search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 99437"

    • பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது.
    • யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சின்னக்கானல், சாந்தம்பாறை, ஊராட்சிகளில் 10 பேரை பலி வாங்கியதாக கூறப்படும் அரிசி கொம்பன் ஆண் காட்டு யானையை கேரள வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    அதன் பின்பு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தில் விடப்பட்டது. அங்கு வனத்தை விட்டு வெளியேறி தமிழக குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த அரிசி கொம்பன் கடந்த மாதம் 27-ந் தேதி கம்பம் நகருக்குள் ஆக்ரோஷத்துடன் நுழைந்தது.

    பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை சண்முகாநதி அணையை ஒட்டியுள்ள பகுதியில் தஞ்சமடைந்தது. அதனை நேற்று முன்தினம் மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் கன்னியாகுமரி மாவட்ட மலைப்பகுதியான முத்துக்குழி பகுதியில் விட்டுள்ளனர்.

    அரிசி கொம்பன் யானையால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் என நெல்லை, குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே யானையின் இருப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    இந்நிலையில் அரிசி கொம்பன் யானையை மூணாறு அருகே உள்ள சின்னக்கானல் பகுதியிலேயே விட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    செண்பகத்தொழு குடியிருப்பைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் படாதபாடு படுத்தி மயக்க ஊசி செலுத்தி பிடித்து வேறு இடத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் ஆரம்ப கால வசிப்பிடம் மூணாறு வனப்பகுதியை ஒட்டியே இருந்தது. எனவே அதனை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் இருந்தவரை அரிசி கொம்பனால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    ஆனால் பல்வேறு பகுதிகளில் அரிசி கொம்பனுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருவது இத்தொகுதி மக்களை வேதனையடைய வைத்துள்ளது என்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

    யானையின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தாங்கள் தொடர் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை.
    • வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை. இந்த அணையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை மட்டும்இன்றி வனவிலங்குகளையும் வாட்டி வதைத்து வருகிறது.

    தற்போது கோடை மழை பெய்து ஒரு சில இடங்களில் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதனால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது. இதேபோல் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் அணையில் உள்ள தண்ணீரை குடிக்க அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள், மான்கள், செந்நாய், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீரை குடித்து செல்கின்றது.

    இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணையில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்துவிட்டு அந்தியூர் அடுத்த பர்கூர்-மைசூர் நெடுஞ்சாலையின் குறுக்கே கூட்டமாக வந்தது. அதனை அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும். கார்களில் வருபவர்களும் வாகனத்தை ஓரமாக நிறுத்தி யானையை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். யானை கூட்டம் யாரையும் தொந்தரவு செய்யாமல் அப்படியே சாலையை கடந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.

    • பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.
    • ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன.

    மேட்டுப்பாளையம்:

    தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதனால் வனத்தில் வசிக்கும் மான், காட்டு மாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகின்றன.அவ்வாறு வரும் வனவிலங்குகள், அங்குள்ள விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தியும் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.

    மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலங்களாக பாகுபலி என்ற ஒற்றை காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருகிறது.நேற்று இரவு பாகுபலி யானை உள்பட 2 யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி எப்போதும் பரபரப்பாக இயங்க கூடிய போக்குவரத்து நெரிசல் மிகுந்த மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலைக்கு வந்தது.

    அந்த சாலையை கடந்த காட்டு யானைகள் சாலையின் மறுபுறம் உள்ள உணவகத்திற்குள் புகுந்தது. அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விடலாம் என நினைத்து காட்டு யானைகள், உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முயன்றன. ஆனால் அது முடியாமல் போகவே சிறிது நேரம் அங்கேயே சுற்றிதிரிந்தது. இதனால் ஓட்டலில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    மேலும் வனத்துறையினருக்கும் இதுகுறித்து தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பிறகு வனத்துறையினர் காட்டு யானைகளை அருகில் இருந்த மற்றொரு பாதை வழியாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    இதன் காரணமாக ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாகவும், வாகன போக்குவரத்து அதிகமாகவும் காபணப்படும் ஊட்டி சாலையை கடந்த 2 காட்டு யானைகளை கண்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

    இதுகுறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

    சமீபகாலமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி சாலையில் காட்டு யானைகளின் வலசைப்பாதைகளை மறித்தும், மறைத்தும் கட்டிடங்கள் தனியார் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியே கான்கிரீட் காடுகளாக மாறி வருகிறது.

