என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Students Struggle"
- மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
சின்னாளபட்டி:
திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் காந்தி கிராமத்தை அடுத்து அம்மாபாத்துரையில் அரசு பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி செயல்பட்டு வருகிறது.
இங்கு காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவிகள் மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள அரசு, தனியார் கல்லூரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். கல்லூரி விடுதியில் சேர்வதற்கு எந்தவித கட்டணமும் கிடையாது என்ற போதும் மாணவிகளிடம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் இந்த விடுதியில் மாணவிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என கூறி கொட்டும் மழையில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவிகள் தெரிவிக்கையில், தற்போது இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி உள்ளோம். மாணவிகளுக்கு ரேசன் அரிசியில்தான் உணவு சமைத்து வழங்கப்படுகிறது. பல நேரங்களில் சுகாதாரமற்ற முறையில் உண்பதற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
குடிநீர் இல்லாததால் வெளியில் இருந்து மாணவிகள் தண்ணீர் கேன்கள் விலை கொடுத்து வாங்கி வருகிறோம். கழிவறைகள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. நாப்கீன்கள் வைக்கும் எந்திரம் சுகாதாரமான முறையில் இல்லை. இதுபோன்ற அடிப்படை வசதிகள் கேட்டு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமையலர், தூய்மை பணியாளர்கள், காவலாளிகள் ஆகியோர் இருந்தும் அவர்களது பணியை முறையாக செய்யவில்லை. விடுதி அதிகாரிகளிடம் கேட்டால் அரசு இலவச விடுதியில் இவ்வாறுதான் இருக்கும் என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கின்றனர்.
எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தி வருகிறோம் என்றனர். இதனிடையே மாணவிகள் போராட்டத்தால் விடுதியை பூட்டியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்பு தாங்கள் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்ததை அடுத்து விடுதி திறக்கப்பட்டது. மாணவிகள் போராட்டத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அம்பாத்துரை போலீசார் மற்றும் ஆத்தூர் தாசில்தார் வடிவேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவிக்க உள்ளதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
- பெற்றோர்கள் சிலர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்
- போலீசாரின் பேச்சுவார்தையடுத்து கலைந்து சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுற்று பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தலைமை ஆசிரியை சாந்தி மாணவிகளை துன்புறுத்தி வருவதாக கூறியதால், ஆத்திரம் அடைந்த மாணவி களின் பெற்றோர்கள் சிலர் தலைமை ஆசிரியையிடம் நேரில் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இன்று காலை பள்ளி வந்த மாணவிகள் தலைமை ஆசிரியை மீது தவறான புகார் கொடுத்துள்ள தாகவும், அவருக்கு ஆதரவாக பெற்றோர்களை கண்டித்து பள்ளியின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்பராயன் மற்றும் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவி களிடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதனால் சமரசம் அடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவிகள் கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியைக்கு ஆதரவாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆசிரியரை தோல்மேல் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
- போராட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டு காலமாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த பாபு என்ற ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து பள்ளியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் இப்பள்ளிக்கு மீண்டும் வரவேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் வந்த பின்னரே நாங்கள் பள்ளிக்குள் நுழைவோம் என்று பிடிவாதமாக போரா ட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் பாபுவை மீண்டும் சொரகுளத்தூர் மேல்நிலைப் பள்ளியில் வந்து சேருமாறு அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் வந்து பள்ளியில் சேர்ந்ததும் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆசிரியரை தங்கள் தோல் மேல் தூக்கி அழைத்து வந்து மாணவர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அவரை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
இந்த போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகத்தின் முன்பு பரபரப்பு காணப்பட்டது. நீண்ட நேரமாக ஆவேசமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.
அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்ட 46 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த துரிஞ்சாபுரம் கார்கோணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் என்பவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டதால், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் அன்பழகனை, வேடந்தவாடி அரசு தொடக்கப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள், தங்களது தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த மாணவர்களின் பெற்றோரும் பள்ளியில் அங்கு திரண்டனர். தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பள்ளிக்கு பூட்டு போட்டு தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அருட் செல்வன், உதவி தொடக்க கல்வி அலுவலர் தேன்மொழி ஆகியோர் பள்ளிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
அப்போது மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று கண்ணீர்விட்டு அழுதனர்.
