search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stir"

    • அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர்.
    • பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

     பல்லடம் : 

    பொள்ளாச்சியில் இருந்து திருப்பூர் நோக்கி நேற்றிரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. டிரைவர் ராஜன் பஸ்சை ஓட்டினார். பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி பகுதியில் சென்றபோது அந்த பஸ் நிறுத்தத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி(வயது 21),உதயசந்திரன்(23) ஆகியோர் திருப்பூர் செல்வதற்காக பஸ்சிற்கு காத்துக் கொண்டிருந்தனர்.

    வாலிபர்கள் தகராறு

    அவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டினர். இடை நில்லா பஸ் என்பதால் அந்த பஸ் நிற்காமல் சென்றது. இந்தநிலையில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி, உதயசந்திரன் ஆகியோர் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் சென்று ராயர்பாளையம் பஸ் நிறுத்தம்அருகே, அரசு பஸ்சின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி சிறை பிடித்தனர். மேலும் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவத்தை பார்த்த அந்த வழியாக சென்ற அரசு பஸ் டிரைவர்கள் சாலையிலேயே பஸ்களை நிறுத்தி டிரைவர் ராஜனுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் இருபுறமும் சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து தடைப்பட்டது.

    டிரைவர்கள் போராட்டம்

    தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த போலீசார், இரு தரப்பினிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அரசு பஸ் ஓட்டுநர்கள், சிரஞ்சீவி, உதயச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போலீசார் சமாதானம் செய்ததையடுத்து டிரைவர்கள் பஸ்களை அங்கிருந்து எடுத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருப்பூர்- பல்லடம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டதுடன், சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

    • மதுரை-மேலூர் நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூரகுண்டு கிராமத்தில் உள்ள 7-வது வார்டு பகுதியில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர மறுப்பதாக அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

    இதனால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி குடிநீருக்காக அலையும் சூழல் உருவாகி வருவதாகவும், மேலும் முறையான மின்சாரம் தங்கள் பகுதிக்கு வழங்கவில்லை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை முறையாக வழங்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    குடிநீர் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த 100-க்கு மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் மதுரை - மேலூர் சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.

    மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசந்தர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய கஜேந்திரன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்று மேலூர் யூனியன் அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர். நீண்ட நேரம் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.
    • விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆடுதுறை-திருப்பனந்தாள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் வட்டத்துக்கு உட்பட்ட திருப்பனந்தாளில் தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வாரத்தில் வியாழக்கிழமை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோட்டில் உள்ள பஞ்சு மில் தனியார் வியாபாரிகள் வந்து மறைமுக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வது வழக்கம்.தற்போது டெல்டா மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது .

    சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பருத்தி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 500 குவிண்டால்கள் பருத்தி கொண்டு வந்தனர்.

    இதில் பல விவசாயிகளின் பருத்திக்கு சரியான விலை நிர்ணயம் செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு ஆடுதுறை திருப்பனந்தாள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட் வர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

    • சுமார் 230 மாணவ-மாணவிகளை அப்பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.
    • 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பெருமாள் கீழரதவீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி (கல்லணை) இயங்கி வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு 1 முதல் 5-ம் வகுப்பு வரை 400 மாணவ-மாணவிகள் பயின்று வந்தனர். இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்து 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சேர்ந்தனர்.

    இதனால் பள்ளியில் இடநெருக்கடி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுமார் 230 மாணவ-மாணவிகளை அப்பகுதியில் உள்ள பாரதியார் உயர்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர்.

    மேலும் கல்லணை பள்ளியில் சத்துணவு தயாரிக்கப்பட்டு அங்கிருந்து பாரதியார் பள்ளிக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

    இதற்கு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பாரதியார் உயர்நிலைப்பள்ளியில் ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு தேவையான அளவுக்கு அடிப்படை வசதிகள் இருப்பதாகவும், கல்லணை பள்ளி மாணவர்கள் அங்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அங்கு அவர்களுக்கு கழிவறை உள்ளிட்ட போதிய வசதிகள் இல்லை எனவும் கூறி கடந்த 21-ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மாநகராட்சி அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 நாட்களில் பெற்றோர்-ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    ஆனால் 2 நாட்களுக்கு பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கல்லணை தொடக்கப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாததை கண்டித்து இன்று அங்கு பயிலும் மாணவ -மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்கள் கூறுகையில், கல்லணை பள்ளி அருகிலேயே மாநகராட்சிக்கு சொந்தமான ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. அங்கு மாணவ-மாணவிகளை அமர வைத்து வகுப்புகளை நடத்தலாம். ஆனால் அதைச்செய்யாமல் போதிய வசதி இல்லாத பாரதியார் உயர்நிலை பள்ளிக்கு மாணவர்களை இடமாற்றம் செய்துள்ளதால் அவர்கள் அவதிப்படுகிறார்கள் என்றனர்.

    சம்பவ இடத்திற்கு மண்டல உதவி கமிஷனர் பைஜூ நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து போலீஸ் உதவிகமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது வருகிற திங்கட்கிழமைக்குள் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடத்தி பள்ளியில் போதிய இடவசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • போலீசார் தகவல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தியதால் ஆத்திரம்
    • 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    ஆரணி:

    ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி குமார் (வயது 31). இவர் ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சுகன்யா.

    இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு லக்ஷ்மன் (2) தர்ஷன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளது.

    இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி அதிகாலையில் வேலையை முடித்துவிட்டு சென்னையிலிருந்து ஆரணிக்கு வந்தார். பஸ்ஸிலிருந்து இறங்கி சென்னை ஆரணி சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் தரணி குமார் மீது மோதியது.

    இதில் தலையில் அடிபட்டு ரத்தக் வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இவரை மீட்டு108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். கடந்த 3-ந் தேதி நடந்த விபத்தை உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் போலீசார் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த தரணி குமாரின் உறவினர்கள் ஆரணி சென்னை சாலையில் 300க்கும் மேற்பட்டோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் தெரிவிக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடன்குடியில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழு கடை அடைப்பு நடத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ரவி தலைமை தாங்கினார். பொருளாளர் அப்துல் காதர் வரவேற்றார். செயலாளர் கந்தன் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில், உடன்குடி பஜாரை சுற்றியுள்ள 4 வழி ரோடுகள் மற்றும் திசையன்விளை ரோடு ஆகியவற்றை முழுமையாக புதுப்பிக்க நெடுஞ்சாலைத்துறையை கேட்டுக்கொள்ளப்பட்டது.

    மேலும், உடன்குடியில் இருந்து பெரியதாழைக்கு புதியதாக டவுன் பஸ் இயக்கவும், திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம், உடன்குடி, பெரியதாழை வழியாக நாகர்கோவிலுக்கும் திருச்செந்தூரில் இருந்து பரமன்குறிச்சி, உடன்குடி, திசையன்விளை, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரிக்கும் புதிய பஸ்கள் இயக்க போக்குவரத்து துறையை கேட்டுக்கொள்வதும், திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையை தினசரி மார்க்கெட்டாக மாற்றி தர கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த 5 அம்ச கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை என்றால் 15 நாளில் உடன்குடியில் முழு கடை அடைப்பு நடத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. துணைச் செயலாளர் ராஜா நன்றி கூறினார். #tamilnews
    நீலகிரியில் ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு சீல் வைக்க முயன்றதால் வியாபாரிகள் கொட்டும் மழையிலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    காந்தல்:

    ஊட்டி நகராட்சிக்கு சொந்தமாக சுமார் 3 ஆயிரம் கடைகள் உள்ளது. இதனை வாடகைக்கு எடுத்து நடத்தும் வியாபாரிகளுக்கு குறைவான வாடகை தான் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    ஒரு சில வியாபாரிகள் கடைகளை உள் வாடகைக்கு விட்டு அதிக பணம் சம்பாதிப்பதாகவும் புகார் எழுந்தது. ஊட்டி நகராட்சி ஒரு வருடத்திற்கு முன் கடை வாடகையை உயர்த்தியது.

    இதனை பெரும்பாலான வியாபாரிகள் கட்டவில்லை. ஒரு சில வியாபாரிகள் மட்டுமே கட்டினார்கள். உயர்த்தப்பட்ட வாடகையை குறைக்க கோரி வியாபாரிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆகியோருக்கு மனு அனுப்பி இருந்தனர்.

    வாடகையை கட்டா விட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என நகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனாலும் வியாபாரிகள் வாடகையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

    ஊட்டி நகராட்சி கடைகளை 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே குடும்பத்தினர் தான் நடத்தி வருகிறார்கள். இதனால் பொது ஏல முறையில் விட நகராட்சி முடிவு செய்தது.

    இதற்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று ஊட்டி நகராட்சிக்கு சொந்தமான 1,500 கடைகளுக்கு சீல் வைக்க நகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    இதனை கண்டித்து ஊட்டி மார்க்கெட் முன்பு வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். ஊட்டியில் இன்று காலை மழை பெய்தது. அதனையும் பொருட்படுத்தாமல் வியாபாரிகள் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இதனை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
    பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் பொதுத்துறை சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.50 கோடி பாக்கி தொகையையும், பெரம்பலூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு எப்.ஆர்.பி. மற்றும் எஸ்.ஏ.பி. விலைக்குரிய பாக்கி தொகையையும் கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக வழங்கிட வேண்டும். வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தபடி வேளாண் உற்பத்தி செலவினை கணக்கிட்டு 1½ மடங்கு கூடுதல் விலையை அறிவிக்க வேண்டும். கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்திட வேண்டும்.

    கரும்புக்கான மாநில அரசு பரிந்துரை விலையை அறிவிக்காததை கண்டித்தும், கரும்பு விவசாயிகளை பாதிப்பு ஏற்படுத்திடும் ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தி வருவதனால் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் டிராக்டர் உரிமையாளர் சங்கம் ஆகியவை இணைந்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.

    இதனால் நேற்று புதிய பஸ் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பழகன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்கம், பாட்டாளி கரும்பு விவசாயிகள் சங்கம், கரும்பு வளர்ப்போர் முன்னேற்ற சங்கம், பங்குதாரர் மற்றும் கரும்பு வளர்ப்போர் சங்கம் ஆகிய அனைத்து விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவர்களும், டிராக்டர் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தேவேந்திரன் ஆகியோர் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக புதிய பஸ் நிலையத்தில் நேற்று காலை ஒன்று திரண்டனர்.

    ஊர்வலமாக செல்வதற்கும், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்று விவசாயிகளிடம் போலீசார் கூறினர். இதையடுத்து அவர்கள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் திடீரென்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்கு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் விவசாயிகள் திடீரென்று பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட கரும்பு விவசாயிகள் 94 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    ×