    இதன் காரணமாக யானைகள் வேறுவழியின்றி ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் மனித-வனவிலங்கு மோதல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

    எனவே வனத்துறையினர் யானைகளின் வலசைப்பாதைகளை கண்டறிந்து அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தினால், மட்டுமே காட்டு யானைகள் எளிதாக வனப்பகுதியின் ஒருபுறமிருந்து மற்றொரு புறம் கடந்து செல்ல இயலும்.

    இப்படிதான் நேற்று மாலை ஊட்டி சாலையை கடந்த பாகுபலி உள்ளிட்ட 2 காட்டு யானைகள் உணவகத்தின் சுற்றுச்சுவரை தாண்டி செல்ல முடியாமல் தவித்தன. வனத்துறையினரின் முயற்சிக்குப்பின் மற்றொரு பாதை வழியாக காட்டு யானைகள் மீண்டும் வனப்பகுதிக்கு சென்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது.
    • கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் மின் வாரிய அலுவலகம் அருகே புளியந்தோப்பில் அரிசி கொம்பன் யானை முகாமிட்டு இருந்தது. அப்போது சின்னமனூரைச் சேர்ந்த ஹரீஷ் என்பவர் டிரோன் கேமராவை பறக்க விட்டு யானையை படம் எடுக்க முயன்றார்.

    டிரோன் சத்தத்தால் மிரண்ட அரிசி கொம்பன் யானை அங்கிருந்து வெளியேறி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்து தெரித்து ஓடினர். எனவே இதுகுறித்து கம்பம் போலீசார் ஹரீசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
    • கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புலிகள் காப்பகம் உள்ளது. இந்த அடர்ந்த வனப்பகுதியில் தாளவாடி, ஆசனூர், தலமலை உள்பட 10 வன சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை கள், புலி, சிறுத்தை, கரடி என பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

    மேலும் ஆசனூர் வனப்பகுதிகளில் குளம், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்த நீர்நிலைகளில் வன விலங்குகள் வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் தாளவாடி, ஆசனூர் வனப்பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஆசனூர் வனப்பகுதி பசுமையாக காட்சி அளித்து வருகிறது.

    ஆசனூர் வனப்பகுதியை ரசிப்பதற்கு தினமும் பொதுமக்கள் பலர் வந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். அப்படி வரும் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் அனுமதியின்றி வனப்பகுதிக்குள் நுழைந்து வருகிறார்கள். இதையடுத்து வனத்துறையின்ர் கண்காணித்து அவர்களுக்கு அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் ஈரோடு மாட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோவை, திருப்பூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து இயற்கை அழகை ரசிக்கிறார்கள். இதனால் ஆசனூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

    மேலும் வனத்துறையினரும் ரோந்து வந்து கண்காணித்து வருகிறார்கள். அப்போது வனப்பகுதிக்குள் நுழைபவர்களை எச்சரித்து அனுப்பி வைக்கிறார்கள்.

    இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதிக்குள் சிலர் அனுமதியின்றி நுழைந்து ஆபத்தை உணராமல் சுற்றி திரிந்தனர். அப்போது 3 பேர் ஆசனூர் வனப்பகுதியில் உள்ள நீரோடையில் குளித்து கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் ரோந்து வந்த வனத்துறையினர் அவர்களிடம் விசரணை நடத்தி அவர்கள் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த பகுதியில் அனுமதியின்றி நுழைந்து யானைகளை புகைப்படம் எடுத்த நபருக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும் அவர் கொண்டு வந்த கேமிராவையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் வனப்பகுதியில் உள்ள ஆபத்து குறித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ஆசனூர் வனசரக அலுவலர் சிவகுமார் கூறும்போது, வனப்பகுதிகளில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. பொதுமக்கள் ஆபத்தை உணராமல் அத்துமீறி நுழைகிறார்கள். இதனால் ஆபத்து நிகழ கூடும். எனவே பொது மக்கள் வனப்பகுதிக்குள் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அனுமதியின்றி நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து புகைப்படம் எடுத்தல், நீரோடைகளில் குளித்தல் போன்ற குற்றங்களுக்காக கடந்த 2 மாதங்களில் 40 பேரிடம் ரூ.4 லட்சம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது.
    • பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை ஊராட்சிகளில் 8 பேரை பழிவாங்கிய அரிசி கொம்பன் யானை பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது. இந்த ஆண் காட்டுயானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்து பெரியாறு புலிகள் காப்பகம் வனப்பகுதியில் விட்டனர்.