தலைமை ஆசிரியர் அன்பழகன் தனது சொந்த செலவில் பள்ளிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்.
அவர் வந்த பிறகுதான் பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனவே அவரை மீண்டும் இந்த பள்ளியிலேயே பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மாணவர்கள் தர்ணாவை கைவிட்டு வகுப்புக்கு சென்றனர்.
வாணாபுரம் அருகே காட்டாம்பூண்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு உடற்கல்வி ஆசிரியராக சிவப்பிரகாசம் என்பவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவப்பிரகாசம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரியகுளத்துக்கு மாற்றப்பட்டார்.
இதனை கண்டித்தும் சிவப்பிரகாசத்தை இதே பள்ளியில் மீண்டும் உடற்கல்வி ஆசிரியராக பணியமர்த்தக் கோரி மாணவ-மாணவிகள் பள்ளியின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தச்சம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கை குறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறினர். இதில் மாணவ, மாணவிகள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகள் கலைந்து வகுப்பிற்கு சென்றனர். #tamilnews
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜாக்டோ ஜியோவுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கல்லூரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.
இதையடுத்து கல்லூரி முன்பு திரண்டு நின்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க தஞ்சை மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி, கிளை செயலாளர் சோபியா ஆகியோர் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அருண்குமார் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் 500 மாணவிகள் கலந்து கொண்டனர். #Jactogeo
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளும் முடங்கி உள்ளன.
குறிப்பாக பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பணிக்கு திரும்ப அரசு கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு கிரியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இந்த பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்களுடன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். வடமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆசிரியர்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்பட்டிசத்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தினத்திற்கு வந்த ஆசிரியர்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செம்மஞ்சேரியில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்குள்ள விடுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். இன்று காலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட சட்னியில் உயிருடன் இருந்த எலி ஒன்று தத்தளித்தபடி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காலை உணவு சாப்பிடவில்லை.
இந்தநிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தினர், செம்மஞ்சேரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #tamilnews
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே மோரூர் பகுதியில் அரசுமேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடந்த 1 மாதத்துக்கு முன்பு பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் பள்ளி நிர்வாகம் பூமி பூஜை போட்ட இடத்தில் புதிய கட்டிடம் கட்டாமல் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் கட்டும் பணியை தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டு ஏன் பூமி பூஜை போட்ட இடத்தில் கட்டிடம் கட்டாமல் பள்ளி குழந்தைகள் விளையாடும் விளையாட்டு மைதானத்தில் கட்டிடம் கடடுகின்றீர்கள்? என்று தலைமையாசிரியர் சங்கமித்திரையிடம் கேட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இது குறித்து சரியான பதில் அளிக்காததால் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் கடந்த மாதம் தலைமையாசிரியர் சங்கமித்திரை பணிமாற்றம் செய்யப்பட்டார். பின்னர் இந்த சம்பவத்தில் உதவி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் நேற்று பணி மாற்றம் செய்யப்பட்டார்.
உதவி தலைமையாசிரியர் கோவிந்தராஜ் பணிமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பள்ளி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீவட்டிப்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் மற்றும் போலீசார் பள்ளி மாணவர்களை சமாதனப்படுதது முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பள்ளி மாணவர்கள் அவர் வேலைக்கு வரும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட் டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் யாரும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடுமாறு சொல்ல வராததால் போலீசார் மட்டும் பேச்சு வார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கல்லூரி மாணவர்கள் தங்கிய விடுதியில் இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. அப்போது சாப்பாட்டில் பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் திடீரென அசூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் தரமான, சுகாதாரமான உணவு வழங்க கோரி கோஷமிட்டனர்.
இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பிறகு மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட 5 மாணவர்களை மட்டும் போலீசார் அழைத்து சென்றனர். பிறகு சிறிது நேரத்தில் 5 மாணவர்களையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவ- மாணவிகள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி வளாகத்தில் சுமார் 2 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பிறகு கல்லூரி முன்பு ரோட்டில் மாணவர்கள் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர்கள் போலீசாரை விசாரணைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும், விடுதியில் தரமற்ற உணவு வழங்குவதை கண்டித்தும் மாணவ- மாணவிகள் கோஷமிட்டனர்.
