தார்.

    சம்பவத்துன்று கள்ளச்சாராயத்தை அவர் ரகசியமாக ஒளித்து வைப்பதற்காக வேறு ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்திருந்தார். வடிவுக்கரசி அதை ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த ஓமம் தண்ணீர் என்று தவறுதலாக நினைத்து குடித்து விட்டார். விளைவு கணவன்-மனைவி இரண்டு பேருமே உயிரை பறிக்கொடுத்து விட்டனர்.

    இந்த பரிதாபத்தால் தற்போது குடும்ப பொறுப்பு 16 வயது கோகிலா மீது விழுந்துள்ளது. 15 வயது ஹரிசையும், 14 வயது ராகவனையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை கோகிலா ஏற்று இருப்பதாக கூறி உள்ளாள். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் அவளுக்கு இடையூறு ஏற்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

    தந்தை சுரேசுக்கு கடன் கொடுத்து இருப்பதாகவும் எனவே அரசு தரும் ரூ.10 லட்சம் நிதி உதவியை தங்கள் கடனை கழிக்க தர வேண்டும் என்றும் மிரட்ட தொடங்கி இருக்கிறார்களாம்.

    இந்த 3 பேரின் கல்வி செலவை அ.தி.மு.க. ஏற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். அந்த பணத்தையும் சிலர் கேட்டு மிரட்டுகிறார்களாம். இதனால் கோகிலா மிரண்டு போய் இருக்கிறாள்.

    திக்கு தெரியாமல் தவிக்கும் அந்த சிறுமி ஒரே ஒரு உதவிதான் கேட்கிறாள். சொந்தமாக குடியிருக்க வீடு இல்லை. முதலமைச்சர் தனக்கு ஒரு வீடு தந்தால் பிழைத்துக் கொள்வோம் என்று அவள் கண்ணீர் மல்க சொன்னது நெஞ்சை கடப்பாரையால் குத்துவது போல் இருக்கிறது.

    சிறு வயதிலேயே இப்படி ஒரு பாரத்தை சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கோகிலா நிச்சயம் போராடி ஜெயிப்பேன் என்று நம்பிக்கையோடு சொல்கிறாள். அவளுக்கு உற்சாகம் கொடுத்தாலே போதும் 3 குழந்தைகளின் வாழ்வில் ஒளி ஏற்றி விட முடியும்.

    • ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.
    • குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறது.

    * 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கவர்னரிடம் கொடுத்துள்ளோம்.

    * சிபிசிஐடி போலீசார் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை.

    * கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.

    * அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்.

    * ஆட்சியாளர்கள் மதுபான ஆலைகளை நடத்துகிறார்கள். மதுபான ஆலைகளை மூட வேண்டும்.

    * கவர்னர் நாங்கள் கூறிய கருத்துகளை மிக கவனமாக கேட்டார்.

    * போதைப்பொருள் பழக்கம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவர்னர் வேதனை தெரிவித்தார்.

    * கவர்னர் உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

    * குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள். மக்கள் உயிரிழக்கிறார்கள்.

    * இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது என்று கூறினார்.

    ×