    தற்போது இந்த யானை தேனி மாவட்டம் மேகமலை வனச்சரணாலயத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. மணலாறு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பை சேதப்படுத்தி அங்கிருந்த ரேசன் கடையையும் உடைத்து சூறையாடியது. மேலும் நள்ளிரவில் வரும் அரசு பஸ்சையும் மறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். பெரும்பாலும் வனப்பகுதியை ஒட்டியே நடமாடும் இந்த அரிசி கொம்பன் யானை இரை தேடுவதற்காக மட்டும் குடியிருப்பு பகுதியை நோக்கி வருகிறது. அதன்மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும்போது உயிர்பலி ஏற்படுகிறது.

    ஆரம்பத்தில் அரிசி கொம்பன் யானை மீது கோபம் ஏற்பட்ட மக்களுக்கு தற்போது அனுதாப அலை வீசி வருகிறது. இதனிடையே அரிசி கொம்பனின் கதையை திரைப்படமாக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதனால் இடுக்கி மாவட்டத்தில் அரிசி கொம்பனுக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.

    அவர்கள் அரிசி கொம்பன் பெயரில் ரசிகர் மன்றத்தை தொடங்கி உள்ளனர். வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே சொந்தம். அங்கு குடியிருப்புகள் அதிகரிப்பால் வனவிலங்குகள் உள்ளே வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் காப்போம் என்ற அடிப்படையில் பிரசாரமும் செய்து வருகின்றனர்.

    மேலும் பூப்பாறை பகுதியில் ஜீப் டிரைவர்கள் இணைந்து அரிசி கொம்பன் தேநீர் கடையை தொடங்கி உள்ளனர். இங்கு வரும் பொதுமக்களுக்கும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    • இத்தலம், “ஸ்ரீ காலஹஸ்தி” என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது.
    • “ஸ்ரீ” என்பது சிலந்தியை குறிக்கிறது. “கால” என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் “ஹஸ்தி” என்பது யானையை குறிக்கிறது.

    திருமலை திருப்பதி பற்றி தெரியாத இந்துவே இருக்க முடியாது. ஏன் இந்தியனே கூட இருக்க முடியாது. உலகிலேயே இரண்டாவதாக அதிக வசூல் ஆகும் புனிததலம். இந்த திருப்பதி பற்றி தெரிந்தவர்கள், கண்டிப்பாக "ஸ்ரீ காலஹஸ்தி" ஐ பற்றியும் தெரிந்து வைத்து இருப்பார்கள். திருப்பதியில் இருந்து சுமார் 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த புனிததலம், "தென்னகத்தின் கைலாயம்" என்றும் அழைக்கபடுகிறது. ஏன் எனில், இந்த தலம், கைலாயத்திருக்கு ஒரு மாதிரி போலவே அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தலத்தின் அருகே அமைந்து உள்ள ஒரு குன்று, கைலாயத்தை குறிப்பதாகவும், அந்த குன்றில் இருந்து வடக்கு நோக்கி பாயும் ஸ்வர்ணமுகி என்ற சிறு ஆறு, கங்கைக்கு ஒப்பாகவும் கூறப்படுகிறது. இந்த கோவில் சுமார் ஐந்தாம் நூற்றாண்டில், கட்டப்பட்டதாகவும், 12 ம் நூற்றாண்டில் ராஜேந்திர சோழனால் புதுப்பிக்க பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5 நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண தேவராயரால் புதுப்பிக்கபட்டது.