இதையடுத்து கும்பகோணம் போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். #tamilnews
திருவண்ணாமலை அரசு வேளாண் கல்லூரி மாணவி, உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, மாணவிக்கு எதிராக நேற்று முன்தினம் மாணவ-மாணவிகள் சிலர் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு, பேராசிரியர்களுக்கு ஆதராக கோஷம் எழுப்பினர்.
மாணவர்கள் போராட்டம் செய்த நேற்று முன்தினம் பக்ரீத் பண்டிகை விடுமுறை. விடுமுறை நாளான அன்று பேராசிரியை ஒருவர் விடுதியில் இருந்த மாணவ, மாணவிகளை அழைத்து வந்து மாணவிக்கு எதிராக போராட்டத்தை தூண்டி விட்டதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன.
மாணவ, மாணவிகள் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் நடந்தது. இதில் உற்று கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள். இவர்களுக்கான வகுப்புகள் சில நாட்களுக்கு முன்புதான் தொடங்கின.
இவர்களுக்கு, 2-ம் ஆண்டு படித்துவரும் சீனியர் மாணவியை பற்றியோ, அவர் கூறிய பாலியல் புகார்கள் பற்றியோ எதுவும் தெரியாது. பாலியல் புகார் கூறிய மாணவி, உதவி பேராசிரியர் தனக்கு 7 மாதங்களாக தொல்லை கொடுத்ததாக கூறியிருந்தார்.
இச்சம்பவத்தில் மாணவிக்கு எதிராக போலி ஆவணங்களும் தயார் செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட மாணவி தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, மாணவியின் பாலியல் புகார்கள் குறித்து யாரிடமும் வாய் திறக்க கூடாது என கல்லூரி முதல்வர் பேராசிரியர்களை அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், பேராசிரியர்களின் செல்போன்களை வாங்கி யாருக்காவது தகவல்களை பகிர்ந்துள்ளனரா? யார் யாருக்கு பேராசிரியர்களின் செல்போனில் இருந்து அழைப்புகள் சென்றுள்ளன? என்பது குறித்து ‘டைல்டு’ பதிவை கல்லூரி முதல்வர் ஆய்வு செய்தார்.
இதுபோன்ற தகவல் வெளியானதையடுத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா தலைமையிலான போலீசார், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார். அவர்கள் செல்போன் அழைப்புகளும் கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பேராசிரியர்களுக்கு ஆதரவாக மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்துவதை தடுக்க கல்லூரி நுழைவு வாயில் முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாணவி வெளிப்படையாக தனக்கு பாலியல் தொல்லை இருந்ததாக கூறிய புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர் பேராசிரியர்களை காப்பாற்ற முயற்சிப்பதாக மாணவி தரப்பினர் வருத்தம் தெரிவித்தனர். #ChennaiStudentharassment #AgriCollege
தஞ்சை மாவட்டம் திருவோணம் அடுத்த ஊரணிபுரம் கல்லணை கால்வாய் அருகே பணி கொண்டான் விடுதி பகுதியில் கடந்த 9-ந்தேதி எந்த முன்அறிவிப்பும் இன்றி 2 டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் இந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாக கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மறியல் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்த தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஒருவாரத்தில் டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று கூறினர். இதனால் அப்பகுதியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று வரை அதிகாரிகள் கூறியது படி ஊரணிபுரம் கல்லணை கால்வாய் பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளும் அகற்றப்படவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் மற்றும் மாவட்ட கலால் உதவி ஆணையர் தவசீலன் மற்றும் போலீசார் இப்பகுதி மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தை பணி கொண்டான் விடுதி மக்கள் புறக்கணித்தனர்.
இதைத் தொடர்ந்து மற்ற பகுதி மக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அதிகாரிகள் ஒரு கடையை தற்போது அகற்றிவிடுவோம். மற்றொரு கடையை இன்னும் 10 நாட்களில் அகற்றுவோம் என்று கூறினர்.