    இத்தலம், "ஸ்ரீ காலஹஸ்தி" என பெயர் பெறுவதற்கு ஒரு காரணம் உள்ளது. "ஸ்ரீ" என்பது சிலந்தியை குறிக்கிறது. "கால" என்பது பாம்பினை குறிக்கிறது. மற்றும் "ஹஸ்தி" என்பது யானையை குறிக்கிறது. இந்த தலத்தில் "சிவ பெருமானின்" லிங்கத்திற்கு மேலாக கூடு கட்டி வாழ்ந்து வந்த ஒரு சிலந்தி, ஒருநாள், காற்றில் சிதறி விழுந்த தீயை அணைப்பதற்காக , அதாவது லிங்க வடிவிலான சிவபெருமானை காப்பதற்காக, தன் வலைகளை இடைவிடாது பின்னி, அதன் உயிரையே தீயிற்கு இரையாக்க முனைந்தது. அதன் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அந்த சிலந்திக்கு நேரடியாக காட்சி தந்து முக்தியும் அளித்ததாக ஒரு கதை உண்டு.

    மேலும் இத்தலத்தில், ஒரு யானையும் பாம்பும் இடை விடாது, சிவ பெருமானிடம் பக்தி செய்து வந்தது. பாம்பு, அதற்கு கிடைக்கும் விலை உயர்ந்த பாசனங்கள், மணிகள், ரத்தினங்கள் ஆகியவற்றை கொண்டு கர்ப்ப கிரகத்தை அலங்கரித்து வந்தது. இதே போலவே, யானையும் தினமும் ஆற்றில் நீராடி, தன் தும்பிக்கை மூலம் சுத்தமான நீரினை கொண்டு வந்து சிவ பெருமானை குளிப்பாட்டியும் வந்தது. மேலும் அது தனக்கு மேலானவை என்று படும் இலைகளையும், மலர்களையும் கொண்டு வந்து சிவபெருமானை அலங்கரித்து வந்தது. இந்த யானை, பாம்பின் அலங்கரிப்பை அகற்றி தன்னுடைய பணியினை செய்தும் வந்தவாறு இருந்தது. இதனால் கோபமுற்ற பாம்பு, ஒருநாள் யானையிடம் நேரடியாக சண்டை செய்தது. பாம்பின் கொடிய விஷத்தினால் யானையும், யானையின் அசுர பலத்தினால் பாம்பும் இறந்து போனது. இவர்கள் தனக்கு தெரிந்த உன்னதமான முறையில் முழு பக்தியுடன் தன்னை வழிபட்டு வந்ததால் சிவபெருமான், இருவரையும் உயிர்ப்பித்து மோக்ஷத்தையும் வழங்கியதாக ஒரு கதை உண்டு. மனிதம் அல்லாத பிற உயிர்களும் பக்தி கொண்ட சிறப்பு காரணமாக, இத்தலம் இப்பெயர் கொண்டதாக கூறப்படுகிறது.

    மேலும் இத்தலம் பல சிறப்புகளை தன்னகம் கொண்டுள்ளது.

    63 நாயன்மார்களில் ஒருவரான, "கண்ணப்பர்", தன் இரு கண்களையும், "கடவுள் குருடு ஆகி விட கூடாது" என்பதற்காக கடவுளுக்கு கொடுத்த தலம் என்ற பெருமை, இத்தலத்திற்கு உண்டு.

    இந்த தலத்தில் "ராகு" மற்றும் "கேது" பகவானுக்கு என்று தனி சிலை வழிபாடு உண்டு. மேலும் ராகு மற்றும் கேது தோசங்களைகளையும் தலம் என்றும் நம்பப்படுகிறது. "கால சர்ப்ப தோசம்" உடையவர்கள் நிவர்த்தி அடையும் தலமாகவும் கருதப்படுகிறது.

    ஒருமுறை பார்வதி தேவி, தான் சிவபெருமானிடம் பெற்ற சாபத்தினால் மனித பிறவி எடுத்து, அதை இந்த தலத்தில் உள்ள சிவபெருமானை பூஜித்து, முன்பை விட பல மடங்கு சக்தியுடன் தேவலோக உடலை அடைந்ததாக ஒரு கருத்து உண்டு. "பஞ்சாக்ஷரி மந்திரம்" என்னும் மந்திரங்களை பார்வதி தேவி உதிர்த்த தலமும் இதுவே. இந்த தலத்தில் "சிவ ஞானம்" அடைந்ததால் பார்வதி தேவி, "ஞான பிரசுன்னாம்பிகை தேவி" என்று போற்றபடுகிறார்.

    இந்த தலம் பஞ்ச பூத தலங்களில் ஓன்று. பஞ்ச பூத தலங்களில் "வாயு" வை குறிக்கும் தலமாக இத்தலம் இருக்கிறது. மற்ற பஞ்ச பூத தலங்கலாவன:

    நிலம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில் (காஞ்சிபுரம்)

    ஆகாயம் - சிதம்பரம் கோவில்

    நீர் - திருவானைக்காவல் கோவில்

    நெருப்பு - திருவண்ணாமலை கோவில்

    "மயூரா", "தேவேந்திரன்", மற்றும் "சந்திரன்" முதலிய தேவர்கள் இங்கே பாவ விமோச்சனம் அடைந்ததாக ஒரு வரலாறும் உண்டு.

    "ஞான கலா" என்ற பூதம், இந்த தலத்தில் தான் 15 வருடம் பிரார்த்தனை செய்து தன் மனித உடலை திரும்ப பெற்றதாகவும் ஒரு கதை உண்டு.

    இவ்வளவு சிறப்பு மிக்க "ஸ்ரீ காலஹஸ்தி" கோவிலின் ராஜ கோபுரம், மே 26 ம் தேதி இடிந்து தரை மட்டம் ஆனது. இதன் ராஜகோபுரம் சுமார் 135 அடிகளை உயரமாக கொண்டது. சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட விரிசல்கள் பெரிதாகி, அவை கோவில் கோபுரமே முற்றிலுமாக தரை மட்டம் ஆகும் நிலைக்கு ஆளாகி இருக்கிறது. சரித்திர புகழ் வாய்ந்த இந்த புனித தலம், ஒரு மோசமான நிலையை தன் அனுபவத்தில் கண்டுள்ளது. "எவ்வளவு செலவு ஆனாலும், கோபுரம் மறுபடியும் பழைய நிலைக்கு சீரமைக்கபடும்" என்ற அரசின் ஆறுதல் வார்த்தைகள் ஒரு புறம் இருக்க, கோவில் இடிந்து தரை மட்டம் ஆனது, என்னுள் அழுத்தமான ஒரு சோக பதிவை ஏற்படுத்தவே செய்து இருக்கிறது. நல்ல வேலையாக, முன் கூட்டியே எச்சரிக்கை விடுக்கபட்டதால், பெரும் உயிர் சேதம் தடுக்கபட்டு இருக்கிறது. எனினும் கோபுரத்தை தாய் வீடாக கொண்ட குரங்கு கூட்டங்கள் அடியோடு அழிபட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. அவையும் உயிர்கள் தானே!!!.

    இந்த நிகழ்வு வெறும் வருத்தத்தை மட்டும் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக நான் கருதவில்லை. இது மற்ற எல்லா கோவில்களின் கண்காணிப்புக்கும் இடப்பட்ட ஒரு எச்சரிக்கை. நம் இந்தியா, இவ்வாறான புராண சிறப்பு வாய்ந்த பல இடங்களை கொண்டு உள்ளது. அவற்றை நாம் கண்டிப்பாக போற்றி பாதுகாக்கவே வேண்டும். "ஆன்மிகம்" என்ற ஒரு அற்புதமான ஒரு உணர்வை நம்மில், "கோவில்", "மசூதி", "சர்ச்" மற்றும் எல்லா மதத்தின் கோவில்களுமே தான் வளர்த்து வருகின்றன. "கடவுள்", என்பவர் உண்மையா, பொய்யா என்ற சர்ச்சைக்கு அப்பாற்பட்டு, கோவில்கள் நம் புராதான சின்னங்கள் என்பதை யாராலும் மறுத்து விட முடியாது. நம் பெருமைகள், இவ்வாறான சின்னங்களை காப்பாற்றுவதிலும் அடங்கி உள்ளது.