இதனை ஏற்று கொள்ளாத மக்கள் கலெக்டர் கையெழுத்து உள்ள ஆணையை காட்டினால் மட்டுமே நாங்கள் இதற்கு ஆதரவு தருவோம். நீங்கள் இப்போது கூறிவிட்டு மீண்டும் கடைக்கு அனுமதி கொடுத்து விடுவீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் இப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
சுமார் 200 மாணவ- மாணவிகள் உள்பட மற்றும் கிராம மக்கள் 600-க்கும் மேற்பட்டோர் கந்தர்வக் கோட்டை - பட்டுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ், ஏ.டி.எஸ்.பி. ஸ்டாலின் மற்றும் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. செங்கமலகண்ணன், கலால் உதவி ஆணையர் தவசீலன் ,இன்ஸ்பெக்டர்கள் ஒரத்த நாடு மணிவண்ணன், அதிராம் பட்டினம் தியாகராஜன் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.
அப்போது கலால் உதவி ஆணையர் தவசீலன் பேசும் போது,‘‘ 2 டாஸ்மாக் கடைகளையும் தற்போது அகற்ற முடியாது’ என்று திட்டவட்டமாக தெரிவித்தார். இதை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கொதிப்படைந்தனர். தொடர்ந்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
அந்த சமயத்தில் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்ட மாணவர்களை கலைந்து பள்ளிக்கு செல்லுமாறு இன்ஸ்பெக்டர் தியாகராஜன் கூறினார். ஆனால் மாணவர்கள் அதை பொருட்படுத்தாமல் கோஷமிட்டப்படி இருந்தனர்.
இதனால் பொறுமையிழந்த இன்ஸ்பெக்டர் தியாகராஜன், திடீரென ஆற்று பாலத்தில் நின்று கொண்டிருந்த ரஞ்சித்குமார், செல்வகணேஷ் உள்பட 4 மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினார்.
அப்போது போலீசார் தங்களை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் திடீரென 4 மாணவர்களும் ஆற்றில் குதித்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்றதால்4 மாணவர்களும் ஆற்றில் தத்தளித்தப்படி நீந்தினர். ஆனால் அவர்களால் கரை ஏறமுடியவில்லை. அப்போதும் ‘எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை வேண்டாம்’ என்று கோஷமிட்டனர்.
இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு நின்ற விவசாயிகள் சிலர் , தங்களது துண்டுகளை கயிறு போல் கட்டி வீசி ஆற்றில் தத்தளித்த மாணவர்களை மீட்டனர். பிறகு 4 மாணவர்களும் கரை சேர்ந்தனர்.
சுமார் அரைமணி நேரமாக மாணவர்கள் ஆற்றில் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
தருமபுரி மாவட்டம் இண்டூர் நத்தஅள்ளி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
பள்ளப்பட்டி, நத்தஅள்ளி, கோனப்பள்ளம், பழைய இண்டூர் உள்பட சுற்று வட்டார பகுதியில் இருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் தயானந்த் என்பவர் பொறுப்பு தலைமை ஆசிரியராக பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது மாணவர்களுக்கு பாடம் நடத்துவார்.
தயானந்த் மற்றும் சமூக அறிவியல் ஆசிரியர்கள் செந்தில் குமார், கோபால கிருஷ்ணன், அறிவியல் ஆசிரியர் சிவக்குமார் ஆகியோர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சரியாக பாடம் நடத்துவது இல்லை என்றும், மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாகும்படி திட்டுவதாகவும், மாணவர்களை தடியால் கடுமையாக தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்கவில்லை, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாதத்திற்கு ஒரு முறை கலந்தாய்வு கூட்டம் நடத்துவது கிடையாது. இதனால் இன்று மாணவ, மாணவிகள் பள்ளி வகுப்பறையை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவலை அறிந்த மாணவர்களின் பெற்றோர்களும் பள்ளி முன்பு குவிந்தனர்.
இண்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமசாமி ஆகியோர் பள்ளிக்கு விரைந்து வந்து மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஆசிரியர்கள் மீதான புகார்களுக்கு வருகிற திங்கட்கிழமையன்று உதவி தொடக்க கல்வி அலுவலர் தலைமையில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக கலந்தாய்வு கூட்டம் நடத்தபடும் என்றும், அங்கு தங்களது புகார்களை தெரிவித்தால், புகாரின்பேரில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதைதொடர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளி வகுப்பறைக்குள் சென்றனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்