    கண்டிப்பாக அரசு, இனி நல்ல முறையில் நம் புனித தலங்களை காக்கும் என்ற நம்பிக்கை உடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

    ஓம் நம சிவாய!...

    • பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும்.
    • யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும்.

    உடுமலை :

    ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெறும். அதன்படி தென்னிந்தியாவில் கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் 19ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

    முதல் நாளான இன்று பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும். நாளை இரண்டு நேர்கோட்டு பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும். நாளை மறு நாள் நீர் நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடியான முறையில் யானைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படும் .கணக்கெடுப்பு பயிற்சிக்காக களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது.

    திருப்பூர் வனக்கோட்ட வன உதவி பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமையில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் உடுமலை பேட்டை வனச்சரகஅலுவலர், அமராவதி வனச்சரக அலுவலர், கொழுமம் வனச்சரக அலுவலர் மற்றும் வந்தரவு வனத்துறை அலுவலர், உயிரியலாளர் மகேஷ் குமார், வனவர்கள் ,வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.
    • இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலை அடிவாரத்தில் 2 யானைகள் சுற்றி திரிகின்றன. நேற்று இரவு 9 மணியளவில் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள பாரத கோவில் வழியாக சந்தைக்கோடியூர் ஏரி கரையின் மீது நடந்து சென்றது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி பொது மக்கள் உடனடியாக சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் முன் கூட்டியே மூடி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    போலீசாரும் ஒலி பெருக்கி மூலம் அனைவரும் வீட்டிற்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும். யாரும் இரவு நேரத்தில் வெளியே வர வேண்டாம் என ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனர்.

    யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் நேற்று இரவு 9 மணியளவில் சந்தைக்கோடியூர் வக்கணம்பட்டி புது ஓட்டல் தெரு ஏலகிரி கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மின்சாரம் இருந்தால் அதன் வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கி யானை ஊருக்குள் வந்து விடும் என்று எண்ணி நேற்று இரவு மின்சாரம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.

    அதன் பிறகு சந்தைக்கோடியூர் பகுதியில் இருந்து சக்கரகுப்பம் வழியாக வக்கணம்பட்டி மாரியம்மன் கோவில் ஆலயம் எதிரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றியம் துவக்க பள்ளி எதிரே 2 யானைகள் முகாமிட்டுள்ளது.

    இரவு நேரத்தை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலர் யானையை பின் தொடர்ந்தனர். ஆபத்தான நிலையில் தங்களது செல் போனில் வீடியோ எடுத்து யானை வருது உஷார் என வாட்ஸ் ஆப் குரூப் ஆரம்பித்து அதில் பதிவு செய்து வருகின்றனர்.

    பொது மக்கள் தொந்தரவு கொடுக்காமல் இருந்தால் யானைகள் ஆலங்காயம் காட்டு பகுதிக்கு சென்று விடும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது.
    • பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் 2 பேரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.

    ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லி கிராமம் தமிழக எல்லையில் திருப்பத்தூர் மாவட்டத்தை ஒட்டியுள்ளது. இந்த பகுதியில் யானைகள் முகாமிட்டுள்ளன.

    பருத்திக்கொல்லி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் மனைவி உஷா (வயது 42) என்பவரும் மற்ற நபர்களும் வேலைக்கு செல்வதற்காக மல்லானூர் ரெயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென இவர்களை யானைகள் வழிமறித்து தாக்கியுள்ளது. இதில் கீழே விழுந்த உஷா, சிவலிங்கம் (70) ஆகிய இருவரையும் யானைகள் மிதித்ததில் அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டனர்.

    மேலும் இருவர் படுகாயம் அடைந்து குப்பம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் 2 பேரை மிதித்து கொன்ற யானைகள் மல்ல குண்டா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தகரகுப்பம் பகுதியில் இன்று காலை சுற்றி திரிந்தன.

    இதனால் நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் தலைமையில் நாட்டறம்பள்ளி, திம்மாம்பேட்டை போலீசார் மற்றும் தமிழக வனத்துறையினர் தலைமையில் அப்பகுதிக்கு சென்றனர்.

    அப்பகுதி பொதுமக்கள் வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வனத்துறையினர் டிரோன் கேமரா மூலம் காட்டுப்பகுதிக்கு சென்றனர். டிரோன் கேமராவை பறக்கவிட்டு யானைகளை கண்காணித்து வருகின்றனர்.

    2 யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    யானைகள் ஆந்திர வனப்பகுதியில் இருந்து தமிழக எல்லைக்குள் வந்தது அப்பகுதியினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கீழே குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணம் கூட பலருக்கும் வருவதில்லை.
    • கீழே கிடந்த குப்பையை பார்த்ததும் தனது தும்பிக்கையால் அதை எடுத்து அழகாக குப்பை தொட்டிக்குள் போடுவதை காண முடிகிறது.

    பொது இடங்களை சுகாதாரமாக வைத்துக்கொள்ளுங்கள் என எவ்வளவுதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பலர் அதை கண்டுகொள்வதில்லை. மாறாக குப்பைகளை பொது இடங்களிலேயே வீசி செல்கின்றனர். சாலையில் நடந்து செல்லும்போது கீழே குப்பை கிடந்தாலும் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட வேண்டும் என்ற எண்ணம் கூட பலருக்கும் வருவதில்லை. ஆனால் ஐந்தறிவு கொண்ட யானை ஒன்று பொது இடங்களில் சுகாதாரத்தை பராமரிப்பது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு யானை நடந்து வந்து கொண்டிருக்கிறது. அப்போது கீழே கிடந்த குப்பையை பார்த்ததும் தனது தும்பிக்கையால் அதை எடுத்து அழகாக குப்பை தொட்டிக்குள் போடுவதை காண முடிகிறது. இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் யானைக்கு இருக்கும் அறிவு கூட மனிதர்களுக்கு இருப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.


    • அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தாம்பாறை ஊராட்சிகளில் கடந்த 5 ஆண்டுகளில் 10 பேரை பலி வாங்கிய அரிசிக் கொம்பன் என்ற யானை கடந்த சில தினங்களுக்கு முன்பு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. 5 முறை ஊசி செலுத்தி மயக்கமடைந்த அரிசிக் கொம்பனின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தமிழக-கேரள எல்லைப் பகுதியான தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது.

    தற்போது தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மேகமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட இரவங்கலாறு வனப்பகுதியில் இந்த யானை நுழைந்திருப்பது வனத்துறையினர் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.

    இதனால் தேனி மாவட்ட வனத்துறையினர் மேகமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேகமலை, இரவங்கலாறு, மணலாறு, மகாராஜா மெட்டு, ஹைவேவிஸ் போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஏராளமாேனார் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் மேகமலை, சிலுவை கோயில் அருகே வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் இந்த யானையின் நடமாட்டம் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இரவு நேர பயணத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தேனி வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மேகமலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பயணிகள் அனைவரும் மேகமலை அடிவார பகுதியான சின்னமனூர் அருகே உள்ள தென்பழனி வனத்துறை சோதனை சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    அரிசி கொம்பன் யானையால் கேரள மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் தற்போது தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு சின்னமனூர் அருகே வந்த அரசு பஸ்சை அரிசி கொம்பன் யானை வழி மறித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சின் அனைத்து விளக்குகளையும் அனைத்து விட்டு பயணிகளிடம் அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக அரிசி கொம்பன் அதே இடத்தில் சுற்றி சுற்றி வந்து பின்னர் நகரத் தொடங்கியது. அதன் பின்னர் முகப்பு விளக்குகளை எரியவிடாமல் பஸ்சை மெதுவாக டிரைவர் நகர்த்தி எடுத்துச் சென்றார். இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். எனவே உடனடியாக இந்த யானையை மலைப்பகுதியை விட்டு வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்வதற்கு வனத்துறையினர் மற்றும் தமிழக அரசும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பகல் நேரங்களில் வீட்டை பூட்டிச் சென்றாலும் அரிசி கொம்பன் உடைத்து சேதப்படுத்திவிடுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமலும், அச்சத்தில் உறைந்துள்ளனர்.

    இதன் காரணமாக சுழற்சி முறையில் வனப்பகுதி முழுவதும் தீவிரமான தேடுதல் வேட்டை நடத்தி அரிசி கொம்பனை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×